விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகை… பணமில்லாமல் தவிக்கும் குடும்பத்தினர்!!

மலையாள நடிகை அருந்ததி நாயர் சில தினங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அருந்ததி நயாரின் சிகிச்சைக்கு பணம் இல்லாமால் அவரது குடும்பத்தினர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை அருந்ததி நாயர், கடந்த 2014ம் ஆண்டு வெளியான, ‘பொங்கி ஏழு மனோகரா’ என்கிற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இவர் கடைசியாக தமிழில் வெளியான ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், நடிகை அருந்ததி நாயர் தனது சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதில் இருவரும் படுகாயமடைந்து சுமார் ஒரு மணித்தியாலம் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி சாலைகளில் கிடந்துள்ளார்.

பின்னர் அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவரது சகோதரர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருந்ததியின் குடும்பத்தினர், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், பிரபலங்கள் யாரும் உதவ முன்வரவில்லை என கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் விரைவில் அருந்ததி குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

50 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற பயங்கரம் : அதிர்ச்சியில் பொலிஸார்!!

களுத்துறையில் 50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி கத்திகுத்தில் முடிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதசாரி கடவையில் பெண் உத்தியோகத்தருக்கு எமனான வாகனம்!!

லொறி ஒன்று மோதியதில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (20) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் , தொடங்கொட புஹாம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த வாகனத்தில் மோதுண்டுள்ளார்.

பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம்-2024

இராவண ஜென்ம பூமியாகவும் குபேரபூமி எனவும் பர்பர தேசமாகவும் இலங்காபுரியெனவும் அழைக்கப்பட்ட ஈழவளத்திருநாட்டின் வடபால் அணைதட்டிப் பாய்கின்ற பாரிய நீர்நிலைகளையும் வயல்நிலங்களையும் பெரும் கானகங்களையும் கொண்ட வவுனியா மண்ணில் பெயருக்கே ஏற்றவாறு பசுக்கூட்டங்களையும் மயிலக்கூட்டங்களையும் தன்னகத்தே கொண்ட கோவில்குளம் பதிதனிலே கோவில்கொண்டு நாடிவரும் அடியவர்கள் துன்பங்களை எல்லாம் நீக்கி அனைவருக்கும் பேரின்பப் பெருவாழ்வினை அளிக்கின்ற காத்தல் கடவுளாம் எம்பெருமான ஸ்ரீதேவி பூதேவிகளோடு உடனுறையும் நாராயணப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான  குடமுழுக்கு  20.03.2024   புதன்கிழமையன்று இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பெருமளவானபக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்னிலங்கைப் பெண்ணிடம் ஏமாந்த யாழ்ப்பாண இளைஞன் : பொலிஸார் அதிரடி!!

யாழ்ப்பாண இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, 60 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் தென்னிலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

பணம் கொடுத்தும் இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , இது தொடர்பில் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் .

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதன் போது தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்சம் ரூபாய் பணத்தினை இளைஞனிடம் மீள அளித்துள்ளார் .

அதனையடுத்து பெண்ணை 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . அதேவேளை வெளிநாட்டு மோகத்தால் யாழ்ப்பாண மக்கள் பெரும் தொகை பணத்தை இழந்து வருவதாக அணமையில் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளம் ஆசிரியை : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரசம்பவம் நேற்று 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கரையோரப் ரயிலில் ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திரிமதுர சஷிமா உதயன் கனி மெனடிஸ் என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காலி ஷரிபுத்ரா கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

’நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை’.. இளைஞரை கொடூரமாக தாக்கும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா!!

நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலுவுடன் ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற நகைச்சுவை படத்தில் நடிகை ராதா முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் மீது பிரான்சிஸ் ரிச்சர்ட் என்ற இளைஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ராதாவும் அவரது மகனும் சேர்ந்து தன்னை தாக்கியதாக சிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரான்சிஸ் ரிச்சர்ட் கொடுத்த புகார் உண்மை என தெரியவந்துள்ளது. நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் பிரான்சிசை தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸாருக்கு ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது. நடிகை ராதாவை கேலி செய்ததாக ரிச்சர்ட் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ராதா, தனது இரண்டாவது கணவர் வசந்தராஜா தன்னை அடிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வவுனியா சிறைச்சாலை வதைமுகாமை விட மோசமானது : சிறைசென்று விடுதலையானோர் தெரிவிப்பு!!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கொள்ளளவை விட மூன்றுமடங்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது வதை முகாமைவிட மோசமானது என்று வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சிவாராத்தி தினத்தில் வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேர் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். பின்னர் வவுனியா நீதிமன்றால் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த நபர்களில் இருவர் சிறைச்சாலையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்…

வவுனியா சிறைச்சாலையினை வதைமுகாம் என்றே கூறமுடியும். எந்த ஒரு அடிப்படை வளமும் அற்ற ஒரு சிறைச்சாலையாக அது காணப்படுகின்றது. 200பேர் அளவிலான கைதிகளே அங்கு இருப்பதற்கான இடவசதி காணப்படுகின்றது.

ஆனால் நாம் விடுதலையாகும் வரை 586 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் அடிப்படை விடயங்களே அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக நீர்வசதி மிகவும் பற்றாக்குறையாக உள்ளது.

அத்தனைபேருக்குமாக சேர்த்து சிறிய நீர்த்தொட்டி ஒன்றே அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்தும் இயங்குவதில்லை. ஆறுவாளி தண்ணீரே ஒருநாளில் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அதற்காக இரண்டரை மணித்தியாலங்கள் காத்திருக்கவேண்டும்.

இதேவேளை தற்போதை வெப்பமான காலநிலையால் கணிசமானவர்கள் சொறி சிரங்கு போன்ற நோய்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். உயிர் ஆபத்துக்கள் நிகழக்கூடிய வாய்ப்புக்கள் கூட அங்கே காணப்படுகின்றது.

நித்திரைகொள்வதற்கான வசதிகள் இல்லை. பல கைதிகள் மலசலகூடங்களிலும் குளியலறைகளிலும் உறங்கும் நிலை காணப்படுகின்றது. உணவின் தரம் மிகவும் மோசமானது. கிரந்தி தன்மை கூடிய சூரைமீனே தினமும் தரப்படுகின்றது. இதனால் பலர் சிரங்கு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடகவே எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன் பெரிய குற்றங்கள் செய்தவர்கள் சந்தேகநபர்கள், சிறிய குற்றம் செய்தவர்கள் என்று வகைப்படுத்தப்படாமல் அனைவரும் ஒரே இடத்திலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு செல்லும் பலர் பெரிய குற்றவாளிகளாக மாற்றப்படும் நிலை அங்கு காணப்படுகின்றது. இதனால் குற்றவாளிகளும், குற்றங்களும் மேலும் அதிகரிக்கும் நிலையே ஏற்ப்படும்,

இது அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரதும் வேண்டுகோளாக காணப்படுகின்றது. எனவே இந்த நிலமைமாற்றப்படவேண்டும் என்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரதநிலைய வீதியில் இன்று (21.03) மதியம் இவ் விபத்து இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் புகையிரத நிலைய வீதிஊடாக சென்ற முச்சக்கரண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

குடும்பத் தகராறில் விபரீதம் : மருமகள் தற்கொலை… வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் மாமனார், மாமியார் பலி!!

உத்தரப் பிரதேசத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கணவர் வீட்டிற்கு தீ வைத்ததில் மாமனார், மாமியார் உடல்கருகி உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள முத்திகஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அன்ஷிகா கேசர்வானி என்ற 27 வயது இளம்பெண், குடும்பத் தகராறு காரணமாக நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் வந்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்கள் மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு விட்டதாக மாமனார் ராஜேந்திர கேசர்வானி (65), மாமியார் ஷோபா தேவி (62) ஆகியோர் மீது பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அப்போது ஆத்திரமடைந்த, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அவரது மாமியார் வீட்டிற்கு தீ வைத்தனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் ராஜேந்திர கேசர்வானி, ஷோபா தேவி ஆகிய இருவரும் தீயில் கருகி இறந்தனர்.

