வவுனியாவில் க.பொ.த.உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!

வவுனியா மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நேற்று (26.10.2023) மாலை 4.00 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகவானது வவுனியா தெற்கு ஆசிரியர் ஆலோசகர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இல் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் சுரேந்திரன் அன்னமலர், சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் என். கமலதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளின் மங்கள விளக்கேற்றலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.. முதல் நிகழ்வாக பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி , மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர்களின் உரை இடம்பெற்றது.

நிகழ்வின் தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்தில் அதி உயர் சித்திகளை பெற்ற தமிழ் , சிங்களம் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அதிதிகளால் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விசேடமாக மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் நடராசா நிசாந்தன் மற்றும் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் விமலராஜா விதுவர்சன் ஆகியோருக்கு நெல்லி ஸ்டார் விடுதி உரிமையாளர் தேவேந்திரராசா கிருஸ்னரூபன் தங்கப்பதக்கங்களை வழங்கி கௌரவித்திருந்தார்.

 

விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மணப்பாறை கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு மணிமேகலை (வயது 15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி இறந்துவிட்டார்.

இதனையடுத்து ராஜரெத்தினம் கலையரசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மணிமேகலை திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறைவிடப்பட்டதால் மணிமேகலை வீட்டுக்கு வந்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தங்கி இருந்தார். நேற்று காலையில் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது, மணிமேகலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையின் சொத்தில் பங்கு கேட்ட சகோதரிகளைக் சூப்பில் விஷம் வைத்து கொன்ற இளைஞர்!!

மும்பையில்..

சொத்துப் பிரச்னையில் தன்னுடைய சொந்தச் சகோதரிகளை விஷம்வைத்துக் கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.மும்பை அருகிலுள்ள அலிபாக்கில் வசிக்கும் கணேஷ் மொஹிதே (36), வனத்துறையில் வேலை செய்கிறார். இவருக்கு சோனாலி, ஸ்நேகா என இரண்டு சகோதரிகள். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 16-ம் தேதி அடுத்தடுத்த நாளில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார்கள். இதில் ஸ்நேகா உயிரிழப்பதற்கு முன்பு போலீஸாரிடம் அளித்திருந்த வாக்குமூலத்தில், தன்னுடைய சகோதரன் சூப்பில் விஷம் கலந்து கொடுத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

ஸ்நேகாவின் தாயார் தன்னுடைய மகளின் சாப்பாட்டில் உறவினர் யாரோ விஷம் வைத்துக் கொலைசெய்துவிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கணேஷைப் பிடித்துச் சென்று விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து அலிபாக் போலீஸ் அதிகாரி சோம்னாத் பேசுகையில், “கணேஷின் தந்தை இறந்தவுடன் குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டைத் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதோடு குடும்பத்தை கவனித்துக்கொள்வதாகக் கூறி, தன்னுடைய தாயாரிடம் சொல்லி, வனத்துறையில் வேலை பார்த்து இறந்துபோன தந்தையின் வேலையைத் தனக்கு வாங்கிக்கொடுக்கும்படி கணேஷ் கேட்டுக்கொண்டார்.

உடனே அவரின் தாயாரும், தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்கப் பரிந்துரை செய்தார்.வேலை கிடைத்தவுடன், தன்னுடைய தாயாரின் வங்கிக் கணக்கிலிருந்து கணேஷ் சட்டவிரோதமாக கையெழுத்து போட்டு, பணத்தை எடுக்க ஆரம்பித்தார். கணேஷின் சகோதரிகள் இரண்டு பேரும் குடும்பச் சொத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டனர்.

ஆனால், கணேஷ் அதற்குத் தயாராக இல்லை. இதையடுத்து தன்னுடைய கணவரின் வேலையை, தன் மகள்களில் ஒருவருக்குக் கொடுக்கும்படி கணேஷ் தாயார் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனால் கணேஷ் கடும் கோபத்துக்கு ஆளானார்.

அதையடுத்து, கணேஷ் தன்னுடைய சகோதரிகளைக் கொலைசெய்யத் தேவையான விஷத்தை இணையதளங்களில் தேடி வாங்கியிருந்தார். 53 வெப்சைட்டுகளில் விஷத்தைத் தேடியிருந்தார். கணேஷ் காரில் எலி மருந்து தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கணேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகிறோம்” என்றார்.

பாத்ரூம் கூட போக முடியவில்லை… நெஞ்சை பதற வைக்கும் காசா இளம் பெண்ணின் வீடியோ!!!

போரில்..

