இலங்கையில் பிரபலங்களை மிரட்டி நுட்பமாக பணம் கொள்ளையடிக்கும் இளம் பெண்!!

இலங்கையில்..

சமூகத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த மருத்துவர் பேஸ்புக்கில் உள்ள நண்பர்களிடம் இதை அகற்ற ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக பெண் ஒருவரும் அதை அகற்ற முன்வந்தார். குறித்த பெண், பேஸ்புக்கில் இருந்து பதிவை நீக்க வைத்தியரிடம் பணம் கேட்டுள்ளார். சம்பவத்திற்கு முகங்கொடுத்த வைத்தியர், தவணை முறையில் 30 லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியிருந்தது.

ஆனால் அந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் வைத்தியரை அவமதிக்கும் பதிவு ஒன்று பரவியுள்ளது. அதற்கமைய, முன்பு அவருக்கு உதவிய பெண் மீது வைத்தியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிலும் வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார். வைத்தியருக்கு உதவிய பெண் பல பிரபுக்களுடன் தொடர்புகளைக் கொண்டவராக சமூகத்தில் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது கணவரை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் உயர் பதவியில் இருப்பவர் என அறிமுகப்படுத்தும் குரல் பதிவு ஒன்றையும் காண்பித்துள்ளார். அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் காட்டும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் தயாரித்திருந்தார். ஆனால், அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணிடம் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில், தான் நாடாளுமன்ற மொழிப்பெயர்ப்பாளராக கடமையாற்றவில்லை எனவும், பயிற்சிக்காக மாத்திரமே அங்கு சென்றதாகவும், நிரந்தர ஊழியராக தான் நியமனம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணம் கொடுத்துதான் அந்த வேலைக்குச் செல்ல முயன்றதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் மொழிப் பெயர்ப்பாளராக வேலை செய்வதாக தெரிவித்து காண்பிக்கப்பட்ட அடையாள அட்டை போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வரி செலுத்தாத இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

வரி..

வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.அதேவேளை, அதி வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் இன்னும் விரும்பிய இலக்குகளை அடையவில்லை. உலகிலேயே மிகக்குறைந்த வரி வருவாயைக் கொண்ட நாடு நாம்தான்.இலக்கை நோக்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது சுருங்கிய பொருளாதாரத்துடன் செல்ல வேண்டும்.

அதேசமயம் வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்து, வியாபாரம் பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்துள்ளது.ஒரு அரசாங்கம் வரி விதிக்க வேண்டும். முடிந்தவரை, வரிகளால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றுகிறோம். வரி அடிப்படையை அதிகரிப்பதே எங்கள் இலக்கு.

உண்மையில் வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை. வரி செலுத்த அவர்களை வழிநடத்துதல் மற்றும் அதிக வரிச்சுமையை சுமப்பவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு..!

முறிகண்டியில்..

முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதி, A9 வீதியில் நேற்று (21.10.2023) இரவு 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் நடவடிக்கை விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்களிற்கு இடையில் வாக்குவாதம் பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கனடா வாழ் ஈழத் தமிழர் ஒருவருக்கு வழங்கப்படும் யாழ். ஜனாதிபதி மாளிகை!!

காங்கேசன்துறையில்..

காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை NorthernUni பல்கலைக்கழகமாகவும் தொழில்நுட்ப பூங்காவாகவும் மாற்றப்படவுள்ளது. கடந்த 16.10.2023 ஆம் திகதி NorthernUni நிறுவுனர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருவரும் இடையிலான சந்திப்பின்போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கின் கல்வித்துறை மற்றும் தொழில்வாய்ப்பு மேம்பாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. Northernuni ஆனது மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் கனடா வாழ் தமிழ் முதலீட்டாளர் இந்திரகுமார் பத்மநாதனின் நிதி முதலீட்டில் வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு சிறந்த உயர்தரத்திலான கல்வி வாய்ப்பினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடா வருடம் நடைபெறும் க.பொ.த உயர்தர பரீட்சையின் போது சுமார் 22,600 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறுகிறார்கள். இருப்பினும் 4379 பேர் மட்டுமே பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார்கள். 18289 மாணவர்கள் தகுதி பெற்றும் அவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத ஒரு குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கைப் பெண்!!

