கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!!

அமெரிக்காவில்..

ஊருக்கு செல்லவோ, அறிமுகமில்லாத பாதைகளில் செல்லவோ முன்பெல்லாம் அக்கம்பக்கத்தினரிடம் தான் வழி கேட்போம். இப்பெல்லாம் அடுத்த தெருவுக்கு போறதுக்கு கூட கூகுள் மேப் தான் வழிகாட்டி.

பெரும்பாலும் சரியா சொல்லிடும் . சில நேரம் சொதப்பிடும். சில நேரம் ஆபத்திலும் சிக்க வச்சிடும். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் ஃப்லிப் பேக்சோன்.

இவர் மனைவி அலிகா. இவர்களுக்கு 2 மகள்கள். பேக்சோன் தனது மூத்த மகள் பிறந்தநாள் விழாவை கொண்டாட 2022 செப்டம்பர் மாதம் வீட்டுக்கு திரும்பியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிய அவர், கூகுள் மேப்பின் உதவியுடன் காரை ஓட்டி வந்துள்ளார்.

நல்ல மழை கொண்டிருந்த நிலையில், ஹிக்கேரி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, பழுதடைந்த பாலத்தில் இருந்து, 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த பாலம் 2013-ம் ஆண்டே பழுதடைந்து விட்டது. இன்று வரை அது சரிசெய்யப்படவில்லை. இந்நிலையில், கூகுள் மேப்பை பார்த்து பாலத்தில் ஏறிய பேக்சோன் பரிதாபமாக பலியானார். பழுதடைந்த பாலத்தில் எந்த வித தடுப்போ, எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை.

கூகுள் மேப் காட்டிய தவறான வழியாலும் தங்களது பேக்சோன் உயிர் பிரிந்ததாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மூத்த மகளுக்கு தற்போது 9வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அப்பாவுக்கு என்ன ஆயிற்று என இன்றளவும் கேட்டு வருவதாக குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடைந்துபோன பாலத்தில் வழிகாட்டியதற்காக கூகுள் நிறுவனம் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், பாலம் பழுதானதால் கூகுள் மேப்பில் அப்டேட் செய்யுமாறு கூகுள் நிறுவனத்திடம் முறையிட்டனர்.

இது குறித்து கூகுள் நிறுவனம் “உங்களது கருத்து சரிபார்க்கப்படும். இதனை எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி” என பதில் கிடைத்துள்ளது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி குடும்பத்தார் வழக்கு தொடர்ந்த நிலையில், இது குறித்து பரிசீலித்து வருவதாக கூகுள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஒரே வருடத்தில் 45 கிலோ உடல் எடையை குறைத்த பெண் மரணம் : அவரை பின்பற்றுவோர் அதிர்ச்சி!!

பிரேசில்..

ஒரே வருடத்தில் 45 கிலோ எடையை குறைத்த ஃபிட்னஸ் மாடல் திடீரென உயிரிழந்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த அட்ரியானா தைசென் என்ற ஃபிட்னஸ் மாடல் ஒரே வருடத்தில் 45 கிலோ எடையை குறைத்து இருந்த நிலையில் அவர் தற்போது தன்னுடைய 49வது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார்.

100 கிலோ எடையுடன் தனது 39 வயதில் அவதிப்பட்டு வந்த போது அவருக்கு எடையிழப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு பல்வேறு எடை குறைப்பு சாத்தியங்களையும் டயட் முறைகளையும் ஆராய்ந்து இறுதியில் பலவற்றையும் கலந்து கட்டிய புதுவித பயிற்சி முறைகளை அட்ரியானா தைசென் உருவாக்கியுள்ளார்.

இந்த முறையை பயன்படுத்தி தனது தீவிரமான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு ஒரே வருடத்தில் 45 கிலோ உடல் எடையையும் குறைத்து வெற்றி பெற்றுள்ளார்.

அட்ரியானா தைசென் தனது உடல் எடை குறைப்பு முறை மற்றும் அனுபவங்களை பக்க விளைவுகள் ஏதுமற்றதாக உலகிற்கு பிரசாரமும் செய்ய தொடங்கினார். அதனடிப்படையில் பிரேசில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அட்ரியானா தைசென் உருவாக்கிய உடல் எடை குறைப்பு முறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அட்ரியானா தைசெனின் திடீர் மரணம் நிகழ்ந்து இருக்கிறது. அட்ரியானா தைசெனின் உயிரிழப்பை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் அவரது திடீர் மரணம், அட்ரியானா தைசென் அறிமுகப்படுத்திய உடல் எடை குறைப்பு முறையை பின்தொடர்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிக்கோவில் காட்சிப்படுத்தப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் : அம்பலமான உண்மை!!

