கல் உப்பில் முட்டி போட வைத்து கொடுமைப்படுத்திய தாய்.. காதலனுடன் வெளியேறிய காதலி!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உப்பட்ட குளச்சல் பகுதியில் வசித்து வருபவர்கள் சுனிதா மற்றும் அவரது மகள் அமர்சியா. அமர்சியா பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, வீட்டிற்கு வந்த ஒரு மர்ம கும்பல் தனது மகளை கடத்தி சென்றதாக குளச்சல் பகுதி காவல் நிலையத்தில் சுனிதா புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய காவல் துறை, முதலில் தாய் சுனிதாவிடம் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்று கேட்டபோது தனது மகள் ஒருவரை காதலிப்பதாகவும், அமர்சியாவை கடத்தியது அந்த பையனாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் விசாரணையில் அமர்சியாவின் காதலன் அதே பகுதியை சேர்ந்த டேனியல் ஆகாஷ் என்பவர் என தெரியவந்தது. ஆகாஷின் வீட்டிற்கு போலிசார் சென்றனர். அப்போது அங்கு அமர்சியா இருப்பதை கண்டனர். இந்நிலையில் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அங்கு சுனிதாவும் இருந்தார்.

விசாரணையின்போது அமர்சியா கூறியதாவது:- ” நான் ஆகாஷ் என்பவரை காதலிக்கிறேன். இதைப் பற்றி அறிந்த எனது தாயாருக்கு இதில் விருப்பம் இல்லை. அதனால் என்னை அறையில் அடைத்து வைத்து அடித்தார்.

மேலும் கல் உப்பை பரப்பி அதில் என்னை முட்டிப் போட வைத்து நடக்க சொல்லி கொடுமைப்படுத்தினார். அதைப் பற்றி நான் எனது காதலனிடம் கூறினேன். அதன்பின்பு ஆகாஷின் விட்டிற்கு சென்றுவிட்டேன். இதுபற்றி எனது வீட்டிற்கும் தகவல் தெரிவித்தேன்.” இவ்வாறு அமர்சியா கூறினார்.

உண்மையை அறிந்த காவல் அதிகாரி, அமர்சியா மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி காதலனுடன் செல்ல அனுமதி அளித்தார். மேலும், விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

காதல் தகராறில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்!!

கர்நாடகாவில்..

காதல் தகராறில் பொறியியல் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து, காதலன் கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், கொலைச் செய்த வாலிபரை கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுசித்ரா படிக்கும் கல்லூரியில் படித்தவர் முன்னாள் மாணவரான தேஜாஸ்(23). இவர் சுசித்ராவை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாகக் கூறி, சுசித்ராவை நகரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்தி பெட்டா மலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் தேஜாஸ் நேற்று அழைத்துச் சென்றார். அங்கு வந்த பிறகு, இருவரும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசித்ரா கழுத்தை தேஜாஸ் அறுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினார். அப்பகுதியில் உள்ள சிலர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சுசித்ராவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுசித்ரா உடலை மீட்டதுடன், தேஜாஸை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தேஜாஸ், சுசித்ரா கடந்த 6 மாதங்களாக பழகியதுடன், காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுசித்ராவுடன் தேஜாஸ் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதனால் அவரைப் பிரிய சுசித்ரா முடிவு செய்தார். அதையறிந்த தேஜாஸ், சுசித்ராவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்.. கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கொடூர கணவன்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் அமெரிக்கா வந்திருக்கின்றனர்.

அவர்களது 3 வயது மகன் டேவிட் கோட்டயத்தில் தனது தாத்தா-பாட்டி பராமரிப்பில் வளர்ந்திருக்கிறான். அவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு மிரா அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் மிரா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர், தனது சகோதரியுடன் செவிலியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு மீரா தனது கணவர் அமலுடன் காரில் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவன்-மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அமல் ரெஜி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மீராவை துப்பாக்கியால் சுட்டார். சுமார் 10-க்கும் மேற்பட்ட முறை சுட்டிருக்கிறார்.

இதில் படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரத்தில் தனது மனைவியை துப்பாக்கியால் கூட்ட அமல் ரெஜி, சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.