இலங்கை பெண்..

தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த பெண் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததுடன், அவரின் மரணம் குறித்து கிராம உத்தியோகத்தரின் ஊடாக குடும்பத்தார், வினவியதை அடுத்தே தெரியவந்துள்ளது.

ஹொரணை – அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் ஒன்றின் ஊடாக அவர் 2021ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.இந்த நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து, அவரது குடும்பத்தினர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி : 40 அடி தூரத்திற்கு வீசப்பட்ட சிறுவன்!!

நுரைச்சோலையில்..

நுரைச்சோலை நகரில் நேற்று இரவு சிறிய லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான வர்ணகுலசூரிய ஜூட் அனுஷ்க நிஷாந்த என்ற 36 வயதுடைவர் மற்றும் 5 வயதுடைய அரோஷ் ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கல்பிட்டி பாலகுருதாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் கல்குடா கெகுலு பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவராகும்.பாலாவியாவிலிருந்து அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கல்பிட்டியிலிருந்து வந்த சிறிய லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கியின் மேல் பயணித்த சிறுவன் 40 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சிறுவனும், தந்தையும் அவரது நண்பரும் பயணித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தந்தை உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளன. லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!!

வால்பாறையில்..

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் நல்லகாத்து ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அங்குள்ள கூழாக்கல் ஆறு, சோலையாறு ஆறு, நல்லகாத்து ஆறு ஆகியவற்றில் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று (அக். 20) கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மதியம் சோலையாறு அருகே உள்ள நல்லகாத்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற மலுமிச்சபட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சரத் (20) என்பவர் தண்ணீரில் சுழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தார்.

அவரைக் காப்பாற்ற சென்ற மலுமிச்சப்பட்டியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் நபில் அர்சத் (20), கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சேர்ந்த தனுஷ்குமார் (20), கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சேர்ந்த அஜய் (20) மற்றும் வினித்குமார் (23) ஆகியோர் அவரை காப்பாற்றச் சென்றனர்.

எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டிருந்த உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் உடன் இணைத்து காப்பாற்ற முயன்ற நிலையில் 5 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வால்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துபாண்டி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் மற்றும் போலீஸார் தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு 5 பேரின் உடல்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தனுஷ்குமார் மற்றும் வினித்குமார் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்.. கோலாகலமாக நடந்த திருமணம்!!

சென்னையில்..

தமிழக மாவட்டம், சென்னையை சேர்ந்த இளைஞர் அமெரிக்க பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். சென்னையை சேர்ந்த தம்பதியினர் உஷா மற்றும் ரவி. இவர்களுக்கு ஆஞ்சன் ரவி என்ற மகன் உள்ளார்.

இவர்கள் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரின் உறவினர் ஆவர். இதில் ஆஞ்சன் ரவி அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். அங்கு, லாரா என்ற பெண்ணுடன் பழகி காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆஞ்சன் மற்றும் அமெரிக்க பெண் லாராவின் திருமணம் சென்னையில் உள்ள அகார்டு ஹோட்டலில் இந்து முறைப்படி நடந்தது.

இவர்களின் திருமணமானது மணமகனின் பெற்றோர் முன்னிலையில், மணமகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்து நடிகர் எஸ்.வி.சேகர் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்பு, மணமக்களுக்கு ஆசி வழங்கினர். இதில் அமெரிக்க பெண்ணான லாரா இந்து மதத்தின் மீது உள்ள மதிப்பினால் தனது லாரா என்ற பெயரை லஷ்மியாக மாற்றிக் கொண்டார்.

வவுனியாவில் அரச பேரூந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல் : சிதறிய கண்ணாடிகள்!!