மெக்சிக்கோவில்..

கடந்த சில நாட்களுக்கு முன் மெக்சிக்கோவில் காட்சிப்படுத்தப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் உண்மையானவை அல்ல என தெரியவந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என தெரிவிக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகள் உடல்கள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த போலி மனித உடலங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகள் இணைந்த செயற்கை பசையுடன் உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாவர இலைகள் மற்றும் செயற்கை பசைகள் ஆகியவை எலும்பு மற்றும் தோலை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருப்பதாக பெருவின் சட்ட மருத்துவம் மற்றும் தடய அறிவியல் கழகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மெக்சிக்கோவில் சமீபத்தில் காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் எம்.பிக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் ஊடகவியலாளரும், ஏலியன்கள் தொடர்பான ஆர்வலருமான ஜெய்ம் மௌசன் 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் உடலங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாக அறிவித்தார்.

ஏற்கனவே உலகம் முழுவதும் ஏலியன் மற்றும் அவர்கள் பயணிக்கும் பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகள் பரவி வந்து கொண்டு இருக்கும் போது, ஜெய்ம் மௌசனின் அறிவிப்பு பெரும் கவனத்தை பெறத் தொடங்கியது.

பெரிய பின் தலை பகுதி, கையில் 3 விரல்கள், மற்றும் அளவில் சிறிய உடல், அத்துடன் இவை கார்பன் பரிசோதனையில் 1000 ஆண்டுகள் பழமையானவை என ஜெய்ம் மௌசன் வழங்கிய விளக்கம் ஆகியவற்றை தொடர்ந்து இது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

மேலும் இந்த ஏலியன் உடல்களில் முட்டைகள் இருந்தாகவும் மெளசன் தெரிவித்தார். இந்நிலையில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய மெளசன் சமர்பித்த ஏலியன் உடலங்கள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என்று ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளமை இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதியை காணவில்லை!!

தெயனவக்குமார் தனுஷியா..

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தெயனவக்குமார் தனுஷியா என்பவரை காணாமல் போயுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக அவரை காணவில்லை என உறவிர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன தினத்தன்று ஓட்டோ ஒன்று சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பாணின் விலை 100 ரூபாவாக குறைக்கப்படுகின்றதா?

இலங்கையில்..

பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பாணின் விலையை 100 ரூபா அல்லது அதற்கும் குறைவாகவே பேணுவதே தமது சங்கத்தின் ஒரே நம்பிக்கை ஜயவர்தன தெரிவித்துள்ளார். அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் முயற்சியின் கீழ் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் பாணை வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தலையிட்டால் நிச்சயமாக 100 ரூபாவிற்கு ஒரு பாணை வழங்குவதுடன் ஒரு பன்னின் விலையில் 10 அல்லது 15 ரூபாவை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : களுபோவில போதனா வைத்தியசாலையில் சம்பவம்!!

கொழும்பில்..

கொழும்பு – களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைப்பிரசவ சிசு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற பெண் கடந்த 8ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் பிரசவித்த குழந்தைகள் இருவருக்கும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக குறைமாத குழந்தை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், கடந்த 19ஆம் திகதி ஆண் குழந்தை உயிரிழந்த தாகவும், சுவாசக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், மற்றைய குழந்தையும் நேற்றையதினம் உயிரிழந்ததுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கொஹுவல பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய, ”சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும்” என கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து : இருவருக்கு நேர்ந்த சோகம்!!

குருநாகலில்..

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இன்றைய தினம் (24.09.2023) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த தனியார் பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன்,

மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குழுவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கனேடிய அரசில் ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி!!

கனடாவில்..

கனடாவின்- ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.இவர் நேற்றைதினம்(22.09.2023) தினம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதற்குமுன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டியில் தவறவிடப்பட்ட பெரும் தொகை பணம் : சாரதி செய்த செயல்!!

பாணந்துறையில்..

பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் பயணம்செய்தபோது தவறுதலாக விட்டுச் சென்ற 53 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை முச்சக்கர வண்டியின் சாரதி மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைந்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை பாணந்துறை பிரதேசத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பாணந்துறை வேகட கவிராஜ மாவத்தையில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பெண்ணொருவர் தவறுதலாக தனது பணப்பையை வண்டியில் விட்டுச் சென்றுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பணப்பை இருந்ததை அவதானித்த சாரதி அதனை எடுத்துசென்று உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். பெண்ணின் வீட்டுக்கு சென்ற சாரதி அதனை பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். பணப்பையில் 53 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பெண்ணுக்கு சொந்தமான பெறுமதியான ஆவணங்கள் இருந்துள்ளன.