மேலும், படுகாயமடைந்த அவர்களது மகன் ராஜேந்திரா, பேத்தி ஷிவானி, மற்றொரு மருமகள் லவ்லி கேசர்வானி ஆகிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்திகஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், வீட்டுக்கு தீ வைத்து, கணவரின் பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடி..காதலன் உயிரிழந்த பரிதாபம்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. குறித்த மாணவியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் கல்லூரி மாணவியான சிறுமி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரும் காதலர் ராஜூவும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் விஷம் அருந்திவிட்டு, ஹேமாவதி ஆற்றுப்பாலம் வழியாக செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர்.

அப்போது பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு ராஜூ சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சிறுமி தொடர் சிகிச்சையில் உள்ளார். பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸாரிடம் மாட்டியதால் காதலியை தவிக்கவிட்டு காதலன் ஓட்டம்!!

காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருனை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் காதலன் தப்பியோடியதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி தனது காதலனுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் சில காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தும்மலசூரிய விலத்தாவ வீதியில் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சோதனையிட்டபோதே அவர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான காதலனைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

பிரான்ஸில் இருந்து திருமணத்திற்கு தாயகம் வந்த இளைஞனுக்கு மணமகள் கொடுத்த அதிர்ச்சி!!

பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சயிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு பிரான்ஸ் வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த பெப்ரவரி மாத தொடக்கப் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் 36 வயதான இளைஞன் கிளிநொச்சி சென்றுள்ளார்.

இளைஞனின் பெற்றோர் யுத்ததில் இறந்துவிட்டார்கள். தனது மூத்த சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த இளைஞன் 2010ம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்றுள்ளார்.

இந்நிலையில் இளைஞனுக்கு மூத்த சகோதரி பெண் பார்க்கும் படலத்த தொடங்கியுள்ளார். இந் நிலையில் தனது கணவனின் துாரத்து உறவுக்கார குடும்பம் ஒன்றில் 24 வயதான யுவுதி ஒருவரை இ பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் இளைஞன் யுவதியுடன் தொடர்ச்சியாக கதைத்து வந்துள்ளார்.

அத்துடன் பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் தொடர்ச்சியாக தனது வருங்கால மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் திருமணம் நடக்க ஆயுத்தமாகியுள்ளது.

பிரான்சிலிருந்து இளைஞன் தை மாத நடுப்பகுதியிலேயே இலங்கை சென்றுள்ளார். அவர் தாயகம் திரும்பிய ஓரிரு நாட்களில் யுவதி வீட்டிலிருந்து காணாமல் போனதால் மணமகன் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளது.

அதன் பின்னரே குறித்த யுவதி, தான் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் அவருடனேயே தற்போது தங்கியுள்ளதாகவும் தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் கூறிய நிலையில் விரக்தியடைந்த மணமகன் பிரான்ஸ் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகின்றது.

வவுனியா உட்பட மக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில், மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை இன்று (20) முழுவதும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் இன்று முதல், விசேடமாக தென் அரைப்பிராந்தியத்தில் தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

மேலும் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

இலங்கையில் அனைவரையும் நெகிழ வைத்த இளம் தாயின் செயல்!!

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது.

பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

இதன்போது, நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடிய தாய், பெற்றோருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

குறித்த தாயின் செயலைக் கண்டு இலங்கை வாழ் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கனடாவில் மீண்டுமொரு கொடூர சம்பவம்… மனைவியை கொன்றுவிட்டு தாய்க்கு வீடியோ அழைப்பு!!

கனடாவில் இருந்து பஞ்சாப்பில் உள்ள தனது தாயிக்கு வீடியோ கால் செய்து மனைவியை கொலை செய்துவிட்டதாக சந்தேக நபர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங் – பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கனடாவில் படித்து வரும் தனது மகளுடன் பல்வீந்தர் கவுர் வசித்து வந்துள்ளார்.

இதேவேளை, ஜக்பிரீத் சிங் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் கனடா சென்றுள்ளார்.

அப்போது அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பல்வீந்தர் கவுரை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனைவி பல்வீந்தர் கவுர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜக்பிரீத் சிங்கை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் ஜக்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில்,

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக இருந்து வந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.