மகனிற்கு தாய் செய்த துரோகம் : ஐவரை காட்டிக்கொடுத்த சிசிடிவி!!

ராகமையில்..

தனது சொந்த மகனின் நகைக்கடையில் திருடிய தாய் உள்ளிட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகமை நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று முன் தினம் (09) பிற்பகல் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் வருவதற்கு முன், அடகுக் கடையின் காசாளர் நகைகளை ஒரு பையில் இடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இதற்கிடையில், கொள்ளையின் பிரதான சந்தேகநபரான ராகம ரெய்லி அங்கு வந்த பின்னர் அவரது உத்தரவைப் பின்பற்றியே ஏனைய கொள்ளையர்கள் அடகு கடைக்குள் நுழைந்துள்ளனர்.

எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இளைஞனின் விபரீத முடிவு தொடர்பில் பொலிஸார் சந்தேகம்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இபலோகம, கலகரம்பேவ பிரதேசத்தில் வசிக்கும் அனுஹஸ் தினெல்க விரோச்சன என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரிய மொழி புலமைப் பரீட்சையில் தோல்வியடைந்தமையினால் இந்த இளைஞன் மனம் உடைந்து மிகவும் கவலையடைந்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனால் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில்..

கடந்த சில நாட்களாக பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யும் பலரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை ஆராய்ந்த பொலிஸாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.​​

பெரும்பாலும் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள அநுராதபுரம் போன்ற நகரங்களில், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

விமானப்படை புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, அநுராதபுரம் தபால் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர்.நேற்று அநுராதபுரம் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயிரம் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அநுராதபுரம் நகரிலுள்ள பிரபல மருந்தகம் ஒன்றில் இருந்தே அந்த போதை பொருள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.அநுராதபுரம் நகரில் பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வதன் மூலம் மாணவிகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணம் தேடுவதற்காக, பாடசாலைகளில் ஆண் மாணவர்களிடம் உதவி பெறுவதாகவும் அதற்காக மாணவிகள் தங்கள் பிறப்புறுப்பைத் தொட அனுமதித்து பணம் பெற ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆபத்தான நிலைமையில் இருந்த தங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் மரணித்த மனிதாபிமானம் : உயிருக்கு போராடியவரை வீதியில் விட்டு சென்ற அவலம்!!

பூகொடயில்..

பூகொட பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய முதியவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டு சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில், பூகொட பாப்பிலியாவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியால் வீதியில் விட்டுச்செல்லப்பட்ட முதியவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பூகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தின் போது 83 வயதுடைய முதியவர் மீது லொறி மோதியதுடன், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி லொறி சாரதி அவரை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இருப்பினும், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் காயமடைந்த முதியவரை இறக்கிவிட்டு லொறியின் சாரதி தப்பியோடிய விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி, தப்பியோடிய நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பூகொட பொலிஸார் ஆரம்பித்த நிலையில், பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பூகொட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்!!

வரி..

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் எனவும் கூறியுள்ளார். அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண கடற்கரையில் கரையொதுங்கிய படகால் ஏற்பட்ட பரபரப்பு!!

யாழில்..

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸ், மற்றும் பாதுகாப்பு தரப்புக்களுக்கு அறிவித்ததையடுத்து குறித்த படகை கரையேற்றியுள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த படகு இலங்கையில் பயன்படுத்துவது இல்லை என்றும் இது இந்தியா படகாக இருக்கலாம் எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

காதல் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர்.. மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு!!

புதுச்சேரியில்..

குடும்பத் தகராறு காரணமாக அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கெளரி (48). இவரது மகள் ரோஜா (29). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கணவர் விபத்தில் சிக்கி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து, ரோஜா தனது தாயுடன் திருப்பூர் சென்று அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்தார். அப்போது அவருடன் வேலை செய்த கோவையைச் சேர்ந்த விக்னேஷ் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் கோவையில் கணவர் வீட்டில் குடும்பம் நடத்திய நிலையில், சமீபகாலமாக தம்பதியிடையே குடும்ப சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தனது கணவரிடம் கோபித்துக் கொண்ட ரோஜா, குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு புதுச்சேரி வந்து தாயுடன் உருளையன்பேட்டை முல்லை நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை கோவையில் இருந்து புதுச்சேரி வந்த விக்னேஷ், தனது மனைவியைப் பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ரோஜாவிடம் தன்னுடன் குடும்பம் நடத்த கோவைக்கு வருமாறு அழைத்ததாக தெரிகிறது.

