முதலை ஒன்றிடம் விளையாட்டு காட்டிய நபர்களுக்கு முதலை பயங்கர கோபத்துடன் பாடம் கற்பித்துள்ளது. பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.
ஆனால் இங்கு தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்று உறைய வைத்துள்ளது. இங்கு தண்ணீரிலிருந்து கரையில் படுத்திருந்த முதலையிடம் சிலர் விளையாட்டு காண்பித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
சில நொடிகள் பொம்மை போன்று படுத்திருந்த முதலை கடைசி சில நொடியில் ஆக்ரோஷமாக தாக்க முற்பட்டு பாடம் கற்பித்துள்ளது.
இந்த வருட நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் சோகத்தில் துவங்கியுள்ளது. நவராத்திரி திருவிழாவில் கர்பா வகையான நடனம் புகழ்பெற்றது. இந்நிலையில், குஜராத் மாவட்டத்தில் கர்பா நடனத்தின் போது 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நவராத்திரி விழா என்றாலே அதிகம் களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது ‘கார்பா’ நடனம்.
அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மாநில நாட்டுப்புற நடனமான கர்பா நடனமாடி மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்காக பொது இடங்களில் கர்பா பாடல், நடனங்கள் நடத்தப்படும்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் இறந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 24 வயது இளைஞரும், கபட்வன்ச் பகுதியில் 17 வயது சிறுவனும் கர்பா நடனத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை விட அதிர்ச்சிகரமாக வதோதராவின் தபோய் பகுதியில் 13 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்துள்ளான்.
நவராத்திரியின் முதல் 6 நாட்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இதய பாதிப்பு தொடர்பாக 521 அழைப்புகள் வந்துள்ளன. மூச்சுத் திணறல் தொடர்பாக 609 அழைப்புகள் வந்துள்ளன. இவை அனைத்து மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் வந்துள்ளன.
இந்த நேரத்தில் தான் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். எனவே, கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் விழிப்புடன் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்பா நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், விழா நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு உள்ளிட்ட அவசரகால ஏற்பாடுகளை செய்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நவராத்திரிக்கு முன்பாக, கர்பா நடன ஒத்திகையின் போது குஜராத்தில் 3 பேர் மாரடைப்பால் பலியானது குறிப்பிடத்தக்கது.
இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றுமுன்தினம் (23.10.2023) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த 4 கடற்றொழில் படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கிடமாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்துள்ளன.
படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடைமுறைப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதேவேளை தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து, விசா தொடர்பான அலுவல்கள் நிமித்தம், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பிய முதியவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த முதியவர் நேற்று முன் தினம் (23.10.2023) கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பிய நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு விசா தொடர்பான அலுவல்களை நிறைவு செய்து விட்டு ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு உறவினர்களுடன் முதியவர் திரும்பியுள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் கடைக்குச் செல்வதாக தெரிவித்து விடுதியிலிருந்து புறப்பட்டவர் இன்று வரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0774354409 எனும் தொலைபேசி இலக்கத்திறகு அறிவிக்குமாறும் உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.
கொழும்பு – சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவி மகேஷ்வரன் விவிஷனா தனியார் கல்வி நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்த 11 நாடுகள் பங்கேற்ற கணிதப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுஞக்கிழமை கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இந்தக் கணித போட்டியில் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியம், தன்சானியா, பஹரைன், பங்களாதேஷ், நியூசிலாந்து, கிரேஸ், சைப்ரஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் கூட்டல், கழித்தலை உள்ளடக்கிய 80 கணக்குகளை 5 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் போட்டியில் ஏனைய நாட்டு மாணவர்களுடன் ம.விவிஷனாவும் பங்கேற்றிருந்தார்.குறித்த 5 நிமிடங்களுக்குள் சுமார் 55 கணக்குகளை மனக்கணிதத்தில் செய்து அவர் சாதனையை பதிவு செய்துள்ளார்.