போரால் பாதிக்கப்பட்ட காசா இளம்பெண் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்போர்களை கண் கலங்க வைத்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் ராணுவம் இடையே கடந்த 19 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் கோர தாக்குதலால், காஸாவின் வடக்கு பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஸாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ காண்போரை கலங்கவைத்துள்ளது. அந்த வீடியோவில், “காஸாவின் டல் அவ் ஹவாவில் வசித்து வந்த நாங்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டோம். நல்ல வேளையாக என்னுடைய நாயை காப்பாற்றிவிட்டேன்.

எங்களது வீடு பறிபோய்விட்டது, அம்மாவின் வேலையும் பறிபோகியுள்ளது.வெளியேற்றப்பட்ட நிலையில், அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு சாப்பிட உணவு இல்லை, மின்சாரம் இல்லை, கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை.

நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை அடுத்ததாக நான் கூட உயிரிழக்கலாம். எப்படியானாலும் இது எங்கள் மண் தான். நதி முதல் கடல் வரை எங்களுடையதுதான். இதை மறந்துவிடக்கூடாது” என்று பேசியுள்ளார்.

எருமை மாடு வளர்ப்பில் 1 கோடி வருமானம்: அசத்தும் இளம்பெண்,குவியும் பாராட்டுக்கள்..!

மகாராஷ்டிராவில்..

எருமை மாட்டு வளர்ப்பின் மூலம் மாதம் 1 கோடி ரூபாய் ஈட்டி வரும் இளைம்பெண்ணின் சாதனை அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத் நகர் அருகில் இருக்கும் நிகோஜ் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரத்தா தவான் என்ற 23வயது பெண் எருமை மாடுகளைக்கொண்டு பால்பண்ணை நடத்தி வருகிறார்.

வீட்டில் ஸ்ரத்தாவின் தந்தைக்கு உடல் ஊனம் என்பதால் வீட்டு வேலைகளை தனது 11 வயதிலேயே தனது தோழில் சுமக்க ஆரம்பித்தார். அப்போது வீட்டில் ஒரு எருமை மாடு மட்டும் இருந்தது. அந்த ஒரு மாடு படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஸ்ரத்தா படித்துக்கொண்டே தன் வீட்டில் மாடுகளையும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார்.

இன்றைக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சம்பாதிக்கும் ஸ்ரத்தா தான் கடந்து வந்த பயணம் குறித்து அளித்த பேட்டியில்,”எருமை மாடுகள் எனது குடும்பத்தின் உறுப்பினர்களாக இருக்கிறது. எனது தந்தை இந்த தொழிலை என்னிடம் கொடுத்த போது மாடுகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. என் தந்தையால் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது. எனது தம்பியும் சிறியவன்.

எனவே நானே இரு சக்கர வாகனத்தில் சென்று பால் சப்ளை செய்யவேண்டியிருந்தது. காலையில் அனைத்து சிறுமிகளும் பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருப்பார்கள். ஆனால் நான் காலையிலேயே மாடுகளிடமிருந்து பால் எடுப்பது மற்றும் இரு சக்கர வாகனத்தில் தெருத்தெருவாக சென்று பால் சப்ளை செய்து கொண்டிருப்பேன்.ஆரம்பத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் சப்ளை செய்வது வெட்கமாக இருந்தது.

எங்களது ஊரில் பெண்கள் யாரும் இரு சக்கர வாகனமே ஓட்டமாட்டார்கள். நான் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் விற்பனை செய்வதை பார்த்து சிலர் என்னை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். எங்களிடம் இருந்த மாடுகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்ததால் மாடுகளுக்கு தனியாக கொட்டகை கட்டினேன்.

2015-ம் ஆண்டு நான் 10-வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தினமும் 150 லிட்டர் பால் சப்ளை செய்தேன். 2016-ம் ஆண்டு மாடுகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது. ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைத்தது. மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சவால்களும் அதிகரித்தது. அதிக அளவில் தீவனம் தேவைப்பட்டது. எங்களது தோட்டத்தில் கிடைத்த தீவனம் போதுமானதாக இல்லை.

எனவே வெளியில் இருந்தும் வாங்க ஆரம்பித்தேன். இதனால் லாபமும் குறைந்தது. இதனால் தீவனம் எங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதை தேடிப்பார்த்து வாங்க ஆரம்பித்தோம். மாடுகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தினமும் 450 லிட்டர் பால் கிடைத்தது. மாடுகளுக்கு இட பற்றாக்குறை ஏற்பட்டதால் ஏற்கனவே இருந்த ஷெட்டில் மேல் மாடியை கட்டி அங்கு சில மாடுகளை மாற்றினோம்.

