யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இந்த விபத்தில் படு காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளத்தில் 20 வயதான இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (27.10.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய குறித்த யுவதி தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார்.
திருமண நிகழ்வில் முழுமையாக கலந்து கொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின் தனது உடல்நிலை சரியில்லை எனவும், உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இவ்வாறு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
.மேலும், உயிரிழந்த மாணவியின் சில உடல் அவையங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில், 10 வயது சிறுவனுக்கு மதுபானம் பருக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் நேற்றிரவு (27.10.2023) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றையதினம் (27) முச்சக்கரவண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தினை பருக்கியுள்ளதாக தெரியவருகிறது.இது தொடர்பாக சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைபதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை தம்பதியின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தில், இன்று அதிகாலை 2.20 மணியளவில் சடலங்கள் கொண்டு வரப்பட்டன. யு.எல். 319 என்ற விமானம் மூலம் இந்த இரு சடலங்களும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய தரவுகள் தெரிவித்துள்ளன.
மலேசியாவில் கடந்த 21ஆம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் பொறியாளர்கள் இருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.மலேசியாவில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விபத்தின் போது அவர்களின் மகளும் காரில் இருந்த நிலையில் மகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த பெண்ணுக்கு 33 வயது எனவும் அவரது கணவருக்கு 35 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டள்ளது.தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை ஏற்றி வந்த விமானம் இன்று (28.10.2023) காலை கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
இந்நிலையில், அனுலாவின் சடலத்தை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.
கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.
பொரளை – கொடாகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பனாகொட வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம சமுப்கார மாவத்தை ஹபரகடவத்த பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தை சந்தித்துள்ளார்.
புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த ரசிகா பிரியதர்ஷனி என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
புலத்சிங்களவில் இருந்து பரகொட செல்லும் வீதியில், கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், லொறியொன்று நிறுத்தியதன் காரணமாக லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து அந்த இடத்திற்கு வந்த ஒருவர் தாக்கியதில் லொறியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்சிங்கள மரண விசாரணை அதிகாரி சிரத் பரத பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மேலதிக பரிசோதனைக்காக சடலத்தை ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலை பொத்துவில் வீதியில் கிவுலேயாய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தம, கிராவணபெரலிய பகுதியைச் சேர்ந்த கே.எம். ரசிக லக்மால் தர்மப்பிரிய என்ற 29 வயதுடைய சூரியவெவ பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக தனது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருடன் மொனராகலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, அம்பாறை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கார் மீது மோதியுள்ளது.
காரை ஓட்டி வந்த கான்ஸ்டபிள், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இருவர் காயமடைந்து சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சியம்பலாண்டுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ரவீந்திர ஹேரத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
வவுனியாவில் அனைத்து பாடசாலைக்கு முன்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 24ம் திகதி இசுறுபாயவிற்கு முன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றையதினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடும் அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான அரசின் கொடூர தாக்குதலை எதிர்ப்போம், ரணில் ராஜபக்ஷ அரசின் கேவலமான குண்டர் தாக்குதலை கண்டிப்போம், சம்பளம், சம்பள நிலைவை மீது அறவிடும் வரியை உடன் நிறுத்து போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சீரழிக்காதே சீரழிக்காதே அடிப்படை ஜனநாயகத்தை சீரழிக்காதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான யுத்தத்தின் போது உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் உடல் நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளையதினம் காலை குறித்த பெண்ணின் உடல் இலங்கையை வந்தடையும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மோதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கையர் இறந்துவிட்டாரா என்பதை கண்டறியும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அவரது குழந்தைகளின் டிஎன்ஏ மாதிரிகளைப் பயன்படுத்தி அந்த உறுதிப்படுத்தல்கள் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக பெண் உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான தம்பதியரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (26) வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தென் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொடர்பாடல் உத்தியோகஸ்தராக கடமையாற்றும் பெண்ணொருவர் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.
பணத்தை இழந்த இளைஞன் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டுள்ளார். இதை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்தனர்.
பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மோசடி சம்பவத்துடன் , அவரது கணவனுக்கும் தொடர்பு இருப்பதனை கண்டறிந்து கணவனையும் கைது செய்த நிலையில், இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தலைதெறிக்க தப்பி சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மதியம் தனது பிள்ளையை முன் பள்ளியில் இருந்து ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இதன் போது , ஆள்நடமாற்றம் அற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் நின்ற இருவர் , அவரை மறித்து நபர் ஒருவரின் பெயரை கூறி வினாவியுள்ளனர்.
இதன்போது குறித்த நபரை தனக்கு தெரியாது என கூறி, அவர் செல்ல முற்பட்ட வேளை அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு , பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டு, தமது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
உடனே சுதாகரித்துக்கொண்ட இளம் தாய் , தனது மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டவாறு கொள்ளையர்களை துரத்தி சென்றார். அப் போது , வீதியில் பயணித்தவர்கள் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் பொலிஸார் , கொள்ளையர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.
மஸ்கெலியா- நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டம் எமில்டன் பிரிவில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள மூவரும் நீர் குழாயொன்றை உடைத்து விட்டதால் வீட்டார் திட்டுவார்கள் என்ற பயத்தில்பாடசாலை செல்வதாகக் கூறி நேற்றைய தினம் (26.10.2023) வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜா நிலூக்ஷன் 15 வயது யோகராஜன் திவாகர் 13 வயது ராஜா சன்தூர் 14 வயது ஆகிய மூன்று மாணவர்களே காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகவல் வழங்கியுள்ளார். இவர்களை கண்டால் அருகாமையிலுள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் இன்று (27) உயிரிழந்துள்ளார்.விபத்து சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடபில் மேலும் தெரியவருகையில்,கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். விபத்து , அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த காரின் சாரதி இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில்நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (27.10) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன், அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்காக கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டத்திற்கு வருகை தந்த வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பாதிக்கப்பட்ட தாய்மார் தமக்குள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறையிட்டனர்.
கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தை நடத்த விடாது இரு பகுதி தாய்மாரையும் அங்கிருந்து வெளியிற்றியிருந்தனர். வெளியேறிய இரு பகுதியினரும் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தனர். குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுக்கு வராது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி, செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சறோஜினிதேவி, சிவாநந்தன் ஜெனிற்றா, செல்லத்துரை கமலா, பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.