இலங்கை வந்த இத்தாலி தம்பதியை நெகிழ வைத்த இளைஞன்!!

இலங்கையில்..

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த இத்தாலி தம்பதியை இலங்கை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்துள்ளார்.இலங்கையின் அழகை ரசிக்க வந்த தம்பதி நாட்டை விட்டு வெளியேறும் போது உடன் இருந்த இளம் சுற்றுலா வழிகாட்டியிடம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளனர்.

குறித்த தம்பதி வழிகாட்டிய இளைஞன் ஒருவரை கட்டி அணைத்து உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மிகவும் நம்பகமான தரமான சேவையை வழங்கிய இலங்கை இளைஞன், இத்தாலிய தம்பதியினரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

குறித்த இத்தாலி தம்பதி காலி, மிரிஸ்ஸ, யால தேசிய பூங்கா, எல்ல, கண்டி, சிகிரியா, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்காக கடந்த 8 ஆம் திகதி இலங்கை வருகை தந்தனர்.அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக 26 வயதான லஹிரு தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் செயற்பட்டுள்ளார்.

அந்த இளைஞனிடம் விடைபெறும் நேரத்தில் விமான நிலையத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகரமான தருணம், இந்த நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு நபர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

வெருகலில்..

வெருகல் – பூநகர் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச்சம்பவம் இன்றையதினம் (03) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெருகல் முருகன் ஆலயத்திற்கு சவாரி ஒன்றை ஏற்றிச் சென்று வீடு திரும்புகையில் நித்திரைத் தூக்கம் காரணமாக முச்சக்கரவண்டி பூநகர் பகுதியில் வைத்து வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாரதி தியாகராசா ஜெயச்சந்திரன் (வயது 41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாண இளைஞன்!!

விமான நிலையத்தில்..

போலியான ஆவணங்களை பயன்படுத்தி மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.எயார் அரேபியா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஜி 9501 என்ற விமானத்தின் ஊடாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக ஜோர்டான் நோக்கி பயணம் செய்ய முயற்சித்தபோது காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

இந்த இளைஞர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து அது குறித்து விசாரணை செய்தபோது இவை போலி ஆவணங்கள் என்பது தெரிய வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!!

லிட்ரோ..

விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிவாயுவின் விலை திருத்தத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதன்படி நாளை (04.09.2023) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த வருடம் இலங்கையில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி இடம்பெற்ற எரிவாயு விலை திருத்தத்தில், விலை அதிகரிக்கப்படவிருந்த போதிலும், நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு விலையை மீளாய்வு செய்யாமல் இருக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,982 ரூபாய்க்கும், 05 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,198 ரூபாய்க்கும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 561 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிகளில் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து வெளிநாடு சென்ற 11 வைத்திய நிபுணர்கள்!!

வவுனியாவில்..

வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர் அரங்கன் தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (01.09) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் கடந்த வருடம் 6 ஆம் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். இதன்படி வைத்தியர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சென்றுள்ளார்கள்.விசேட வைத்திய நிபுணர்கள் 272 பேர் சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி, வேலை செய்வதற்கான பொருத்தமான வளங்கள் இன்மை, இடவசதிகள் போதாமை போன்றனவே இதற்கு காரணம்.தற்போது பிரதான வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளுக்கு ஆட் பற்றாக்குறை ஏற்படுகிறது. வைத்தியர்களுக்கான மருந்துகள், விடுதிகள், பாதுகாப்பு பிரச்சினை என்பன இதற்கு காரணங்களாகும்.

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒரு வைத்திய நிபுணர் கூட இல்லை.வவுனியாவிற்கு அண்மையில் உள்ளவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கே வருகிறார்கள். ஆட்பற்றாக்குறை வவுனியா வைத்தியசாலையிலும் ஏற்படுமாக இருந்தால் நிலமை மோசமாக அமையும்.

வவுனியா வைத்தியசாலைக்கு அண்மையில் ஒரு வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டிருந்தார்.அவருடைய நியமனக் கடிதத்தில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களையும் பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரு வைத்திய நிபுணர் எவ்வாறு 4 மாவட்டங்களை பார்க்க முடியும். அவ்வளவு தூரம் எங்களிடம் வைத்திய நிபுணர்கள் இல்லை.

