சடுதியாக அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!!

இலங்கையில்..

வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய(09) நிலவரத்தின் படி சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. பெல்வத்த மற்றும் செவனகல ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரமே சிவப்பு சீன உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தநிலையில், முந்தைய விலையில் இருந்து பதினெட்டு வீதம் (18%) வற் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 390 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர். அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சிவப்பு சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை சுமார் 150 ரூபா குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ வழிதேடி சவூதிக்கு சென்ற இலங்கையருக்கு நேர்ந்த துயரம்!!

அரேபியாவில்..

சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாதிப்புக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரசிந்த பணிபுரிந்த நிறுவனம் அவரை வைத்தியசாலையில் இருந்து எவ்வித வசதிகளும் அற்ற இடத்தில் தடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரே இடத்தில் இருக்கும் ரசிந்தவை கவனிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என இலங்கையில் இருக்கும் அவரது மனைவி கூறுகிறார்.

அத்துடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு இது தொடர்பில் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் வாழ வழிதேடி அரேபியா சென்ற நபர் விபத்தில் சிக்கிய சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கேரள ரயில் நிலையமாக மாறிய மருதானை ரயில் நிலையம்!!

கொழும்பில்..

கொழும்பு மருதானை ரயில் நிலையம் கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த ரயில் மார்க்கமாக பயணித்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தெரியவந்ததாவது, இந்திய திரைப்படக் காட்சியொன்று மருதானை ரயில் நிலையத்தில் எடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் பெயர் பலகை கேரளாவில் உள்ள கோழிக்கோடு ரயில் நிலையமாக பெயர் மாற்றப்பட்டு இங்கு கரிக்கோச்சி ரயில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற பயங்கரம் : துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்!!

கொழும்பில்..

நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தில் பிலியந்தலை, மடபட, ஜபுரலிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதான ஒரு குழந்தையின் தாயான சிவில் விமான சேவை அதிகாரி துலாஞ்சலி அனுருத்திகா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண் வைத்தியர் ஒருவரின் மனைவி என்றும் , சிவில் விமான சேவை அதிகார சபையில் பணியாற்றுபவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண் தனது முடித்துக் கொண்டு அலுவலக சேவை பேருந்தில் மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு வந்து, ஹொரணை கொழும்பு வீதிக்கு வந்து கொண்டிருந்தார்.

இதன்போதுபோது காரில் வந்த நபர் ஒருவர் கத்தியால் பெண்மீது குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கஹதுடுவ அதிவேக வீதி நுழைவாயிலில் இருந்து மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு பஸ்ஸில் வந்த போது காரில் வந்த நபர் ஒருவர் அவரது கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளியின் காரின் பதிவு எண் அனுராதபுரத்தைச் சேர்ந்தது என விசாரணையில் கண்டறியப்பட்டது. அதேவேளை திருமணத்திற்குப் புறம்பான உறவே இந்தக் கொலைக்குக் காரணம் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதோடு சந்தேகநபர் விசா ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடம் ஒன்றில் அவரது அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கொலையாளி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட சமயத்தில் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக்ல பொலிஸார் கூறியுள்ளனர்.

மகனை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவர் சைதன்யா . இவருக்கு வயது 33. இவர் சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பார்வதி நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நள்ளிரவில் சைதன்யா தனது மூத்த மகன் 8 வயது பத்ரியின் கழுத்தை நெரித்து, தூக்கில் தொங்கவிட்டும் கொலை செய்துள்ளார்.

வீட்டில் மற்றொரு அறையில் இளைய மகன் கவுசிக்குடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி வைதேகிக்கு இவை எதுவும் தெரியவில்லை. மெரினாவுக்கு சென்ற சைதன்யா,அங்கிருந்து செல்போனில் தனது நண்பரிடம் “என் மகனை கொன்றுவிட்டேன். நானும் சாகப்போகிறேன். என் மனைவிக்கு உதவி செய்யுங்கள்” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர், உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் மெரினா கடற்கரையில் உள்ள ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த போலீசார் கடற்கரையில் பதற்றத்துடன் நின்ற சைதன்யாவை தடுத்து பத்திரமாக மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர்,மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய வந்ததாக கூறியுள்ளார். சைதன்யாவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி வைதேகியிடம் விசாரணை நடத்த சென்ற போது அவரது மனைவிக்கு தெரியவந்தது.

