மனைவியை கொன்று தானும் விபரீத முடிவெடுத்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பாலக்காட்டில்..

பாலக்காடு அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்த முளயங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (47), மரவேலை செய்யும் ஆசாரி. இவரின் மனைவி சுசித்ரா (37). இவர்களுக்கு அர்ஜூன் (8) என்ற மகன் உள்ளார். அர்ஜூன் பாட்டி வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஷாஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தபோது ஷாஜி தூக்கிட்ட நிலையிலும், சுசித்ரா தரையிலும் சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சடலத்தையும் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதில், சுசித்ராவின் உடலில் பல்வேறு இடங்களில் ஆயுதத்தால் தாக்கி 7 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. ஷாஜி இறந்து 5 நாட்கள் ஆனதும் பிரேத பரிசோதனையில் தெரிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து விசாரணை செய்தனர். இதில், நடத்தையில் சந்தேகமடைந்த ஷாஜி கத்தியால் வெட்டி மனைவி சுசித்ராவை கொலை செய்துள்ளார்.

இதையடுத்து 2 நாட்கள் வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த ஷாஜியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனைவியை கழுத்தை அறுத்து கொலை.. கணவர் வழங்கிய திடுக்கிடும் வாக்குமூலம்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம், பேரையூர் வேப்பம்பட்டியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி செல்வபிரியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் 3 வயது குழந்தை ஒன்றும் உள்ளது.

சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் செல்வபிரியாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே இதனால் செல்வபிரியா மற்றும் சின்னசாமிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது .

பலமுறை செல்வபிரியா தனது தந்தை ஊரான மூணாறுக்கு திரும்பச் சென்றுவிட்டார். பின்னர் இரு தரப்பிலும் கலந்து பேசி சமாதானப்படுத்தி செல்வபிரியாவை கணவன் வீட்டுக்கு அழைத்து வந்தனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் செல்வபிரியாவுக்கும் சின்னசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து செல்வபிரியாவின் கழுத்தை அறுத்து சின்னச்சாமி கொலை செய்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து செல்வபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செல்வபிரியாவின் தந்தை முத்துப்பாண்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் சின்னசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த செல்வபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கணவர் சின்னசாமியின் குடும்பத்தினர் 5 பேரை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். காவல்துறையினர் சமாதானம் செய்து அனைவரையும் கலைந்து போக செய்தனர்

கணவன் மனைவி சண்டையில் வீதியில் பரிதாபமாக விடப்பட்ட குழந்தை!!

சின்னசேலத்தில்..

சின்னசேலம் பகுதியில் கேட்பாரின்றி சுற்றித் திரிந்த குழந்தையை மீட்டகாவல்துறை அதிகாரி பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (38).

இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்னதுரை தனது 2 வயது மகனை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னசேலம் விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் காலை விட்டு சென்றதாக தெரிகிறது.

அக்குழந்தையை அதே தெருவில் வசிக்கும் கோகுல் (10) என்ற சிறுவன் தன் அரவணைப்பில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான். இதுகுறித்து கேள்விப்பட்ட சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு சென்று அந்த குழந்தையை தூக்கி செல்ல முயன்றார்.

அப்போது அந்த குழந்தை, தன்னை வைத்திருந்த கோகுலை பிரிய மனமில்லாமல் அழுதது. இதையடுத்து கோகுலுடன் சேர்த்து அந்த குழந்தையை அழைத்து சென்றனர்.

இந்நிலையில் போலீசார், குழந்தையை யார் விட்டு சென்றிருப்பார்கள் என்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்புகளை ஆய்வு செய்து வந்தனர். மேலும் சின்னதுரையின் மனைவி யசோதாவும் தனது குழந்தையை காணவில்லை என்று கணவரிடம் கேட்டபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சிறுவனின் பெற்றோரும் சின்னசேலத்தில் தேடி வந்தனர். இதை கண்ட போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று அறிவுரை கூறி, பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை பாதுகாத்து வைத்திருந்த கோகுலை போலீசார் பாராட்டி பரிசு வழங்கினர்.

ஒரே கும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!

பாஞ்சாப்பில்..

பாஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவதார் நகர் குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் நேற்று (ஆக். 08) இரவு ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த வீட்டின் உரிமையாளர் யஷ்பால் கய், பாஜக பிரமுகர் என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் யஷ்பாலின் மருமகள் ருச்சி, ஒரு சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த பாஜக தலைவர் அசோக் சரீன் ஹிக்கி, “வீட்டில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் குளிர்சாதன பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டு கம்பரசர் வெடித்ததில் வீட்டில் வேகமாக தீ பரவி உள்ளது.