பின்பு அங்கிருந்தவர்களிடம் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறிய அவர், அதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மீராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல்ரெஜியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது. அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டு மேன்றெ கொன்றதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமைடைந்த மீரா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணம் முடிந்த 2 மணி நேரத்தில் கிடைத்த திருமண அல்பம் : AI தொழிநுட்பத்தை அசுர வளர்ச்சி!!!!

செயற்கை நுண்ணறிவு..

திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் மூலம் திருமண புகைப்பட ஆல்பம் மணமக்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போதைய காலத்தில் தொழிநுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் வந்ததில் இருந்து மனிதர்களுக்கு வேலை குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை QR Code மூலம் ஸ்கேன் செய்தால் உடனடியாக டவுன்லோடு செய்ய முடியும்.

அந்தவகையில், சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகனசுந்தரம் மற்றும் பிரீத்தி ஆகிய இருவருக்கு நடைபெற்ற திருமணத்தில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தனர். அப்போது, கார்னிவல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தது.

இதில், திருமணம் முடிந்த 2 மணி நேரத்திலேயே திருமண புகைப்பட ஆல்பம் மணமக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதனால், புதுமண தம்பதியினர் மற்றும் உறவினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து புதுமணத்தம்பதியினர் கூறுகையில், “திருமணம் முடிந்தவுடன் ஆல்பம் கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. தாலி காட்டும் நேரத்தில் எனது முகம் எப்படி இருந்தது என மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது அதனை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றனர்.

அமீரக லொட்டரியில் கோடீஸ்வரரான இளைஞர் : பரிசுத்தொகையை பார்த்து தலைசுற்றிய தருணம்!!

கேரளாவில்..

அமீரக லொட்டரி ஒன்றில், கேரள இளைஞர் ஒருவருக்கு ரூ.45 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ (39) கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் வேலை செய்து வருகிறார். துபாய் அருகே எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டராக ஸ்ரீஜூ இருந்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு நீண்ட நாள்களாவே சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த சமயத்தில் தான் நேற்று முன் தினம் லொட்டரி ஒன்றில் பரிசு விழுந்திருக்கும் செய்தி ஸ்ரீஜூவுக்கு கிடைத்தது. பின்னர், தான் வாங்கிய 154 -வது மஹ்சூஸ் லொட்டரி குலுக்கலின் இணையதளத்தில் தனது லொட்டரி எண்ணை சரிபார்த்த போது தான் ஸ்ரீஜூ நம்பினார்.முக்கியமாக பரிசுத்தொகையை பார்த்த ஸ்ரீஜூ ஆடிப்போனார்.

இந்திய மதிப்பில் ஸ்ரீஜூ வென்ற பரிசுத்தொகை ரூ.45 கோடி ஆகும்.இதனையடுத்து, லொட்டரி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தவுடன் தான் ஸ்ரீஜூ முழுவதுமாக நம்பினார். இதுவரை அமீரகத்தில் பட்ட சிரமங்களுக்கெல்லாம் முடிவு வந்துவிட்டதாக மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும், சொந்த ஊரில் வீடு கட்டலாம் என்பதை தாண்டி இதை வைத்து என்ன செய்வதென யோசிக்க முடியவில்லை என ஸ்ரீஜூ குழப்பத்தில் உள்ளார்.

‘‘என் குடும்பம், மீண்டும் தலைகுனியக் கூடாது’’ – தங்கையின் காதலனை கொலை செய்த சகோதரன்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தும்பேரி ஜமான்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னதம்பி. இவரின் 22 வயது மகன் முரளியும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத பதின்பருவப் பெண்ணும் கடந்த ஓராண்டாகக் காதலித்துவந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் யாருக்கும் தெரியாமல், ஆசைவார்த்தை கூறி அந்தப் பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துச்சென்ற முரளி, தாலிகட்டி திருமணமும் செய்துகொண்டாராம்.

இது பற்றிப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அம்பலூர் காவல் நிலைய போலீஸார், காதல் ஜோடியைத் தேடிப்பிடித்து மீட்டனர். ‘மைனர்’ என்பதால், அந்தப் பெண்ணை பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். பெற்றோரே தாலியைக் கழற்றி வீசிவிட்டு, மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, தாலிகட்டிய காதலன் முரளி மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைது செய்யாமல் விசாரணை மட்டும் மேற்கொண்டுவந்தனர்.