அடுத்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய மகனின் உடலை பார்த்து வைதேகி கதறி துடித்தார். இதனையடுத்து பத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் சைதன்யா அதிக அளவில் பணத்தை இழந்ததாகவும், இதனால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றும், கடனை அடைக்க முடியவில்லை.

கடன் தொல்லை காரணமாக விடுப்பு எடுத்துவிட்டு சைதன்யா சொந்த ஊருக்கு சென்றார். டிசம்பர் 20ம் தேதி மீண்டும் சேலையூர் வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்தனர்.

கடனை அடைக்க முடியாமல் திணறிய சைதன்யா, தான்உயிரை இழந்து விட்டால் அந்த வேலை மனைவிக்கு கிடைத்துவிடும். இளைய மகனை அந்த பணத்தில் அவர் காப்பாற்றி கொள்வார் என திட்டமிட்டுள்ளார்.

இதனால் மூத்த மகனை கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். சைதன்யா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில் “என் மூத்த மகன் பத்ரி என் மீது அதிக பாசம் கொண்டவன். என்னைவிட்டு இருக்கவே மாட்டான். அதனால் என்னுடன் அவனை அழைத்து செல்கிறேன். என் மனைவி 2வது திருமணம் செய்து கொண்டு மகன் கவுசிக்கை நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும்” என எழுதி இருந்தார்.

திடீரென கல்லூரியின் 6வது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானா முழுவதுமே நேற்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. கல்லூரி ஒன்றின் 6வது மாடியில் இருந்து, பல்கலைக்கழக மாணவி திடீரென குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தெலுங்கானா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பட்டாஜ்செருவில் கீடெம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாதாபூர் பகுதியைச் சேர்ந்த ரேணு ஸ்ரீ என்ற மாணவி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பிறகு கல்லூரியின் 6வது தளத்திற்கு சென்ற ரேணு ஸ்ரீ திடீரென்று கைப்பிடி சுவர் மீது ஏறி அமர்ந்தார்.

அப்போது மாணவியின் தற்கொலை முயற்சியை பார்த்த சக மாணவ, மாணவிகள் குதிக்க வேண்டாம் என அவரை கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவர் கல்லூரியின் 6வது தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி ரேணு ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!!

கலாநிதி சபேசன்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது. பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார். மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் கரையொதுங்கிய புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம்!!

யாழில்..

யாழ். வடமராட்சி பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர். சமீப காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரையொதுங்கி வருகின்றது.

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது. மேலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது. மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் செங்குத்தாக கவிழ்ந்த முச்சக்கர வண்டி!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று திங்கட்கிழமை (08.01) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய கனமழை : வட கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில்..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, ஊவா ,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை, 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்கு அல்லது கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் குறித்த நபரை கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே நேற்று (08.01) மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் உள்ள நீரில் மிதந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சடலம் செட்டிகுளம் பொலிசாரால் இரவு மீட்கப்பட்டதுடன், சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் பார்வையிட்டிருந்தார்.

03 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டவரார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் வைத்தியர் உட்பட மூவர் கைது!!

வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (08.01) அதிகாலை பொலிஸாரின் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த மூவரையும் கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் புதையல் தோண்டும் ஸ்கானர் இயந்திரம் ஒன்றை விற்பனை செய்வதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவு எனத் தெரியாது, புலனாய்வு பிரிவினரிடம் விலைபேசியுள்ளார்.