வைத்தியர்களுக்கான வேலை செய்யக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் இன்னும் பல வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும்.இன்னும் 5000 இற்கு மேற்பட்டோர் செல்வதற்கு தயாரான நிலையில் உள்ளனர். இதனை தடுக்க வேண்டுமானால் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அவர்கள் விருப்பத்துடன் வேலை செய்யக் கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் வவுனியா மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான காலப்பகுதி வரை வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 05 சாதாரண வைத்தியர்களும், வவுனியா மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து 03 சாதாரண வைத்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலை தொடருமாக இருந்தால் மக்களுக்கு பாதிப்பே. இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு எமது சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் புறநகரங்களில் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நபர்!!

கொழும்பில்..

கொழும்பு, களுத்துறை பிரதேசங்களில் பேருந்து மற்றும் தொடருந்து பயணிகளின் பயணப்பொதிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடும் நபர் ஒருவர் 37 மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் தகவலுக்கமைய இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடருந்து மற்றும் பேருந்து பொதி வைக்கும் இடங்களில் பைகள் மற்றும் மடிக்கணினி பைகளை வைத்துவிட்டு, தூங்கும் பயணிகளை குறி வைத்து, சந்தேக நபர் திருட்டுகளை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் திருடப்பட்ட 32 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படும் போது அவரிடம் பல சிறிய ஹெரோயின் பொதிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் பொருட்களை வழங்க வந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

யாழில்..

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஒன்லைனில் பதிவு செய்யப்பட்ட பொருளை வழங்குவதற்காக இளவாலை பகுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் அப் பொருளை வழங்கிவிட்டு பணம் கேட்டபோது அவர் வீட்டினுள் அழைத்துச் செல்லப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தாக்கியவரை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் அந்நபரை முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சிங்கப்பூரின் 9ஆவது ஜனாதிபதியாகும் தமிழர் : யார் இந்த தர்மன் சண்முகரத்னம்!!

சிங்கப்பூரின்..

சிங்கப்பூரின் 9ஆவது ஜனாதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான் (75) ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர்.அவர்களை பின்னுக்கு தள்ளி 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்தினத்திற்கு பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கடந்த 1959ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் செப்டெம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.இந்த நிலையிலேயே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தங்களால், 2017ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஹலிமா யாகூப் மட்டுமே போட்டியிடத் தகுதியானவராக இருந்தார்.

அந்த திருத்தத்தின்படி, குறிப்பிட்ட இனக்குழுவில் இருந்து தொடர்ந்து 5 தடவை யாரும் ஜனாதிபதியாகவில்லை என்றால் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார்.2017ம் ஆண்டு 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அங்கே அரிதான நிகழ்வாக போராட்டங்கள் எழுந்தன. சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் 3 பகுதியினர் சீனர்கள்.

எஞ்சியவர்கள் மலாய், இந்தியா அல்லது யுராஷியன் வம்சாவளியினர் ஆவர். இந்த ஆண்டு அனைத்து இனக் குழுவினரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான் (75) ஆகிய இருவரும் அதிபர் தேர்தல் போட்டியிட்டனர். 27 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

இதில், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காக் சோங் 15.7 சதவீத வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர். 2016ம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.1959ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூர் இதுவரை 3 பிரதமர்களை மட்டுமே கண்டுள்ளது.

அவர்கள் மூவருமே பெரும்பான்மை சீன இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.முதல் பிரதமரான லீ குவான் யூ-வின் மகனான லீ சியென் லூங் தான் தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். 2025ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், அது பெரும்பான்மை சீனர்களை தர்மசங்கடப்படுத்தும் என்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததால் அதுகுறித்த தயக்கம் இருந்து வந்தது. தர்மன் சண்முகரத்னமும் தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார்.

மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தர்மன் சண்முகரத்னத்தை ஜனாதிபதியாக்குவதன் மூலம் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் தனக்கான நெருக்கடியை சற்று குறைத்து கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

புதுமணத் தம்பதியர் இருவரும் விஷம் குடித்து தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது திருவரங்குளம் நிம்புநேஸ்வரம். இந்த கிராமத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன் பொற்பனையானுக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் பிரியங்காவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில் பொற்பனையான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் தினசரி கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்கதையானதால் பிரியங்காவிற்கு தெரியாமல் அவரது நகைகளை பொற்பனையான் அடகு வைத்துவிட்டார்.

நகைகளை குறித்து கேட்டபோது அத்தனையும் மது குடித்துவிட்டதாக கூறியதில் பிரியங்கா மனமுடைந்து விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்துக்கொண்டார்.

