மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் சிறுமியின் 80 வயதுடைய பாட்டனாரும் உறவுமுறையான இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரின் பராமரிப்பின்றி ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தில் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் சித்தப்பா முறையான ஒருவரும் பாடசாலை மாணவன் ஒருவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளரான சந்தன உதயங்க (38) என்பவர் கண்டெடுத்து அதனை வங்கியிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அவரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு கிடைத்துள்ள்து.
இந்நிலையில் வங்கி ஊழியர்கள் ஏரிஎம்களுக்கு எடுத்துச் சென்ற அல்லது மத்திய வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்ற 50 இலட்சம் ரூபா பணமே வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குவியல் குவியலாக தரையில் வீழ்ந்து காணப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான நோட்டுகளைப் போட்டோ எடுத்து, பின்னர் இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்து வங்கி அதிகாரியை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சொகுசு பேருந்து வேகமாக மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது புத்தளத்தில் சாரதியின் கட்டுப்பட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல மலையாள சின்னத்திரை நடிகையான பிரியா 8 மாத கர்ப்பமாக இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சின்னத்திரை மூலம் நடிகையாக வலம் வந்தவர் பிரியா. இவருக்கு வயது 35 ஆன நிலையில் மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார்.
இவர், உயிரிழக்கும் போது 8 மாத கர்ப்பமாக இருந்தார் என்பது தான் இவருடைய ரசிகர்களை இன்னும் கூடுதல் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை, அவரது சக நடிகர் கிஷோர் சத்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில், சின்னத்திரை நடிகையான பிரியாவின் குழந்தை தற்போது ஐசியுவில் இருக்கிறார் எனவும் கிஷோர் சத்யா தெரிவித்துள்ளார். நடிகரான கிஷோர் சத்யா தனது பதிவில், “பிரியாவின் இறப்பிலிருந்து அவரது அம்மாவும், கணவரும் எப்படி மீண்டு வருவார்கள் என தெரியவில்லை. 35 வயது என்பது மரணமே கிடையாது. அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியுள்ளார்.
இதில், பிரியா திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்தார். இதன் பின் கர்ப்பத்திற்கு பிறகு மருத்துவ பரிசோதனைகளையும் செய்து வந்துள்ளார். ஆனால், தற்போது மாரடைப்பு குறித்து அவரது தரப்பில் இருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை
வவுனியா நகரில் மணிக்கூட்டு கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் மரம் மீது டிப்பர் மோதி இரண்டு மரங்கள் மற்றும் விளம்பரப் பதாதைகள் என்பனவற்றிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த டிப்பர் மற்றும் சாரதியை வவுனியா பொலிசார் தடுத்துவைத்துள்ளதுடன் இரண்டு அழகுபடுத்தும் மரம் மற்றும் விளம்பரப் பதாதைகள் திருத்தி சீரமைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மணிக்கூட்டுக் கோபுர பகுதியை அழகுபடுத்தும் திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா வர்த்தக சங்கம் மேற்கொண்டு நகரில் விலையுயர்ந்த அழகுபடுத்தும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்,
இன்று (02.11.2023) அதிகாலை மணிக்கூட்டுக் கோபுர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ்.வீதியிலிருந்து கண்டி வீதி நோக்கிப் பயணித்த டிப்பர் வீதியில் அமைக்கப்பட்ட விளம்பர பதாதைகளை ஊடறுத்து கொண்டு இரண்டு அழகு படுத்தும் மரங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து டிப்பர் மற்றும் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சேதப்படுத்தியவற்றை சீர்செய்து கொடுக்குமாறும் பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம் பண்ணை சர்ச் தெருவைச் சேர்ந்த பால் ராஜின் மகன் ராஜ்குமார்.
இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (28). இவர்களுக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு சுதர்சன், பாலகிருஷ்ணன் என்ற இரு மகன்களும், பவித்ராதேவி என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக ராஜ்குமாருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலை தொடரவே, இன்று (அக்.31) வழக்கம் போல மீனாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது, தகராறு முற்றிய நிலையில் வீட்டிலிருந்த அரிவாளால் மீனாவை வெட்ட முயன்றுள்ளார், ராஜ்குமார். அதற்குள்ளாக மீனா தப்பித்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். ஆனாலும் அவரை விடாமல் விரட்டி வந்த ராஜ்குமார், பின்னால் வந்து தலையில் வெட்டியுள்ளார். இதில் வீட்டின் வாசலில் மீனா சரிந்து விழுந்தார்.
