ஒசூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் கூறியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி தங்கை, அம்மா இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்த கிரி(21) என்னும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை விபத்தில் தலையில் காயமடைந்த கிரி கோமோ விற்கு ஆளாகி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செப்டம்பர் மாதம் 7ம் தேதி உயிரிழந்தார். கிரிக்கும் வேறு நபருக்கு சண்டை இருந்ததால் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் தங்கை 12ம் வகுப்பு படித்து வந்த காவ்யா(17) அம்மா காமாட்சி(40) ஆகிய இருவரும் சூளகிரி போலிசில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளை காண்பிக்குமாறு கூறியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய இவர்கள் இன்றும் சூளகிரி காவல் ஆய்வாளரை சந்தித்து வந்து, மனமுடைந்து போகினர். ஏற்கனவே தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. என் அண்ணன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கடிதம் எழுதி வைத்துள்ள தங்கை காவ்யா.
எனது சாவிற்கு யாரும் காரணமில்லை, தற்போது அண்ணனுடன் நாங்கள் என மூன்று உயிர்கள் போன பின்பு இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா என்றும், என் அண்ணன் கிரி வாங்கி கொடுத்த Chain கழுத்தில் அணிந்துள்ளேன் நான் இறந்த பிறகும் அதை அகற்ற வேண்டாமென உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அம்மா, மகள் இருவரும் புடவையில் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சீதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் பிரதீபா அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
தாய் பொன்மணி பிரதீபா மற்றும் பக்கத்து வீட்டு சிறுமியை பள்ள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கனகம்மாசத்திரம் வழியாக செல்லும் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அந்த நேரத்தில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் சிறுமி பிரதீபா மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிறுமி சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தாய் கண் முன்னே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
மகள் இறந்ததை கண்டு தாய் துடிதுடித்து கதறி அழுதார். இச்சம்பவம் காண்பவர்களை கண்கலங்க செய்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த குன்னவளம் கிராமத்தைச் சேர்ந்த மதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேகத்தடை அமைக்க உறுதி அளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பெண் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
ஒரு பெண் பிணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? என்று போலீசார் விசாரித்தனர்.
ஆனால் பெண் யார் என்ற விவரம் போலீசாருக்கு ஆரம்பம் முதலே தெரியவில்லை.. பெண்ணின் உடலை கேட்டு யாருமே வராத நிலையில், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் என வட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அந்த பெண் யார் என்று வந்தவாசி போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த 39 வயதாகும் ஜெயராமன் (வயது 39) என்பவர், சீர்காழி காவல் நிலையத்தில் தனது மனைவி நித்தியாவை (34) ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முதல் காணவில்லை என்று செப்டம்பர் மாதம் 13-ந் தேதி புகார் கொடுத்தார்..
அதன்பேரில் போலீசார் நித்தியாவின் புகைப்படத்தை வைத்து விசாரித்தனர்.. மேலும் அந்த புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தார்கள்.
இந்த நிலையில் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு நித்தியாவின் புகைப்படம் மெயிலில் வந்தது. அந்த புகைப்படமும் வெண்குன்றம் தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நித்தியாவின் சொந்த ஊர் வந்தவாசி என்றும், அவரது தாய் சாந்தி என்பதும் தெரிய வந்தது. ஏப்ரல் மாதமே இறந்த நித்யாவை ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை என்று கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்தார்கள்.
அதைத்தொடர்ந்து போலீஸார் நித்தியாவின் தாய் சாந்தி தொலைபேசியை ஜெயராமனுடன் பேச வைத்தனர். அப்போது அவர் வந்தவாசிக்கு வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஜெயராமன் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் பஸ்சில் இறங்கும்போது போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசார் சந்தேகப்பட்டது போல் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலமானது. நித்யாவுக்கும் சீர்காழியில் வசித்து வந்த ஜெயராமனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.
ஜெயராமன் சீர்காழியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நித்யாவுக்கும் ஜெயராமனுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நித்தியா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவாராம்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி நித்தியா வீட்டை விட்டு வெளியே சென்றவர், அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 17-ந் தேதி ஜெயராமனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வந்தவாசியில் இருக்கிறேன். என்னை வந்து அழைத்து செல்லுமாறு நித்யா கூறினாராம்.
இதையடுத்து ஜெயராமன் வந்தவாசிக்கு வந்ததும், நித்தியா அவரை அழைத்துக் கொண்டு தவளகிரி மலை கோவிலுக்கு போயிருக்கிறார். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயராமன் நித்யாவை 1000 அடி உச்சயில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளளார்.
