புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 43 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து 175 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதில் மாவட்டத்தில் முதல் நிலை உட்பட 43 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மேலும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 138 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்கார நிகழ்வு இன்று (18.11.2023) மாலை மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக சைவ மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (18.11) முருகன் ஆலயங்களில் சூரன்போர் இடம்பெறும். அந்தவகையில் வவுனியாவின் சிறப்பு மிகு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் மேளதாள வாத்திய இசை முழங்க,
அந்தணச் சிவாச்சாரியர்கள், பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து வெளி வீதிக்கு வந்த வந்த முருகப் பெருமான் மழைக்கு மத்தியிலும் மணிக்கூட்டு கோபுர சந்தி உள்ளடங்கிய ஏ9 வீதியில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இதேவேளை, வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், பழனி முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முருகன் ஆலயத்தில் சூரசம்காரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, பதறியபடி தொடர்புகொண்டார். பின்னர் அவர், தன்னுடைய தந்தை முகமது ஷியாம் (50) என்பவரை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு, தன்னிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகக் கூறினார்.
அதனால் உஷாரான காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த போலீஸார், இலங்கை பெண்ணிடம் விவரங்களைக் கேட்டறிந்து, சம்பவம் நடந்த வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வடக்கு கடற்கரை போலீஸார், கடத்தப்பட்ட முகமது ஷியாமின் செல்போன் நம்பரின் சிக்னலை ஆய்வு செய்தனர்.
அதோடு, முகமது ஷியாமின் மகளுக்கு வீடியோ காலில் மிரட்டியவர்களின் செல்போன் நம்பரையும் ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது மிரட்டல் கும்பல் பதுங்கியிருக்கும் இடம் போலீஸாருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தப்பட்ட முகமது ஷியாமை மீட்க, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கே.கே.நகர் பகுதியிலுள்ள ஒரு விடுதிக்குச் சென்று, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது ஷியாமை மீட்டனர். பின்னர் அங்கிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சித்ரா (43) என்பவர் கூறியதன்பேரில் முகமது ஷியாமைக் கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சித்ரா, இந்தக் கடத்தலுக்கு உதவியதாக ரியாஸ் அஸ்கர், வேல்முருகன், தினேஷ், ஹரிகிருஷ்ணன், சுரேஷ், பாலசுப்பிரமணி ஆகிய ஏழு பேரைக் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து செல்போன்கள், பாஸ்போர்ட்டுகள், 4,890 ரூபாய், கார் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை போலீஸார் நம்மிடம் பேசுகையில், “இலங்கையைச் சேர்ந்த முகமது ஷியாம், பிசினஸ் செய்துவருகிறார்.
பிசினஸில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சித்ராவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, முகமது ஷியாம் பிசினஸில் சித்ராவுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெரிகிறது.
ஆனால், முகமது ஷியாம் அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், முகமது ஷியாமுக்கு தற்போது சில லட்சம் ரூபாய் கடனாகத் தேவைப்பட்டிருக்கிறது. உடனே அவர், சித்ராவின் ஆண் நண்பர் ரியாஸ் அஸ்கரிடம் அந்தப் பணத்தைக் கேட்டிருக்கிறார்.
இந்தத் தகவலை ரியாஸ் அஸ்கர் உடனடியாக சித்ராவுக்குத் தெரிவித்தார். இதையடுத்து சித்ராவின் பிளான்படி கடன் தொகையைக் கொடுப்பதாக ரியாஸ் அஸ்கர், தொழிலதிபர் முகமது ஷியாமிடம் தெரிவித்தார். அதனால் கடன் தொகையைப் பெற முகமது ஷியாம் சென்னைக்கு வந்தார்.
அங்கு சித்ரா, ரியாஸ் அஸ்கர் உட்பட சிலர் இருந்தனர். சித்ராவிடம் சிக்கிக்கொண்ட முகமது ஷியாமை அடைத்துவைத்துத் துன்புறுத்திய கும்பல், வீடியோ கால் மூலம் முகமது ஷியாமின் மகளிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. இதையடுத்துதான் முகமது ஷியாமின் மகள் கொடுத்த தகவலையடுத்து சித்ரா உட்பட ஏழு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.
வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (18.11) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்த போது, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாந்தசோலை சந்தியில் திரும்ப முற்பட்டுள்ளது.
இதன்போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் படு காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பொலிஸ் உத்தியோகத்தரான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மரணமடைந்துள்ளார்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த திசாநாயக்கா (வயது 27), சாந்தசோலையைச் சேர்ந்த சண்முகம் நாதன் (வயது 63) ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர். குறித்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தெற்காசியாவின் மிக உயரமான கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மற்றுமொரு சாகச விளையாட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது.குறித்த சாகச விளையாட்டு நிகழ்வானது இன்று (18.11.2923) தாமரைக் கோபுரத்தில் நடைபெற்றுவருகின்றது.
