பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

மட்டக்களப்பில்..

கனரக வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி சந்திவெளி கோரக்களிமடு பகுதியில் நேற்று (25) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். விபத்தில் வாழைச்சேனை சுங்கான்கேணியை சேர்ந்த 22 வயதுடைய சண்முகதாஸ் அன்புதாஸ், மற்றும் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வடிவேல் தர்மராஜ் என்ற இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளியில் சந்திவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு 9 மணியளவில் வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இருவரை பொலிசார் நிறுத்துமாறு சைகைகாட்டிய போதும் நிறுத்தாது அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்ற போது வீதியில் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்து மட்டு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மூன்று முறை கைது… கனவை நிறைவேற்ற 4000 கி.மீ மிதி வண்டியில் பயணித்த நபர்!!

மேற்கு ஆப்பிரிக்காவில்..

கினியாவை சேர்ந்த நபர், எகிப்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் சேர, மேற்கு ஆப்பிரிக்காவில் பல நாடுகள் ஊடாக 4,000 கி.மீ மிதி வண்டியில் பயணித்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவை சேர்ந்தவர் 25 வயதான மமதோ சஃபாயு பாரி. இவருக்கு எகிப்தின் புகழ்பெற்ற Al Azhar பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பது கனவாக இருந்தது.

AD 970ல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகமானது உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் சேரும் பொருட்டு கடந்த மே மாதம் மிதி வண்டியில் பாரி பயணத்தை துவங்கியுள்ளார்.

தன்னால் அந்த பல்கலைக்கழகத்தில் சேர முடியாது என்பதை அறிந்திருந்தும், நான்கு மாத பயணத்தை ஒரு மிதி வண்டியில் தொடங்கியதாக பாரி குறிப்பிட்டுள்ளார். பயணத்தின் நடுவே மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் மற்றும் சாட் உள்ளிட்ட அரசியல் இறுக்கம் மிகுந்த நாடுகளை கடந்ததாகவும் பாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடுகளில் பாதுகாப்பின்மை மிகுந்து காணப்பட்ட தருணத்தில் தாம் பயணித்ததாக பாரி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இரண்டு முறை புர்கினா பாசோவிலும் ஒரு முறை டோகோவிலும் கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சாட் பகுதியை அடைந்த போதே, தமக்கு ஊடக வெளிச்சம் கிடைத்ததாகவும், அதன் பின்னர் உதவிகள் குவிந்ததாகவும் பாரி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மக்கள் நிதி திரட்டி, எகிப்துக்கு விமான பயணம் ஏற்பாடு செய்து அளித்ததாகவும், இதனால் சூடானில் பயணப்படும் இக்கட்டான நிலை தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் 5ம் திகதி Al Azhar பல்கலைக்கழகம் சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு தாம் விரும்பிய இஸ்லாமிய படிப்பில் சேர அனுமதி கிடைத்துள்ளதுடன், கல்விக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

கினியாவில் இருந்து சாட் வரையில் 6 நாடுகள் ஊடாக பாரி மிதி வண்டியிலேயே பயணித்துள்ளார். அங்கிருந்தே எகிப்துக்கு விமானத்தில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை.. பரிதவிக்கும் பச்சிளம் குழந்தைகள்!!

கன்னியாகுமரியில்.

கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரூபா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு மர வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனை ஈடுசெய்யவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் கடன் வாங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்தியும் எந்த லாபமும் இல்லை. இதனால் கடனை கட்டமுடியவில்லை.

கடனை செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதன் பேரில் இரவு வீட்டில் இருந்த பிரவீன், தன் மனைவி ரூபாவுக்கும் தென்னைக்கு வைக்கும் பூச்சி மருந்தை கொடுத்து குடிக்க சொல்லி விட்டு தானும் அதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

சிறிது நேரத்தில் ரூபா மயங்கியதால் பிரவீன், தன் மனைவி உயிரிழந்துவிட்டதாக கருதி கதறி அழுதுள்ளார். மேலும் அப்பகுதியினரிடமும் இது குறித்து கூறியதால், இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரூபா நேற்று உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரவீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிரவீனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடன் பிரச்சினையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 மாதங்களில் 5 கடிதங்கள் : யாழில் மகனுக்காக காத்திருக்கும் தாய்!!