தீ வேகமாகப் பரவியதால் யஷ்பால் கய் மற்றும் அவரது குடும்பத்தாரால் வெளியேறி தப்பிக்க முடியவில்லை. யஷ்பாலின் மகனின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில், ஜலந்தரைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்பி சுஷில் ரிங்குவும் சம்பவ இடத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதல் திருமணம் செய்து 21 நாள்களில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம், கர்நாடகா பகுதில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 14 பேரில் ஒருவருக்கு, திருமணமாகி 21 நாள்கள் தான் ஆகியுள்ளது என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு கடை மற்றும் குடோன் உள்ளது.

இங்கு, பட்டாசுகளை லாரிகளில் கொண்டு வந்து கடை மற்றும் குடோனில் இறக்கி வைத்தனர். அப்போது, திடீரென தீ பிடித்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரில் 7 பேர் தருமபுரி மாவட்டம், டி. அம்மாபேட்டையை சேர்ந்தவர்கள். அதில் வேடப்பன் என்பவரும் ஒருவராவார். இவருக்கு திருமணமாகி 21 நாள்கள் தான் ஆகியுள்ளது.

கடந்த மாதம் 17 -ம் திகதி பி.எட் படித்துள்ள தனது காதலியை வேடப்பன் திருமணம் செய்தார். தீபாவளி சீசன் வந்துள்ளதால் நண்பர்களுடன் வேலை செய்வதற்காக பட்டாசு குடோனுக்கு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு நடந்த விபத்தில் வேடப்பன் உயிரிழந்துள்ளதால் அவரது மனைவி இப்போது தனியாக நிற்கிறார். இதனால், வேடப்பனின் மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேல் போர்.. 3 வது உலகப்போர் ஆரம்பமா?

பாபா வாங்கா..

2023ல் உலகப்போர் நடைப்பெற இருப்பதாக பாபா வாங்கா கணித்துள்ள நிகழ்வு தற்போது நடக்கும் சூழலை எட்டியுள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார்.

இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் கூறுகின்றனர். இவர் 1996இல் மறைந்தார்.

இதுபோல கடந்த காலங்களில் பலர் கணித்திருந்தாலும் இவர் தனித்தே தெரிகிறார். அதற்கு முக்கிய காரணம் இவர் துல்லியமாகக் கணித்தவை எல்லாம் ஏதோ சின்ன சின்ன விஷயங்கள் இல்லை.

இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு என இவர் கணித்த மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகள்.

அவ்வளவு ஏன் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துள்ளார். இவரது கணிப்புகள் 80-85% வரை துல்லியமாக நடந்துள்ளது.

இதற்கிடையே இந்த 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் 2 இப்போது முக்கியமானதாக இருக்கிறது. முதலில் அவர் இந்தாண்டு 3ம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார்.

அடுத்து அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார். இதில் முதலாம் கணிப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது இஸ்ரேல்-ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ளது.

இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம். இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்பு இருக்கிறது. உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன.

ஓரிரு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தது. மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் இஸ்ரேல் போரில் அப்படி இல்லை. மேற்கு உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. அதேநேரம் அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

போர் தொடரும் பட்சத்தில் அதில் மற்ற நாடுகள் உள்ளே வரலாம். குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் அமெரிக்கர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் நிச்சயம் அமெரிக்கா உள்ளே வரும்.

ஒரு வல்லரசு நாடு உள்ளே வந்தால் இது அடுத்த உலகப் போரை நோக்கிய நம்மை இட்டுச் செல்லும் என்பது வல்லுநர்கள் கருத்து. அதேபோல போர் என்று வந்துவிட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம். இதன் காரணமாகவே எங்கு பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு.. மகனை காப்பாற்ற குண்டுகளை ஏந்திய பெற்றோர்.. கலங்கவைக்கும் சோகம்.!!

இஸ்ரேலில்..

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் மகனை காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த பெற்றோரின் செயல் கண்கலங்க வைத்துள்ளது. பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன.

இந்நிலையில், கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் போரை அறிவித்து, இரு தரப்பினருக்கும் இடையே 3 நாள்களாக மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்த உச்சகட்டமாக போரில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 -யைக் கடந்தது. அதுமட்டுமல்லாமல், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வெளி தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

அப்போது, இஸ்ரேலில் உள்ள ஷ்லோமி மத்தியாஸ், அவரது மனைவி டெபோரோ மற்றும் அவர்களின் 16 வயது மகன் ரோத்தம் ஆகியோர் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் ஒரு அறைக்குள் பதுங்கினர்.

ஆனால், தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இவர்கள் இருக்கும் இடத்திற்கும் வந்து துப்ப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்பு, கதவை உடைத்து வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட ஆரம்பித்த போது, பெற்றோர் இருவரும் மகன் மீது போர்வை போல் படுத்துக் கொண்டனர். இதனால், பெற்றோர் இருவரின் மீதும் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர்.