விங்சூட் பேஸ் ஜம்பிங் (wingsuit Base Jumping) எனப்படும் சாகச விளையாட்டு நிகழ்வானது இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக தாமரைக்கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சாகச நிகழ்வில் ஈடுபடுபவர்கள் தாமரைக்கோபுரத்தின் 29 ஆவது மாடியிலுள்ள கண்காணிப்புக் கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து கோபுர வளாகத்தின் நிலத்தை அடைவார்கள்.
ஆறு பேர் பங்குபற்றிய இந்த நிகழ்வில், முதலாவதாக குதித்த நபர் கோபுர வளாகத்தில் நிலத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வைக் காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை பதுரலிய பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெலிவேரிய, அம்பரல்வ வடக்கு பகுதியைச் சேர்ந்த 6வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தானது நேற்று (17.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இருவரில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு பலத்த காயங்களுக்குள்ளான மற்றுமொரு இளைஞன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த நிலையில் விபத்து ஏற்பட்டதாகவும் இறந்த இருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் – நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது.இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துக்கொண்டிருந்த போது மனைவி அதனைக் கண்டு கேலி செய்துள்ளார்.
பின்னர் அந்தக் குடும்பஸ்த்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்தமையால் தூக்கில் அகப்பட்டுளள்ளார். இதன்போது அவர் அதில் இருந்து தப்ப முடியாது தவித்த வேளை அவரைக் காக்கும் நோக்கில் மனைவி காலைப் பிடித்தவாறு அவலக் குரல் எழுப்பியபோதும் அருகில் எவருமே இல்லாத நிலையில் உடன் எவரும் அவ்விடத்துக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், குடும்பஸ்தர் குறித்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அவர்களில், மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட மாவட்ட வெட்டுப்புள்ளியான 145 இற்கு மேல் 74 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதில் சுரேந்திரா அக்சரன் என்ற மாணவனும் யூஜின் ஆனந்தராஜ் எறின் பியரினா என்ற மாணவியும் 181 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார். இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்ப்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பலியானதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான இளைஞரே பலியானதுடன் அவர் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் 3 ஆம் நிலை உட்பட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அவர்களில், மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட மாவட்ட வெட்டுப்புள்ளியான 145 இற்கு மேல் 74 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதில், யூஜின் ஆனந்தராஜ் எறின் பியரினா என்ற மாணவி 181 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் 70 க்குக் குறைவான புள்ளிகளை 04 மாணவர்களே பெற்றிருக்கின்றனர். வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களைச் சித்தியடைந்த பாடசாலையாக இது விளங்குகின்றது.
யாழ்ப்பாணம் கோண்டாவில், பரஞ்சோதி வித்தியாலயத்தில், 23 வருடங்களின் பின்னர் முதன்முறையாக மாணவி ஒருவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில், பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இப்பாடசாலையில், 2000ஆம் ஆண்டிற்கு பின்னர், அதாவது 23 வருடங்களின் பின்னர், இம்முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலைக்கு தனது ஒழுங்கான வரவு, அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணமென குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிப்பதோடு பெற்றோர்களும் அதில் கரிசனையெடுக்குமாறும் குறித்த மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்களில் மாணவன் ஒருவன் 144 புள்ளிகளை பெற்றுள்ளதோடு ஏனைய இருவரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பிரியாணி, ஃபிரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த நிறமிகள் சரியான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த வேண்டும் என சங்கத்தின் பொருளாளர் ரோஷன குமார தெரிவித்துள்ளார்.
உணவுச் சட்டம் சந்தையில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளின் அளவைக் கட்டுப்படுத்தும் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.இருப்பினும், ரோஸ்ட் கோழி இறைச்சி, பிரியாணி மற்றும் ஃபிரைட் ரைஸ் வகைகள் தயாரிப்பதில் இந்த நிறமூட்டிகளை பயன்படுத்துவது உணவுக் கடைகளில் காணப்படுகிறது.
இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தனவிடம் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் தேவையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் குறித்து கேட்டபோது, தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொழில் நிமித்தம் கம்பஹா சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே சென்றுள்ளார்அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த 28 ஆம் திகதி கம்பஹாவிற்கு சென்றுள்ளதாகவும், அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் கடந்த மாதம் 30 ஆம் திகதி காணாமல்போன கணவன் தன்னுடன் பேசியதாக மனைவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30 ஆம் திகதி முதல் இன்றுவரை தனது கணவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.காணாமல் போன யாழ் குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யாழ் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.அதாவது அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்திருக்கிறது.
அகமதாபாத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
இந்தநிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார். நடிகை ரேகா போஜ் கருத்தை பார்த்த ரசிகர்கள், சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என விமர்சித்துள்ளனர்.ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, ‘இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.ஆனால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் பூனம் பாண்டே அமைதியாகி போனார் என்பதும், ரசிகர்கள் அப்போது கிண்டல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது
யாழில் புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (15.11) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். எனினும் சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்துள்ள நிலையில், இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
மேலும் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையில் , சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து , சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.