வவுனியா ஹோரவப்பொத்தானை வீதியில் பள்ளிவாசலை அண்மித்த பகுதியில் நேற்று (21.10.2023) மாலை 6 மணியளவில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மதுபான போத்தலை அரச பேரூந்து கண்ணாடி மீது வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

பராக்கிரமபுர பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வவுனியா சாலைக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து ஹோவரப்பொத்தானை வீதி பள்ளிவாசலை அண்மித்த சமயத்தில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த அரச பேருந்தின் கண்ணாடி மீது மதுபான போத்தலை வீசிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவத்தினால் பேரூந்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தமையுடன் அப்பகுதியூடான போக்குவரத்தும் 30நிமிடங்களாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

தாழமுக்கம்..

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கமானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று சனிக்கிழமை (21) மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்னர், இலங்கையில் இருந்து வடகிழக்கு திசையில் வங்கக்கடலை நோக்கி நகரும்.40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்களுக்கு மேலாக 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் மிகவும் கொந்தளிப்பான அல்லது கொந்தளிப்பான கடற்பரப்புகளை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனவே மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

வெளிநாட்டில் பெரும்தொகை மோசடியில் சிக்கிய இலங்கையர்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது பணியிடத்தில் பெரும்தொகை பணத்தை மோசடி செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

இலங்கையரான நவிஷ்ட டி சில்வா என்ற 36 வயதுடைய நபருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடத்தில் 250,000 டொலர்களை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பணம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்து அவர்களது விளையாட்டுக் கழகத்தில் விளையாடப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அவர் தனது விளையாட்டுக் கழகத்தில் இலங்கையின் திலகரத்ன டில்ஷான், லஹிரு திரிமான்ன, மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் அடங்குவதாக ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் சந்தேகநபரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து வீரர்கள் அறிந்திருக்கவில்லை என்ற மேலதிக உண்மைகள் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன.

அத்துடன், டில்ஷானுக்குச் சொந்தமான விளையாட்டு நிறுவனம் ஒன்றின் கணக்கில் 37,250 டொலர்களும், இலங்கை வீரர் லஹிரு திரிமான்னவின் கணக்கில் 5,800 டொலர்களும், பெயர் குறிப்பிடப்படாத ஏனைய வீரர்களுக்கு 28,950 டொலர்களும் அவர் செலுத்தியுள்ளமையும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நவிஷ்ட டி சில்வாவுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் மனைவியை கொலைசெய்த யாழ்ப்பாண இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!

கனடாவில்..

கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் முதல் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சசிகரன் தனபாலசிங்கத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (17) காலை ஒரு சுருக்கமான தண்டனை விசாரணையின் போது, கருஞ்சா பரமேஸ்வரன், பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு அறிக்கையை நீதிமன்றத்தில் வாசித்தார்.தனது நண்பரை “இதயம் கொண்ட ஆத்மா” என்று அழைத்தார். “தர்சி அவள் இறந்த விதத்திற்கு தகுதியானவள் அல்ல, ஆனால் இன்று நீதி வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூறினார்.

அதேசமயம் உயிரிழந்த தர்சிகாவின் குடும்பத்தினர் இலங்கையில் இருந்து ஜூம் இல் விசாரணையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.செப். 11, 2019 அன்று ஜெகநாதனுடன் தொலைபேசியில் கடைசியாகப் பேசியதாக பரமேஸ்வரன், கூறினார். “அவளுடைய அலறல் குரலால் நான் பயந்தேன். அது என்னை என்றென்றும் வேட்டையாடும் மற்றும் என் தலையில் மீண்டும் ஒலிக்கும், ”என்று பரமேஸ்வரன் கூறினார்.

ஜெகநாதன் இறந்த முதல் ஒரு மாதத்திற்கு தன்னால் தூங்கமுடியவில்லை என்று அந்த அலறல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவளது துயரத்தைச் சமாளிக்க சிகிச்சையையும் நாட வேண்டியிருந்தது என்றும் பரமேஸ்வரன் நீதிமன்றில் கூறினார்.

அதேவேளை தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தனபாலசிங்கத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் 25 ஆண்டுகளுக்கு பரோலுக்கு தகுதி பெற முடியாது என்றும் நீதிபதி கூறினார்.மேலும் தனபாலசிங்கத்திற்கும் வாழ்நாள் ஆயுத தடை விதிக்கப்பட்டதுடன், அவரது டிஎன்ஏவை தேசிய டிஎன்ஏ தரவு வங்கிக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையர் : விரைவில் தண்டனை!!