மனைவி தற்கொலைச் செய்து கொண்டதையறிந்து அதிர்ச்சி அடைந்த பொற்பனையான் தானும் வீட்டில் தற்கொலைச் செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடிப்பழக்கத்தால் கணவன் மனைவி இருவருமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலியை 10 நிமிடம் முத்தமிட்டதால் காது கேளாமல் போன இளைஞன்!!

சீனாவில்..

கடந்த ஆகஸ்ட் 22-ம் திகதி, சீன காதலர் தினத்தன்று தனது காதலியை 10 நிமிடம் முத்தமிட்ட இளைஞர் ஒருவர் செவித்திறனை இழந்ததாக தகவல் வெளியானது. Zhejiang மாவட்டத்தில் தனது காதலியுடன் மேற்கு ஏரிக்கு சென்ற இளைஞன் அங்கு தனது காதலியை முத்தமிட்டதில் இருந்து சம்பவம் தொடங்கியது.

முத்தத்தின் போது, ​​அந்த இளைஞன் காதில் இருந்து குமிழிகள் வரும் சத்தம் கேட்டது, அதைத் தொடர்ந்து கடுமையான காது வலி உண்டானது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இளைஞரின் காது டிரம் உடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

முத்தத்தால் இழந்த செவித்திறனை மீண்டும் பெற இரண்டு மாதங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முத்தமிடுவது காதில் உள்ள காற்றழுத்தத்தை மாற்றுகிறது மற்றும் உங்கள் இணை பெருமூச்சு எடுக்கும்போது செவிப்பறை பாதிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்

3 மணி நேரம் பெண்ணின் காலில் சுற்றியிருந்த ராஜநாகம்.. பின்பு நடந்தது என்ன.?

உத்திரபிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவரின் காலில் 3 மணிநேரம் ராஜநாகம் ஒன்று சுற்றியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் தஹராவில் உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெண் வசித்து வந்துள்ளார்.

காலை நேரத்தில் தனது காலில் ராஜநாகம் ஒன்று சுருண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பாம்பை விரட்டினால் தனது உயிருக்கு ஆபத்து என்று அச்சத்தில் இருந்த அப்பெண், கைகளை கூப்பி பிரார்த்தனை செய்துள்ளார்.

தூங்கி எழும் போது தனது கால் அசாதாரணமாக இருப்பதை உணர்ந்து பின்பு அவதானித்த பின்பே பாம்பு சுற்றியிருப்பதை அதவானித்தார். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கி எழுந்த போது எனது காலில் பாம்பு சுற்றியிருப்பதைக் கண்டு, எனது தாயிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளாராம்.

சுமார் 3 மணிநேரம் இந்த போராட்டம் நடந்துள்ளது. இவர் மட்டுமின்றி இவரது குடும்பம், சுற்றியிருந்த மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் பிழைக்க மாட்டேன் என்று நினைத்து, குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கனத்த இதயத்துடன் கடவுளை மட்டும் நம்பி பிரார்த்தனை செய்துள்ளாராம்.

பின்பு காவல்துறையினருக்கு தகவல் அளித்த பின்பு பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களாலும் ஒன்று செய்ய முடியாத நிலை என்பதால் குறித்த நிமிடம் அனைவரையும் பயத்தின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்பு மெல்ல மெல்ல தனது பிடியை நகர்த்திய அப்பாம்பு காலிலிருந்து கீழே இறங்கியுள்ளது. பாம்பு பிடிப்பவர்கள் வீட்டிற்குள் வந்து அப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் : உறவினர்கள் போராட்டம்!!

கும்பகோணத்தில்..

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த மருத்துவமனையில் வைஷ்ணவி செவிலியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அவர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

கும்பகோணத்தில் பா.ஜ.க பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர், மருத்துவமனைக்கு உள்ளேயே தற்கொலை செய்துகொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். பா.ஜ.க-வில் சிந்தனை பிரிவு மாநில துணைத் தலைவராக இருக்கிறார். இவர் பல கிளைகளைக் கொண்ட நிதி நிறுவனத்தையும், காமராஜர் சாலையில் `பாமா சுப்ரமணியம்’ என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றையும் நடத்திவருகிறார்.

