வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கொவிட் தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (02.01) இரவு மரணமடைந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்ரியன் பரிசோதனையில் கொவிட் தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டது.
பதவியாவை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வவுனியாவில் ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் காதலனை பழி வாங்க, இளம்பெண்ணொருவர் கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன்.
இவருக்கு முன்னாள் காதலியான ரிங்கி திடீரென போன் செய்து நேரில் சந்திக்க அழைத்துள்ளார். ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பே பிரிந்த நிலையில், ”உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா” எனக் கூறியதால் ஷ்ரவன் நம்பி அவர் கூறிய பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ரிங்கி அவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் ரிங்கியின் நண்பர்கள் ஐவர் ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளனர்.
பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஷ்ரவனின் காரை சோதனை செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஷ்ரவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ரிங்கி தன்னை போன் செய்து அழைத்தது முதல் காதல் விவகாரம் வரை விவரமாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் ரிங்கியை பிடித்து விசாரித்தபோது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா கடத்தல் பழியை சுமத்தியதாக ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ரிங்கி மற்றும் அவரது ஐந்து நண்பர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவல்லம் வந்ததடாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நேற்று மாலை வந்திதடாவை சேர்ந்த ஷாஹினா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் நௌபால், மாமியார் சுனிதா ஆகியோர் மீது திருவல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நௌபல் மற்றும் சுனிதா இருவரும் தொடர்ந்து ஷாஹினாவை அடித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவல்லம் வண்டித்தடம் பகுதியைச் சேர்ந்த ஷாஹினா என்பவருக்கும், கட்டக்கடை வஜ்ரம் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் நௌபலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஷாஹினாவின் குடும்பத்தினர் கூறுகையில், திருமணத்திற்காக 75 பவுன் தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. திருமணமான அன்றே கணவர் மற்றும் மாமியார் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நௌஃபல் தனது சகோதரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஷாஹினாவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். ஷாஹினா தன்னுடன் செல்ல மறுத்ததால், குழந்தையை மட்டும் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் ஷாஹினா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 75 பவுன் நகை கொடுத்தும், தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலில் இருந்த ஷாஹினா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷாஹினாவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
இலங்கையில் முதன்முறையாக, ஒளியியல் மாயையுடன் கூடிய வீதிப் பகுதியைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்னவின் ஆய்வின் மூலம் ஒளியியல் மாயையுடன் கூடிய வீதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாவுல – எலஹெர பிரதான வீதியில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த வீதிப் காணப்படுகிறது. இது தொடர்பில் முன்னாள் இராணுவ கேணல் ரத்னபிரிய பந்து காணொளி மூலம் பேராசிரியருக்கு தெரியப்படுத்தியதுடன், அவ்விடத்தை பார்வையிட வந்த பேராசிரியர், இலங்கையில் இவ்வாறானதொரு இடம் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும் கூறியள்ளார்.
வேறு பல நாடுகளில் இதுபோன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த இடம் பார்ப்பதற்கு மேடு போல் இருந்தாலும், உண்மையில் இது ஒரு பள்ளத்தாக்கு என பேராசிரியர் விளக்கியுள்ளார்.
யாழ் மல்லாகம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று திங்கள் காலை (1) வலிவடக்குபிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் இளைஞர் வீட்டில் விபரீத முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவத்தில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் பிரசன்னா வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் வீரரான குறித்த இளைஞர் விளையாட்டில் சிறந்த வீரர் என்றும் கூறப்படுகின்றது.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.இளஞர் உயிரிழந்தமைக்கான காரண,ம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறை, கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பல புகழ்பெற்றவர்களும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் விடுமுறையை கழிப்பதாக தவறான சமூக ஊடக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், அவர் இலங்கை வீதியிலுள்ள சிறிய விற்பனையகத்தில் இளநீரைக் குடித்துக்கொண்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
எனினும், பராக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்பதை பல நம்பத்தகுந்த தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தநிலையில், பராக் ஒபாமா, இளநீரை ருசிக்கும் உண்மைப்படங்கள், 2016இல் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது லாவோஸுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் படங்கள் இந்தோனேசிய படைப்பாளரான அகன் ஹராஹாப்பினால் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தினரையும், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களையும் இந்த புதிய வற் வரி திருத்ததம் கடுமையாக பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
வற் வரி திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும். இந்த வற் வரி திருத்தத்தின் மூலமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்வர்.
வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.
அதேசமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.
நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி எண்களை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வரி எண்ணை பதிவு செய்வது தொடர்பான விண்ணப்பத்தை அதன் இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம்.மதிப்பீட்டு ஆண்டிற்கு 1,200,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வரிக் கோப்பைத் திறக்க வேண்டும்.ஒரு வருடத்தின் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலம் மதிப்பீட்டு ஆண்டாகக் கருதப்படுகிறது.
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.பதிவு செய்துக் கொள்ளாதவர்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பதிவு செய்யும் எனவும் இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் கடந்த 01.01.2022 அன்று பிக்கப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வராசா றஜீபன் (வயது 37) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அவரின் இரண்டாவது வருட நினைவு தினத்தினையடுத்து அவரின் நண்பர்கள் விபத்து இடம்பெற்ற தாண்டிக்குளம் பகுதியில் அன்னாரின் உருவப்படத்திற்கு வைத்து மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியமையுடன் அப்பகுதியின் வீதியோரங்களில் அன்னாரின் நினைவாக மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
இவ் நினைவஞ்சலி நிகழ்வில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல அவர்களின் கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய் என்ற கவிதையுடன் நண்பர்களின் உணர்வு அவரின் பிரிவினை உணர்த்தி நின்றமை வீதியில் சென்றவர்களின் மனதை நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது.
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட அடையாளம் தெரியாத மிதவைக்கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.
இன்று (01.01.2024) காலை கரையொதுங்கிய குறித்த மிதவைக்கலத்தை கடற்றொழிலாளர்கள் கரைக்கு இழுத்து வந்துள்ளனர். கரையொதுங்கிய கலம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரையிலும் மிதவை ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் (30.12.2024) சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இதன்பின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து இடம்பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் சமரி அத்தபத்து குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் துறையில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் அவர் இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் திறமையை வெளிப்படுத்திய சமரி அத்தபத்து இந்த வருட இந்திய மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேக்கரி தொழிற்துறையினரும், பேக்கரி உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நாட்டு மக்களை நினைத்து பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதுடன், அதிகரிப்பினால் ஏற்படும் பாரிய நட்டத்தை பேக்கரி உரிமையாளர்களே சுமக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி இன்று (1.1.2024) முதல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாய் ஆகும். மேலும், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விலை அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் மைலகஸ்சந்தியை அண்மித்த ஹோட்டல் அறையில் ஆண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில், மணமகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பரசங்கஸ்வெவ, வரகொட பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய இந்திக ரணவீர பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் அநுராதபுரத்தில் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்க்கும் தொழில் ஈடுபட்டு வந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 21 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இருவரும் மைலகஸ்சாந்தி அருகே உள்ள ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அந்த தம்பதியில் பெண்ணுக்கு தலைவலி ஏற்பட்டதாகவும் அதற்காக கணவர் கொடுத்த மருந்துகளை உட்கொண்டவுடன் உறங்கிவிட்டதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார். கண்விழித்த போது அறையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் கணவன் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக, மனைவி குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் வசித்து வந்த 39 வயதான இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.