திருமண வீட்டில் விருந்து சாப்பிட்ட யுவதிக்கு நேர்ந்த சோகம்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் திருமண நிகழ்வில் இறைச்சி உட்பட பல வகையான உணவுகளை உட்கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். உணவு உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.திருமண விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச மேற்கொண்டார்.

மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா தபால் நிலைய ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!!

வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (30.10) மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரியும், அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தும் நாடு பூராகவும் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ”20 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கு, வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி இன்னகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.பெண் ஒருவர் நேற்று(29) தாக்குதலுக்கு உள்ளாகி தரையில் விழுந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அயகம பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காயமடைந்தவர் பொலிஸ் அதிகாரிகளினால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.அயகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இனகந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.குடும்ப தகராறு காரணமாக தகாத உறவில் இருந்த கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை உட்பட மூவரை கொடூரமாக தாக்கிய நபர் : இளம் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

ஹிங்குரக்கொடயில்..

ஹிங்குரக்கொட பகுதியில் பெண் ஒருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.யுதகனாவ பிரதேசத்தில் 27 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் அவரது ஒன்றரை மாத குழந்தையும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளது.குழந்தை தற்போது மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. உயிரிழந்த பெண்ணின் தந்தையும் பெண்ணை தாக்கிய அதே மண்வெட்டியால் தாக்கப்பட்டமையினால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக பொலநறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.பணம் காணாமல் போனமை தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த கொலை தொடர்பில் பதில் நீதவான் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஏ9 வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசுக் கார்!!

வவுனியா- ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (30.10) காலை இடம்பெற்ற நிலையில் சொகுசுக் காரில் பயணித்த இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி ஏ9 வீதியால் சென்ற சொகுசுக் கார் ஏ9 வீதி சாந்தசோலை சந்தியை அடைந்த போது அதே வழியில் சென்ற கனரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூண் ஒன்றை உடைத்துக் கொண்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துள்குள்ளானது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த சொகுசுக் காரை பாரம் தூக்கியின் உதவியுடன் மீட்டெடுத்தனர்.

விபத்தின் போது குறித்த சொகுசுக் காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த பிரித்தானிய குடியிரிமை பெற்ற ஒருவரும், பிறிதொரு இளைஞரும் பயணித்ததுடன், அவர்கள் எந்தவித பாதிப்புக்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் மரணம்!!

வவுனியா மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பாெலிசார் தெரிவித்தனர்.

நேற்று (29.10) இரவு இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியில் வீதி ஓரமாக நடந்து சென்றவர் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மாேதியதில் இவ் விபத்து ஏற்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்ற பாேதே இவ் விபத்து ஏற்பட்டிருந்தது.

விபத்தில் வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நெளபர் என்பவர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல கபடி வீராங்கனை எடுத்த விபரீத முடிவு.. தீவிரமாக விசாரணை நடத்தும் போலீஸ்.!!

கர்நாடகாவில்..

நாட்டிற்காக பல போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்று குவித்த பிரபல கபடி வீராங்கனை தனலட்சுமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே சென்னராயப்பட்டணா கே.திம்மலாபூர் கிராமத்தை சேர்ந்த கபடி வீராங்கனை தனலட்சுமி (26) பெங்களூரு ரூரல் நெலமங்களா அரிசினகுண்டே ஆதர்ஷ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

சர்வதேச கபடி போட்டிகளில் கலந்து கொண்டு தனலட்சுமி, நாட்டுக்காக பல்வேறு பதக்கங்கள் வாங்கி உள்ளார். பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நெலமங்களா டவுன் பகுதியில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தனலட்சுமி தனது தோழிகளுடன் மைசூரு தசரா விழாவுக்கு சென்றிருந்தார். ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டுகளித்துவிட்டு தனலட்சுமி பெங்களூரு திரும்பினார். இரவு அவர் வீடு திரும்பிய நிலையில், காலை வெகுநேரமாக அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.

அவரது தந்தை கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனலட்சுமி தனது அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கபடி வீராங்கனை தனலட்சுமியின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறக்கும் போதே 6 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை!!

கனடாவில்..