அதற்கு அவர் மறுக்கவே தம்பதியிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிந்தார். இதன் பின், விக்னேஷும் தன்னைத் தானே கழுத்தில் கத்தியால் கிழித்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனிடையே சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், ரோஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 வயதான தனது மகனை குடிபோதையில் கழுத்தில் மிதித்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தனது மனைவியையும் தானே கொலை செய்து கிணற்றில் வீசியதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர் இருந்தார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மகனை சந்தோஷ் தனது கட்டுப்பாட்டில் வளர்த்து வந்தார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ், நேற்று மாலை மாமனார் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். அப்போது மாமனார் சந்தோஷை அடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில் வீட்டிற்கு வந்த சந்தோஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்த தனது மகனை காலால் மிதித்து கொன்றுள்ளார்.

தகவலறிந்து சென்ற அக்கம் பக்கத்தினர், உடனடியாக சூளகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தோஷை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாமனார் மீது இருந்த கோபத்தில் மகனை கொன்றதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி கிணற்றில் தவறி விழுந்து இறக்கவில்லை.

தான் தான் அவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

காணாமல் போன சிறுமி அழுகிய நிலையில் மீட்பு : விசாரணையில் சிக்கிய சிறுவன்!!

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது வசாய் நகர். இங்கு 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த சிறுமி கடந்த கடந்த 1-ம் தேதி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே வேறு வழியின்றி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி பூட்டிய அறை உள்ளிட்டவைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டினுள் சென்ற போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே சிறுமி ஒருவர் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியை மீட்ட போலீசார், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரித்ததில், மீட்கப்பட்ட சிறுமியும், காணாமல் போன சிறுமியும் ஒன்று என்று தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், கதறி அழுதனர். பின்னர் இது காணாமல் போனதை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை துரிதபடுத்தினர்.

அப்போது சிறுமி கொலை வழக்கில் சிறுவன் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் இந்த சிறுமியை கொலை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குடும்பத்தாரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது சிறுமி ஒரு நாள், அந்த சிறுவனை கிண்டல் செய்துள்ளார். இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த சிறுவன், சம்பவத்தன்று சிறுமியை யாருக்கும் தெரியாமல் கடத்தியுள்ளார்.

அப்போது சிறுமியை தாக்கி, அவரது கழுத்தை இறுக்கமாக நெரித்துள்ளார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இறந்துள்ளார். இதையடுத்து செய்வதறியாமல் திகைத்த சிறுவனுக்கு, அவரது தந்தையே உதவி செய்துள்ளார்.

அதன்படி சிறுமியின் உடலை ஒரு பிளாஸ்டிக் சாக்கு பையில் கட்டி ஒரு வார காலமாக மறைத்து வைத்துள்ளனர். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை ஜல்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பியது விசாரணையில் அம்பலமானது.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், 8 வயது சிறுமியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டகிராமில் தனக்கு ‘RIP’ பதிவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

கேரளத்தில்..

கேரளத்தில், தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, புகைப்படத்திற்கு கீழ் ரிப் பதிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு தகுந்த வேலைக் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த இளைஞர் இந்த முடிவை எடுத்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம், ஆலுவாவைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரிப் (28).

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார், பைக் புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமடைந்தார். மேலும், தான் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். இன்ஸ்டாகிராமில் அஜ்மல் ஷெரிப்பை 14 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், அஜ்மல் ஷெரிப் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அஜ்மல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து அதில் ‘ஆர்ஐபி (RIP – Rest in Peace) அஜ்மல் ஷெரிப் 1995 – 2023’ என பதிவிட்டுள்ளார்.

அஜ்மல் ஷெரிப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நல்ல வேலை கிடைக்காததால் அஜ்மல் ஷெரிப் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் கண்ணில் இருந்த 60க்கும் மேற்பட்ட புழுக்கள் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சீனாவில்..

சீனாவை சேர்ந்த பெண் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.சீனாவை சேர்ந்த பெண்ணின் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை சீன மருத்துவர்கள் வெளியே எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த மிரர் என்ற பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிச்சலை போக்க மிரர் தன்னுடைய கண்களை தேய்த்த போது கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து விழுந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த மிரர் உடனடியாக குன்மிங்கில் உள்ள மருத்துவமனைக்க்கு அணுகியுள்ளார்.

இதையடுத்து பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் பெண்ணின் கண்ணை பரிசோதனை செய்த போது அவரது இரு கருவிழிகளிலும் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இறுதியில் அவரது வலது கண்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும், இடது கண்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் மருத்துவர்கள் எடுத்தனர்.

இறுதியில் 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை மிரர் கண்களில் இருந்து அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகை ஒட்டுண்ணிகள் மூலம் இந்த வகை பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.