அது மாத்திரமின்றி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து பல மாணவர்கள் பங்குபற்றிய கணிதப் போட்டியிலும் பங்குபற்றிய அவர் அதில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.மகேஷ்வரன், தர்ஷினி தம்பதிகளின் புதல்வியான விவிஷனா கணிதத்தில் மாத்திரமின்றி ஏனைய பாடவிதான செயற்பாடுகளிலும், வரைதல் மற்றும் நடனமாடுதல் என்பவற்றிலும் திறமையானவராவார்.
தனது மகளின் சாதனை குறித்து கருத்து வெளியிட்ட விவிஷனாவின் தாயான தர்ஷினி மகேஷ்வரன், ‘எனது மூத்த மகன் ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.இது எனக்கு ஒரு பாரிய மனக்குறையாகக் காணப்பட்டது.
எனினும், எங்களின் கவலைகளை போக்கும் வகையில் எனது மகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றார். இதே போன்று அவர் கல்வியில் தொடர்ந்தும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே பெற்றோராக எமது விருப்பமும், வேண்டுதலுமாகும்.’ என்றார்.
யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண்ணான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந் நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்ளுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது ஆரம்ப பயிற்சியை Taxas அமெரிக்காவில் நிறைவு செய்து பின் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து விமானியாக பட்டம் பெற்றுள்ளார்.
இவர் விமானத்தை பழுதுபார்க்கும் படிப்பை நோர்வேயில் நிறைவுசெய்து 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிந்துள்ளார்.
தனது தந்தையின் 50 வருட கனவிற்காக பல கஷ்டங்கள்,சிரமங்கள், தடைகளையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு- நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றையதினம் (24 ) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதுடைய கீதா முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்துள்ளனர்.
பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21 ஆம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தாயார் நேற்றையதினம் (23) மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த இளம் குடும்பபெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவரை கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைவி கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில் கொலைக்கான காரணம் வெளியாகவில்லை.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான களனி பகுதியைச் சேர்ந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவரது சடலம் இஸ்ரேலின் பெட்டா திக்வாவில் அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். அனுலா ஜயதிலக்க கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் காணாமல் போயிருந்ததார்.
பின்னர் அவர் , அக்டோபர் 17 ஆம் திகதி உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகளினால் இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தம்பதியினர் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில், அவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது அவர்களின் மகளும் காரில் இருந்த நிலையில், மகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 33 வயது பெண்ணும் 35 வயதான அவரது கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. மலையக குயில் அசானி தமிழகத்தில் நடைபெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
அவர் வெற்றி பெற வேண்டும் என்று இலங்கையர்கள் மட்டும் இன்றி உலகவாழ் தமிழர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அசானி தனது தந்தையுடன் கடலூர் கிராமத்திற்கு உறவினர்களை காணச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து கிராமத்தினர் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பில் புகைப்படங்கள் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.
யாழில் வெளிநாடுசெல்லும் ஆசையில் இளைஞர் ஒருவர், சாமியாடிப் பெண் சொன்னதை நம்பி 17 லட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெளிநாடு செல்லும் ஆசையில் இருந்த ஒருவர், முகவர்களை நாடியபோதும் தனது பணத்தை மோசடி செய்துவிடுவார்கள் என அவர் அஞ்சியுள்ளார். இந்நிலையில் உரும்பிராயில் உள்ள பெண் ஒருவர் சாமியாடி வாக்குச் சொல்வார் என்றும், அவர் சொல்வது அனைத்தும் நடக்கும் என்றும் இளஞரிடம் சிலர் கூறியுள்ளனர்.
அந்த பெண் சாமியாடியிடம் பலர் கூடியிருந்த நிலையில் இளைஞரும், காத்திருந்து தனது பிரச்சினையைக் கூறியிருக்கின்றார். தனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்றும், ஆனால் பணத்தை மோசடி செய்துவிடுவார்கள் என்ற அச்சமாக இருக்கின்றது என்றும் கூறிய அவர், அது தொடர்பில் ஆலோசனையையும் பெண் சாமியாரிடம் கேட்டுள்ளார்.
சாமியாடி வாக்குச் சொன்ன பெண்ணும், கண்ணை மூடி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் உன்னை வெளிநாடு அனுப்புவார், நீ வெளிநாடு செல்வது உறுதி என கூறி அனுப்பியுள்ளார்.
