ஜனவரி முதல் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் துஷார ரத்னவீர தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வற் வரி அதிகரிப்பின் காரணமாக, பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வட்டாரங்கள் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளன.அதேவேளை சில்லறை சந்தையில் இதன் விலை சுமார் 1,800 ரூபாய் என கூறப்படுகிறது.
அதன்படி, பச்சை மிளகாய் காய் ஒன்றின் விலை சுமார் 15 ரூபாவாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.பேலியகொட மானிங் மாலில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 2,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் விலை 1,650 முதல் 1,670 ரூபா வரை பதிவாகியுள்ளது.
கெப்பிட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 முதல் 1300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதுடன் அரசாங்கம் இதில் தலையிட்டு மரக்கறிகளுக்கான நிர்ணய விலைகளை வெளியிடுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவருக்கான காசோலையினை நேற்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். அதிர்ஷ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலை இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து இலக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரச விதிமுறைகளை மீறி பதிவு செய்யாதோருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.அதேவேளை வருடாந்தம் 12 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும். பதிவு எண்ணைப் பெறுவதும் வரிக் கோப்புகளைத் திறப்பதும் தனித்துவமான செயல்முறைகள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எண் இருக்கும் போது, உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பதிவு எண் கட்டாயமாகும். தனிநபர்கள் வரிவிதிப்புக்கு பொறுப்பேற்க போதுமான வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்துவதற்கான கோப்பைத் திறப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் 13 வயதுடைய இரு சிறுவர்களுடன் தங்கியிருந்த 51 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் பயிற்சிக்காக தனது பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது சிறுவர்களை அழைத்துச் செல்வதாக இந்தப் பாடசாலை ஆசிரியர் பெற்றோரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பாமல் எப்பாவலயிலுள்ள தங்குமிடமொன்றில் தங்கியிருந்துள்ளார். இதன்போது இனந்தெரியாத ஒருவரால் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த இளம் தாதியின் உடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய இளம் தாதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார். குறித்த தாதி 2018 ஆம் ஆண்டு தனது பயிற்சிக் காலத்தை முடித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய நோய் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் திகதி பண்டாரவளை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறையில் சென்றிருந்த நிலையில், 26ஆம் திகதி சுற்றுலா பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில்,மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (27) தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்தியர் எச்.கே.என்.சுரங்கவினால் அவரது சடலம் மீதான பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்ட பண்டாரவளை மரண விசாரணை அதிகாரி மேனகா ரத்நாயக்க, உடல் உறுப்புகளை ஒப்படைப்பதற்கு திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தொடர்ந்து உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு சந்துனி சுலோச்சனாவின் இறுதிக் கிரியைகள் பெருந்தொகையான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று (28) பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் – களுதாவளை பகுதியில் இன்றைய தினம் மாலை சுகயீனம் காரணமாக இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குணசேகரம் ரோஜிதன் என்ற இளைஞன் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், களுவாஞ்சிகுடி இலங்கை வாங்கி உத்தியோகத்தரான துசாந்தன் என்ற இளைஞன் திடீர் சுகயீனம் ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இரு இளைஞர்களுக்கும் முகநூலில் அஞ்சலிகளை உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (28.12.2023) காலை கரையொதுங்கியுள்ளது.அப்பகுதி கடலில் கடந்த (27.12.2023) ஆம் திகதி மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறு கரையொதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடர்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பொருளை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளதாக என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரின் திடீர் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குறித்த தாதி, தனது பயிற்சிக் காலத்தை முடித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்தார்.கடந்த 25ஆம் திகதி பண்டாரவளை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து 26ஆம் திகதி உல்லாசப் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
காலை உணவு பெற சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், இந்த தாதி பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.எனினும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
எனவே மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகளுக்கு உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் காணப்படவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சத்துர வன்னி நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது 771 வியாபார நிலையங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிறுவன முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த 771 வழக்குகளும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல், போன்ற பல்வேறு விடயங்களிற்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகும்.