எனது தம்பி கொட்டகையை சுத்தம் செய்வது உட்பட சில வேலைகளை கவனித்துக்கொள்வான். நான் தனியாகவே 20 மாடுகளிடம் பால் கரந்துவிடுவேன். வேலைக்கும் ஆட்கள் வைத்திருக்கிறேன். பால் பண்ணையை கவனித்துக்கொண்டாலும் படிப்பை கைவிடவில்லை. கிராமத்தில் இருந்துகொண்டே கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். தற்போது மண்புழு உரம் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் கிலோ மண்புழு உரம் சி.எஸ் அக்ரோ ஆர்கானிஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறோம். அதோடு மாட்டுச்சாணத்தில் இருந்து பயோகேஸ் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். தற்போது பால் பக்கத்து பண்ணைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பால் மற்றும் மண்புழு உரம் விற்பனை மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.

மாட்டுப்பண்ணையையும் பார்த்துக்கொண்டே தனது எம்.எஸ்.சி.படிப்பையும் முடித்துள்ள ஸ்ரத்தா முன்னேற நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். பால் பண்ணையில் கிடைத்த பணம் முழுவதையும் தொடர்ந்து மீண்டும் அதிலேயே முதலீடு செய்த ஸ்ரத்தா இதன் மூலம் வெளியில் கடன் வாங்குவதையும் தவிர்த்துள்ளார். மாடுகள் வாங்குவதாக இருந்தாலும், தீவனம் வாங்குவதாக இருந்தாலும் குறைந்த விலையில் கொடுக்கும் வியாபாரிகளை தேடிக்கண்டுபிடித்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சொத்துக்காக சொந்த தங்கைகள் கொலை : போலியாக நடித்த அண்ணனை கைது செய்த போலீசார்!!

இந்தியாவில்..

சொத்துக்காக அண்ணன் தனது உடன்பிறந்த 2 சகோதரிகளை விஷம் கொடுத்து கொலை செய்துள்ள பயங்கரம் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் மோகித்- இவரின் சகோதரி சோனாலி சங்கர் மோஹித் (வயது 34).

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டடார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாள் சோனாளியின் தங்கையான சினேகா சங்கர் மோஹித் (வயது 30), அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் அக்டோபர் 20ஆம் தேதி உயிரிழந்தார்.உயிரிழப்பதற்கு முன்னதாக சினேகா அதிகாரிகளிடம் தனது மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது சகோதரரின் மீது நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனது அக்காவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. எங்களது உணவில் விஷப்பொருள் ஏதேனும் கலந்திருப்பார் என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்துக்காக சொந்த தங்கைகளே அண்ணனை கொலை செய்த பயங்கரம் தெரியவந்தது. அதாவது, கடந்த 2009 ஆண்டு கணேஷ் மோகித்தின் தந்தை வனத்துறையில் பணியாற்றி மறைந்துள்ளார். அவரது வேலையை கருணை அடிப்படையில் பெற்றுக் கொள்ள தாய் தனது மகள்களுக்கு அளிக்க விரும்பியுள்ளார்.

மேலும், அவரின் பெயரில் உள்ள பணத்தை மகனிடம் கொடுக்கவும், சொத்துக்களை சரி பங்காக மூவருக்கு பிரிக்கவும் எண்ணி இருக்கிறார்.இதில் விருப்பமில்லாத கணேஷ் முதலில் சம்மதிப்பது போல நடித்து, பின் பிரச்சனை செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், போலியான ஆவணங்கள் கொண்டு சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றவும், வனத்துறை வேலையை தான் வாங்கவும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அவை தோல்வியுற்றன.

இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து தந்தையின் பணி மற்றும் வருவாயை பிரித்துக் கொள்ளலாம் என பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சொத்துக்களை பிரிக்க மனம் இல்லாத கணேஷ் தனது தங்கைகளை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அவரின் திட்டப்படி உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை விசாரணையில் உறுதிப்படுத்திய காவல்துறையினர், கொலைகளை செய்த கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல கோடிகளுக்கு அதிபதி தெருநாய்களால் உயிரிழந்த சோகம்..!

இந்தியாவில்..

இந்தியாவின் வாக் பக்ரி நிறுவன இயக்குனர் பராக் தேசாய், தெருநாய்கள் தாக்குதலின்போது படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் (49).குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவம் உடைவர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில் தளங்களில் தீவிரமாக களமாடிய பராக், இந்திய தொழில்துறையின் மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி, தனது வீட்டு வாசலில் தன்னைத் தாக்கிய தெரு நாய்களை விரட்ட முயன்றுள்ளார். அப்போது அவர் கீழே விழுந்து படுகாயமுற்றார்.இதனைக் கண்ட தேசாயின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக நேற்றைய தினம் பராக் தேசாய் உயிரிழந்தார்.பராக் தேசாயின் இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்!!

இந்தியாவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மகளே தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் பத்தினம்திட்டாவின் திருஏறங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப் (62).இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ராதாகிருஷ்ண குருப் விரக்தியில் இருந்துள்ளார்.

