சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உறுதிப்படுத்திய கொவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது. கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன் தினம் (21) மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை கடந்த தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநோசி, முல்லைத்தீவு பகுதி மக்கள் பெரும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார்.ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா – சிவானந்தன் Bodhana Sivanandan சிறந்த பெண் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா – சிவானந்தன் என்ற சிறுமி இறுதிச் சுற்றில் இரண்டு முறை ரோமானிய சாம்பியனான 54 வயதான கிராண்ட்மாஸ்டர் விளாடிஸ்லாவ் நெவெட்னிச்சியுடன் டிரா செய்தார்.சர்வதேச மாஸ்டர் மற்றும் பிரித்தானிய மகளிர் பயிற்சியாளர் லோரின் டி’கோஸ்டாவை வென்றுள்ளார்.
ஒரு போட்டி விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்கும் இளைய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.எட்டு வயது சிறுமி “வியக்கத்தக்க முடிவை” அடைந்ததாக ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.போதனா சிவானந்தனின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மேலும், உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வானில் நிலாவை சுற்றி பாரிய வளைய வடிவிலான ஒளி வட்டம் தோன்றியுள்ளது. இதைப் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.
இந்த ஒளி வட்டம் நேற்று (22-12-2023) மாலை சுமார் 7.00 மணி முதல் நாட்டின் பல பாகங்களிலும் தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு வட்டப் பரிமாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும், வளிமண்டலத்தில் ஈரப்பதம் அல்லது வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரிக்கும் போது, தெளிவான வானத்திலும், நிலவு நன்றாக இருக்கும் நாளிலும் இவ்வாறான ஒளி வட்டம் தோன்றும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (22.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், குறித்த புகைப்படங்கள் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.
மேலும் இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 14 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.இந்தநிலையிலேயே வெளியான குறித்த புகைப்படங்கள் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவை என்று முகப்புத்தகத்தில் வேகமான பகிரப்பட்டு வந்தது.
JN1 Omicron துணை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு குறிப்பைச் சேர்த்த அவர், கொவிட் பரிசோதனை மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், தற்போது அதன் பரவலின் நிலைமை குறித்து அறிவியல் அறிக்கையை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மீண்டும் முகமூடி அணிவதை நாடுவதே மிகவும் பொருத்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் இன்னும் செயலில் உள்ளன, மேலும் ஆபத்தில் உள்ள குழுக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றது.
குறிப்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 620 குளங்களில் 456 குளங்களும், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 17 குளங்களும், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 06 குளங்களும் வான் பாய்கின்றதாக மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை பாலிக்குளம், சின்னசிப்பிகுளம், தேகக்கம்குளம், பிரமநாலங்குளம், பரயநாலங்குளம் உட்பட 64 குளங்கள் உடைப்பெடுத்த நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களம், இராணுவம், கிராமமக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து குளத்தினை மறுசீரமைத்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் நேற்றையதினம் (21.12.2023) வெட்டி அகற்றப்பட்டது. வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள ஆபத்தான மரங்கள் பாதுகாப்புகருதி ன்றையதினம் வெட்டிஅகற்றப்பட்டது.
அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், காமினி மகாவித்தியாலம், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரங்களே இவ்வாறு அகற்றப்பட்டது.
குறித்த மரங்கள் மிகவும் பழமையானதாக காணப்படுவதுடன், அதன் கிளைகள் அண்மையில் வீசிய காற்றின் போது முறிந்து விழுந்திருத்தது. இதனையடுத்து இம்மரங்களை அகற்றுமாறு பல்வேறு தரப்புக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு கருத்தி குறித்த மரங்களின் ஆபத்தான கிளைகள் மரக்கூட்டுத்தாபனத்தில் நேற்றையதினம் வெட்டி அகற்றப்பட்டது.
கம்பளை – கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஓஷத பந்துல பண்டார அலஹகோன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று(21) அதிகாலை இரண்டு மணியளவில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கு அமைய வவுனியாவில் நேற்று (21.12) இரவு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீ்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி (Pick me) மற்றும் ஊபர் (Uber) போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும் என்று கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக நாட்டில் எரிபொருளின் விலையில் பாதிப்புகள் ஏற்படாது எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் (காற்று/சூரிய சக்தி) மின்சார உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டாலும், சோலார் பேனல் ஒன்றின் விலை இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நழுவப்போவதாகவும், அடுத்த ஆண்டும் அதிக விலையுள்ள எரிபொருள், நிலக்கரி போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இளைஞர் ஒருவருடன் இளம் யுவதி அங்கு சென்றுள்ளார்.
