வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2024 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.01.2024) காலை 8.30 மணிக்கு மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திரவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அதன் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சிலதினங்களா காய்ச்சல் இருந்துள்ளது.
இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் இன்று மரணமடைந்தார். சம்பவத்தில் செட்டிகுளம் முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் வயது 22 என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தார்
நாடு முழுவதும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01.01.2024) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயம், வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம், குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் ஆகிய ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தநிலையில் இருவருக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் கடந்த சிலநாட்களாக அவரது மனைவியான அந்தபெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்குவதற்காக அவசர பொலிசாருக்கு பலமுறை அழைப்பை ஏற்ப்படுத்தி அறிவித்திருந்தோம் இருப்பினும் அவர்கள் வருகைதரவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக இன்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவுசெய்திருந்தனர். இந்நிலையில் குறித்த நபர் இன்று மாலை தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளது. இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிசாரால் அந்நபர்
கைதுசெய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடுமையாக உயர்வடைந்திருந்த பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.300 முதல் 350 ரூபா வரை இவ்வாறு பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.பெரிய வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், பாகிஸ்தான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை தற்போது 2000 முதல் 2200 ரூபா வரை அதிகரித்துள்ளது.
கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை நாளை(01.01.2024) அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், தேநீர் மற்றம் பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, சாதாரண தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.
மதிய உணவுப் பொதி, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் உள்ளிட்ட உணவுகளின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பேருந்து கட்டணங்கள், முச்சக்கரவண்டி கட்டணங்கள் உள்ளிட்ட சேவை கட்டணங்களும், தொலைபேசி இணைப்புக்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு இந்த அதிகரிப்புகள் பேரிடியாக காணப்படுகின்றது.
புதிய கோவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலகளவில் கோவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் தனிநபர் இறப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.புதிய கோவிட் 19 திரிபு இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதை விசேட நிபுணர்களுடன், சுகாதாரத் திணைக்களங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் அண்டை நாடான இந்தியா அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளது.புதிய கோவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
கோவிட் 19 தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கக்கூடிய பல நோயாளிகள் நாட்டில் காணப்படுகின்றனர். அதனால் புதிய திரிபு ஓரளவுக்கு நாட்டில் பரவி வருகிறது என்பது தெளிவாகிறது.ஆகவே, எந்த ஒரு நபரும் ஆபத்தில்லை என்று சொல்ல முடியாது. இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பில் முறையான விசாரணை நடத்த வேண்டும்.
பின்னர் இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எவ்வாறாயினும், பொதுமக்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவதும் இந்த நேரத்தில் அவசியம். விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் தொடர்பான எந்த செயல்முறையும் இல்லை.
அதனால் நாட்டுக்குள் தொற்றுநோய்கள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடைமுறைக்கு வரவுள்ள புதிய வற் (VAT) வரி திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி 1 முதல் உயரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மீதான வற் வரி மேலும் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுவுக்கு துறைமுகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விதிக்கும் 2.5% வரி நீக்கப்பட்டு 15.5% வீதத்தால் விலை அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 3565 ரூபாவிற்கு விற்கப்படும் நிலையில் நாளைமுதல் 500 அதிகரிக்கப்பட்டு 4065 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு எரிவாயு விலையின் இந்த சடுதியான அதிகரிப்பினால் உணவுப்பொதிகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதோடு பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
குறிப்பாக எரிவாயு விலை அதிகரிப்பினால் சிறிய, நடுத்தர குடும்பத்தினர் மற்றும் நகர்புறங்களில் தொழில்புரிவோர் மற்றும் கூழித்தொழிலாளிகளும் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். கடந்த ஒக்டோபர் மாதம் 04 திகதி எரிவாயு விலைகள் இறுதியாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மும்பை அருகே பழுதடைந்த விமானமான ஏர் இந்தியா A320 ஐ லொரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில் திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து அங்கு போக்குவரத்து தடைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர் இந்தியா விமானத்தை லொரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லொரி மீட்கப்பட்டதாகவும் லொரி சாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஏர் இந்தியா A320 2021 இல் சேவையில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து சமீபத்தில் ஒரு தொழிலதிபரால் ஏலத்தில் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று (30.12.2023) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியில் இருந்து புத்தளம் திசை நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் , ஒருவர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், இந்த விபத்தின் போது இரண்டு சொகுசு கார்களும் சேதமடைந்துள்ளன.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக திருகோணமலை வாசி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காதலை முறித்த காதலனின் ஏழு வயது மகளின் நிர்வாண படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா கலகெட்டிஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்சாலையில் அவருடன் பணிபுரியும் திருமணமான நபரொருவருடன் பல வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.இந்நிலையில் அந்நபர் இந்த காதல் உறவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட பெண் அந்நபரின் மகளின் புகைப்படங்களை நிர்வாணப்படங்களாக தயாரித்து அந்நபரின் வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதையடுத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட ஈழத்து குயில் கில்மிஷா முதல் பரிசை வென்றார்.இவ்வாறான நிலையில், தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய நிலையிலேயே சிறுமி கில்மிஷா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நாட்டில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த அனைவர்க்கும் நன்றியையையும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை தொடர்பில் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.இதேவேளை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இசைத்துறையில் மிகப்பெரிய பின்னணி பாடகராவதே தன்னுடைய விருப்பம் என்றும் அதனுடன் வைத்தியராக வேண்டும் என்ற இலட்சியத்தை நோக்கியும் பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிஐடி எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று(30.12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேரூந்து தரிப்பிடப் பகுதியில் நேற்றைய தினம் (29.12) நின்ற மூன்று இளைஞர்கள் அவ் வீதியால் மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவரை மறித்து தாம் சிஐடி எனக் கூறி, தம்மை தாண்டிக்குளம் குளக்கட்டு பகுதியில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.
இதனை நம்பிய குறித்த இளைஞன் அவர்களை ஏற்றிக் கொண்டு தாண்டிக்குளம் குளக்கட்டுப் பகுதியால் சென்ற போது குறித்த இளைஞனிடம் இருந்த கைத்தொலைபேசியை பறித்துக் கொண்டு மூன்று இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த மூவரும் மடுகந்த பகுதிக்கு சென்று அங்கு வீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பாதிகாரி ஜெயதிலக தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க, ஜெயதுங்க, உபாலி மற்றும் சியான் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன்போது குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் கைத் தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது வவுனியாவில் திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், மடிக்கணனி ஒன்றும், கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டது.
இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் திருடப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி பொலிசாரிடம் வவுனியா பொலிசார் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் திருடப்பட்ட பொருட்களையும் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அசரால் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை.
குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் தான் இது.
இந்த கட்டிடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி படித்த பெண்ணொருவர் நிஜத்தில் உள்ளது போல அப்படியே ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
ஜனவரி முதல் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் துஷார ரத்னவீர தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வற் வரி அதிகரிப்பின் காரணமாக, பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.