இந்த விவகாரத்தால், ‘ஊருக்குள், தங்களுக்குத் தலைக்குனிவு ஏற்பட்டுவிட்டதாக’ நினைத்த பெண்ணின் குடும்பத்தினர், முரளி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில், அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியின் பின்புறத்தில் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணை அடிக்கடி வரவழைத்துப் பேசி, காதலைத் தொடர்ந்திருக்கிறார் முரளி.

இதையறிந்த பெண்ணின் அண்ணன் சந்தோஷ், கடும் கோபமடைந்து பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறார். அப்போதும் அடங்காத முரளி, நேற்று இரவும் அந்தப் பள்ளியின் பின்புறம் வரும்படி, அந்தப் பெண்ணுக்கு எப்படியோ தகவல் கொடுத்துவிட்டு அங்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

அங்கு சென்ற முரளிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காதலிக்கு பதிலாக அவரின் அண்ணன் சந்தோஷ் கத்தியுடன் காத்திருந்தார். இதனால், திடுக்கிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்ற முரளியைப் பிடித்து, அவரின் கழுத்துப் பகுதியிலேயே கத்தியால் குத்தினார் சந்தோஷ்.

கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொட்டிய அடுத்த நொடியில் சுருண்டு விழுந்த முரளி, சில நிமிடங்களிலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். தகவலறிந்து சென்ற அம்பலூர் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிவுசெய்து, கொலையாளி சந்தோஷைக் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். இப்போது, அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்து விட்டதாகவும், அடுத்த சில நாள்களில், மீண்டும் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளும் முடிவில் முரளி இருந்ததாகவும் சந்தோஷுக்குத் தெரியவந்திருக்கிறது.

‘மீண்டுமொரு முறை அவரால் தன் குடும்பத்துக்குத் தலைக்குனிவு ஏற்பட்டுவிடக் கூடாது’ என்று திட்டம்போட்டு, முரளியை சந்தோஷ் தீர்த்துக்கட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

விமானத்தை தரையிறங்க விடாத தெரு நாய் : மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சென்ற விமானம் : நடந்தது என்ன?

கோவாவில்..

பொதுவாக வானிலை கோளாறு காரணமாக தரையிறங்கவேண்டிய விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்காமல் வேறு விமான நிலையத்துக்கு செல்லும். ஆனால், கோவாவில் வினோதமான காரணத்துக்காக அங்கு விமானம் தரையிறங்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UK881 என்ற விமானம், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. விமானநிலையத்தை விமானம் அடைந்ததும் அதற்கு தரையிறங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கும் வேளையில், விமானத்தின் ஓடுபாதையில் தெருநாய் ஒன்று அலைந்துகொண்டிருந்துள்ளது. இதனை கவனித்த விமானி பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தரையிறங்காமல் விமானத்தை மீண்டும் பெங்களூரு விமான நிலையத்துக்கே திருப்பி அங்கு தரையிறக்கினார்.

அதன்பின்னர் இது குறித்து கோவா டபோலிம் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தெருநாய் விரட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெங்களுருவில் இருந்து விமானம் மீண்டும் கிளம்பி கோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோவா விமான நிலைய அதிகாரிகள், விமான ஓடுபாதையில் எப்போதாவது தெருநாய் நுழையும். ஆனால், அவை உடனடியாக அங்கிருந்து விரட்டப்படும். இந்த முறை அதில் தவறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தாய், மகன் எடுத்த விபரீத முடிவு!!

திருமுல்லைவாயிலில்..

ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் குடும்பப் பிரச்சினையால் தாய், மகன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில், சாந்திபுரம், 4-வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (47).

இவர், சென்னை, அம்பத்தூரிலுள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் லோகேஸ்வரன் (27), ஆவடி கன ரக வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரியின் கணவர் ரமேஷ் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தனியாக வசித்து வருகிறார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தந்தையின் பிரிவு, தங்கையின் இறப்பு ஆகியவற்றால் லோகேஸ்வரன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பணிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த லோகேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிமுடிந்து இரவு வீடு திரும்பிய பரமேஸ்வரி, மகன் லோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிறகு, அவரும் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த திருமுல்லைவாயில் போலீஸார், பரமேஸ்வரி, லோகேஸ்வரன் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை.!!

