யாழ் பல்கலை மாணவி மரணம் : அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ள சகோதரி!!

குணரத்தினம் சுபீனா..

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் சகோதரி குற்றச்சாட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) எனது சகோதரிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(23) காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி ஏற்பட்டதால் அதற்கு ஒரு ஊசியை செலுத்துமாறு தாதியருக்கு கூறினார்.

இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் செலுத்திவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்று எனது தங்கை துடித்துள்ளார். இதையடுத்து அந்த ஊசிக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.

பின்னர் மருத்துவர் “இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது சகோதரிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டார். ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக கூறினர்.

பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே சகோதரியை அனுப்பி வைத்தனர். இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை.

முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது.பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். இரவு எட்டு மணியளவில்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது.

எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர்.பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை என்று கூறினார்.

பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணத்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது சகோதரி சென்றார்.இதன்போதே ஏதாவது எனது சகோதரிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை.

எனது சகோதரிக்கு ஏற்கனவே செலுத்திய ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு ஒட்டி இருந்தனர்.பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது.ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை(19) பரிசோதனைகள் செய்யப்பட்டது.

ஆனால் புதன்கிழமை(20) பரிசோதனை செய்யவில்லை.ஏனென்றால் மெசின் பழுதாகி விட்டதாக கூறினர். இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அறியமுடிகிறது.

போடப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.பிரேத பரிசோதனை அறிக்கையில் ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான எந்த சம்பவங்களும் இனி நடக்கக்கூடாது. எனது சகோதரிக்கு நீதி வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த சுனாமி பேபி!!

இலங்கையில்..

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ளன. குறித்த பேரழிவில் சிக்குண்டு 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், சுனாமி பேபி என அழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு இன்று (26.12.2023) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவித்தார்.

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இலங்கைச் சிறுவன்!!

பாக்யராசா முரளிதரன்..

2023 ஆம் ஆண்டில் உலகின் தனித்துவமான நினைவாற்றல் கொண்ட மாணவராக புகழ்பெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இலங்கை சிறுவன் ஒருவன் இடம்பிடித்துள்ளான்.பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாக்யராசா முரளிதரன் எனும் ஒன்பது வயதுடைய மாணவரே இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.

குறித்த சிறுவன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட சோழன் உலக சாதனை புத்தகத்தில் இந்த குழந்தை இடம்பெறுவது இதுவே முதல் முறை என்று சோழன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.

உலக வரைபடத்தில் உள்ள நாணயங்கள், ஆட்சியாளர்களின் பெயர்கள், தலைநகரங்கள், மொழிகள், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்பு கொள்ளும் திறன் போன்ற பகுதிகள் பற்றிய இந்த மாணவனின் இளம் வயதிலேயே அசாதாரண அறிவு மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்வதன் மூலம் அந்த மொழிகளிலும், சர்வதேச பொது அறிவிலும் சோழன் அமைப்பாளர்கள் இந்த மாணவரை உலக சாதனை புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

இந்த மதிப்பீட்டின் நோக்கம் ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி பெற்றோருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.இந்த மாணவனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் சேர்ப்பதற்கான பரீட்சை பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நிலத்துக்குள் கீழ் பதுக்கப்பட்டிருந்த சாராய போத்தல்கள் : அதிர்ச்சியில் பொலிஸார்!!

யாழில்..

நத்தார் பண்டிகை மற்றும் போயா தினத்தை முன்னிட் நாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி, கலட்டி சந்தி மற்றும் முலவை சந்திப் பகுதியில் நடாத்திய தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 117 கால் போத்தல்களும் 9 முழு சாராயப் போத்தல்களும் பொலிஸ் புலனாய்வாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மண்ணுக்குள் குழி வெட்டி அதற்குள் சாராயப் போத்தல்களை வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டவரும் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை : 3 மாதங்களுக்கு நெருக்கடி!!

பெரிய வெங்காயத்தின் விலை..

இலங்கை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 650 ரூபாவை தாண்டியுள்ளது. வெங்காய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள இந்தியா, கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் பெரிய வெங்காயம் ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால் வெங்காய விலை உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் பெரிய வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதையடுத்து விலையை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் பெரிய வெங்காயத்தின் விலை பெருமளவு அதிகரித்துள்ளன.

இலங்கையின் நுகர்வோரின் வருடாந்தம் பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 280,000 மெற்றிக் தொன்களாகும். இந்த நாட்டில் சராசரியாக பெரிய வெங்காய உற்பத்தி சுமார் 125,000 மெட்ரிக் தொன்களாகும்.

மீதமுள்ள தேவையை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மழை, உரத் தட்டுப்பாடு, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடந்த பருவத்தில் பெரிய வெங்காயச் செய்கையை கைவிட்டதால் 2023ஆம் ஆண்டு அறுவடை 7851 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளது.

ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கவுள்ள கையடக்க தொலைபேசி விலைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தொலைபேசி விலைகள்..

VAT வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையில் போலிப் பொருட்கள் அதிகரித்து வரி வருமானம் இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனவரி 1, 2024 முதல் VAT 15% முதல் 18% ஆக ஒரே நேரத்தில் அதிகரிக்கப்படுவதால், கையடக்கத் தொலைபேசி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.

இதனால் 10,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் ஆபத்தில் இருக்கும் என்று கையடக்க தொலைபேசி மற்றும் பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VAT வரி அதிகரிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையில் போலிப் பொருட்கள் அதிகரித்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பலரின் கண்ணீருக்கு மத்தியில் யாழ் பல்கலை மாணவியின் இறுதிச்சடங்கு!!