அதன்பின் சரிந்து விழுந்த மீனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் முறப்பநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார், மீனாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பியோடி கணவர் ராஜ்குமாரைத் தேடி வருகின்றனர்.
மேலும், குடும்பத்தகராறு தான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில், தனது மொபைலைப் பறிக்க முயன்ற இளைஞர்களுடன் போராடிய இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணைத் துரத்திய இளைஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை நெருங்கிய இளைஞர்களில் ஒருவர், கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார்.
ஆனால், கீர்த்தி தன் மொபைலை விட மறுக்க, அந்த இளைஞர் மொபைலை வேகமாக இழுக்க, கீர்த்தி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த கீர்த்திக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது. அவரது தோழி ஒருவர் உடனடியாக கீர்த்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
கீர்த்திக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், அவரது மூளையிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில், கீர்த்தியின் மொபைலைப் பறித்துச் சென்ற இளைஞர்களை பொலிசார் தீவிரமாகத் தேடத்துவங்கியுள்ளனர்.
ஓரிடத்தில் அவர்களை பொலிசார் கண்டுபிடிக்க, பொலிசாரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்துவங்கியுள்ளார்கள் அந்த இருவரும். பொலிசார் அவர்களைத் திருப்பிச் சுட, ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார், மற்றொருவர் தப்பியோடிவிட்டார்.
சிக்கியவர் பெயர் பல்பீர் குமார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவரிடம் கீர்த்தியின் மொபைல் இருந்ததும் தெரியவந்துள்ளது. குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள். கொலை வழக்காக முடிந்துள்ள மொபைல் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான குணாராசா தனுஷன் என்பவரது சடலம் நேற்றிரவு (31-10-2023) மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவரது அம்மம்மா வீட்டில் தங்கியிருந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவரை மாலைவரை காணமையால் தேடியபோதே ஆட்களற்ற வீட்டில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டதிலேயே இந்த தகவல் வெளியாகியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹிக்கடுவ பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதி அன்றைய தினம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தார்.இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தமக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.“கடந்த 17ஆம் திகதி இரவு 9.28 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.. என் மகள் தான் அழைப்பு எடுத்தார்.
தயவு செய்து என்னைத் தேடாதீர்கள் அம்மா.. என்னால் வரமுடியாமல் போகும். பொலிஸாரிடம் போக வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் பொலிஸாரிடம் செல்ல வேண்டாம் என என்னிடம் கூறியதாக தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி விகிதங்களை 18 சதவீதமாக உயர்த்துவது பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை விதிப்பதன் மூலம் விலை மட்டங்களை அதிகரிப்பதன் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்க முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.இந்த வரி அதிகரிப்பினால் நிச்சயமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அவர் அவர் சுட்டிக்காட்டியு்ள்ளார்.
அதிகரிக்கப்படும் வரி வாடிக்கையாளர்களிடமே அறவிடப்படும். இதனால் விநியோகஸ்தர்கள் அதிகளவில் விலைகளை அதிகரித்து தங்கள் பொருட்களை வழங்குவார்கள்.இதனை அதிக விலைக்கு வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும்.உதாரணமாக 100 ரூபாய்க்கு ஒரு பொருளை கொள்வனவு செய்திருந்தால் ஜனவரி மாதம் முதல் 103 ரூபாய்க்கும் அதிக கட்டணத்தை மக்கள் செலுத்த நேரிடும்.
பெறுமதி சேர்ப்புக்கான வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் இந்நாட்டின் வறிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.மேலும் விலை அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் போட்டித்தன்மையும் பாதிக்கப்படும் என சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பிரதேசத்தில் தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி உயிரை மாய்த்துள்ளமை தெரிய வந்துள்ளது.வட்டகொடை தோட்டத்தின் மேல் பகுதியில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மனமுடைந்த சிறுமி சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த விடயங்கள் தெரியவந்துள்ளன.இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நீதவானின் பரிசோதனையின் பின்னர் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01.11) குறித்த கூட்டமானது இடம்பெற்றது.
இதன்போது வனஇலாகாவிடம் இருந்து காணி விடுவிப்பு மற்றும் நிலப்பயன்பாடு, மாவட்ட கல்வி நிலை, பிறப்பு பதிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன்,
வடமாகாண ஆளுனர் பி.எச்.எம். சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துல சேன, வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் வவுனியா மாநகரசபைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பனம் செய்யும் நிகழ்வும் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தமையுடன் இணையத்தளத்தினை பிரதமர் தொடக்கி வைத்திருந்தார்.