இந்தியாவில்..

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் உருக்கமாக கோரிக்கை விடுத்து வருகின்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் இலங்கைக்கு அவரை மீள அனுப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, கடந்த 10 மாத கால பகுதிக்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது மகனை இலங்கைக்கு மீள அழைத்து வந்து தன்னிடம் ஒப்படைக்குமாறு சாந்தனின் தாயார் கடந்த 10 மாத காலமாக பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இது குறித்து கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை அவர் விடுத்திருந்தார்.

எனினும் குறித்த கடிதத்திற்கு இது வரையில் வெளிவிவகார அமைச்சிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் , 10 மாத காலப்பகுதிக்குள் 5 கடிதங்களை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

வவுனியா – மன்னாரைச் சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில்..

இலங்கையில் இருந்து இருவர் தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று (25.09.2023) அதிகாலை, வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவரை ஏற்றிச் சென்ற படகு தமிழகம் – தனுஸ்கோடி கரையில் அவர்களை இறக்கி விட்டுள்ளது.

58 மற்றும் 60 வயதுடையவர்களே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தமிழகம் சென்ற இருவரையும் தமிழகப் பொலிஸார் மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் இருவரும் விசாரணையின் பின்னர் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். சமீப காலமாக வடக்கிலிருந்து ஒருசிலர்
தமிழகத்தில் தஞ்சமடைவது தொடர்கதையாகி வருகின்றது.

குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட பெண் வைத்தியர்!!

கண்டியில்..

உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் 4ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்ற பின்னர் இரத்த அழுத்தம் அதிகரித்து அவர் உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்து குழந்தையை மீட்ட பிறகு, இந்த மருத்துவரின் நிலை மோசமடைந்ததால், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் அவரது இரத்த அழுத்தம் ஏற்கனவே 200 ஐ தாண்டியதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கண்டி அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.உயர் ரத்த அழுத்தம் காரணமாக தலையில் உள்ள நரம்பு வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நோய்வாய்ப்பட்ட இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்கு வந்த அவர், தனது சேவைக் காலத்தில் இரவு பகலாக உழைத்து நோயாளிகளுக்காக தனது உயிரை தியாகம் செய்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு!!

பேராதனையில்..

பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய திவின் சாஹித்யா என்ற பல்கலைக்கழக மாணவரே கடந்த 22 ஆம் திகதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்திருந்தார்.

சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர், பேராதனை வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் பிரபாத் சேனசிங்க தலைமையில் உரிய திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய பீடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் – முருக்கன் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் பேராதனை பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மேலும் இரு மாணவர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது கடந்த 22 ஆம் திகதி அதிகாலை 2:00 மணியளவில் விடுதியில் இருந்த போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : விசாரணையில் வெளியான தகவல்!!

மலேசியாவில்..

மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கையர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸ் தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல் மஜித் அறிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இந்த மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.கடந்த 22ஆம் திகதி இரவு செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிகளுக்கு சொந்தமான வீடொன்றில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டிற்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்துள்ளதுடன், அவர்கள் இந்த கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டுக்கு வந்த பொலிஸார், தலையை மூடி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டு பொது மக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்களுக்கு நேர்ந்த சோகம்..!

தங்காலையில்..

தங்காலை, மரகொல்லிய கடற்பரப்பில் நேற்று மாலை போலந்து பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 22 வயதுடைய பெண்ணும் அவரது காதலனும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தங்காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சடலம் தற்போது தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தங்காலை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கோரவிபத்து : 15 பேருக்கு நேர்ந்த சோகம்!!