யாழில்..

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் கடந்த 23ம் திகதி (23.12.2023) திடீரென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சாயுடை, மாவிட்டபுரம் , தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் நேற்று (25.12) நடைபெற்றது.

மாணவியின் இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர்.

மாணவிக்கு கடந்த 17ஆம் திகதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அங்கு கடந்த 22ஆம் திகதி குறித்த யுவதி திடீரென மயக்கமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். யுவதி டெங்கு தொற்றினால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தபோதும், உடற்கூற்று பரிசோதனைகளின்படி அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை என்றும், இதனால் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாணவியின் மரணம் அவரது குடுபத்தவருக்கும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவியின் இறுதி சடங்கிஒல் பெருமளவானர்கள் கலந்துகொண்டு கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளமை துயரத்த்தைஏற்படுத்தியுள்ளது.

நத்தார் தினத்தில் காதலியை பார்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் தேவாயலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நத்தார் வழிபாட்டின் போது தனது காதலியை சந்திப்பதற்காக தேவாலயத்திற்கு அருகில் நின்ற இளைஞனையும் அவரது நண்பரையும் முந்தலம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பத்தலுஓயா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்களே இன்று அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் வந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தேவாலயத்திற்கு அருகில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதை, கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்துள்ளனர். யுவதி ஒருவருடன் சுமார் 06 மாதங்களாக காதல் தொடர்பு இருப்பதாகவும், அவர் தேவாலயத்திற்கு வந்த நிலையில் அவரை சந்திப்பதற்காக தேவாலயத்திற்கு அருகில் வந்ததாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தேக நபரின் இந்த வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முந்தலம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த 6 மாத பெண் குழந்தை!!

யாழில்..

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கலாசாலை வீதி, திருநெல்வேலியைச் சேர்ந்த பிறந்து 6 மாதங்களேயான பிருந்தாபன் அர்ச்சனா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் (22-12-2023) இரவு 10.00 மணியளவில் குழந்தை மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

யாழில்..

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம் (23-12-2023) உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென்னிந்திய திரையுலகின் இலங்கை தமிழ் நகைச்சுவை நடிகர் மரணம் : திரையுலகினர் அஞ்சலி!!

திரையுலகில்..

தென்னிந்திய திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான இலங்கை தமிழர் போண்டா மணி உடல்நலக்குறைவால் தனது 60 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவருடைய தாயகமான இலங்கையில் உள்ள மன்னாரில் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை ஆரம்பித்து நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து அகதியாக இராமேஸ்வரம் சென்று நடிகராகியுள்ளார்.தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவரின் வைத்திய செலவுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வந்த நிலையில், நேற்று(23) வீட்டில் திடீரென மயங்கி விழுந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மரணம் தென்னிந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தால் வீதியில் காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்!!

யாழில்..

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் ஒன்று விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (24-12-2023) அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹம்பக பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வாகனம் அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி பேருந்துக்காக காத்திருந்த ஒருவரை மோதியுள்ளது.

இந்த விபத்தில் கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக பேருந்துக்காக பேருந்து தரிப்படத்தில் காத்திருந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கல்லாசிய கொடவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான டி. ஏ சந்துன் தினேஷ் ஜெயக்கொடி என தெரியவந்துள்ளது.

யாழ் யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!!

பிரித்தானியாவில்..

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானிய கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானியாவின் சன்ரைஸ் அகடமி குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அகடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவராகவே அமுருதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீண்டகால விரிவான தேர்வு செயல்முறையின் அடிப்படையில், குளிர்கால பயிற்சி திட்டத்தில் இத்தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பேர் கொண்ட அணி பின்வருமாறு : மோலி பார்பர்-ஸ்மித், ஒலிவியா பார்ன்ஸ், பிரிஷா பேடி, ஈவி புக்கர், ஹன்னா டேவிஸ், மே டிரிங்கெல், இசபெல்லா ஜேம்ஸ், பெல்லா ஜான்சன், லைலா, ஓலோரன்ஷா, சாரா பியர்சன், சார்லி பிலிப்ஸ், மாபெல் ரீட், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ரிவா பின்டோரியா, அமுருதா சுரேன்குமார்

அமுருதாவின் தந்தை சென் ஜோன்ஸின் முன்னாள் கிரிக்கட் வீரர், யாழ்ப்பாண பிக் மட்ச் இல் அதிக தனி நபர் ஓட்டங்கள் (145) அடித்த சாதனை அவர்வசம் தான் இன்னமும் இருக்கிறது. 2024 மார்ச்சில் இடம்பெறவுள்ள இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் அமுருதாவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம் : கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்!!

யாழில்..

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக பரிசோதனைக்காக குறித்த மாணவியின் உடற்கூறு பகுதிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்றைய தினம்(23) உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற (25 வயது) மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் குறித்த மாணவி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார்.உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவில் உணவு அருந்தும்போதே பரிதாபமாக உயிரிழந்த தமிழ் வங்கி உத்தியோகத்தர்!!

முல்லைத்தீவில்..

உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய நிலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் இலங்கை வங்கியில் நிறைவேற்று தர உத்தியோகத்தராக பணிபுரிந்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பருத்தித்தித்துறை தம்பசிட்டி சொந்த இடமாக கொண்ட 38 வயதான பாலசுப்பிரமணியம் மதனகுமார் வயது 38 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மீண்டும் முகக்கவசம் அணியுங்கள் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

முகக்கவசம்..

நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.

J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கோவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கோவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன.இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் வைத்தியர் சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தினார்.