பணம் தராததால் ஆத்திரம்… மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மல்வானி பகுதியில் வசித்து வருபவர் மொய்னுதின் அன்சாரி. இவரது மனைவி பர்வீன் . மொய்னுதின் சமீபகாலமாக மதுபழக்கத்திற்கு அடிமையானார்.

இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுகுடிக்க பணம் கேட்டு மனைவி பர்வீனுக்கு அன்சாரி அடிக்கடி தொல்லை தரத் தொடங்கினார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நவம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை மதுகுடிக்க பணம் தரும்படி மீண்டும் தகராறு செய்தார். மதுகுடிக்க பர்வீன் பணம் கொடுக்காததால் அன்சாரி ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக தாக்கினார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததும் அன்சாரி தப்பி சென்றார். பர்வீனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பர்வீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதன் பேரில் தப்பியோடிய அன்சாரியை பெரிவாலி ரயில் நிலையம் அருகே காவல்துறை கைது செய்தது.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. அதிர்ந்துபோன மாப்பிள்ளை.. அடுத்து நடந்த சோகம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா என்ற பகுதியை அடுத்து அமைந்துள்ளது சிக்கபயலாடகெரே என்ற கிராமம். இங்கு மஞ்சுநாத் என்ற இளைஞருக்கு பெண் தேடி வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.

அப்போது திப்பாரெட்டிஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த குடும்பத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்களது இளம் மகளான ஐஸ்வர்யா என்பவரை மஞ்சுநாத்தின் குடும்பத்தினருக்கு பிடித்து போகவே, இவர்களது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

அப்போது இந்த இளம்பெண் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் அவரது பெற்றோர், இவரை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளனர்.

அதன்படி மஞ்சுநாத் – ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று, 7-ந்தேதி (நேற்றைய தினம்) திருமணம் நடைபெற இருந்தது. மேலும் நேற்றைய முந்தினம் (6-ம் தேதி) இவர்களுக்கு பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று திருமணத்திற்கு தேவையான அனைத்து சடங்குகளும் நடைபெற்று முடிந்த நிலையில், மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்றார். அப்போது அவரது கையை பிடித்துக் கொண்டு தனக்கு திருமணம் வேண்டாம் என்று அழுதுள்ளார் ஐஸ்வர்யா.

இதனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் மிரண்டு போய் நின்று பார்த்தனர். தொடர்ந்து மணமகள் ஐஸ்வர்யாவை, அவரது குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்துள்ளார். இதனால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து மணமகன் வீட்டார் இந்த நிகழ்வு குறித்து போலிசாரிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மணமகள் ஐஸ்வர்யா, தனது மேற்படிப்புக்காக திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. மணமகள் ஐஸ்வர்யா இந்த விவகாரம் குறித்து மணமகனிடம் முன்பே தெரிவித்திருந்தாரா என்று தெரியவில்லை, எனினும் இந்த நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படிப்பிற்காக தனது திருமணத்தை நிறுத்திய மணமகளின் செயல் தற்போது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஐஸ்வர்யாவின் மேற்படிப்புக்காக மணமகன் வீட்டார், ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளதாகவும், திருமணத்திற்கு முன்பே இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்ததாகவும், பின்னரே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் மணமகன் மஞ்சுநாத்தின் குடும்பத்தார் போலிசிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மணமகன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடாக கொடுப்பதாக மணமகள் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

காதல் திருமணம் செய்த இளம்பெண் ஐந்தே மாதத்தில் எடுத்த விபரீத முடிவு!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மனோஜ். இவர் திருவாரூரில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடவாசல் அருகே புதுக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சிராளன் என்பவரது மகள் சசி பிரியாவும் மனோஜ் வேலை பார்க்கும் ஜவுளிக்கடையில் வேலைக்காக சேர்ந்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மனோஜ் வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.இந்த நிலையில் மனோஜ் வழக்கம் போல ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் அறையில் சத்தம் கேட்டதை அறிந்த மனோஜின் பெற்றோர்கள் கதவை உடைத்து பார்த்த பொழுது சசிபிரியா மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் சுகப்பிரியா பெற்றோர்கள் நன்னிலம் காவல் நிலையத்தில் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

16,000 டொலர்கள் செலவு செய்து நாய் போல் மாறிய மனிதருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!!

ஜப்பானில்..

