நியூஸிலாந்தில் திருட்டு குற்றச்சாட்டில் பதவி விலகிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!!

நியூஸிலாந்தில்..

நியூஸிலாந்தின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தக நிலையங்களில் திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து பதவி விலகல் செய்துள்ளார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையிலேயே ஆடம்பர சில்லறை விற்பனை நிலையமொன்றில் பெருமளவு ஆடைகளை திருடியயதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர் நியூசிலாந்து பசுமைக் கட்சியின் எம்.பி.யும் அதன் நீதித் தொடர்பாளருமான கோல்ரிஸ் கஹ்ராமன் ஆவார். கோல்ரிஸ் கஹ்ராமன் தனது குடும்பத்துடன் சிறுவயதில் ஈரானில் இருந்து வெளியேறி நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றவராவார்.

அத்துடன் நியூசிலாந்துக்கு அகதியாக வந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி. என்பதுடன் சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவராவார்.

அரசியலில் நுழைவதற்கு முன்பு இவர் ருவாண்டா, கம்போடியா மற்றும் தி ஹேக் ஆகிய நாடுகளில் உள்ள ஐ.நா நீதிமன்றங்களில் குற்றவியல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில்,

ஆக்லாந்து, வெலிங்டனில் அமைந்துள்ள உயர்தர வர்த்தக நிலையங்களில் திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கோல்ரிஸ் கஹ்ராமன், தனது செயல்களுக்கு முழுப் பெறுப்பேற்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.

தனது செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எனது வேலை தொடர்பான அழுத்தங்களால் எனது மனநலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெளிவாகத் தெரிகின்றது.நான் நிறைய பேரை ஏமாற்றிவிட்டேன், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!!

டெங்கு..

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், டெங்கின் தாக்கம் அதிகரித்த பகுதியாக கொழும்பு மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 5,428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை தாக்கிய பிச்சைக்காரன்!!

கொழும்பில்..

சுமார் 13 வருடங்களாக மதிய உணவு வழங்கி வந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை கடுமையாக காயப்படுத்திய பிச்சைக்காரனை எதிர்வரும் (30.01.2024) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மார்ட்டின் லியனகே என்ற பிச்சைக்காரனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், குறித்த பிச்சைக்காரனின் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு போக்குவரத்து காவல்துறைக்கு அருகில் ஹோட்டல் நடத்தி வரும் ஹோட்டல் உரிமையாளர், குறித்த பிச்சைக்காரனுக்கு தினமும் சாப்பாடும் பானமும் கொடுத்து வந்திருக்கின்றார்.

இந்த கடை உரிமையாளர் 13 வருடங்களாக அவருக்கு உணவளித்து வருகிறார். குறித்த பிச்சைக்காரர் மஹியங்கனைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றவராவார், இவர் சாப்பாடு தாமதமாகியதால் ஆத்திரமடைந்து, கடை உரிமையாளரின் மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கி, கண்ணுக்கு மேல் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

 

யாழில் இடம்பெற்ற துயரம் : டெங்குவால் உயிரிழந்த குடும்பப் பெண்!!

யாழில்..

யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது.

குறித்த நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையானது நோயாளர்களால் நிரம்பி வழிகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள், 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5,029 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மேல் மாகாணத்தில் ஆயிரத்து எழுநூறு (1,700) நோயாளர்களும், வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு (1,194) நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மேலும், இலங்கையில் பத்து மாவட்டங்களில் அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகளவான நோயாளர்களைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பசியால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் : இலங்கையில் நடந்த சோகம்!!

கம்பளையில்..

கம்பளை – நாவுல்ல பகுதியில் பாக்கு பறிக்கச் சென்ற இளைஞன் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனையில் இரண்டு நாட்களாக பட்டினியாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் ஏ.பி.ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக கம்பளை நாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த,

30 வயதுடைய திருமணமாகாத இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சாப்பாடு இல்லாமல் பசி தாங்க முடியாமல் பாக்கு பறிக்க சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த கரட் விலை!!

இலங்கையில்..

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் நுவரெலியா தம்புள்ளை பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர்.

ஏனைய நாட்களில் அனுராதபுரம் , நுவரெலியா, தம்புள்ளை பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் மொத்த விலை 1500 ரூபாவாகவும் சில்லறை விலை 1700 ரூபாவாகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட வினவுதலில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.