இதேவேளை பாவனையாளர்கள் அதிகார சபையினால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார், அரச அலுவலகர்கள் என பல தரப்பினருக்கும் பாவனையாளர் உரிமைகள், பாவனையாளர் கடமைகள், பாவனையாளர் சட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் கொவிட் பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மீண்டும் ஜே.என்.01 (JN 1 OMICRON) உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வரும் நிலையிலேயே அமைச்சர் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் மீண்டும் கொவிட் – 19 தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய திரிபான ஜே.என்.01 கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் 41 நாடுகளில் பரவியுள்ளது. இலங்கையில் பரவும் அபாயம் இருக்கின்றதா என்பது தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். இலங்கையை பொருத்தவரை அந்த தொற்று பரவும் அபாயம் குறைவாக இருந்த போதிலும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுவது பாதுகாப்பானதாகும்.
நாட்டில் கொவிட் கட்டுப்பாட்டுக்கான பரந்த தடுப்பூசி திட்டம் நடைமுறையில் இருந்தாலும், நாட்டு மக்கள் கொவிட்டில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முகக்கவசம் அணிந்து கொள்வது உகந்தது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொவிட் காலத்தில் போன்று மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம் உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற மாமா என்ற பெயருடைய கடத்தல்காரர் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தங்கியுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த பொலிஸார், நான்கு அழகான யுவதிகளையும் மேலும் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள்கள் மற்றும் அவற்றைக் குடிக்கப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்படி அழகான யுவதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பணத்திற்கு விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், பொலிஸார் வீட்டை மேலும் சோதனையிட்ட போது, போதைப்பொருள் ஐஸ் பொதி செய்ய பயன்படுத்தப்பட்ட சிறிய மெழுகு குச்சிகள் பெருமளவில் கண்டுபிடித்துள்ளனர்.
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் உயிரிழந்ததையடுத்து, மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் போது கொவிட் -19 நிமோனியாவால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் சடலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கடந்த (23) திகதி கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது: விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச.28) தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.
பெங்களூருவில் ஹீட்டரில் இருந்து வெளியான கியாஸ் காரணமாக மூச்சுத் திணறி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு காமாக்ஷிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மீனாட்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுக் காலை குளிக்கச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து, குடும்பத்தார் நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், ராஜேஸ்வரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால், பதற்றமடைந்த அவர்கள், குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.உள்ளே, கியாஸ் சிலிண்டர் மூலம் பயன்படுத்தப்படும், ஹீட்டரில் இருந்து கியாஸ் லீக்கானதும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஹீட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைட் காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த தனது சகோதரருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ராஜேஸ்வரி இப்படி பரிதாபமாக பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், சகோதரர் ஒருவருக்கு அவரது சகோதரியை கொன்றுவிட்டதாக வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது, மைத்துனி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிர்மலா என்ற அந்த பெண் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இறந்த நிர்மலா என்ற அந்த பெண்ணின் கணவர் பிரகாஷ், ஆறு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. பிரகாஷின் மூத்த சகோதரர் சுரேஷ், தனது தம்பியை தற்கொலைக்கு தூண்டியதே அவரது மனைவி நிர்மலா தான் என்று தனது மைத்துனி மீது பல நாட்களாக குற்றம் சாட்டி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கணவர் 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்ததால், நிர்மலா தனது இரண்டு குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இருப்பினும், இறந்த நிர்மலாவின் மைத்துனர் அந்த பெண் தொடர் வெறுப்பு கொண்டிருந்தார், அவர் தனது இளைய சகோதரனின் மரணத்திற்கு அவர் தான் காரணம் என்பதை அடிக்கடி கூறிவந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமையன்று, சுரேஷ் அந்தப் பெண்ணைத் தாக்கி வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். உடனே “உன் தங்கையை எரித்துவிட்டோம்” என்று நிர்மலாவின் சகோதரருக்கு போன் வந்துள்ளது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார், தனது சகோதிரியை அன்று தான் தனது வீட்டுக்கு கூட்டி வர அவர் நினைத்ததாகவும், ஆனால் அதற்குள் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். புகாரை அடுத்து போலீசார் இப்பொது சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.