லண்டனில்..

லண்டனில் வாழும் ஒரு இந்திய தம்பதியர், தங்கள் குழந்தையை பலமாக தாக்கிக் கொன்றுவிட்டு, விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்கள்.

குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை
வடமேற்கு லண்டனிலுள்ள Colindale என்னுமிடத்தில் வாழும் ரிங்கல்பென் ப்ரஜாபதி (Rinkalben Prajapati, 24), க்ருணால் ப்ரஜாபதி (Krunal Prajapati, 27) தம்பதியரின் மகள் ஹேஸல் (Hazel).

அவள் பிறந்து 11 வாரங்களே ஆன நிலையில், 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தாள் குழந்தை. அவளது கன்னத்தில் யாரோ கடித்த பல் தடம் பதிந்திருந்தது.

உடற்கூறு ஆய்வில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்திருந்ததும், கால் பிசகியிருந்ததும், உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது.

விசாரணையில், குழந்தையை தான் தவறுதலாக கீழே போட்டுவிட்டதாக குழந்தையின் தந்தையான க்ருணால் தெரிவித்தார். குழந்தையின் பெற்றோரிடம் நீதிமன்ற விசாரணை நடந்துவரும் நிலையில், அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின்னாக தகவல்களை அளித்து வருகிறார்கள்.

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துவரும் முன் குளிக்க வைத்ததாக அதன் தாய் ரிங்கல்பென் கூறியிருந்தார். அப்போது குழந்தையின் கன்னத்தில் இருந்த கடிபட்ட காயம் உட்பட எந்தக் காயத்தையும் பார்க்கவில்லையா என்று சட்டத்தரணியாகிய Sally O’Neill கேட்க, இல்லை என்று கூறினார் ரிங்கல்பென்.

அவை மருத்துவமனையில் இருந்தபோது ஏற்பட்டிருக்கலாம் என தான் கருதியதாகவும் அவர் கூறியுள்ளார். அவரிடம் அவரது கணவர் தொலைபேசியில் பேசும்போது, குழந்தைக்கு என்ன ஆனது என்று என்னிடம் சொல், நான் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டுள்ளார் க்ருணால்.

அவர் ஏன் உங்களிடம் அப்படிக் கேட்டார் என்றால், அவர் எப்போதுமே பொய்தான் சொல்வார் என்று கூறியுள்ளார் ரிங்கல்பென். உடற்கூறு ஆய்வில் குழந்தை அடித்துக்கொல்லப்பட்டுள்ளதற்காக ஆதாரங்கள் தெளிவாக கிடைத்தும், தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துவருகிறார்கள் ரிங்கல்பென்னும் க்ருணாலும். வழக்கு தொடர்கிறது.

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்.. வயிற்றிலேயே குழந்தை இறந்த சோகம்.!!

அமெரிக்காவில்..

கர்ப்பிணி மனைவியை கணவரே துப்பாக்கியால் சுட்டதால், வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம், கேரளா கோட்டயத்தைச் சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32).

இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பிலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 3 வயது மகன் டேவிட் கேரளாவில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்த நிலையில், மகனையும் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர்.

இதில், மீண்டும் மீரா கர்ப்பமானார். அவர், அங்கேயே சகோதரியுடன் சேர்ந்து செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற தினம், தனது கணவர் அமல் ரெஜியுடன் மீரா காரில் சென்றுள்ளார். அப்போது, காரில் வைத்தே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர்.

அப்போது, ஆத்திரத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து 10 முறை மீராவை அமல் ரெஜி சுட்டார். பின், இரத்த வெள்ளத்தில் மீரா சரிந்தார். உடனே, அமல் ரெஜி சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.

அப்போது, அங்குள்ளவர்களிடம் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகவும், இது பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டுமெனவும் கூறியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார், மீராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அமல் ரெஜியை பொலிஸார் கைது செய்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீராவின் குழந்தை வயிற்றிலேயே இறந்தது. இது தொடர்பாக அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டுமென்றெ கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து படுகாயங்களுடன் மீரா சிகிச்சை பெற்று வருகிறார்.

பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய சோகம்.. ஒரு நொடி அவசரப்பட்டதால் நேர்ந்த விபரீதம்.!!

திருவள்ளூரில்..