ஒன்ராரியோவின் Cambridge நகரில் உள்ள மருத்துவமனையில் 14 பவுண்டுகள் , எட்டு அவுண்ஸ் நிறையுள்ள குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டமை தொடர்பாக தாம் அதிர்ச்சி அடைந்ததாக மகப்பேற்று நிபுணரான Asa Ahimbisibwe கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட Sonny Ayres என்ற குறித்த குழந்தை ஆரோக்கியமாகவும் குண்டாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Cambridge ஞாபகார்த்த மருத்துவமனை, கடந்த 2010 ஆம் ஆண்டு தரவுகளை பதிவுசெய்ய ஆரம்பித்ததில் இருந்து பிறந்த மிகவும் அதிக எடைகொண்ட குழந்தையாக Sonny Ayres பதிவாகியுள்ளது.

அறுவை சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்ததும் தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் அதன் பின்னர் நிறையை அளவிட சென்ற போது அந்த குழந்தை மிகவும் பெரியதாக இருந்ததாகவும் மருத்துவ நிபுணர் Asa Ahimbisibwe கூறியுள்ளார்.

தமக்கு பிறக்கப் போகும் குழந்தை பெரியதாக இருக்கும் என்பது தெரியும் என்ற போதிலும் உண்மையான எடையை பார்த்த போது தாமும் ஆச்சரியமடைந்ததாக தாயாரான Britteney Ayres குறிப்பிட்டுள்ளார்.

சராசரியாக குழந்தையொன்றின் எடையானது பிறக்கும் போது 7 பவுண்டாக இருக்கும் என்ற போதிலும் Sonny Ayres எடையானது 14.5 பவுண்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் கொட்டிய பண மழை : காற்றில் பறந்த ஒரு மில்லியன் டொலர் நோட்டுகள்!!

பண மழை..

செக் குடியரசு நாட்டில் puzzle போட்டியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 1 மில்லியன் டொலர் பரிசு தொகை பண மழையாக கொட்டப்பட்டது.

செக் குடியரசு நாட்டின் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக கமில் பார்டோஷேக்(Kamil Bartoshek) தான் நடத்தும் போட்டி ஒன்றில் வெற்றி பெறுபவருக்கு மிகப்பெரிய தொகையை பரிசாக வழங்க தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார்.

இதற்காக போட்டியாளர்கள் கஸ்மாவின் திரைப்படமான ‘ஒன் மேன் ஷோ: தி மூவி’-யில் உள்ள puzzle குறியீட்டை கண்டுபிடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் இறுதி வரை போட்டியாளர்கள் யாரும் puzzle-யை தீர்க்க முடியாததை தொடர்ந்து, போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசு தொகையை பிரித்து வழங்க போட்டி தொகுப்பாளர் முடிவு செய்துள்ளார்.

இறுதியில் $1 மில்லியன் பரிசு தொகையை லைசா நாட் லேபெம் நகருக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து மழைபோல் பொழிய தீர்மானித்தார். இது தொடர்பான மறைமுகமான தகவல் ஒன்றையும் போட்டியாளர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து கொடுத்த வாக்குறுதி படி, குறிப்பிட்ட நேரத்தில் லைசா நாட் லேபெம் நகருக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து சுமார் $1 மில்லியன் பரிசு தொகையை பண மழையாக கொட்டினார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

கணவரிடம் விவாகரத்து வாங்கிய மகளை பட்டாசு, மேளதாளத்துடன் வீட்டிற்கு வரவேற்ற தந்தை!!

ஜார்கண்டில்..