ஆனாலும், இவர்களின் 16 வயது மகன் வயிற்றின் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம், கண்கலங்க வைத்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

அனுராதபுரத்தில்..

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்ட காரணத்தினால் 10 வயதுடைய இந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7 மணி அளவில் இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தலாவ நகர மத்தியில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கற்கும் தலாவ கரகாட்டவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதான டபிள்யூ நிசல்யா நெத்சரணி விமலசேன என்ற சிறுமியே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.தனது தாயுடன் பயணித்த சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் தாங்கியில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாகவும், இதன் போது சிறுமி வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனிம், இந்த விபத்தில் குறித்த சிறுமியின் தாய்க்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விபத்தினால் இரண்டு வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : சாதனை படைக்கும் இலங்கை!!

இலங்கையில்..

இலங்கையில் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.அதன்படி 14.2 வீதத்தால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வீட்டுப்பாவணையின் 0 முதல் 30 அலகுகளுக்கான மாதாந்திர நுகர்வு கட்டணம் 65 சதவீதம் குறைக்கப்படும் எனவும், ஒரு அலகிற்கு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் தற்போது மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி பொதுமக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களின் வாய்மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மூன்றாவது முறையாக கட்டண திருத்தம் என்ற போதும் 6 மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில், வருடத்துக்கு இரு முறை மின் கட்டணத்தை திருத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

எனவே இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேநேரம் உத்தேச மின் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

எரிபொருள்..

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய பாய்ச்சலில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில். அத்துடன் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைக்கு செல்ல வேண்டும்.

உலகில் நிலவும் யுத்த சூழல், எதிர்வரும் குளிர்கால காலநிலை, எரிபொருள் போக்குவரத்திற்காக அறவிடப்படும் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் பணியாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 24 வயதான சாந்திமா ரணசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

அம்பேபூச – திருகோணமலை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த யுவதி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரபல உதைபந்தாட்ட கழகத்தில் இடம்பிடித்த இலங்கைத் தமிழ் இளைஞன்!!

பிரித்தானியாவின்..

பிரித்தானியாவின் முக்கிய உதைபந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடும் வாய்ப்பை விமல் யோகநாதன் என்கிற இந்த 17 வயது இளைஞன் இந்த வருடம் ஆவணி மாதத்தில் பெற்றுள்ளார்.

பிரித்தானியாவில் இவ்வாறான கழகம் ஒன்றில் முழு நேர உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Barnsley எனும் உதைபந்தாட்ட கழகத்தின் அணிக்காக விளையாடி வரும் இவர் ஆசியாவிலிருந்து தொழில் முறையிலான உதைபந்தாட்ட வீரர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என சேனல் ஒன்றின் நேர்கானலில் தெரிவித்திருக்கிறார்.

பிரித்தானியாவில் உயிரிழந்த யாழ் இளைஞனின் உடல் இலங்கைக்கு!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் கடந்த மாதம் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சடலம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் வரணிக்கு எடுத்துச் வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞர் தனது 13 வயதில் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் புரிந்து வந்த நிலையில் தீடிரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் அவரின் பெற்றோர் மற்றும் சகோதரி,

ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய இளைஞரின் சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் திடீர் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளத்தில் வானொன்று பேருந்துடன் மோதி விபத்து : இருவர் காயம்!!

புத்தளத்தில்..

புத்தளம் பகுதியில் வானொன்று பேருந்துடன் மோதி, வீதியை விட்டு விலகி உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து புத்தளம் பன்றி இறைச்சி சந்தியில் நேற்று (09.10.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொழும்பிலிருந்து சித்தாலேப்ப மருந்துகளை ஏற்றிச் சென்ற வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி, பேருந்து மற்றும் வான் வீதியை விட்டு விலகி உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வானில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வானின் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளனர்.பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்!!

உளநல தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு நாடகம் ஒன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இன்று (10.10) இடம்பெற்றது. அரங்காலையா கலைக்கூடம் கலைஞர்களினால் உளநலன் தொடர்பான இவ் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகமும், மாவட்ட பொது வைத்தியசாலை உளநல பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் உளநல வைத்தியர் சுதாகரன், வைத்தியர் திருமதி வைதேகி திலீபன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுகாசினி சிவதர்சன்,

உளநலத்துறை உத்தியோகத்தர் திருமதி துஷாந்தன் பிரியதர்சினி, பாடசாலையின் அதிபர் நா.இந்திரகுமார், ஈச்சங்குளம் கிராம சேவகர் ஜே.அமலதாஸ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

160000 ரூபாவை நெருங்கும் தங்கத்தின் விலை : நகை வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்!!

தங்கம்..

இலங்கையில் ஆபரண தங்கத்தின் விலை 160,000 ரூபாவை நெருங்குவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை இம்மாத ஆரம்பத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.