இலங்கையில் பதறவைத்த சம்பவம் : ஈவிரக்கமற்றவர்களின் கொடூர செயல்!!

இலங்கையில்..

வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ள நிலையில், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யானையின் தலையுடன் ஒரு காது மாத்திரம் காணப்படுவதுடன் மற்றைய காது துண்டிக்கப்பட்டுள்ளது.குறித்த யானை வேறொரு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு, கிரிந்திஓயாவில் போடப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுவரை யானையின் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட தலை மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்க வெல்லவாய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈவிரக்கமின்றி வாயில்லா ஜீவனை கொன்றவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு உலகில் அதிகம் யானைகள் வாழும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இவ்வாறான நிலையில் யானை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை பணயக்கைதியாக வைத்து காதலியை கடத்திய இளைஞன்!!

ஹொரணையில்..

ஹொரணை – கொனாபொல எட்டபஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்து காதலியை கடத்திய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

சிறுமியை கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி கோபத்தில் பிரிந்திருக்கும் காதலியை கடத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறவினர் வீட்டில் விட்டுச் சென்ற நிலையில் பிணைக் கைதியான சிறுமி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் சிறுமியின் தந்தையின் சகோதரியை சுமார் 10 வருடங்களாக காதலித்ததாகவும்,

அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தமையினால் காதலி இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த உறவை நிறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் காலை 6.20 மணியளவில் கொனாபொல எட்டபஹேன வீட்டிற்கருகில் காரில் வேறொரு நபருடன் வந்த சந்தேக நபர் காரில் இருந்து இறங்கி வீட்டை உடைத்து உள்ளே புகுந்து 7 வயது சிறுமியை கடத்தி விட்டு காரில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி தனது பாதுகாப்பில் இருப்பதாக குழந்தைக்கு நம்ப வைக்க, சந்தேகநபர், கொழும்பில் வேலைக்குச் செல்லும் காதலிக்கு வட்ஸ்அப் மூலம் புகைப்படம் ஒன்றை அனுப்பி, திரும்பி வரவில்லை என்றால் சிறுமியை கொன்றுவிடுவதாக மிரட்டி காதலியையும் கடத்தியுள்ளார்.

சிறுமியையும் யுவதியையும் கடத்த சந்தேகநபர் பயன்படுத்திய கார் பத்தேகம பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்த பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய சிறுமியையும் காதலியான யுவதியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.காரை வைத்து சந்தேக நபரையும் அவரது நண்பரையும் கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு பயணிகள் பேருந்து விபத்து : ஒருவர் பலி!!

எம்பிலிபிட்டியவில்..

எம்பிலிபிட்டிய – யாழ்ப்பாணம் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேகாலை – அவிசாவளை வீதியில் குருணேகொட தேவாலயத்திற்கு அருகில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து வீதியோரத்தில் உள்ள கடைக்குள் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை சுவர் இடிந்து விழுந்து மாணவி ஒருவர் மரணம்!!

வெல்லம்பிட்டியவில்..

வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிய உணவுவேளையின் போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் குறித்த நீர்குழாய்க்கு அருகில் கைகழுவுவதற்க்காக சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த நீர்குழாய் சுவர் நீண்ட காலமாக கவனிப்பாரற்று இருந்ததாகவும், உடைந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் சம்பவமறிந்து, பாடசாலைக்கு விரைந்த மாணவர்களின் பெற்றோர் சம்பவம் தொடர்பிலான தகவல்களை பெற முயற்சித்தபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரலவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த சிறுமிக்கு இன்று பிறந்த தினம் எனவும், அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பொலிஸார் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தபோது, அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதாகவும் உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மாணவி முதலாம் தரத்தில் கல்வி கற்பவர் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மேலும் மூன்று மாணவர்களும் இரண்டு மாணவிகளும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் படுகாயமடைந்த சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என எமது ஊடகவியளாளர் தெரிவித்தார்

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 49 பேர் மாயம்!!

யேமனில்..

யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் சென்றுகொண்டிருந்த குறித்த படகு, வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவா்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துப் பகுதியிலிருந்து 26 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும் மாயமாகியுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினா் கூறினர். மாயமானவா்களில் யாரும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விபத்தில் அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்கின்றது : 15 குளங்கள் உடைப்பு!!

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர்வரத்து அதிகரித்தமையினால், குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன. மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில் அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

கொழும்பில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல் : உயிருக்கு போராடும் மாணவன்!!

கொழும்பில்..

பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, ​​அவரது தாய் வந்துவிட்டதால் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன், தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது மாணவனின் தாயார் திடீரென வீட்டுக்கு வந்தபோது அவர்கள் தலைமறைவாக முயன்றதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்த மாணவன் சுவர் உதவியால் கீழே இறங்க முயன்றபோது மூன்றாவது மாடிக்கு அருகில் கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் அப்சீலிங் சாகச விளையாட்டு ஆரம்பம்!!

