வவுனியா சிவப்பு அபாய வலயத்தில் : மக்களுக்கு எச்சரிக்கை!!

வவுனியாவில்..

மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா மாவட்டம் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதையும், சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவிலான மழை பெய்யும் என்றும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன்போது ஏற்படும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!!

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் போட்டியிடவுள்ளார்.நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நாளை சனிக்கிழமை (14.10.2023) நடைபெறவுள்ளது.

வேட்பாளரான செந்தூரன் அருளானந்தம் இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பாரிய கட்டுமான திட்டங்களில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.அத்துடன், நியூசிலாந்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இவர், யாழ். பரியோவான் (St.John’s College) மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்று அந்நாட்டில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

குமார் தர்மசேனவை கைது செய்ய உத்தரவு!!

குமார் தர்மசேன..

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார் தர்மசேனவே கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாரஹென்பிட்டி பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து வீட்டில் வசிப்பவரை ஆயுதங்கள் கொண்டு மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குமார் தர்மசேன நிறுவனம் ஒன்றின் தலைவராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தர்மசேன, அவரது மனைவி மற்றும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் தர்மசேன உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குமார் தர்மசேன தற்போது உலகக் கிண்ண போட்டி கடமைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமல்போன மகனைத் தேடிய தந்தை மரணம்!!

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே இன்று (12.10) மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை,

கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர கோரி போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் புதையலைத் தேடி பொலிஸார் அகழ்வு!!

யுத்த காலத்தில், வவுனியா புதியகோவில்குளத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று (12) வவுனியா நீதிவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் பொலிசார் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர். தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு பேக்கோ இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு நீதிபதி வாசிம் அகமது உத்தரவிட்டார்.

குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பூவரசங்குளம் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு!!

தங்கம்..

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (12.10.2023) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 607,521.03 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது சிறிய அதிகரிப்பாகும்.இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 608,737 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,480 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 171,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 157,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,690 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 150,400 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!!

கண்டியில்..

நேற்று மாலை கண்டி தெல்தோட்டை லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று மதியம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இடத்தில் இன்று காலை சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சுதுவெல்ல கிராமசேவைக்குட்பட்ட இந்த ஓடையின் குறுக்கே நான்கு மின்கம்பங்களைப் பயன்படுத்தி கிராம மக்களால் கட்டப்பட்ட சிறிய பாலம் உள்ளது.

இருபுறமும் பாதுகாப்பு பிடி இல்லாமல் குச்சி போல் உள்ள இந்த பாலத்தின் மீது சிறு குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் கடந்து செல்வது மிகவும் ஆபத்தான பயணம் என்கின்றனர் மக்கள். இதில் மற்றுமொரு உயிர் பறிபோகாமல் இருப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர் : மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!!

இஸ்ரேலில்..

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா மதுவந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் சுஜித் நிஷங்க பண்டார யாதவர என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.சுஜித் பண்டார யாதவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவருக்கு 13 வயது மகளும் 8 வயது மகனும் உள்ளனர்.தனது கல்வியை முடித்துவிட்டு, பல தொழில்களை செய்தவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பணியாற்ற சென்றுள்ளார்.

அங்கு பணிபுரியும் போது வென்னப்புவையில் வசிக்கும் ஜெயனா மதுவந்தி என்பவரை சந்தித்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணம் செய்துக் கொண்டனர்.குடும்ப நெருக்கடி காரணமாக 2015ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு வந்து சுமார் ஒரு மாதம் தங்கியிருந்த அவர் இஸ்ரேலுக்குத் திரும்பினார்.மனைவி உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தற்போது தங்கள் மனதில் நிச்சயமற்ற எண்ணங்களை கொண்டுள்ளனர்.“நாங்கள் இருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் டுபாயிலிருந்து வந்தோம். திருமணமாகி சில காலம் கழித்து, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கணவர் வெளிநாடு சென்றார்.

குறிப்பாக இரண்டு பிள்ளைகளையும் நன்றாகக் கற்பிப்பது அவசியமாக இருந்தது. எங்களுக்கும் சொந்த வீடு தேவைப்பட்டது.எனவே, இரண்டு பிள்ளைகளையும் வென்னப்புவவிலுள்ள தனியார் ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் கற்க ஆர்வமாக உள்ளனர்.பின்னர் வென்னப்புவ பிரதேசத்தில் சொந்த வீடு ஒன்றை வாங்கினோம்.