தமிழக மாவட்டம் திருவள்ளூரில், ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூா் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த ரேகா(22) என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.14) பிறந்த நாள் என்பதால் வீட்டிற்கு அருகில் உள்ள அழகு நிலையம் செண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.

அப்போது, ரயில் வருவதற்குள் சென்று விடலாம் என்று நினைத்து கேட்டை கடக்க ரேகா முயன்றுள்ளார். பின்னர், கேட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த விரைவு ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

38 மனைவிகள், 100 அறைகள்: ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்..!

மிசோரமில்..

இந்திய மாநிலம் மிசோரமில், ஒரே வீட்டில் 199 பேர் வசிப்பதும், தற்போது அந்த இடம் சுற்றுலா தலமாகவும் மாறி வருவதும் பேசுபொருளாகியுள்ளது.இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் இந்த மிகப்பெரிய குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் தலைவர் சியோனா சானா. இவர், 38 பெண்களை மணந்துள்ளார்.

அந்தந்த மனைவிகள் மூலம் 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் என மொத்தம் 199 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட 4 மாடி கட்டிடத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.கடந்த 2021 -ம் ஆண்டு தனது 76 வயதில் சியோனா சானா உயிரிழந்தார். அதன் பிறகும், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

சியோனா சானா தன்னுடைய 17 வயதில் முதல் மனைவியை மணந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரே ஆண்டில் 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு மனைவிக்கும் தனி படுக்கை அறை மற்றும் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், எல்லா நேரங்களிலும் 7 அல்லது 8 மனைவிகளை பக்கத்தில் வைத்திருப்பதை சியோனா சானா விரும்புவார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.மேலும், ஒரு பெரிய டைனிங் ஹாலில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் எனவும் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் சித்தி!!

வவுனியா, அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா, சாளம்பைக்குளம் அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில் 3 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அந்தவகையில், முஹம்மத் மக்சூத் பாத்திமா நப்லா 176 புள்ளிகளையும், ரிஸான் பாத்திமா ரிஸ்கா 167 புள்ளிகளையும், அப்துல் ஜபரூத் பாத்திமா ஜெஸா 153 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்து அந்த பாடசாலைக்கும், கிராமத்திற்கும் புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இரு மாணவிகள் சித்தி!!

வவுனியா, செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் ரமேஸ்குமார் தனுஸ்கா 165 புள்ளிகளையும், றொனால் றீகன் குயின்சிலின் 163 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இரு மாணவர்கள் சித்தியடைந்து அந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த அழைப்பு : நூதனமான முறையில் பண மோசடி!!

கனடாவில்..

கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,இரவு நேரத்தில் 59 வயதுடைய பெண் ஒருவருக்கு, கனடாவில் இருக்கும் தனது மருமகனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது, நள்ளிரவில் ஏற்பட்ட விபத்திற்காக சிறையில் அடைக்கவுள்ளனர் என பேசியுள்ளார்.அதற்காக, யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறும் தெரிவித்துள்ளார்.

இதனால், இரவு நேரத்தில் பதற்றமடைந்த அந்த பெண் 1.4 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.பின்னர் தான் மோசடி என்று அந்த பெண்ணிற்கு தெரிந்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தொலைபேசியில் பேசியவர், பஞ்சாபியில் மருமகனும், நானும் எப்படி பேசுவோமோ அதே போல பேசினார் என அந்த பெண் கூறினார்.

இது தொடர்பாக சைபர் நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி மையத்தின் செயல்பாட்டு இயக்குநர் பிரசாத் பதிபண்ட்லா பேசுகையில், “மோசடி குழுவினரால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்பு செயற்கை நுண்ணறிவு குரல் கருவிகள் மூலமாக ஒரு நபரின் குரலை மிக துல்லியமாக பிரதிபலிக்க முடிகிறது” என கூறியுள்ளார்.

இந்த மாதிரியான மோசடிகள் முக்கியமாக கனடா, இஸ்ரேல் போன்ற வெளிநாடுகளில் உறவினர்களை கொண்ட தனிநபர்களுக்கு தான் அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

திறமை இருந்தும் வலியும் கண்ணீரும் மட்டுமே பரிசு : துரதிஷ்டத்தால் 31 வருடமாக பலிக்காத கனவு!!

