‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம்.. மாணவருடன் பழகியதால் கல்லூரி மாணவியை கொன்று எரித்த கணவர்!!

சேலத்தில்..

அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், மாணவருடன் பழகிய கல்லூரி மாணவியை தனியாக அழைத்துச் சென்று கணவர் கொன்று எரித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி வனப்பகுதியில் புலிக்குத்தி முனியப்பன் கோயில் அருகே நேற்று முன்தினம், சுமார் 20 வயது இளம்பெண் சடலமாக கிடந்தார்.

அருகில் செருப்பு, தாலிக்கொடி ஆகியவை தனியாக கிடந்தன. இளம்பெண்ணை கழுத்தில் குத்திக் கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ்ரோடு பகுதியை சேர்ந்த கேசவராஜ் மகள் கோகிலாவாணி (20), சேலம் அரியானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் பாராமெடிக்கல் 4ம் ஆண்டு மாணவி என்றும், நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்ற அவர், கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அவரை கொன்றது யார் என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கோகிலாவாணியுடன் அடிக்கடி வெளியில் சுற்றித்திரிந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த ஐடி கம்பெனி ஊழியரான, எம்சிஏ பட்டதாரி முரளிகிருஷ்ணா (24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

கோகிலாவாணியின் பாட்டி பெங்களூருவில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்ற கோகிலாவாணியின் தாயும், முரளிகிருஷ்ணாவின் சித்தியும் ஒரே கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு மேச்சேரியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு முரளிகிருஷ்ணாவின் குடும்பம் வந்துள்ளது. அப்போது அவருக்கு கோகிலாவாணியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

பிறகு அலைபாயுதே சினிமா பட பாணியில் திருமணத்தை மறைத்து தனித்தனியே வாழ்ந்துள்ளனர். பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்த முரளிகிருஷ்ணா அவ்வப்போது சேலத்திற்கு வந்து மனைவியை சந்தித்துச் செல்வார். சில நேரங்களில் பெங்களூருவுக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் கோகிலாவாணிக்கு, கல்லூரியில் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் காதல் வயப்பட்டதால், முரளிகிருஷ்ணாவை பிரிந்திட திட்டமிட்டு அவரிடம் பேசுவதை குறைத்துள்ளார். இதனை அறிந்த அவர், அந்த மாணவர் குறித்து மனைவியிடம் செல்போனில் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு நேரில் வந்து பேசுவதாக கூறிய முரளிகிருஷ்ணா, நேற்று முன்தினம் சேலத்திற்கு பைக்கில் வந்துள்ளார். கல்லூரியில் இருந்த கோகிலாவாணியை புதிய பஸ் நிலையத்திற்கு வரவழைத்து, பைக்கில் ஏற்றி சென்றுள்ளார்.

தனியாக ஓரிடத்தில் அமர்ந்து பேசி, ஒரு முடிவுக்கு வருவோம் என கூறியுள்ளார். அதன்படி காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி வனப்பகுதியில் பைக்கை நிறுத்தி, இருவரும் பிரச்னை குறித்து பேசியுள்ளனர்.

அப்போது தகராறு முற்றவே மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து திடீரென கோகிலாவாணியின் கழுத்தில் கத்தியால் முரளிகிருஷ்ணா குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், கல்லால்அவரது முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளார்.

பிறகு பைக்கில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முகத்தில் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முரளிகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், வேறொரு மாணவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் இளம்பெண் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து(27). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (21). இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

கடலூர் அருகே நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து(27). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (21).

இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் செல்வகுமாரி கர்ப்பமடைந்ததை அடுத்து இருவீட்டாரும் இவர்களை ஏற்றுக்கொண்டனர்.

தற்போது செல்வகுமாரி 9 மாத கர்ப்பணியாக இருப்பதால் அடுத்த வராம் வளைகாப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் திடீரென செல்வகுமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவரிடம் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த செல்வகுமாரி திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்திய சிறுவன்.. 1000க்கும் மேற்பட்டோர் உயிரை காத்த சமயோசிதம்!!

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவர் முர்சலீன். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அப்போது ​​ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து பெரிய ஓட்டை இருப்பதை கண்டார். தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருப்பதை பார்த்து சிறுவன் அதிர்ந்தான். சிறுவன் முர்சலீன், தான் அணிந்திருந்த சிவப்பு நிற டி-ஷர்ட்டை உடனடியாக கழற்றி ரயிலுக்கு முன்பு காட்டியபடியே ஓடி வந்தான்.