வடக்கு கிழக்கில் கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்பாக இன்று (01.11.2023) காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு இன்று வருகை மேற்கொண்டிருந்த நிலையிலேயே வவுனியா போகஸ்வெவ பகுதியினை சேர்ந்த மக்களினால் இப் போராட்டம் இடம்பெற்றது.
கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் இருந்த சிங்கள மக்களை வெட்டியும், படுகொலையும் செய்திருந்தனர். அவற்றிலிருந்து தப்பித்துச்சென்ற சிங்கள மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது யுத்தம் நிறைவடைந்தமையின் பின்னர் மீள்குடியேறிருந்தனர்.
எனினும் வடகிழக்கில் மீள்குடியேறிய தமிழ் மற்றும் முஸ்ஸிம் மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்கள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வழங்கப்பட்டிருந்த போதிலும் மீள் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அரசாங்கம் எவ்வித அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன்,
வவுனியா போகாஸ்வேவ பகுதியிலுள்ள மக்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகம் என்பன வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் வாக்காளர் இடாப்பு அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நல்லிணக்கம் என தெரிவிக்கும் ஜனாதிபதி வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை மாத்திரம் புறக்கணிப்பது ஏன்? எமக்கு அடிப்படை வசதிகள், விவசாய காணிகள், வாக்காளர் இடாப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செயலக பிரதான வாயிலின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்தினுள் உள்நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையுடன் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மாவட்ட செயலகத்தின் மற்றைய பாதையூடாக வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பண்டாரிக்குளம் பிரதான வீதியினை புரனமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்களினால் இன்று (01.11.2023) காலை 8.30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
பல வருடங்களாக குறித்த வீதி எவ்வித புரனமைப்பும் இன்றி காணப்படுவதுடன் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதினால் வீதியினை பயன்படுத்துவதில் தம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்தமையுடன் உடனடியாக இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு கோரியே இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி முன்பாக ஆரம்பமான இக் கவனயீர்ப்பு போராட்டமானது பண்டாரிக்குளம் பிரதான வீதியூடாக ஊர்வலமாக சென்று புகையிரத நிலைய பிரதான வீதியினை சென்றடைந்து சிறிது நேரம் குறித்த வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 3000 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை அமைந்துள்ள பிரதான வீதியினை உடனே புனரமைப்பு செய் , ஏமாற்றாதே ஏமாற்றாதே இனியும் ஏமாற்றாதே , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரே பதில் சொல் நிதி எங்கே?,
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், நான்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள் துன்படுவது உங்களுக்கு தெரியவில்லையா? போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் 50க்கு மேற்பட்டவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம் (01.11.2023) காலை 10.30 மணியளவில் வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று(01.11.2023) தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை 07மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக காலை 09.30 மணி தொடக்கம் 11.00 மணி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் அரசே ஊழியர் பற்றாக்குறையை நீக்கு, அரசே எங்களுக்காக 5நாள் வேலைத்திட்டத்தினை வழங்கு, அரசே மின்சார கட்டண அதிகரிப்பை இரத்து செய், அரசே மருந்து தட்டுப்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்,
அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் 100க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பில் முன்னெடுத்திருந்தனர்.
சுகாதார ஊழியர்களுக்காக 5 நாள் வேலைத்திட்டத்தை வழங்கல். (வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்) , மத்திய அரசின் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களிற்காக மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் விடுமுறை தின சம்பள வரையறையை நீக்குதல்,
மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக ரேட் முறையை வழங்குதல் (இதுவரையிலும் வைத்தியர், தாதியர், இடை நிலை வைத்தியர் மற்றும் துணை வைத்தியர் சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.) தற்போது வழங்கப்படும் ரூபா.1000 விசேட கொடுப்பனவு ரூபா.7000 வரை அதிகரித்துக்கொள்வது,
சீருடை கொடுப்பனவு ரூபா.15000 வரை அதிகரித்துக்கொள்வது, முறையான இடமாற்ற முறையொன்று மற்றும் இடமாற்றம் விரைவாக வழங்குதல், ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்துதல் , ஊழியர் பற்றாக்குறையின் போது ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் அனைத்து பதவி உயர்வுகள் வழங்குவது தொடர்பாக முன் நடவடிக்கைகள் எடுத்தல்,
மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதல் மற்றும் சத்திர சிகிச்சைகள் வழமைப் போல் நடாத்துதல், நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதற்காக ரூபா.20,000 இனால் சம்பளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பணிப் புறக்கணிப்புப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(01.11.2023) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 648,249.91 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 649,547 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,920 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 183,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 168,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,010 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,060 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை160,450 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.