குறித்த நீர்த்தேக்கம் பகுதியில் நின்ற போது யுவதி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்போது, வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜன்சிகா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இந்நிலையில் இன்று (22.12) மதியம் குறித்த சடலத்தை பார்வையிட்ட வவுனியா பதில் நீதவான் தி.திருஅருள்,
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த மரணமானது யுவதி நீரில் மூழ்கியமையால் ஏற்டபட்டது என தெரிவித்துடன், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான சித்துவிலி சித்தம் ஓவியம் சுவரொட்டி மற்றும் கேலிச்சித்திரப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று 22.12.2023 வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.S.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு P.A.சரச்சந்திர(அரச அதிபர் -வவுனியா) அவர்களும் திருமதி.தாட்சாயினி (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு) திருமதி சுபாலினி வசந்தகுமார் (ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம் வவுனியா வடக்கு) திரு.திருலிங்கநாதன்(மாவட்ட கலாசார உத்தியோகத்தர் வவுனியா) திருமதி.S. ஜெயசித்ரா (பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா)பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் ருக்மணி அவர்கள் 22.12.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,மனோகர், மோகனசுந்தர், காஞ்சனா, சேகர்(கனடா), மகேந்திரன்(கனடா), டக்சினி, சதீஸ்குமார்(லிபியா), ரவிசங்கர்(கனடா), புவிரஞ்சினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷாந்தன், டினுஷா, லதுசன், துலக்சன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இல. 80/11, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுருவாட கிராமம் ஒய்எஸ்ஆர் காலனியை சேர்ந்தவர் கோவிந்த். இவருக்கும் சித்தூர் மாவட்டம் புஷ்கனிவாரி பள்ளியை சேர்ந்த மானசா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் இருவரும் சிகுருவாடாவில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மானசா, தன் கணவன் கோவிந்திடம் தனிக் குடித்தனம் போகலாம் என்று கேட்டுள்ளார். இதையடுதது மனைவியின் ஆசைப்படி பத்து நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனிக் குடித்தனம் சென்றுள்ளனர்.
இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி கோவிந்தின் அண்ணன் பாஸ்கருக்கு பதட்டத்துடன் போன் செய்த மானசா, உங்கள் தம்பிக்கு என்னவோ ஆகிவிட்டது. கீழே விழுந்து கிடக்கிறார் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்த பாஸ்கர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு சென்ற போது கோவிந்த் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எப்படி நடந்தது என்று கோவிந்த் குடும்பத்தினர் மானசாவிடம் கேட்டுள்ளனர். அப்போது கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று மானசா தெரிவித்துள்ளார்.
அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிய கோவிந்த் குடும்பத்தினர் உடலை சொந்த ஊரான வெதுருகுப்பத்திற்கு கொண்டு சென்றனர்.அப்போது கோவிந்த் கழுத்தில் காயம் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த பாஸ்கரன், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மானசாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில், கடந்த 15 ஆம் தேதி கோவிந்த் வீட்டிற்கு ஒரு இளைஞர் வந்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மானசாவிடம் விசாரித்த போது, ”மதனப்பள்ளியை சேர்ந்த இளைஞர் சிம்மாதிரியும் நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் காதலை விரும்பாத பெற்றோர் கோவிந்துக்கும் எனக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இந்த திருமண பந்தத்தில் இருந்து விடுபட முடிவு செய்து என் காதலனை வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த கோவிந்த் கழுத்தை இரண்டு பேரும் சேர்ந்து நெரித்து கொலை செய்தோம்” என்று மானசா கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கர்நாடகா மாவடத்தில் ஷிஷிலா கிராமத்தில், குடிபோதையில் கணவர் ஒருவர் மனைவி மற்றும் மகளை, கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சுரேஷ் கவுடா ஷிஷிலா கோட்டேபாகிலுவில் வசித்து வருகிறார்.
இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை அடிப்பது வழக்கமான ஒன்றாகி இருந்தது. இதனால் கணவன் மனைவியிடையே தினமும் சண்டை, சச்சரவு, தகராறு தான். வழக்கம் போல் அன்றும் குடித்துவிட்டு முழு போதையில் இருந்தார்.
கணவன் மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சுரேஷ் கவுடா மனைவியின் கண் மற்றும் கன்னத்தை கடித்து சதையை கடித்து துப்பி விட்டார். அலறித்துடித்த மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக தாக்கினார். இதனால் மனைவியின் இடது கண் முற்றிலும் சேதமடைந்தது.
தாயின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது மகள் இதனை தடுக்க வந்தாள் . போதையில் இருந்த சுரேஷ் கவுடா மகளின் தலை மற்றும் கண்களிலும் தாக்கியுள்ளார். உயிரைக் காப்பாற்றுவதற்காக தந்தையிடம் இருந்து தப்பிச் சென்ற அவர், அக்கம்பக்கத்தினரிடம் விசயத்தைக் கூறி தாயை காப்பாற்ற உதவி கோரினார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததால் கணவர் சுரேஷ் கவுடா பின்வாசல் தோட்டம் வழியாக தப்பி குதித்து ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த தாயும், மகளும் மீட்உஜிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தப்பி ஓடிய சுரேஷ் கவுடாவும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.