குறித்த ஸ்கானர் இயந்திரத்தை 15 இலட்சம் ரூபாய்க்கு விலை பேசிய அவர், கார் மற்றும் ஹயஸ் ரக வாகனம் என்பவற்றில் குறித்த ஸ்கானர் இயத்திரத்தை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது அங்கு நின்ற பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த ஸ்கானர் இயந்திரத்தை கைப்பற்றியதுடன், அதனை உடமையில் வைத்திருந்த வைத்தியர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டனர்.

34 வயதுடைய மதாவாச்சியை சேர்ந்த வைத்தியர், 38 வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

மீட்கப்பட்ட ஸ்கானர் இயந்திரம் மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் திருகோணமலையில் நடைபெற்ற பொங்கல் விழா!!

திருகோணமலையில்..

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள் ,1500 பரத நாட்டிய கலைஞர்கள் மற்றும் 500 கோலப் போட்டியாளர்களுடன் பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. குறித்த நிகழ்வானது இன்று (08.01.2024) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் நடைபெற்று வருகின்றது.

பொங்கல் விழாவை வரவேற்கும் முகமாக நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பல விளையாட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன.மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நடிகர் பிரசாத் , அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் : சினிமா பாணியில் செய்த அதிர்ச்சி செயல்!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி – கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் துணியால் கட்டி அழுத்தியதுடன், முகத்தை மூடிக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல நகரில் இருந்து முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்ட யுவதி, கொடகவெல ரன்வல வீதியில் இரண்டு கிலோமீற்றர் பயணித்த போது முச்சக்கரவண்டி சாரதியின் பின் இருக்கையில் இருந்து முன் இருக்கை வரை கழுத்தில் துணியால் அழுத்தப்பட்டதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி நின்றுள்ளது. அங்கு வந்த கிராம மக்கள் சந்தேகமடைந்த பெண்ணை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடு செல்ல தயாரான தாய், தந்தை மரணம் : உயர்தர பரீட்சை எழுதும் மகள்!!

பத்தேகமவில்..

பத்தேகம ஹல்பதோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன் – மனைவி உயிரிழந்துள்ளனர். கடந்த 6 ஆம் திகதி மாலை கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பிரசன்ன குருசிங்க என்ற 42 வயதுடைய நபரும் 38 வயதுடைய கங்கா நில்மினி என்ற அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியினரின் பிரேத பரிசோதனை நேற்று காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்னவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “என் அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்கள். நான் அம்பேகம கல்லூரியில் படிக்கிறேன். இந்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதுகிறேன். தம்பி அதே பாடசாலையில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் அம்மா பயிற்சி பெற்று வந்தார். கடந்த 6ம் திகதி பயிற்சி முடிவடைந்ததால், தாயை அழைத்து வர தந்தை மோட்டார் சைக்கிளில் சென்றார். வீட்டுக்கு வரும்போது அம்மா என்னை தொலைபேசியில் அழைத்து மழையால் வீட்டிற்கு வர தாமதமாகிவிடும் என்பதனால் தனியாக இருக்காமல் அயல் வீட்டிற்கு செல்லுமாறு கூறினார்.

இரவு 9.00 மணியளவில் தாயும் தந்தையும் விபத்துக்குள்ளாகி எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் என உயிரிழந்த தம்பதியின் மூத்த மகள் தெரிவித்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியை வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முருங்கைக்காயின் விலை 3 ஆயிரம் ரூபா!!

முருங்கைக்காய்..

சந்தையில் முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவ்வாறு முருங்கைக்காயின் விலை அதிவேகமாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, முருங்கைக்காய் ஒரு கிலோ கிராமின் மொத்த சந்தை விலை 2,500 ரூபாவாக காணப்படுகின்றது. சந்தைகளில் மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு வேகமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பெய்த கடும் மழையின் தாக்கம் காரணமாக விவசாய செய்கை நிலங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மரக்கறிச் செய்கையும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக மலைநாட்டில் உற்பத்தி செய்யப்படும், போஞ்சி, கரட், முட்டை கோவா உள்ளிட்ட மேலும் பல மரக்கறிகளும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு சில இடங்களில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடான நிலையும் ஏற்பட்டுள்ளது.