வெலிமடையில்..

இன்று காலை (திங்கட்கிழமை 25) கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய வெள்ளரிகளை விளைவித்து பிரித்தானியர் சாதனை.. எடை இத்தனை கிலோவா?

பிரித்தானியா..

பிரித்தானிய தோட்டக்காரர் ஒருவர் 30 பவுண்டுகள் எடை கொண்ட மிகப்பெரிய வெள்ளரிக்காயை விளைவித்துள்ளார். Worcestershireயின் மால்வேர்ன் நகரில் நடந்த பிரித்தானிய தேசிய இராட்சத காய்கறிகள் சாம்பியன்ஷிப்பில் வின்ஸ் சோடின் (50) என்பவர் பங்குபெற்றார்.

அங்கு 4 அடி நீளத்திற்கு அவர் வளர்த்த வெள்ளரிக்காயை முன் வைத்தார். அதன் எடை 30 பவுண்டுகள் (13 கிலோகிராம்) ஆகும். இதன்மூலம் அவர் 2015ஆம் ஆண்டில் 23 பவுண்டுகள் எடைகொண்ட வெள்ளரியை விளைவித்த டேவிட் தாமஸ் என்பவரின் சாதனையை முறியடித்தார்.

அதே போல் வியக்க வைக்கும் வகையில் 255 பவுண்டுகள் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய Marrow-வை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சோடின் சாதனையை படைத்துள்ளார்.

அவர் தெற்கு வேல்ஸில் உள்ள Barryயில் அவருக்கு ஒதுக்கப்பட்ட புதிய வெல்ஷ் காற்று காரணமாக, தனது காய்கறிகள் பெரியதாக இருப்பதாக ரகசிய பார்முலா குறித்து சோடின் கூறினார். வெள்ளரிக்காய் அதன் எடையைத் தங்குவதற்காக சாரக்கட்டு வலையில் ஒரு காம்பில் அவர் வளர்க்க வேண்டியிருந்தது.

இந்த சாதனை குறித்து வின்ஸ் கூறுகையில், ‘இது ஒரு பெரிய சாதனை. நான் இன்று காலை முன்னாள் உலக சாதனை படைத்த டேவிட் தாமஸுடன் உரையாடிக் கொண்டிருந்தேன், அவர் ஆச்சரியப்பட்டார்’ என தெரிவித்துள்ளார்.

வகுப்பறையில் சுருண்டு விழுந்து ஆசிரியை திடீர் மரணம்!!

திருச்சியில்..

இன்றைய கல்விச்சூழலை எதிர்கொள்ள முடியாமல் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அல்லது திடீரென உடல்நிலை பாதிப்புக்கள் வந்து விடுகின்றன. மாணவர்களுக்கு மட்டுமல்ல இந்த கல்விசூழலில் எங்களுக்கும் மன அழுத்தம் ஏற்படலாம் என நிரூபித்துள்ளார் ஆசிரியை ஒருவர்.

திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி .

இவர் புள்ளம்பாடி ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையார் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் ஆசிரியைராக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். பள்ளியில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புள்ளம்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியை அன்னாள் ஜெயமேரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை நடத்திக் கொண்டிருந்தார். தேர்வு முடிந்தபின் ஆசிரியை பதிவு செய்த விபரங்கள் செயலியில் இல்லை.

அதில் இன்டர்நெட் சரியாக கிடைக்காத்தால் நாட் அசஸ்மென்ட் என தகவல் கிடைத்த காரணத்தால் உடனடியாக் பள்ளியில் சக ஆசிரியர்களிடம் பதட்டத்துடன் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

பேசிக்கொண்டிருந்தபோதே அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மற்ற ஆசிரியர்கள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளர்.

பள்ளியில் 22 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்கள் கண் முன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… கதறித் துடித்த பெற்றோர்.!!

பெங்களூருவில்..