இலங்கையில்..

இலங்கையில் பிறந்த, மெல்போர்ன் நிதித் திட்டமிடுபவரான டெரன்ஸ் ரியோ ரியென்சோ நுகாரா, வாடிக்கையாளர்களின் மேலதிக நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஏமாற்றுதல் மற்றும் இரண்டு திருட்டுகள் மூலம் நிதி ஆதாயம் பெற்ற 37 குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கையாடிய பல மில்லியன் டொலர்களுடன், அவர் கடந்த 2019இல் நாட்டில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் மெக்ஸிகோ, கொஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இடையே மூன்று ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் மெக்ஸிகோவில், அவர் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் கடத்தப்பட்ட போது, அவுஸ்திரேலிய தூதரகத்தின் உதவியை நாடி அங்கு தஞ்சம் அடைந்த போதே அவருக்கு அவுஸ்திரேலியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடந்த அக்டோபரில் மெல்போர்ன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதையடுத்து தற்போது ராவன்ஹால் சீர்திருத்த மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இவர் தொடர்பான தகவல் வழங்கினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம் : பொலிஸார் அறிவிப்பு!!

சன்மானம்..

நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ளார்.சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071 8591960 பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நிலையத் தளபதி பிரிவு (1) – 0718596150

காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம் : பெண் அதிகாரிகள் காயம்!!

அம்பலாங்கொடயில்..

அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார்.

ஒரு அதிகாரியின் இடுப்பையும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் விரலையும் இளம் பெண் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.இரு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுடன், குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

அதனை கட்டுப்படுத்த சென்ற இரு பெண் பொலிஸாரையும் கடித்து காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த பொலிஸார் இருவரும் தற்போது பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதம் மாறி திருமணம் செய்த காதல் ஜோடி.. தந்தை செய்த கொடூரம்!!

மும்பையில்..

எத்தனை தொழில் நுட்ப வளர்ச்சிகள் அடைந்தாலும் சில மூடபழக்க வழக்கங்கள் நம்பிக்கைகளை விட்டொழிப்பதே இல்லை. காதல் திருமணங்களில் பெரும் பிரச்சனையாக இருப்பதே ஜாதியும், மதமும் தான்.

ஜாதி மதம் தாண்டி திருமணம் செய்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, ஆணவக் கொலை செய்வது என பல பகுதிகளில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மகள் காதல் திருமணம் மதம் விட்டு மதம் மாறீ செய்ததால் தந்தையே மகளையும், மருமகனையும் ஆணவக் கொலை செய்த விஷயம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில், அந்த வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் யார்? என்ற அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நவிமும்பை பன்வெல் பகுதியில் புதருக்குள் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற பன்வெல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

2 பேரும் ஒரே மாதிரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன்- மனைவியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில், கொலையான பெண் மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த கோரா கான்(வயது50) என்பவரின் மகள் குல்னாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கோரா கானை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணையில், அவரது மகள் குல்னாரை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கரண் ரமேஷ் சந்திரா(22) என்ற வாலிபர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. தனது மகள் வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதற்கிடையே காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில் கோரா கான் அவர்களை தொடர்பு கொண்டு பேசி மகள், மருமகனையும் மும்பை வரவழைத்து உள்ளார்.

பின்னர் தனது மகன் சல்மான் மற்றும் சல்மானின் நண்பர் முகமது கான் ஆகியோருடன் சேர்ந்து மகள் குல்னாசையும், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்த படுகொலையை மறைப்பதற்காக அவர்கள் கரண் ரமேஷ் சந்திரா உடலை மும்பை மான்கூர்டில் உள்ள கிணற்றிலும், குல்னாஸ் உடலை நவிமும்பை பன்வெல் காட்டுப்பகுதியிலும் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் கோரா கான், சல்மான், முகமது கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக 3 சிறுவர்களையும் போலீசார் பிடித்தனர்.

இவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலையாளிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.