இன்னும் சொந்த வீட்டுக்கு கணவர் வரவில்லை. சம்பவத்தன்று அவர் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார்.சிறிது நேரத்தில் தாக்குதல் சத்தம் கேட்டது. அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாக கூறினார். அதன்பின், பல நொடிகள் கடக்கவில்லை அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. என்ன நடந்தது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

தொலைக்காட்சியில் பார்த்த பிறகுதான் போரின் தீவிரம் தெரிந்தது. அவர் என்னை சந்திப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் கணவர் வருவார் என்று காத்திருக்கிறேன்.அப்பாவுக்கு என்ன நடந்தது என்று என் மகன் எப்போதும் கேட்கிறார்.

எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை.இந்த குழந்தைகளின் தந்தையான எனது கணவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை எப்படியாவது அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என காணாமல் போன நபரின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்மப் பொருளால் குழப்பத்தில் மக்கள்!!

இலங்கையில்..

இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சிலந்தி வலை போன்ற வெள்ளை நூல் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

நேற்றுமுன் தினம் பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் உள்ள இந்த இனந்தெரியாத வெள்ளை சிலந்தி வலை போன்ற பொருளால் பாடசாலை ஒன்றை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த வெள்ளைத் துண்டுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நேற்று காலை திம்புலாகல, நுவரகல, யக்வெவ, யக்குரே, மனம்பிட்டிய, சிறிபுர போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வெலிகந்த நெலும்வெவ, மதுரங்கல உள்ளிட்ட அண்டை கிராமங்களிலும் இந்த வெள்ளைப் பொருட்கள் விழுவதை மக்கள் கண்டுள்ளனர்.

காலை வேளையில் பொலன்னறுவை பிரதேசத்தில் இவை பெருமளவில் விழுவதுடன், அப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் மற்றும் செடிகளில் பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.வானில் இருந்து விழும் அடையாளம் தெரியாத வெள்ளைப் பொருட்கள் சில நொடிகளில் கரைந்துவிடும் என பொலன்னறுவை உள்ளிட்ட அண்டை கிராமங்களில் உள்ள விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமி வைசாலி விவகாரத்தில் மூன்று பேரை உடனடியாக கைது செய்ய கோரிக்கை!!

யாழில்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படாத நிலையில்,

சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் தாதி உத்தியோகத்தர், ஆண் தாதி உத்தியோகத்தர் ஆகிய மூவரை உடனடியாக கைது செய்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல மன்று அனுமதிக்க வேண்டும் என சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று(10.10.2023) கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வழக்கில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த நீதிபதி ஏ ஏ.ஆனந்தராஜா வழக்கை நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு தவணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில் நீதிமன்றம் சிறுமி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூன்று வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படவில்லை.மேலும், சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

யாழில் திருமணமாகி சில வருடங்களே ஆன இளம் குடும்பப் பெண் மரணம்!!

யாழில்..

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து சில வருடங்களில் இத் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் குழந்தைக்கு தாயான சிவரூபன் தேனுஜா வயது 24 என்ற பெண்ணே இன்றைய தினம் 11-10-2023 அன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் இழிவான செயல் : மாணவி பொலிசில் முறைப்பாடு!!

திஸ்ஸமஹாராமவில்..

ஆசிரியரை தொட்டு வணங்கும் போது முகத்தில் முத்தமிடுவதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் சிங்கள பாடம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்றதாகவும் அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது ​​தன்னை பார்ப்பதற்காக இந்த ஆசிரியர் வீட்டுக்கு வந்ததாகவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.வீட்டிற்கு வந்த அவர் நோய்க்கு மருத்துவம் பார்க்கச் செல்லுமாறு கூறி தன்னை கட்டி அணைத்துக்கொண்டதாகவும் அது மிகவும் அசௌகரியமாக இருந்ததாகவும் மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பால் கொடுத்த போது இளம் பெண்பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

ஈரோடில்..