மாணவ , மாணவிகள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. எத்தனை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்ட போதிலும் இந்த தற்கொலைகளை தடுக்க முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. பெங்களூரு நாகரபாவி பகுதியில் வசித்து வரும் மாணவி விஜயலட்சுமி.

17 வயதான இவர் தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி வீட்டில் இருந்து காணாமல் போனார்.

பயந்து போன பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடிப்பார்த்தனர். நண்பர்களிடம் விசாரித்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விஜயலட்சுமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விஜயலட்சுமி, தர்மஸ்தலாவுக்கு சென்று, நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை பார்த்த வயதானவர் ஒருவர், விஜயலட்சுமியை மீட்டார்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூரு போலீசார், விஜயலட்சுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகரபாவி மைசூரு சாலையில் உள்ள குடியிருப்புபகுதிக்கு சென்றுள்ளார். அந்த கட்டிடத்தின் 13வது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென குதித்தார்.

கீழே விழுந்த விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாதங்களாக பாலியல் அத்துமீறல் : தந்தையை சுட்டுக் கொன்ற 14 வயது சிறுமி!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் 14 வயது சிறுமி தன்னை 3 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார்.பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியில் சனிக்கிழமை 14 வயது சிறுமி ஒருவர் தன்னிடம் 3 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் சிறுமி அளித்த விவரத்தில், தன்னுடைய தந்தை கடந்த 3 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் அவரை கொலை செய்ய தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கினை விசாரித்த காவல் அதிகாரி சொஹில் கஷ்மி, சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்யப்பட்ட பிறகு சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த மைனர் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த அடுத்த நாளுக்கு பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கைதான இலங்கை தமிழர் : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

கனடாவில்..

கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான பிரம்ரனில், சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரம்ரனிலுள்ள பெவ்வேர்ட் ட்ரைவ் அன்ட் மௌண்ரனாஸ் வீதியில் (Bovaird Drive and Mountainash) வைத்து பொலிஸ் அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்து 13 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதாக சந்தேகநபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை அணுகிய சந்தேகநபரான அனுஷன் ஜெயக்குமார், தன்னை அதிகாரியாக அடையாளப்படுத்தி பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியுள்ளார்.சந்தேகநபரின் நிழற்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்தமை, வலுக்கட்டாயமாக சிறைபிடித்தமை, பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் பாலியல் குறுக்கீடு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய 24 இளம் ஜோடிகள்!!

கொழும்பில்..

கொழும்பு – ஹோமாகம நகரில் இயங்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பூங்கா ஒன்றில் சிறிய மூடிய அறைகளில் அநாகரீகமாக நடந்து கொண்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களை இலக்கு வைத்து இவ்வாறான முறைக்கேடான சம்பவங்கள் இடம்பெறுவதாக ஹோமாகம பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.இதன் அடிப்படையில் இன்று(24.09.2023) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 வயதிற்கு உட்பட்ட 24 ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பூங்காவிற்குச் செல்லும் போது மூடப்பட்ட சிறிய அறைகளில் பாடசாலை வயதுடைய சிறுவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதியின் பெற்றோர்கள் மற்றும் மதத் தலைவர்கள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட, அனைத்து சிறுவர்களையும் அழைத்து, உண்மைகளை விளக்கி, அறிவுறுத்தல்களை வழங்கிய பொலிஸார், சிறுவர்களின் பாதுகாவலர்களுடன் தொடர்பை மேற்கொண்டு அவர்களை விடுத்துள்ளனர்.இதன்போது சம்பவ இடத்தில் இருந்த சிறுவர்கள் பலர் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறி குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகளின், பெற்றோர்களையும், பாதுகாவகர்களையும் பொலிஸார் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, பூங்காவின் உரிமையாளர் வந்து பொலிஸ் அதிகாரிகளுடன் காரசாரமாக உரையாடியதாகவும் இதனால் பதற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கபடுகிறத.