இந்திய மாநிலம், ஜார்கண்டில் கணவரிடம் விவகாரத்து பெற முடிவு செய்த மகளை பட்டாசு, மேளதாளத்துடன் வீட்டிற்கு தந்தை அழைத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் 28 -ம் திகதி தனது மகளான சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இதில், சச்சின் குமார் அம்மாநிலத்தின் மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்த பிறகு, பஜ்ராவில் உள்ள புது வீட்டில் சாக்சியும், சச்சின் குமாரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, சாக்சியை வீட்டில் பூட்டி வைத்து சச்சின் குமாரும், உறவினர்களும் சென்றுள்ளனர். ஆனால், இவர்கள் ஒரு மாத காலமாக வீடு திரும்பவில்லை. பின்பு, வீட்டில் உள்ள மளிகை பொருள்களை வைத்து சாக்சி சமாளித்து சாப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை பற்றி சாக்சி, தனது குடும்பத்திடம் தெரிவிக்கவில்லை. அப்போது, வீட்டில் உள்ள சச்சினின் லேப்டாப்பை பார்த்த போது, தனித்தனியாக இரு பெண்களுடன் சச்சின் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாக்சி, சம்மந்தப்பட்ட இரு பெண்களிடம் ரகசியமாக விசாரித்து கேட்டறிந்தார். அப்போது தான், இரு பெண்களுடன் ஏற்கனவே சச்சினுக்கு திருமணமாகி மூன்றாவதாக தன்னை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனை, தனது தாய், தந்தைக்கு சாக்சி தெரியப்படுத்தினார். பின்பு, தனது மகளுடைய கணவரின் குடும்பத்தாருக்கு பாடம் புகட்ட பிரேம் குப்தா முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, பிரேம் குப்தா தனது மகள் சாக்சிக்கு மேளதாளம் முழங்க, வழிநெடுக பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இதுகுறித்து பிரேம் குப்தா கூறுகையில், “எனது மகள் ஏமாற்றப்பட்டுள்ளார். அவருடைய விவாகரத்து முடிவை திருமண விழா போல கொண்டாடினேன். திருமணத்துக்குப் பிறகு பிரச்சனைகள் ஏற்படும் பெண்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

குஜராத்தில்..

குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தற்கொலை
குஜராத்தில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகத்னகாவில் வசித்துவருபவர் மணிஷ் சோலன்கி. பர்னிச்சர் வியாபாரியான இவரிடம் 35 தச்சர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சோலன்கி தனது மூன்று குழந்தைகள் உள்பட ஆறு பேருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்தவர்கள் மனைவி ரீட்டா, தந்தை கானு, தாய் ஷோபா மற்றும் மூன்று குழந்தைகளான திஷா, காவ்யா மற்றும் குஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அறையில் தற்கொலை குறிப்பு கடிதம் போலீஸாருக்கு கிடைத்தது. அதில் எங்கள் தற்கொலைக்கு நிதி நெருக்கடியே காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. மரச்சாமான்கள் கடையில் பணியாற்றிவரும் ஒருவர் சோலன்கியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

தொடர்ந்து அவரது அழைப்பை ஏற்காத நிலையில், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் சந்தேகம் எழுந்த அவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன? என்பதை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேக்கரி உற்பத்திகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

பேக்கரி உற்பத்திகள்..

மின்சார கட்டண உயர்வால் பேக்கரி உற்பத்தித் தொழில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யாவிட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,மின்சார கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன் 36 சதவீத வருமான வரியும் 15 சதவீத வற் வரியும் செலுத்தப்பட வேண்டும். பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தால் நுகர்வோர் கொள்வனவு குறைவடையும்.

இதனால் தமது தொழிற்துறை மேலும் சிக்கலை எதிர்நோக்கும். பேக்கரி உற்பத்திகளின் விலையினை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்தும் பேணுவதானால் அரசாங்கத்தின் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் வரிக்கொள்கை தீர்மானங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

19 கொலைகளைச் செய்ததாக வாக்குமூலம் : விசாரணைகளை ஆரம்பிக்கும் குற்றத்தடுப்பு பிரிவு!!

கொழும்பில்..

“தங்கல்லே சுதா” என அழைக்கப்படும் நிலந்த குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் உனவடுன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நிலந்த குமார எனப்படும் தங்கல்லே சுதாவை 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 7 நாள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், தான் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் மூலம் 19 கொலைகளைச் செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மாகந்துரே மதுஷ் உட்பட பல பிரபல குற்றவாளிகளின் கூலிப்படையாக செயற்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபர் கூறிய கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் புதிய வரி அறிமுகம் : அதிக சொத்து வைத்திருப்பவர்களுக்கான செய்தி!!

இலங்கையில்..

புதிய சொத்து வரி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதைி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு முதல் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படும்.

அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம் இருந்து இந்த வரி அறவிட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய,

அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியே சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் போதைவஸ்து பாவனையின் எதிரொலியால் தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த நபர்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் நபர் ஒருவர் தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 27 வயது இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டட போது எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் உத்தவிட்டுள்ளார்.

வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போதைவஸ்து பாவனையின் எதிரொலியே இச்சம்பவம் என தெரிவிக்கப்படுகிறது.மேலும் நபர் ஐஸ் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையானவர் என கைதான நபரின் தந்தை தெரிவித்துள்ளார்.

யாழில் வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி!!

யாழில்..

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இந்த விபத்தில் படு காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.