தந்தையின் நிலையை கண்டு கவலையுற்ற குருப்பின் மகள் ரெஞ்சு, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

இதற்காக அவர் திருமண வரன் பார்க்கக்கூடிய இணையதளங்களில் தந்தைக்கு துணையை தேடினார். அப்போது கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த மல்லிகா குமாரி (60) என்பவரை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் தனது தந்தைக்கு சரியான பொருத்தமாக இருப்பார் என நினைத்த மகள் ரெஞ்சு, அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசி, பின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இருவரது குடும்பத்தினரும் ஒன்றுகூடி ராதாகிருஷ்ண குருப்புக்கும், மல்லிகா குமாரிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் இருவரது உறவினர்களும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டனர்

காதல் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!

பீகாரில்..

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் கஜேந்திர யாதவ். இவர், தலைநகர் பாட்னாவில் அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை ஹோட்டலில் அறை முன்பதிவு தங்கியிருந்தார். அவரை சந்திக்க அவரது மனைவி ஷோபா குமாரி காலையில் அறைக்கு தேடி வந்தார்.

மனைவி வந்த சில நிமிடங்களிலேயே கஜேந்திர யாதவ் வெளியே சென்றிருக்கிறார். அப்போது ஹோட்டல் ஊழியரிடம் காலை உணவு வாங்கிவரப் போவதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் அறைக்குத் திரும்பவில்லை. இதனையடுத்து ஹோட்டல் ஊழியர் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அங்கு அவரது மனைவி ஷோபா உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஷோபா குமாரி மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இக்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமாகியுள்ள கஜேந்திர யாதவையும் போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிகிறது .

ஹோட்டல் அறையில் இருந்து ஆயுதங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவர் ஹோட்டல் அறையில் தனது கணவரை எந்தச் சூழ்நிலையில் சந்தித்தார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். . இந்த வழக்கை மேலும் முறையாக விசாரிக்க சிறப்பு தொழில்நுட்ப குழுக்களையும் காவல்துறை அமைத்துள்ளது.

கை,கால்கள் கட்டப்பட்டு காவலாளி கொலை : பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெலிகவில்..

கலேவல – குருணாகல் பிரதான வீதியின் பெலிகம பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றில் காவலாளியின் கை, கால்களையும் வாயையும் கட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

நேற்றையதினம் புதன்கிழமை (25) இரவு பால் விற்பனை நிலையத்துக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொருட்கள் சிலவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இன்று வியாழக்கிழமை (26) காலை குறித்த காவலாளிக்கு உணவு கொண்டு சென்ற பெண் ஒருவர் சடலத்தைக் கண்டு அதிச்சியடைந்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த பால் விற்பனை நிலையம் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரவுநேர காவலாளி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

திருகோணமலையில்..

திருகோணமலை – பூநகர் பகுதியில் இன்று (26.10.2023) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கியவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் விழாவெட்டுவான் -நாகக்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோதுண்டதில் சம்பவம் இடத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

20,000 சம்பள உயர்வு கோரும் அரசாங்க ஊழியர்கள்!!

அரசாங்கம்..

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டம்
அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் டி.எம்.பி.அபேரத்ன, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!!

மின் கட்டண உயர்வைக் கண்டித்து வவுனியாவில் தீப் பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, இலுப்பையடி முன்பாக குறித்த போராட்டம் இன்று (26.10) மாலை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ” ரணில் – ராஜபக்ஸ அரசே மின்கட்டணத்தை குறை, மின் கட்டணத்தை கூட்டி வறிய மக்களை கொல்லாதே, மின் கண்டண உயர்வால் தற்கொலையை தூண்டாதே, ஜனாதிபதி ரணிலே வீட்டுக்கு போ” என கோசங்களை எழுப்பியதுடன், தீப் பந்தங்களையும் ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவாட்ட அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவரின் பிரதான ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரசிக்கா பிரியதர்சினி மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொணடனர்.

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் சடலமாக மீட்பு!!

யாழில்..

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில் யாழ் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் இன்று (26.10.2023) காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் தாயார் கதவை திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இதனையடுத்து தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை மகன் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தையை பணயக் கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல்!!

கம்பஹாவில்..

கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம் தாயின் குழந்தையைப் பணய கைதியாக வைத்து, தாயை வன்புணர்வுககு உட்படுத்தியதாக பூகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

குழந்தையை தரையில் அடிக்கப் போவதாக மிரட்டியே இந்த குற்ற செயல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல்(27) விடுமுறை வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன்(27.10.2023) நிறைவடைகின்றது. இந்த நிலையில், மூன்றாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படும்.