கிரிக்கெட்..

கிரிக்கெட் உலகின் மிகவும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட உலகக்கிண்ண இறுதிப்போட்டியை எட்டாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டீ காக், மில்லர் போன்ற உலகத்தர துடுப்பாட்ட வீரர்களுடனும் ரபாடா, மஹராஜ் போன்ற தரமான பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இம்முறையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

நேற்றைய தினம்(17) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரத்தின் பின் தொடங்கிய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு சரிய ஆரம்பித்தனர்.

இறுதிவரை போராடிய மில்லர், சதமடித்து 212 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு தென்னாபிரிக்காவை அழைத்துச்சென்றார்.பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி போராடினாலும் அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்தது.

இதனை தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரையிறுதி வரை முன்னேறி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் தென்னாபிரிக்க அணி வெளியேறியது.தென்னாபிரிக்க அணி முதன்முதலாக கலந்து கொண்ட 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலேயே அரையிறுதிக்கு முன்னேறியது.

1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற அரையிறுதியில், இங்கிலாந்தை எதிர்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது.மழை ஓய்ந்த பிறகு அப்போது இருந்த மழை தொடர்பான சட்டதிட்டத்தின் அடிப்படையில், தென்னாபிரிக்க அணிக்கு ஒரு பந்தில் 22 ஓட்டங்கள் என்ற நியாயமற்ற இலக்கு விதிக்கப்பட்டது.

அப்போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியை தழுவ, கிரிக்கெட் உலகில் இன்று வரை இது ஒரு நியாயமற்ற மற்றும் சர்ச்சைக்குரிய முடிவாக ரசிகர்களால் கருதப்படுகிறது.இதனையடுத்து 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதியில், 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 213 ஓட்டங்களை எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது.

புள்ளிப்பட்டியலின் படி தென்னாபிரிக்காவை விட உயர்வாக இருந்ததால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மீண்டுமொரு முறை தென்னாபிரிக்கா துரதிஷ்டத்தால், இறுதிப்போட்டியை அடைய முடியாமல் தொடரை விட்டு வெளியேறியது.அதன்பின்னர், 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதியில் மீண்டும் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென்னாபிரிக்கா மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.போட்டியில் மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களில் 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கடைசி 2 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவை என்ற ஒரு பரபரப்பான நிலையில் இருந்தது.

தொடர்ந்து ஸ்டெய்ன் வீசிய 43ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை எலியட் ஆறு ஓட்டங்களாக மாற்ற, தென்னாபிரிக்க அணி தொடரிலிருந்து விடைபெற்றது.டூ பிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ், மோர்கெல் போன்ற வீரர்கள் தோல்வியுற்று மைதானத்தின் நடுவில் கண்ணீர் வடித்த காட்சியை இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இம்முறை நடைபெற்ற உலககிண்ணத்திலும் தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு எட்டாக்கனியாக பார்த்தவாறே வெளியேறியிருக்கின்றது.உலகக் கிண்ணங்களில் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறும் போதெல்லாம் அதனுடன் இணைந்து துரதிஷ்டமும் முன்னேறிவிடுகிறது.

ஜொன்டி ரோட்ஸ், கிப்ஸ், கல்லிஸ், நிட்னி, டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் போன்ற உலகத்தர வீரர்களை உலகுக்கு அளித்த தென்னாபிரிக்க அணியின் 31 வருட உலகக்கிண்ண கனவு என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று தென்னாபிரிக்க வீரர்களை போல கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றார்கள்.

தென்னாபிரிக்கா மட்டுமன்றி நியூசிலாந்து அணியும் உலகக்கிண்ணங்களில் துரதிஷ்டம் வாய்ந்த ஒரு அணியாக உள்ளது.நியூசிலாந்து அணி, உலககோப்பைகளில் 9 தடவைகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் அதில் 2 தடவைகள் இறுதிப்போட்டியிலும் அடியெடுத்து வைத்தது.

நியூசிலாந்து, 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளில் அரையிறுதியில் இலங்கையிடம் தோற்று வெளியேறியதுடன், 2015 மற்றும் 2019 உலகக்கோப்பைகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, முறையே அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தினால் தோற்கடிக்கப்பட்டு உலகக்கோப்பை கனவை பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.