ஒரு கிலோ போஞ்சி மொத்த விலை 1000 ரூபாவாகவும் சில்லறை விலை 1400.00 ரூபாவாகவும் காணப்படுகின்றது. அதேவேளை, ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 1000 ரூபாவாகவும், சில்லறை விலை கிலோ ஒன்றின் மொத்த விலை 1,300 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர் .

யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில்..

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து வரும் காற்று நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணமாகும். எனவே, சுவாச நோய் அல்லது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, நுவரெலியா நகர எல்லையில் பூ பனி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி புகைப்படத்தை பதிவிட்டு உயிரை மாய்த்த பொறியியலாளர்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் நேற்று காலை உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விசாரித்த போது வீட்டின் முன்புறம் உள்ள கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அறிவித்துள்ளனர். சடலம் கலென்பிந்துனுவெவ, யகல்ல பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் உலகமே வியந்து பார்க்குமளவிற்கு களைகட்டிய பட்டத்திருவிழா!!

யாழில்..

யாழ் – வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.

அதாவது வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு,

இராட்சத, விசித்திர ‘பட்டத் திருவிழா’ நேற்று (15.01.2024) வல்வெட்டித்துறை உல்லாச கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையில் எங்குமில்லாதவாறு இராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.

2 ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து மரணம்: விளையாடியபோது நேர்ந்த சோகம்!!

வேலூரில்..

சமீபகாலமாக இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி,கல்லூரி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்துபலி, நடனம் ஆடிய போதுசரிந்து பலி , நடந்து கொண்டிருந்த போதே கீழேவிழுந்து பலி, உடற்பயிற்சி செய்த போது பலி என தொடர்கதையாகி வருகிறது.

உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் முறை என எத்தனை காரணங்கள் கூறப்பட்ட போதிலும் இளவயதில் திடீர் மரணங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரும் கவலையையும், தீராத சோகத்தையும் தந்துவிடுகிறது.

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர், இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இளைய மகள் 7வயது யோகேஸ்வரி.

இவர் ர்வழி அருகேயுள்ள கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், கலந்து கொள்வதற்காக யோகேஸ்வரி தந்தை மற்றும் அக்காவுடன் பள்ளிக்கு சென்றார். வரி பிளாஸ்டிக் பந்து கொண்ட போட்டியில் யோகேஸ்வரி கலந்து கொண்டார். அதில் விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுதாகர் மகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையறிந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்ப நண்பர் கைது!!

கர்நாடகவில்..

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெட்டதாசன்பூர் சாய் சக்தி பேரங்காடி கங்கா பகுதியைச் சேர்ந்தவர் நீலம் (30). இவரது கணவர் பெயின்ட் வியாபாரி மற்றும் ஆடு வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில், ஜன., 4ல், வீட்டில் நீலம் தனியாக இருந்துள்ளார்.

பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டிற்கு வந்தபோது, ​​நீலம் கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்து பார்த்தபோது நீலம் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நீலம் வீட்டுக்கு யார் வந்தனர் என விசாரணை நடத்தினர்.

அப்போது ரஜ்னீஷ்குமார் என்ற வாலிபர் வந்து சென்றது தெரிய வந்தது. நீலின் அண்ணன், நீலின் கணவரின் பெயிண்ட் டீலர் கடைக்கு அருகில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார்.

அப்போது ரஜ்னீஷ் குமார் அவர்களுடன் பழகினார். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, ​​பெயின்ட் கடைக்கு உதவுகிறார் ரஜ்னீஷ். இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீலம் குடும்பத்தினருடன் ரஜ்னீஷ் குமார் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

இதில் அவர் நீலம் வீட்டிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ரஜ்னீஷ்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நீலமை கொன்றதை ஒப்புக்கொண்டான்.

கொலைக்கு முந்தைய நாள், நீலத்தின் கணவர் வியாபாரம் செய்த பணத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றதை ரஜ்னீஷ் கவனித்தார். ரஜனீஷ் வீட்டில் இருக்கும் போது நீலத்தை கொன்று பணத்தை திருட திட்டமிட்டார்.அதன்படி வியாழக்கிழமை நீலம் வீட்டுக்குச் சென்றார்.

இரவு உணவு உண்டா என்று நீலம் கேட்டாள். அதன்படி உணவை பரிமாற முயன்றார். அப்போது ரஜனீஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த டவலால் நீலம் கழுத்தை நெரித்தார். இதையடுத்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக வீட்டை சோதனையிட்டார்.