அதை நம்பிய இளைஞர் அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு 17 லட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். எனினும் காலங்கள் உருண்டனவே தவிர இளைஞர் வெளிநாடு செல்வதாக இல்லை.
பணத்தைப் பெற்றுக்கொண்டவரும் சரியான பதிலை வழங்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் பொலிஸாரை நாடியயதை அடுத்து, பதுளையைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞரின் பணம் தொடர்பில் அவரிடம் விசாரணை செய்தபோது, தனது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டதாகவும் . அந்தப் பணத்தைச் செலவு செய்துவிட்டேன்.
அது தவிர எனக்கு எதுவும் தெரியாது என்று அந்த நபர் கையை விரிக்கின்றாராம். சாமியாடும் பெண்ணின் வாக்கை நம்பி பணத்தை இழந்தவர் தற்போது என்ன செய்வது என்று தெரியாது திண்டாடுகின்றார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அனேகமானோர் பெருமளவு பணத்தை கொடுத்து முகவர்கள் ஊடாக வெளிநாடு செல்ல முயன்று இடைத்தங்கல் நாடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலநாட்களுக்கு முன்னர் கொழும்புத்துறை – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் போலி முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சரஸ்வதி என்கிற 64 வயதான மூதாட்டி லெபனான் சிறையில் உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று லெபனான் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக இருந்த போது உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து கடந்த ஜூன் மாதம் புறப்பட்டார். ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“லெபனான் அருகில் உள்ள இஸ்ரேல் நாட்டில் யுத்தம் இடம்பெறுவதால் எமக்கு பயமாக உள்ளது. எமது அம்மா சுகவீனம் அடைந்துள்ளார்.எமது அம்மாவை நாட்டுக்கு கொண்டுவர உரிய தரப்புக்கள் உதவ வேண்டும்”என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் நேற்றையதினம் (23.10.2023) வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் தங்களிற்கான நிரந்தர கிராம சேவையாளரை நியமிக்க கோரி கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
பிரதேச செயலக பிரதான வாயிலை மறித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்களையும் வெளியேற விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன்,
பின்னர் பிரதேச செயலக அலுவலகத்தினுள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தனிநபர் ஒருவரினால் அப்பகுதியில் உள்ள சிலரின் காணிகளை அபகரித்து கொண்டுள்ளதுடன், இது தொடர்பாக பார்வையிட கடந்த 12ம் திகதி கிராமசேவையாளர் அப்பகுதிக்கு சென்ற போது அவரை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுத்திருந்தமையால் அவ்விடத்தில் இருந்து கிராம சேவையாளர் அகன்று சென்றுள்ளார்.
மேலும் 2010ம் ஆண்டு 10ம் மாதம் 21ம் திகதி எங்களை மீள்குடியேற்றம் செய்திருந்தனர். அன்று தொடக்கம் இன்று வரை கடமையாற்றிய 09 கிராம சேவயாளர்களும் குறித்த நபரினால் ஏற்பட்ட இடையூறு காரணமாக தங்களால் கடமையாற்ற முடியாது என்று தெரிவித்து விலகிச்சென்றுள்ளனர்.
இதன் காரணமாக நாம் எல்லோரும் கூடி எமக்கான நிரந்தர கிராம சேவையாளர் வேண்டும் என்றும் குறித்த தனிநபரின் அட்டூழியம் நிறைவுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையினை முன்னிறுத்தியே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், எமது பிரதேச செயலக பிரிவின் கீழ் 48 கிராம சேவகர் பிரிவில் 28 கிராம சேவகர்களே உள்ளனர்.
இதனால் ஒரு கிராம சேவகரிற்கு நிரந்தர கிராம சேவகர் பிரிவும், பதில் கடமை பரிவும் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கிராம சேவையளர் சர்வேந்திரன் பம்பைமடுவில் பதில் கடமையும் வேலங்குளம் கிராம சேவகர் பிரிவில் பதில் கடமையையும் மேற்கொண்டிருந்தார்.