பின்னர் மனைவியை காணவில்லை என்று சீர்காழி போலீசில் மூன்று மாதம் கழித்து புகார் அளித்துள்ளார் . காணவிலை புகார் கொடுத்த மாதம், சொன்ன விஷயமே எல்லாமே பொய்யாக இருந்தததால் சிக்கி உள்ளார் ஜெயராமன். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜார்ஜியா நாட்டில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜார்ஜியா நாட்டில் வசித்து வரும் ரஷ்யாவை சேர்ந்த 26 வயதுடைய கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற இளம்பெண், 58 வயதுடைய காலிப் ஓஸ்டுர்க் என்ற ஆணுடன் திருமண உறவில் இருந்து வருகிறார்.
கோடிஸ்வரரான காலிப் ஓஸ்டுர்க் பல ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவி கிறிஸ்டினாவுக்கு 105 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு கணவர் காலிப் ஓஸ்டுர்க் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனைவி கிறிஸ்டினா தற்போது தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். முதலில் பிறந்த குழந்தை மட்டுமே கிறிஸ்டினா-வின் நேரடி பிரசவத்தில் பிறந்தது.
அந்த குழந்தைக்கு தற்போது 9 வயது ஆகிறது. மற்ற 21 குழந்தைகளும் வாடகை தாய் முறையில் பெற்றெடுத்து கிறிஸ்டினா தற்போது 22 குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
அத்துடன் கிறிஸ்டினா தன்னுடைய 22 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், தனக்கு 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை, எனவே 100 குழந்தைகளை தாண்டி பெற்றுக் கொள்ளும் வரை இதனை நிறுத்த மாட்டேன் என கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே கணவனுக்குத் தெரியாமல் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை வீட்டுக்கு வரவழைத்த பெண், அதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நதியா பதிவு செய்யும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (20) அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பிரகதீஸ்வரன், தனது சொந்த வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து நதியா தனது கணவனுக்குத் தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பிரகதீஸ்வரனை வரவழைத்து உள்ளார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ்வரன் நதியாவை பார்த்து கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு நதியா தன்னுடைய தாலி செயின் மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.
அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நதியாவின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் பிரகதீஸ்வரன். இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து நதியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று (அக் 31) பிரகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நதியாவின் மூன்றரை பவுன் தாலி செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தற்போது முடக்கியுள்ளார் நதியா. இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற 16 வயது சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். மும்பை கண்டிவாலி பகுதியை சேர்ந்த கிரிஷா என்ற 16 வயது சிறுமி கிட்டத்தட்ட 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.
11ம் வகுப்பு படிக்கும் கிரிஷா முதலில் 16 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். ஆனால் 16 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகும் கிரிஷாவின் உடலில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாததை தொடர்ந்து, அவரது ஆன்மீக குருவின் அறிவுரையின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை 31, 51, 71 என நாட்களை நீடித்துள்ளார்.
கடந்த ஜுலை 11ம் திகதி கிரிஷா தன்னுடைய உண்ணாவிரத்தை தொடங்கிய நிலையில், இறுதியில் 110 நாட்களுக்கு பிறகு நிறைவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
கிரிஷா இந்த உண்ணாவிரத்தால் 18 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் உண்ணாவிரதத்திற்கு பிறகு பேசிய கிரிஷா, மன உறுதி மற்றும் மன ஒருமைப்பாடு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை தன்னுடைய உண்ணாவிரதம் எடுத்துக் காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
கிரிஷா தன்னுடைய உண்ணாவிரத காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 6:30 மணி வரை வெறும் சுடு தண்ணீரை மட்டுமே அருந்தியுள்ளார். கிரிஷாவின் இந்த சாதனையை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.
சமீபமாக மன அழுத்தம் காரணமாக நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. கேரளத்தில் பிரபல மலையாள திரைப்பட நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மலையாள திரைப்பட ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய துவங்கிய ரெஞ்சுஷா மேனன், தன்னுடைய முயற்சியினால் மலையாள திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார்.