இந்த மருத்துவமனையில் திருவிடைமருதூர் திருமாந்துறை அருகேயுள்ள தோப்புத்தெருவைச் சேர்ந்த வைஷ்ணவி (22) என்ற இளம்பெண், செவிலியராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், வைஷ்ணவி நேற்று மருத்துவமனை வளாகத்திலுள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அவரின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வைஷ்ணவியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், “அவரது சாவுக்கான காரணம் தெரியாமல், உடலை வாங்க மாட்டோம்” என போராட்டம் நடத்திவருகின்றனர் உறவினர்கள்.

இது தொடர்பாக உறவினர்கள் சிலரிடம் பேசினோம், “பா.ஜ.க பிரமுகரான கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் வைஷ்ணவி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக செவிலியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர், போலீஸார் மூலம் தகவல் சொல்லப்பட்டது. வைஷ்ணவி இறந்த தகவலை அவரின் குடும்பத்திடம் மருத்துவமனை நிர்வாகம் முறையாக நேரடியாகத் தெரிவிக்கவில்லை.

உடலை பார்ப்பதற்கு நிர்வாகத்திலிருந்து இதுவரை யாரும் வரவில்லை. அவர் தூக்கில் தொங்கிய விதம் எங்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. அத்துடன் வைஷ்ணவி உறுதியாக இருக்கக்கூடியவர். எளிதில் எதற்கும் கலங்கமாட்டார்.

அப்படிப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்ப முடியவில்லை. போலீஸார் உரிய விசாரணை நடத்தி அவரது இறப்புக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று, உடலை வாங்க மறுத்துப் போராடி வருகிறோம்” என்றனர். இது குறித்து கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் பேசினோம். “வைஷ்ணவி இறப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் : உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!!

புதுக்கோட்டையில்..

பொற்பனையான் தினமும் மது அருந்திவிட்டு வருவதாகவும், பிரியங்கா கொண்டுவந்த நகைகளைக் குடிப்பதற்காகவே விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளம் நம்புனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பொற்பனையான் (31). இவரின் மனைவி பிரியங்கா (23). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. பொற்பனையானுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது.

இதனால், கடந்த சில நாள்களாகவே பிரியங்கா மன வேதனையில் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில்தான், வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இதற்கிடையே, வீட்டுக்கு அருகே இருக்கும் சிறு கொட்டகையில் பொற்பனையானும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். முதலில் பிரியங்கா தூக்கில் தொங்கியதாகவும், இதைப் பார்த்து அதிர்ந்த பொற்பனையான் அடுத்த சில நிமிடங்களிலேயே தூக்கில் தொங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இது பற்றி அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி டி.எஸ்.பி தீபக் ரஜினி உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, இறந்த தம்பதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

குடும்பப் பிரச்னையால், கணவன், மனைவி இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவரங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலன் கொடுத்த ஐடியா.. அப்பாவை திட்டமிட்டு கொலை செய்த மகள்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காதலன் கொடுத்த ஐடியாவால் தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டிருக்கிறார் காதலியின் தந்தை. குடித்துவிட்டு தகராறு செய்த தந்தையை குடும்பமாக சேர்ந்து கொன்றுவிட்டு மறைக்க முயன்றுள்ளனர்.முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மாட்டிக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த 43 வயதாகும் செல்வக்குமார் கட்டிடதொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு கார்த்திகா (வயது 21), சுதர்ஷினி (வயது 19) ஆகிய 2 மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் கார்த்திகா திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.சுதர்ஷினி 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி வீட்டின் மாடியில் கட்டிட தொழிலாளி செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கயத்தாறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் செல்வக்குமார் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

அதனைத் தொடர்ந்து செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி மற்றும் இரு மகள்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். எப்படி இறந்தார் என்பதிலேயே 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்கள்.

இதனிடையே கட்டிட தொழிலாளி செல்வக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தங்கள் பாணியில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், உண்மைகளை கண்டுபிடித்தனர். செல்வக்குமார் மனைவி பாக்கியலட்சுமி, அவரது இரு மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி, இவர்களுடன் கார்த்திகாவை காதலித்து வரும் கந்தவேல் ஆகியோர் தலையணை மற்றும் துண்டால் அமுக்கி செல்வகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கொலை செய்யப்பட்ட செல்வக்குமார் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையறிந்த கந்தவேல் நீங்கள் ஏன் சாக வேண்டும். உங்கள் தந்தை செல்வக்குமாரை கொலை செய்யலாம் என கூறினாராம்.