அப்போது நீலின் கணவர் இரவில் எடுத்த பணத்தை வங்கியில் காலையில் டெபாசிட் செய்தது தெரிய வந்தது. வீட்டில் இருந்த 8 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக ரஜ்னீஷ்குமார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவீதியில் துடிதுடித்து பலியான சகோதரிகள்!!

சென்னையில்..

சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சகோதரிகள் பவானியும், சுபாவும். இருவருக்கு 37 மற்றும் 38 வயது. இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வந்த போதிலும் ஒன்றாக காசிமேட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்களின் தாயை பார்ப்பதற்காக சுபாவும், பவானியும் வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து சென்றனர். எண்ணூர் விரைவு சாலை அம்மன் கோயில் பெட்ரோல் பங்க்கிற்கு எதிரில் இருவரும் ஆட்டோ பிடிக்க சாலையைக் கடந்து செல்ல முயற்சித்தனர்.

அந்தவழியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர்கள் இருவர் மீதும் படுபயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பவானி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுபா உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அந்த பக்கமாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுபாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சுபா உயிரிழந்ததாகத் தெரிகிறது. இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து அதிவேகமாக வந்த கல்லுரி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் வண்ணாரப்பேட்டை பரத் மற்றும் ஏழுகிணறு பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இதில் பரத் சத்தியபாமா கல்லூரியில் CSEAI 2 ம் ஆண்டும், பாலகிருஷ்ணன் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் 2 ம் ஆண்டும் படித்து வருகின்றனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுமண காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த பரிதாபம்!!

வேலூரில்..

பெற்றோர்கள், தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாலையும் கழுத்துமாக புதுமண ஜோடி, தங்களைக் காப்பாற்றக் கூறி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருபவர் ஜான்.

இவரது மகள் மேரி. தனியார் கல்லூரி ஒன்றில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார் மேரி. மேரியின் தந்தை ஜான், நடத்தி வரும் நிறுவனத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த சுந்தரராஜபுரத்தில் வசித்து வரும் பேரின்பம் என்பவரது மகன் சூர்யா பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவும், மேரியும் காதலிக்க தொடங்கினர். இவர்களது காதலைத் தெரிந்து கொண்ட மேரியின் தந்தை, சூர்யாவை தனது நிறுவனத்தின் பணியில் இருந்து நீக்கி விட்டார். இந்நிலையில், மேரியும், சூர்யாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

மேரியின் தந்தை ஜான், சூர்யாவை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அச்சத்தில் புதுமணத் தம்பதியர் இருவரும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அத்துடன் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். பெற்றோர்களே எங்களை மிரட்டுவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அத்துடன் ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த நிகழ்வு நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 16.01.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11.01.2024 அன்று பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்த போதிலும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன்,

வெளிநோயாளர் பிரிவு , கிளினிக் பிரிவு, ஸ்கானிங், கதிர் பிரிவு, கதிரியக்கப்பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு , மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இன்றும் கரையொதுங்கிய மர்மப்பொருள்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று ((13) சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.

குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று காலப்பகுதியில் அதிகளவான பொருட்கள் கரை ஒதுங்குவது வழமையாக இருக்கின்றது. அந்தவகையில் யாழில் புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் , உட்பட பல்வேறு பொருட்கள் அண்மை காலமாக கரையொதுங்கியுள்ளன.

இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு!!

இலங்கையில்..

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

Liposuction என்ற சத்திரசிகிச்சை சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்ததாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஜயவர்தன தெரிவித்தார். சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும், எவ்வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இவ்வகையான சத்திரசிகிச்சையில் 4-5 லீற்றர் வரை கொழுப்பு அகற்றப்படுவதாகவும், இந்த நாட்டில் மட்டுமின்றி உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய அளவிலான கொழுப்பு அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை எதுவும் இடம்பெறவில்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், முதுகு வலி, நடப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் மன அழுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் சிறப்பு மருத்துவர் ஜயவர்த்தனவிடம் வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதன்பிறகு, உடல் எடை வேகமாகக் குறைந்ததால், அவரால் எளிதாக நடக்க முடிந்தது என்று மருத்துவர் கூறினார். சத்திரசிகிச்சையின் பின்னர் வயிறு மேலும் நீண்டு விரிவடைந்து காணப்பட்டதால் நேற்று அது தொடர்பான சத்திரசிகிச்சை செய்து வயிற்றிலிருந்த கொழுப்பை அகற்றியதாகவும் அவர் கூறினார்.