சிறுவன் ஓடி வருவதை பார்த்த ரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தினார். ரயில் ஓட்டுநர் இறங்கி கீழே வந்த போது, சிறுவன் முர்சலீன் அவரிடம் தண்டவாளத்தில் பெரிய பள்ளம் இருப்பதைக் கூறினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் முர்சலீனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இதுகுறித்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பள்ளத்தை மண் வைத்து நிரப்பினர்.

அதன்பின்னர் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் பயணிகளில் பலர் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பலரும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவி மண்வெட்டியால் அடித்து கொலை செய்த கணவன்!!

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியை மண்வெட்டியால் வெட்டியும், கத்தியால் அறுத்தும் கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் லட்சுமியின் கணவர் மதுவுக்கு அடிமையான செல்வம் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் செல்வம் தனது மனைவி லட்சுமியை சேர்ந்து வாழ அழைத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு சம்மதிக்க மறுத்த லட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த செல்வம் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பிய மனைவி மீது செல்வம் தனது இரு சக்கர வாகனத்தைக் கொண்டு மோதியுள்ளார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லட்சுமியை மண்வெட்டியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பின்னர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் காவல் நிலையம் சென்ற செல்வம் அங்கு தனது ஆயுதத்தை ஒப்படைத்து சரணடைந்தார். பட்டப் பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிலிண்டர் வெடித்து கணவன் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் குப்பதஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் கிரிஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் மதுசூதன் என்பவருக்கு சொந்தமான வாடகை பண்ணை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

செப்டம்பர் 16ம் தேதி சமையல் செய்யும்போது திடீரென்று எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் கிரிஷ் மற்றும் நந்தினி பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

விக்டோரியா மருத்துவமனையில் அவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் காபி போடும்போது, சிலிண்டர் வெடித்து சிதறியிருப்பது தெரியவந்தது.

வெளிநாட்டில் பணியாற்றும் தாய் : 14 வயது மகனின் விபரீத முடிவு!!

பட்டபொலவில்..

காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவனின் தாயார் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்ணன் திட்டியதால் மனமுடைந்த மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அவரது தம்பி வீட்டில் இல்லாததால், அண்ணன் தேடிய நிலையில் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.​​உடனடியாக பட்டபொல வைத்தியசாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்ட போதும் செல்லப்பட்டதுடன், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர் பகுதியில் இளம் பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்!!

திருகோணமலையில்..

திருகோணமலையில் லோகவர்த்தினி என்ற இளம் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை அவர் முன்னெடுத்து வருகிறார்.

தனது கடைக்கு அருகில் இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தார். ஏன் என்று கேட்டபோது போதிய பணம் இன்மையால் உணவு வாங்க வசதியில்லை என்றும் சரியான பசியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் மனவேதனை அடைந்த நிலையில் அவருக்கு உணவு வழங்கியுள்ளார்.இதனையடுத்து பசி என்று வருபவருக்கு தனது கடையில் உணவு உண்டு என பதாதை ஒன்று எழுதி வைத்துள்ளர்.

சிங்கள மொழியிலும் அவ்வாறு பதாகை வைத்துள்ளமை சிறம்பசமாகும். தனது கடைக்கும் வரும் மாற்றுத்திறனாளிகள், யாசகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.இவரின் செயற்பாட்டை பலர் கடவுளுக்கு இணையாக தெரிவித்து முகநூல் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமண மண்டபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் : 100 பேர் பலியான சோகம்!!

ஈராக்கில்..

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்ததுட, 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மணமக்கள் நடனமாடிக்கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன

இந்நிலையில் எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிற நிலையில் ,உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து பெண்கள் அதிரடியாக கைது!!

விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 4 பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகநபர்கள் டுபாயிலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களின் உடல்கள், பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் அதிரடி : இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!!

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார்.

குறித்த பேரூந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேரூந்தில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார்.

உடனடியாக பேரூந்தை நிறுத்தி பேரூந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை. இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை போது குறித்த சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் என 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கட்டப்படும் உலகிலேயே மிக பெரிய இந்து கோயில் அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

183 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவில் கட்டுமான திருப்பணியில் அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சுவாமிநாரயன் அக்ஷர்தாம் கோவில், பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. கூட்டமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தென்மேற்கு ஆசியாவில் உள்ள கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் திருக்கோவில், 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது.

நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும்.

இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) கொண்டுள்ளது.

சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது.இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன.

இக்கோவிலில், ‘பிரம்ம குண்ட்’ என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய படிக்கிணறு உருவாக்கப்பட்டுள்ளது.இதில் உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

யாழில் விபரீத முடிவினால் இளம் யுவதி மரணம்!!

யாழில்..

யாழில் மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவம் இன்று (25.09.2023) காலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயக்குமார் டானுகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதன்போது உயிரிழந்த யுவதியின் தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பலியாகியுள்ள நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்த கொண்டுள்ளார்.

அதேவேளை கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த அவரது மாமாவின் 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்டநிலையில் அவர் இன்று தூக்கில் தொங்கியவாரு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்.. புகைப்படத்தை வெளியிட்டு லண்டன் பொலிஸார் கோரிக்கை!!

லண்டனில்..

லண்டனில் கார் விபத்தில் சிக்கி 50 வயது நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி இந்த சாலை விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினை நேரில் பார்த்தவர்களிடம் குறித்த தகவலை திரட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பார்க் ராயல், பாரெட்ஸ் கிரீன் ரோடு பகுதியில் அதிகாலை 3.24 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருப்பு நிற BMW கார் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து வெளியேறியுள்ளது.இருப்பினும், குறித்த சாரதியை மாநகர பொலிஸாரால் அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறப்படுகி்ன்றது.

இந்த நிலையிலேயே அந்த விபத்தை நேரில் பார்த்ததாக பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.அவர் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரல்ல என குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவரிடம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளை 10 இலட்சமாக்கிய ரஷ்ய குடும்பத்தினர்!!

ரஷ்ய குடும்பத்தினர்..

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை பத்து இலட்சம் அடையச் செய்யும் வகையில் ஒரு ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்கும் முகமாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கு வந்த ரஷ்ய நாட்டவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். ரஷ்யாவில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்த அவர்கள் பின்னர் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. இரும்பு ஆணியை உண்ணக் கொடுத்த கொடுமை!!

அரேபியாவில்..

சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் போது உணவுக்கு பதிலாக ஆணிகள் மற்றும் இரும்பு ஸ்பிறிங் ஆகியவற்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சவூதி வைத்தியசாலையொன்றில் உள்ள வைத்தியர் ஒருவரின் தலையீட்டில் தூதரகத்தின் ஊடாக குறித்த பணிப்பெண் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் Taid பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மாத்தளை, அல்கடுவ பிரதேசத்தினை சேர்ந்த எம்.எஸ். தியாக செல்வி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இருபத்தொரு வயதான ஒரு பிள்ளையின் தாயான எம்.எஸ். தியாக செல்விக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவரது தாய் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜுன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டு வேலைக்காகச் சென்றதாகவும், குறித்த வீட்டில் தன்னை கடுமையாக தாக்கியதாகவும்,

கான்கிரீட்டில் அடிக்கப்பட்ட ஐந்து வெள்ளை ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், வயரை விழுங்க மறுத்தமையினால் அடித்து நீரில் மூழ்கடிக்க செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து பல நாட்களுக்குப் பிறகு, வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத்தொடங்கியபோது, ​​குடியிருப்பாளர்கள் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள் இருப்பதைக் கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கைக்கு வந்து கண்டி வைத்தியசாலையில் பரிசோதனை செய்த போது தனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு இரும்பு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை என பெண்ணின் தாய் குற்றம்சுமத்தியுள்ளார்.

கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்றதாகவும், இது போன்ற சம்பவங்கள் யாருக்கும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வத்தேகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுப் பணிப்பெண்ணிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வத்தேகம பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழில் வயோதிபப் பெண் எடுத்த விபரீத முடிவு!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் பாய்ந்து வயதான பெண்மணி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் மீசாலை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

மீசாலை பகுதியை சேர்ந்த 65 வயதான கி.நாகேஸ்வரி என்பவரே தொடருந்து தண்டவாளத்தில் படுத்து தன் உயிரை மாய்த்துள்ளார்.வயது மூப்பினால் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருப்பதை விரும்பாத காரணத்தினால் உயிரை மாய்த்துள்ளதாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடக்க முடியாத நிலையில் கூனிய நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக நடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.