வீட்டை புனரமைப்பதற்காக பொருட்களை கொள்வனவு செய்ய கடைக்கு சென்ற போதே குறித்த பெண் பணப்பையை முச்சக்கர வண்டியில் தவறவிட்டுள்ளார். அதேவேளை முச்சக்கர வண்டி சாரதியும், பணத்தை வண்டியில் விட்டுச்சென்ற பெண்ணும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

9 வயது மகளை துஸ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவான தந்தை : பொலிஸார் வலைவீச்சு!!

மாவத்தகமவில்..

தனது 9 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சமபவத்தில் 29 வயதான மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க எனும் நபரே பொலிஸார் தேடப்படுகின்ற நிலையில் அவரது புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

பாண் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மாத்தறையில்..

மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார். நேற்று காலை பாடசாலைகளுக்கு செல்லும் தனது பிள்ளைகளுக்காக பாண் துண்டு ஒன்றை வெட்டு போதே அந்த பீடித்துண்டை அவதானித்துள்ளார்.

முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கிய போது பீடி என தெரியவந்தது. பின்னர் நன்றாக வெளியே எடுத்து பார்க்கும் போது பீடியின் பெரிய துண்டு ஒன்று கிடந்துள்ளது. இதனால் கடும் அதிருப்தியடைந்த பெண் இனிமேல் பாண் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டுகிறேன். குறிப்பாக உணவு உற்பத்தியில் பேக்கரி உரிமையாளர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்களான தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி!!

நோர்வேயில்..

நோர்வே – ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர்.தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர் கட்சியிலும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகளை அடுத்து, அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமீனா செரிப்டீன் ரவூப் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது தேர்தல் வெற்றி குறித்து, தொழிலாளர் கட்சியில் போட்டியிட்ட தமீனா கருத்து தெரிவிக்கையில்,“நான் ஒஸ்லோவை இன்னும் சிறந்த, பாதுகாப்பான மற்றும் பசுமையான நகரமாக மாற்றுவதற்கு போராடுவதற்கு பெரிய திட்டங்களை வைத்திருக்கிறேன்” மேலும், எனக்கு வாக்ளித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நோர்வே தொழிலாளர் கட்சியின் ஆலோசகராகவும் தமீனா பணியாற்றி வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நோர்வேயின் முதல் வெளிநாட்டு பிரதமராக வரவேண்டும் எனவும் சமூக வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அனீஸ் ரவூப், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன் என்பதுடன், சமூக மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் இலங்கை தமிழருக்கு கிடைத்த அங்கீகாரம்!!

நோர்வேயில்..

நோர்வேயின் கால்பந்தாட்ட கழகமொன்றின் முதன்மை பயிற்சியாளராக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சியை பெற்ற சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற இளைஞரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் கழகத்தின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது தற்காலிக முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கழகம் அறிவித்துள்ளது.

டென்மார்க்கில் பிறந்த இவர் பத்தாண்டுகளுக்கு மேலாக டென்மார்க்கின் சூப்பர் லிகா தொடரின் ஏசிஎஃப் கிளப்பின் 10 வயது முதல் 19 வயது வரையிலான ஜூனியர் அணிகளுக்கான பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் முதல்தர கால்பந்து கழகத்தின் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற முதல் இலங்கை தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

மன்னாரில்..

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குளிக்க சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் : வெளியான அதிர்ச்சிக் காணொளி!!

இலங்கையில்..

இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் அந்த ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்களால் பெண் வாடிக்கையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹேலிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என்று தெரிவிக்கப்படுகிறது.எப்படியிருப்பினும் குறித்த இடத்தை உறுதிப்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சந்தேகத்திற்கிடமான திருட்டுக்கு பதிலளிக்கும் வகையில், விற்பனை நிலையத்தின் பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து கார்கில்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சுப்பர் மார்க்கெட்டில் திருட்டு தொடர்பான எங்கள் விற்பனை நிலையத்தில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.இந்த நடத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கார்கில்ஸ் நிறுவனத்தின் செயல்முறையுடன் இவ்வாறான செயல் ஒரு போதும் ஒத்துப்போகவில்லை என்பதால், குறிப்பிட்ட ஊழியர்களின் நடத்தை குறித்து நாங்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைகிறோம்.தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநிறுத்திவிட்டு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

கார்கில்ஸ் மீதான எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பு தொடரும். உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

ஓமந்தையில் வெதுப்பகம் ஒன்றை நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, இவ் விபத்து ஏற்பட்டது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற தினேசன் பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.