கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என்றும், இவர் கடந்த 6 ஆம் திகதி அன்று ஹெரோயின் போதைப்பொருளுடன் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி, இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் இளைஞரின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் வைத்து திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ. திசாநாயக்க தெரிவித்தார்.
எனினும் இளைஞரது மரணம் தொடர்பான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்னான கவிதா, தன்னுடைய கணவரை இழந்த நிலையில், சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாக தங்கியிருந்தார். இவருடைய மகள் உசிலம்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் உசிலம்பட்டியில், தனது வீட்டிற்குள்ளேயே கவிதா கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிலைமான் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கவிதா கொலை செய்யப்பட்டதுடன், அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்பிலான செயின், மோதிரம், கம்மல் மற்றும் செல்போன் ஆகியவையும் திருடப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை நகைக்காக நடந்தது என்பதை உறுதி செய்த போலீசார், மேல் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, கவிதாவின் வீட்டருகே வசிக்கும் சிவானந்தம் என்ற இளைஞரும், கலையரசி என்ற பெண்ணும் திடீரென வெளியூர் கிளம்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவர் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர். அப்போது, கலையரசிக்கும் சிவானந்தத்துக்கும் தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.
கணவனை இழந்து தனியாக வசித்து வந்த கவிதாவை, கலையரசியும் சிவானந்தமும் அடிக்கடி தனியாக வீட்டில் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள். மேலும், கலையரசி சிவானந்தத்திடம் தனக்கு நகை வேண்டும் என நச்சரித்து வந்திருக்கிறார்.
இதனால் இருவரும் திட்டமிட்டு, கவிதாவை கொன்று விட்டு நகை உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு வெளியூருக்குச் சென்றது விசாரணையில் அம்பலமானது. விசாரணைக்குப் பின் கலையரசியையும் சிவானந்தத்தையும் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(50). விவசாயி. இவரது மகள் ஸ்பூர்த்தி (16). இவர் பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இந்த பள்ளி மாணவி சிவா (25) என்பவரை, காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் மாணவி சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பாகலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவியின் பெற்றோரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காதலை தொடர்ந்ததால் ஆத்திரத்தில் மகளை கடுமையாக தாக்கி ஏரியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலமானது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி, உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்டு தனிமையில் விடப்பட்ட தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மனம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனம்பிட்டிய, மஹாவெவ பிரதேசத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர என்பவரே குவைத்தில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு நிரந்தர வீடு கட்டி, மூன்று குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
குறித்த பெண்ணின் குழந்தைகளை அவரது தாயார் பார்த்துக்கொண்டுள்ளதுடன், கணவன் இரும்பு வாளி உற்பத்தியை பகுதி நேர வேலையாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் பணிபுரியும் வீட்டில் பலவிதமான சித்ரவதைகளை எதிர்நோக்கி வருவதனால், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை – புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (17) மாலை இடம் பெற்றுள்ளது. இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மதுபோதையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை- கோனேஸபுரி ஆறாம் கட்டையைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் 21, 30, 39 வயது உடையவர்களை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்தில் சிக்கிய நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலாங்கொட, மடங்வல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 14ஆம் திகதி சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கண்ணாடி போத்தலினால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கும் கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையிலான தகாத உறவின் போது, குறித்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு பல தடவைகள் சென்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் தனது நண்பருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சம்பவத்தை கூறியதுடன் அந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) அவதானம் செலுத்த வேண்டிய அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அவதானம் செலுத்த வேண்டிய அளவிற்கு வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போதியளவு நீரை அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.
கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.
இதனால் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர, தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலையின் அதிபரின் செயற்பாட்டினால் இந்த நெகிழ்ச்சியான செயல் ஏற்பட்டுள்ளது.
கல்லூரியின் 67 ஆண்டுகால வரலாற்றில் நடைபெறும் முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும். காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலை 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பல குறைபாடுகளுக்கு மத்தியில் இப்பாடசாலை நீண்டகாலமாக மூடப்படும் அபாயத்தில் இருந்தது.
10 ஆண்டுகளுக்கு முன் இப் பாடசாலையின் அதிபராக பத்மசிறி பாடசாலைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதற்கமைய, பாடசாலைக்கு குறையாக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பாடசாலை சமூகம் எதிர்கொண்ட மிகக் கடுமையான சவாலாக நிதி காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிரதான வீதியின் இருபுறங்களிலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் சேர்ந்து கஞ்சி விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.
பாடசாலையின் அதிபர் மற்றும் பெற்றோரின் சிறப்பான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் திகதி நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், ராஜீவ் வாரிகோ(51), அவரது மனைவி ஷில்பா கோத்தா(47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் ராஜீவ் ஒன்டோரியோ அரசாங்கத்தின் சுகாதார துறையில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட ஹலாம் பாத்திமா சனா (06) விருத்தோடு முஸ்லிம் கல்லூரியில் இந்த வருடம் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமி. இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 23 வயது தனுசியா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ச டலம் உடற்கூற்று சோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்னுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (18.03.2024) காலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து குறித்த பேரூந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் பேரூந்தில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்திலிருந்து பேரூந்தின் முன்பக்கமாக வந்த முதியவரொருவர் பேரூந்தில் ஏற முற்பட்ட சமயத்தில் பேரூந்தினை சாரதி செலுத்தியமையினால் பேரூந்தில் சிக்குண்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்தனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டமையுடன் பேரூந்தினை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் எடுத்துச்சென்றனர். இவ் விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடயை சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்தவராவர்.
வவுனியாவில் புகையிரதம் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி நேற்று (17.03) மாலை சென்ற கடுகதிப் புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது புகையிரதக் கடவைக்குள் நுழைந்த ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயக்கொடி ஆராச்சி ராஜரட்ண என்பவரே மரணமடைந்தவராவார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (18.03) தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று (17.03) மாலை கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெர்வித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார் என்பவர் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார்.
இவர் 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
34 வருட அனுபவத்தை பயன்படுத்தி பேரனின் முதலாவது பிறந்ததினத்திற்கு பரிசாக இந்த முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளதாகவும் பொன்னையா உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது 3 பிள்ளைகளும் தன்னுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பேரனின் பெயரையும் பிறந்த திகதியையும் வைத்து இலக்கத்தகடினை உருவாக்கியுள்ளதாகவும் தான் எதிர்ப்பாராமல் தயாரித்த இந்த முச்சக்கரவண்டிக்கு தற்போது வெளிநாடுகளிலும் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முச்சக்கரவண்டி தற்போது சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் பேரனுக்காக தாத்தா எடுத்த முயற்சிக்கு பல்லரும் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.