கார்த்திகாவின் காதலன் கந்தவேலின் ஆலோசனையின்படி, இரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை, பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகள்கள் சுபாஷினி, கார்த்திகா மற்றும் கந்தவேல் ஆகியோர் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்கள்

பின்னர் காலையில் செல்வக்குமார் குடிபோதையில் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி அவர்களை நம்ப வைக்க முயன்றுள்ளனர். ஆனால் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணையில் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

குடித்து விட்டு தகராறு செய்த காரணத்திற்காக பெற்ற மகள்களுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொன்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் காயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூங்கும் நிலையை வைத்து ஒருவரின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!

தூங்கும் நிலை..

பொதுவாக ஒருவர் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் யார் என்பதனை சமூகத்திற்கு பிரதிப்பலிக்கின்றது. அந்த வகையில், முழு பின்புறத்தையும் படுக்கையில் இருக்குமாறு மல்லாந்து தூங்குபவர்கள் சமூக சூழ்நிலைகளில் வெளியே வந்து உறுதியானவர்களாக இருப்பார்கள்.

இது போன்ற சுவாரஸ்யமான விடயங்களை தெரிந்து கொள்வதால் உடலுக்கு தேவையான சில ஆரோக்கியங்களும் கிடைக்கின்றன. இதன்படி, ஒருவரின் படுக்கை நிலையும் அதன் பலன்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

ஒருவர் மல்லாந்து விட்டத்தை பார்த்தப்படி தூங்குகிறார் என்றால் அவர்கள் அமைதியான, வலிமையான நபராக இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள், எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகவே இவர்களிடம் இருக்கும்.

அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நம்பிக்கை தவறாமல் இருப்பார்கள். வலுவான ஆளுமை திறன் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வாழ்க்கையில் எல்லையை காணும் தைரியம் இவர்களுக்கு இருக்கும்.

குழந்தைபோல் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் கடினமானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கூச்சம் அதிகமாக இருக்கும். நாற்ப்பட்ட கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உணர்ச்சி வசமான நபர்கள் தான் இப்படி தூங்குவார்களாம். இதனை ஆராய்ச்சிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது. சுயமதிப்பு அதிகமாக இருக்கும், வெளியில் பேசும் போது வெளிப்படையாக இருப்பார்கள்.

குப்புற படுப்பவர்கள் வயிற்றின் மேல் தூங்குகிறார்கள். இவர்கள் நாற்ப்பட்ட கலைகளில் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். சுதந்திர மனப்பான்மையை கொண்டிருப்பார்கள்.

விமர்சனங்களை அதிகாரப்பூர்வமாக கையாள நினைப்பார்கள். தனிநபராக சாதிக்க விரும்புவார்கள், மனக்கிளர்ச்சி, பாதுகாப்பின்மை அல்லது நம்பிக்கையின்மை ஆகியவற்றை கொண்டிருப்பார்கள். எதிர்மறை உணர்ச்சிகளையும் மறைக்க வல்லவராக இருப்பார்கள்.

கணவன் மனைவி விபரீத முடிவு.. போலிசார் தீவிர விசாரணை.!!

தேனியில்..

தேனியில் திருமணமாகி 5 ஆண்டுகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அபிபட்டியில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது30). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 24).

எலக்ட்ரிஷன் வேலை செய்து வரும் இவருக்குத் திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகி உள்ள நிலையில், இரண்டு வயதில் ஒரு பையனும், நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.மேலும், பிரபாகரன் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 27) இரவு கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து உறவினர்கள் வந்து பார்த்த பொழுது, பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதும், அவரது மனைவியும் சடலமாக கிடந்ததும்

அதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓடைப்பட்டி காவல்துறையினர், கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கணவன் மனைவிக்குள் ஏதேனும் சண்டையா அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஏதேனும் சண்டையா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மேலும், இருவரின் செல்போனை கைப்பற்றி ஏதாவது தடயங்கள் கிடைக்குமா எனத் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

அபிபட்டி பகுதியில் இந்த செய்தி பெரும் பரபரப்பையும், துக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் டிஎஸ்பி மதுக்குமாரி, காவல் ஆய்வாளர் சிலைமணி நேரடியாக வந்து இறப்புக்கான காரணம் என்ன என்று தீவிரமாக விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், காவல்துறையினர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரேதப் பரிசோதனைக்கு பிறகே எதற்காக இறந்தார்கள் என்பது தெரிய வரும் எனவும் தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.