இலங்கையில்..

இலங்கையில் அப்சீலிங் சாகச விளையாட்டை கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்சீலிங் என்பது உயரமான இடத்திலிருந்து செங்குத்தாக கீழே இறங்க கயிற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தும் சாகச விளையாட்டாகும்.

தாமரை கோபுரத்திலிருந்து 195 மீற்றர் ஏறி இறங்கும் சாகசத்தில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு தற்போது பரீட்சத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில், பொதுமக்கள் மருத்துவரின் சான்றளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் சாகசத்தை நிகழ்த்த அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த பரிட்சார்த்த நிகழ்வில் ஈடுபடும் குழாமினுடைய செயற்பாடுகளை தொடரும் காணொளியில் காணலாம்…

மைதானத்திலேயே சுருண்டு விழுந்து கால்பந்து விளையாட்டு வீரர் பலியான சோகம்!!

ரபேல் டுவாமேனா..

தங்களுக்கு பிடிச்ச வேலையைச் செய்யுற வாழ்க்கை கிடைக்கிறது எல்லாம் வரம். நிறைய பேர், நடித்துக் கொண்டிருக்கும் போதே, பாடிக் கொண்டிருக்கும் போதே சாவு வரணும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

அப்படி, விளையாடிக் கொண்டிருக்கும் போதே, மைதானத்தில் சரிந்து விழுந்து பிரபல சர்வதேச கால்பந்து வீரர் ரபேல் டுவாமேனா காலமானார். கொடுமை… அவரது 28வது வயதில் இந்த மரணம் நேர்ந்திருக்கிறது.

கானா நாட்டை சேர்ந்தவர் ரபேல் டுவாமேனா, அல்பேனியாவின் டாப் பிரிவில் உள்ள இரண்டு அணிகளான KF எக்னாட்டியா மற்றும் பார்டிஜானி அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரபேல் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கானா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இந்த கடினமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2017ம் ஆண்டு ரபேல் டுவாமேனாவுக்கு இதய நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2021ல் ஆஸ்திரியாவில் நடந்த ஒரு ஆட்டத்தின் போது அவர் மைதானத்தில் இதேபோல் சரிந்து விழுந்து பின்னர் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு பந்துகளுக்கு ஆறு விக்கெட்டுக்கள்.. மைதானத்தை அதிரவிட்ட வீரர்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்டின் பிரீமியர் லீக் பிரிவு கிரிக்கெட் போட்டியில், அணி ஒன்று இறுதி ஓவரில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி, போட்டியில் வெற்றி பெற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

முட்கீரபா அணிக்கு எதிரான போட்டியில் சேர்ஃபர்ஸ் பெரடைஸ் அணி, 179 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், இறுதி ஓவரில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 5 ஓட்டங்களே தேவைப்பட்டன.

எனினும் முட்கீரபா அணித்தலைவர் கரேத் மோர்கன், இறுதி ஓவரின் ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, சாத்தியமில்லாத வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளார். தாம் இறுதி ஓவரில் பந்துவீச ஆரம்பித்த போது, போட்டியின் நடுவர், போட்டியில் வெற்றி பெறவேண்டுமானால், ஹெட்ரிக் ஒன்றையாவது எடுக்க வேண்டும் என்று முட்கீரபா அணியின் தலைவரிடம் வேடிக்கையாக கூறியுள்ளார்.

எனினும் 6 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பின்னர், அந்த நடுவர் தம்மை வியப்பாக நோக்கியதாக முட்கீரபா அணித்தலைவர் கரேத் மோர்கன் தெரிவித்துள்ளார்.

குறித்த 6 விக்கெட்டுக்களில் 4 விக்கெட்டுகள் பிடி எடுக்கப்பட்டும், இருவர் போல்ட் முறையிலும் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். இந்தநிலையில் இறுதி விக்கெட்டு வீழ்த்தப்பட்டபோது, சேர்ஃபர்ஸ் பெரடைஸ் அணி, 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

முன்னதாக தொழில்முறை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தமது அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்கள் பட்டியலில், 2011 இல் நீல் வாக்னர், 2013இல் பங்களாதேஸின் அமின் ஹூசைன் மற்றும் இந்திய கர்நாடக அணியின் அபிமன்யு மிதுன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

இலங்கையில்..

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரத்தின்படி இன்று(14) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது இது சிறு அதிகரிப்பாகும். இதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 173,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்றையதினம்(13.11) ஒரு பவுண் 22 கரட் தங்கம் 159,500 ரூபாவாகும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 172,500 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

Visitor Visa வில் கனடா சென்ற யாழ் யுவதி : விமான நிலையத்தில் நடந்த சோகம்!!

யாழில்..

யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த தகவல்களும் மாறுபட்டவையாக இருந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன் யுவதியை அழைத்த சகோதரி குடும்பத்தினர் வழங்கிய தகவல்களும் தவறானவையாக இருந்த காரணத்தாலும் மேற்படி யுவதி திருப்பி அனுப்பபட்டதாக தெரியவருகின்றது.

அதேவேளை அண்மைய நாட்களாக கனடா வழங்கியுள்ள விசா சேவையில் இலங்கையர்கள் பலரும் தங்கள் உறவினர்கள் மற்றும் நணபர்களை கனடாவிற்கு அழைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

பல லட்சங்களை செலவழித்து ஏஜெண்டுகளின் மூலம் கனடா செல்ல விரும்பும் வடக்கு மக்கள் அதிலும் யாழ்ப்பாண மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கனடா வழங்கியுள்ள சலுகையை பயன்படுத்தி கனடா வாழ் புலம்பெயர் உறவுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்கள் உறவுகளை கனடாவுக்கு எடுப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே ஒருவருக்கொருவர் வழங்கும் தகவல்களை முரண்பாடாக வழங்காது சரியான தகவல்களை வழங்கினால் , கனடாவரை சென்று யாழ் யுவதி திரும்பியதுபோல மற்றவர்களுக்கும் இந்த நிலமை ஏற்படாது தவிர்க்கலாம்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது தாக்குதல்.. CCTV கமெராவில் பதிவான காட்சி!!

அவுஸ்திரேலியாவில்..

இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசித மற்றும் அவரது மனைவி நிலந்தியால் ஆகியோரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் துசித குறித்த ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் துசித குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் சிசிரீவி கருவிகள் வேலை செய்யவில்லை என பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு கூறியுள்ளனர்.

ஏறக்குறைய 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பல்லாரட் நகரசபை மேயரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமிட் திட்டத்தால் இளம் ஆசிரியர் உயிரிழப்பு.. பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கையில்..

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொல்கொட நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 24 வயதுடைய நிபுன் நவோத் பெர்னாண்டோ என குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நீதிவான் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். உயிரிழந்தவர் கொழும்பு மருதானை பிரதேசத்தில் தனியார் பிரத்தியோக வகுப்பு ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த ஆசிரியர் , பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து மனவேதனையடைந்திருந்தார் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் சீரற்ற காலநிலையினால் முறிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14.11) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பகுதியளவில் பாதிப்படைந்து.

அதன் பின்னர் பல மணிநேரங்களின் பின்னர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் உதவியுடன் மரம் அகற்றப்பட்டமையினையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

பச்சை நிறத்தில் வாந்தி எடுத்த குழந்தை.. கதறிய தாய்.. பரிசோதனையில் அதிர்ச்சி!!

மும்பையில்..

மும்பையில் 3 பேட்டரிகளை விழுங்கிய குழந்தை வயிற்றில் இருந்து மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்த நிகழ்வுக்கு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பொதுவாக குழந்தைகள் பக்கத்தில் எந்த ஒரு சிறு பொருளும் வைக்க கூடாது என்பார்கள். குறிப்பாக உலோகம் சார்ந்த பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது என்று பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும் சில நேரங்களில் பெற்றோர்களின் அஜாக்கிரதை காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது சிறு குழந்தை ஒன்று பேட்டரி விழுங்கிய நிலையில், அதனை எந்தவித சிக்கலும் இன்றி, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள முலுண்ட் என்ற பகுதியில் அசோக் – ஸ்வேதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரீஷா என்ற பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

தற்போது குழந்தை பிறந்து 22 மாதங்கள் ஆகும் நிலையில், சிறுமி தனது பக்கத்து வீட்டு 7 வயது சிறுவனுடன் விளையாடி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த 8-ம் தேதியும் சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் தாய் ஸ்வேதா சமையல் செய்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது சிறுமி தனது அருகில் இருந்த விளையாட்டு பொருட்களில் பட்டன் வடிவில் இருக்கும் பேட்டரிகளை விழுங்கியுள்ளார். பின்னர் சில மணி நேரம் கழித்து சிறுமி பச்சை நிறுத்தி வாந்தி எடுத்ததால் பதறிய பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கே சிறுமிக்கு X-RAY பரிசோதனையில் அவரது வயிற்றில் பட்டன் வடிவிலான 3 பேட்டரிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் இருந்து பேட்டரிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அதன் ஒரு முயற்சியாக இயற்கை உபாதை மூலம் எடுக்க முயன்றனர். அப்போது 2 பேட்டரிகள் மட்டுமே வெளியே வந்ததால், மீதமுள்ள பேட்டரியை மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் அகற்றினர்.

அந்த பேட்டரிகளின் ரசாயனயங்களால் சிறுமிக்கு வயிற்றில் அல்சர் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் சரியான நேரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது சிறுமி நலமாக உள்ளார். இந்த நிகழ்வு அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.