திடீர் உயிரிழப்புக்கள், இளவயது மரணங்கள், மாரடைப்புக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மரணம், நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம், நடந்து சென்று கொண்டிருந்த போது சரிந்து மரணம் , கல்லூரி மாணவன் சரிந்து உயிரிழப்பு என தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இளம்தாய் குழந்தைக்கு பால் கொடுத்த போது சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சின்னியம்பாளையம் மதன்குமார் மனைவி பூரணி.

இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, பூரணி தன் வீட்டில் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பூரணியின் கணவர் மதன்குமார், அருகில் இருந்தவர்களின் உதவியுடன், கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். மயங்கி விழுந்த பூரணியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பூரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்யாணமாகி ஒரு மாதம் தான்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம், கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்வாணன். இவர் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருச்செங்கோடு பகுதியில் வசித்து வரும் ஜெகப்பிரியாவுக்கும் செப்டம்பர் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது.

அக்டோபர் 4ம் தேதி ஜெகப்பிரியா தனது கணவர் வீட்டில் இருந்தபோது, வயிற்று வலியால் துடித்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். தனக்கு வயிற்று வலியும், வாந்தியும் வருவதாக ஜெகப்பிரியா கூறிய நிலையில், அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போதும் வயிற்று வலி சரியாகத்தால் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜெகப்பிரியாவை அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து, அவரிடம் வயிற்று வலிக்கான காரணம் குறித்து கேட்டனர்.

அப்போது, ஜெயப்பிரியா அக்டோபர் 3ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், இது கணவர் வீட்டினருக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெகப்பிரியா உயிரிழந்தார்.

திருமணமாகி ஒரே ஒரு மாதம் மட்டும் ஆன நிலையில் ஜெகப்பிரியாவின் திடீர் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஜெகப்பிரியா ஏன் விஷம் அருந்தினார் என்பது குறித்து ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கட்டாயத்திருமணமா, வேறு ஏதும் காதல் விவகாரமா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமாகி 30 நாட்களில் புது மணப்பெண் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் மனைவியுடன் நடந்து சென்ற போது புதுமாப்பிள்ளைக்கு உயிரிழந்த சோகம்!!

தமிழகத்தில்..

தமிழக மாவட்டம், திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் யுவசங்கர் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீனா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 20 -ம் திகதி திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே பரேஸ்புரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணையில் சேர்ந்து இருவரும் பராமரிப்பு பணி செய்து வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இருவரும் வீட்டின் பின்புறமாக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது, முயல்பண்ணை அருகே அமைந்துள்ள தரையையொட்டி இருந்த கிணற்றில் யுவசங்கர் தவறி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நவீனா, முயல்பண்ணை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு, அவர் கொடுத்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவாலங்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் யுவசங்கரின் உடலை மீட்டனர். பின்பு, இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் 7 மணிநேரம் இறந்த உடல்களுக்கு அடியில் மறைந்து உயிர் பிழைத்த இளம்பெண்!!

இஸ்ரேலில்..

இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அடியில் சுமார் 7 மணி நேரம் பதுங்கி இருந்து உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேலின் கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியில் இசை கச்சேரி நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட மொத்தம் 250 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த திடீர் தாக்குதல் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அடியில் சுமார் 7 மணி நேரம் பதுங்கி இருந்து உயிர் பிழைத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் இசை கச்சேரியில் இருந்து தப்பியோடியவர்களை பின்தொடர்ந்து வந்த போது லீ சசி என்ற இளம்பெண் உட்பட 35 பேர் கொண்ட குழு ஒன்று வெடிகுண்டு புகலிடம் ஒன்றில் பதுங்கியுள்ளனர்.

இருப்பினும் ஹமாஸ் அமைப்பினர் அப்பகுதி மீது தூப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக லீ சசி என்ற இளம்பெண் உயிர் பிழைத்துள்ளார்.

இவர் உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து உயிர் பிழைத்தேன் என மிகவும் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் இவ்வாறு உயிர் பிழைத்துள்ளனர்.

இது தொடர்பான தகவலை லீ சசி இன்ஸ்டாகிராமில் தனது தோழியுடன் பகிர்ந்துள்ளார். அதில், கிட்டத்தட்ட 7 மணி நேரம் இவ்வாறு பதுங்கி இருந்தோம், நான் இதை விளையாட்டாக கூறவில்லை என்று தெரிவித்து புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் சான்றாக அவர் வெளியிட்டுள்ளார்.