ஜப்பானில், 16,000 டொலர்கள் செலவு சிறப்பு உடைகள் தயாரித்து அணிந்துகொண்டு நாய் போலவே வாழ்ந்துவருகிறார் ஒரு இளைஞர். அந்த இளைஞர் பெயர் Toco. நாய் போலவே உடையணிந்து, நாய் போலவே அவர் செய்யும் சேட்டைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக, அவரை இப்போது ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

சிறு வயதில், வளர்ந்து நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் நாயாக விரும்புகிறேன் என்று எழுதினாராம் Toco. நாய் போல வாழ்ந்துவருவதால், நாய்களின் அறிவுத்திறமையை சோதிக்கும் சோதனையிலும் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பியுள்ளார் Toco.

அதன்படி அவர் சமீபத்தில் அந்த சோதனைகளில் பங்கேற்கும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்த சோதனையில் தோல்வியடைந்துவிட்டார் Toco.

ஒருபக்கம் Tocoவை பலர் பின் தொடர்ந்தாலும், இந்த ஆளுக்கு ஏதோ மன நல பிரச்சினை இருக்கிறது, போய் மருத்துவரைப் பார் என அவரைத் திட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மயக்க ஊசிபோட்டு இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்த சோகம் : திருமணம் செய்வதாக ஏமாற்றிய வைத்தியர் கைது!!

கேரளாவில்..

இளம் பெண் மருத்துவரிடம் சீனியர் மருத்துவர் ரூவைஸ் வரதட்சணை கேட்டதற்கான ஆதாரங்கள் செல்போனில் கண்டறியப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மருத்துவர் ரூவைஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷகானா.

திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்தார். இவர், அதிக அளவு மயக்க ஊசி செலுத்திக்கொண்டு, கடந்த 5-ம் தேதி இரவு தற்கொலை செய்துகொண்டார். ‘தொடர்ந்து படிக்கவும், திருமணத்துக்கும் பணம் வேண்டும். எல்லோருக்கும் பணம் மட்டும் போதும். எல்லாவற்றையும்விட பணம்தான் பெரிது’ எனக் கடிதம் எழுதிவைத்திருந்தார் ஷகானா.

இது குறித்து மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். இது பற்றி ஷகானாவின் சகோதரர் ஜாஸிம் நாஸ், “ஷகானாவுக்கும், அவருடன் முதுகலை மருத்துவம் படிக்கும் சீனியரான கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ரூவைஸுக்கும் திருமணம் பேசிவைக்கப்பட்டிருந்தது.

ரூவைஸின் வீட்டிலிருந்துதான் திருமணம் பற்றி முதலில் பேசினர். இந்த நிலையில் ரூவைஸின் வீட்டுக்குச் சென்று நாங்கள் பேசினோம். அப்போது, 50 சவரன் நகைகள், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் கார் ஆகியவை கொடுக்கலாம் என நாங்கள் சொன்னோம்.

ஆனால், அவர்கள் எங்களால் கொடுக்க முடியாத அளவுக்கு வரதட்சணை கேட்டனர். பெற்றோரின் வார்த்தைகளை மீறி ரூவைஸால் செயல்பட முடியவில்லை. இதனால் அந்தத் திருமணம் வேண்டாம் என்ற மனநிலைக்கு நாங்கள் வந்தோம்.

ஆனால், ஏற்கெனவே பழக்கம் இருந்ததால் ஷகானாவுக்கு ரூவைஸை விடுவதற்கு மனம் இல்லை. வரதட்சணை காரணமாக திருமணம் தடைப்படும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனதளவில் உடைந்துபோனார் ஷகானா.

ரூவைஸ் அதன் பின்னர் ஷகானாவிடம் பேசினாரா என்பது பற்றித் தெரியவில்லை. இந்த நிலையில் ஷகானா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஷகானா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

டாக்டர் ரூவைஸ் கேரள முதுகலை மருத்துவர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். இந்த நிலையில், முதுகலை மருத்துவர் சங்கத்திலிருந்து டாக்டர் ரூவைஸ் நீக்கப்பட்டிருக்கிறார். மகளிர் ஆணையம், சிறுபான்மை ஆணையம் உள்ளிட்டவை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகின்றன. ரூவைஸ் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ரூவைஸை மெடிக்கல் காலேஜ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியதுடன், அவரைக் கைதுசெய்தனர். பெண் மருத்துவர் ஷகானாவிடம் சீனியர் மருத்துவர் ரூவைஸ் வரதட்சணை கேட்டதற்கான ஆதாரங்கள் செல்போனில் கண்டறியப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து மருத்துவர் ரூவைஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.இது குறித்து கேரள சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `இது மிகவும் சீரியஸான விஷயம். இதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருத்துவக் கல்வித்துறை இயக்குநருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இயக்குநருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தினார். இதையடுத்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் முதல்வர் விசாரணை நடத்தி, மருத்துவர் ரூவைஸை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.