அற்புததீவு, பாம்பே மார்ச், காரியஸ்தன், ஒன் வே டிக்கெட், சிட்டி ஆப் கார்ட் போன்ற மலையாள படங்களில் அவர் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். திரையுலக அறிமுகம் காரணமாக அவருக்கு சின்ன திரையில் ஏராளமான வாய்ப்புகள் குவிய துவங்கியதில் அடுத்தடுத்து பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார். மேலும் சில சீரியல்களை அவர் தயாரித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான ரெஞ்சுஷா மேனன் சீரியல்கள் தயாரித்து வந்ததில், பண நெருக்கடியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெஞ்சுஷாவின் மரணம் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் திபுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தனது சொந்த கணவரை திட்டமிட்டு கொலைசெய்த பெண்ணொருவரை மாவனல்லை பொலிஸார் தீவிர விசாரணைகளின் பின்னர் கைதுசெய்த்துள்ளனர். குறித்த பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி கணவனை கொன்ற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த நபரின் மனைவி, அவரது முறைகேடான கணவன் மற்றும் மற்றுமொரு நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் நேற்று (30.10.2023) உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி மாவனல்லை, கலதர பிரதேசத்தில் வீதிக்கு அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
இதனடிப்படையில், மரணம் தொடர்பில் கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய வளாகத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அங்கு அறிக்கை வழங்கப்பட்டது. அதன்படி, உயிரிழந்தவரின் மனைவி சடலத்தை பெற்று இறுதிக் கிரியைகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மூன்று மாதங்களாக மாவனல்லை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், உயிரிழந்தவரின் மனைவியின் தொலைபேசி பதிவுகளை ஆராய்ந்து இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இறந்தவரின் மனைவி தனது முறைகேடான கணவருடன் சேர்ந்து கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி அவரை கொலை செய்ய முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் 43 வயதான கெமுனு குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
பின்னர், மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கொலையுடன் தொடர்புடைய மனைவியான 41 வயதுடைய பெண் மற்றும் அவரது முறைகேடான கணவர், ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி ஆகியோர், கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யக்கலமுல்ல பிரதேசத்தில் வெளிநாட்டில் இருக்கும் பெண் ஒருவர் ஒருவாரமாக தன்னிடம் பேசுவதில்லை எனக்கூறி 40 அடி உயர மாமரத்தில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். வட்ஸ்அப் மூலம் குறித்த பெண்ணிடம் பேச வைத்து அவரை மரத்திலிருந்து கீழே இறங்க வைத்து காப்பாற்ற பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
குவைத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவருடன் அக்மீமன ஹியாரே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் இரகசிய தொடர்பு வைத்திருந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், சுமார் ஒரு வாரமாக இவருடன் பழகிய பெண் பேசாமல் இருந்துள்ளார்.
இதன் காரணமாக நாகியாதெனிய பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள நாற்பது அடி மாமரத்தின் கிளையில் கயிற்றை எடுத்து அமர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
தான் காதலிக்கும் பெண் தன்னிடம் பேசாமல் இருந்தால் வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறியுள்ளார். இச்சம்பவம் யக்கலமுல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சந்தன ஹேவகே சம்பவ இடத்திற்குச் சென்றார்.
நிலைமையை ஆராய்ந்துவிட்டு, வெளிநாட்டில் இருந்தவரை தற்கொலை செய்யப்போகும் நபருடன் தொலைபேசியில் இணைத்து, மரத்தில் இருந்து தரையில் இறக்கி, பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் இந்த நபரின் மனநிலையை பரிசோதிக்க மனநல மருத்துவரிடம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று(31.10.2023) காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து பேருந்தில் சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பூநகரி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இன்று(30) இடம் பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று மதியம் 12மணியளவில் நாச்சிக்குடா சந்தியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஹோட்டலுக்கு முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளிளும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் மூலமாக அறிமுகமான 16 வயது பாடசாலை மாணவியுடன் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு காதலி மற்றும் அவரது 13 வயது சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக பண்ம் பெற்ற இளம் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்ஸப் மூலமாக தனது தொலைபேசியில் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கில் வைப்பு செய்ய கட்டாயப்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வடக்கில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும், குளியாபிட்டிய பிரதேசத்தை 21 வயது இளம் இராணுவ சிப்பாய் என கூறப்படுகின்றது.கைதான சிப்பாய் 16 வயது சிறுமியுடன் முகநூல் மூலமாக காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் இதுவரை சந்தித்தது இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாயிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தண்ணீர் தாங்கி வீதி, குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது 10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சென் ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் தரம் 5இல் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வீட்டில் இருந்தபோது கடந்த 21ஆம் திகதி காலை 5 மணியளவில் தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார். இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (29.) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.இதையடுத்து இடம்பெற்ற பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் திருமண நிகழ்வில் இறைச்சி உட்பட பல வகையான உணவுகளை உட்கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். உணவு உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.திருமண விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச மேற்கொண்டார்.
மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (30.10) மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரியும், அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தும் நாடு பூராகவும் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, ”20 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கு, வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.