மேலும் வேலங்குளம் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக குறித்த கிராம சேவகரினை வேலங்குளம் கிரம சேவகர் பிரிவிற்கு நிரந்தரமாக நியமிக்கிறோம். அதன் பின்னர் அவருடைய கடமைக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அதற்கு பிரதேச செயலகம் பூரன ஆதரவை வழங்கும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் வருகை தந்து ஆர்ப்பாட்டகாரர்களிடம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகிய லியோ திரைப்படம் திரையிடப்பட்டு அனைத்து திரையங்கிலும் ஆசனங்கள் முழுமையாக நிறைந்துள்ளமையுடன் தமிழர் பகுதிகளில் குறித்த படத்திற்கான டிக்கெட் பெறுவதில் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர்.
இந்நிலையில் லியோ திரைப்படம் அனுராதபுரம் பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள திரையங்கம் ஒன்றில் திரையிடப்படவுள்ளதாக அவர்களின் இணையத்தளத்தில் முற்பதிவுகளுக்கான விடப்பட்டிருந்த நிலையில்,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, புத்தளம், திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து பெரும்பாலோனோர் குறித்த திரையங்களில் இரவு 7.30 காட்சிக்கு முற்பதிவுகளை மேற்கொண்டிருந்தமையுடன் தூர இடங்களிலிருந்து வருகை தந்தமையினால் பல மணிநேரமாக திரையரங்கில் காத்திருந்தனர்.
லியோ திரைப்படம் திரையிடப்பட்ட சமயத்தில் குறித்த பட காட்சிகளின் ஒலியமைப்பு தெளிவின்மை காணப்பட்டது. பல மணிநேரமாக அவர்களின் தொழிநுட்ப பிரச்சனைகளை பார்வையிட்ட போதிலும் ஒலியமைப்பு சீராகவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தமக்கு தெளிவான ஒலியமைப்புடன் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும் அல்லது பணத்தினை மீளத்தருமாறு திரையரங்களில் வரவேற்பு இடத்தினை முற்றுகையிட்டனர்.
இதனால் திரையரங்கில் பதற்றநிலை அதிகரித்தமையுடன் அனுராதபுரம் பொலிஸார் பேரூந்தில் வருகை தந்து திரையரங்கின் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.
பல மணிநேரமாக அவ்விடத்தில் பதற்றநிலை நிலவியமையுடன் தமக்கு டிக்கட்டுக்கான பணத்தினை மீளத்தருமாறு அல்லது தெளிவான ஒலியமைப்புடன் படத்தினை திரையிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கு பதிலளித்த திரையரங்க நிர்வாகம் படத்தின் இறுவட்டில் உள்ள பிரச்சனையினால் ஒலி தெளிவின்மை காணப்படுவதாகவும் பணத்தினை கணக்கிற்கு வைப்பிடுவதாகவும் தெரிவித்தனர். எனினும் திரையரங்க நிர்வாகத்தின் நம்பிக்கையில்லை என தெரிவித்தமையுடன் பணத்தினை கையில் தருமாறும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இறுதியில் பொலிஸாரின் தலையீட்டில் நிர்வாகத்தினர் சில தினங்களில் வங்கிக்கு பணத்தினை வைப்பிடுவதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை எழுதி வழங்கியமையுடன் தவறுக்கு மன்னிப்பும் கோரியிருந்தமையுடன் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியிருந்தனர். இதனையடுத்து ரசிகர்கள் திரையரங்கினை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியிருந்தனர்.
150கிலோமீற்றர் தூரத்திற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து வருகை தந்த ரசிகர்களுக்கு பண விரயமும் மிகுந்த ஏமாற்றமும் அடைந்து தமது கவலைகளை தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்ப்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்புதெரிவித்தும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்குப்படும் பௌத்தமயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் கடந்த 20ம்திகதி ஹார்த்தால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஹார்த்தாலை எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கு ஹார்த்தால் மக்கள் பட்டினியால் வாடுகின்றார்கள் எனும் வசனத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சுவரோட்டியின் கீழ்ப்பகுதியில் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் என உரிமம் கோரப்பட்டுள்ளதுடன் நகர மத்தி, நூலக வீதி, வைரவப்புளியங்குள வீதி, குருமன்காடு, கந்தசாமி கோவில் வீதி போன்ற வீதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.