ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணி பிரச்சினையால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தை மற்றும் மகன் இருவர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 22 வயதுடைய மகன் நேற்று முன்தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தங்கவேலு சண்தலு சந்துஷ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜப்பானில் வேலை பெறுவதற்காக அவர் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஹகுரன்கெத்த – உடவத்தகும்புரவில் கடந்த 19 ஆம் திகதி இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்களில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களுக்கு மிளகாய் பொடியை கொடுத்து தாக்கியதாக கூறப்படும் பெண் ஒருவரை ஹகுரன்கெத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இவ்விரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றதையடுத்து, கடந்த 19ஆம் திகதி இரவு பிரதான சந்தேகநபரின் வீட்டிற்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். தலைமறைவான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆண் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, தேடுதல் உத்தரவுக்கு அமைய நேற்று கடவத்தை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த போலி ஆவண நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டது.
அங்கு, 03 கணனிகள், 03 மடிக்கணினிகள், 04 பிரிண்டர்கள், 01 ஸ்கேனர்கள், போலி வைப்புச் சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், பல்வேறு கடவுச்சீட்டுகள், தூதரகத்திற்கு அனுப்பத் தயாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பல்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் ரொக்கமாக 1,187,130 ரூபாய் பணத்துடன் சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் எனவும், ஏனைய சந்தேகநபர்கள் வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசா கோரி வருபவர்களின் பெயரில் போலியான லெட்டர்ஹெட்களை பயன்படுத்தி பல்வேறு சொத்து விவரங்கள், பண வைப்பு சான்றிதழ்கள், கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அவர்கள் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகப்புத்தகத்தில் பெண் வேடமிட்டு 14 வயது சிறுவனை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு “நவோத்யா” என்ற யுவதி போல் நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு அச் சிறுவனை கம்பஹாவுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா, மகேவிட்ட பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத இச் சந்தேகநபர் தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் இவர் பிரிவெனாவில் கல்வி கற்று பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பல ஆண்களிடம் நடத்தைகளை மேற்கொண்டு அவற்றினை படம்பிடித்து, மிரட்டி பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவரால் வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுவன் தற்போது கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை பிரதான வீதியில் உள்ள உக்வத்தை மயானத்திற்கு முன்பாக, 23 வயதுடைய யுவதி ஒருவர், தான் பயணித்த அதே பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (25.06.2023) இடம்பெற்றுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புவக்பிட்டிய, அவிசாவளை, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய டொலவகே டோனா திலக்ஷி டில்ஷிகா என்ற யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழந்த யுவதி அவிசாவளையில் இருந்து குறித்த பேருந்தில் வருகை தந்து உக்வத்தை மயானத்திற்கு அருகில் இறங்கியுள்ளார்.
இதன் போது பின்னால் இயக்க முற்பட்ட அதே பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதியின் சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை நாளை (26.06.2023) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் மதியம் (26) இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (26) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மற்றும் மல்லாவி திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் சபேசன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – மல்லாவி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக வாகனம் ஒன்று மோதியே குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன்போது இரண்டு வாகனங்களும் தீபற்றி எறிந்துள்ளதாகவும் அதில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற இதே வேளை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றதுடன் எரிபொருள் பம்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
விநியோகஸ்தர்கள் குறைந்தபட்சம் 50 சதவீதஇருப்பை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு,
இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திடம் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் வவுனியா மாவட்டத்தில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றன.
டெல்லியில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்துகொண்டிருந்தது. இந்த நிலையில், கிழக்கு டெல்லியின் ப்ரீத் விஹாரைச் சேர்ந்த சாக்ஷி அஹுஜா (Sakshi Ahuja) உள்ளிட்ட 3 பெண்கள், மூன்று குழந்தைகளுடன் இன்று அதிகாலை 5:30 மணியளவில் ரயில் நிலையத்தை அடைந்தார்.
வெளியேறும் கேட் எண் ஒன்றுக்கு (Exit No-1) அருகில் வந்துகொண்டிருந்த அந்தப் பகுதியில் மழையால் தேங்கி நின்ற தண்ணீரை கடக்க, அவர் மின்கம்பத்தைப் பிடித்தபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
உடனே, அருகில் இருந்த அவரின் சகோதரி மத்வி சோப்ரா மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து சாக்ஷி அஹுஜாவின் சகோதரி மாத்வி சோப்ரா, இந்த விபத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் எனப் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் குறித்து ரயில்வே மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் தென் பகுதியிலுள்ள புவியியல் நிலை உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியமாக உள்ளதென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இருப்பதனால் இலங்கையை ஒரு பெரிய விண்வெளி போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கை மையமாகவும் சுற்றுலா மையமாகவும் மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாசாவினால் வெளிப்படுத்திய தகவலுக்கமைய, இலங்கையின் தெற்குப் பகுதியானது உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியத்தில் இருக்கும் தனித்துவமான புவியியல் நிலையைக் கொண்டிருந்தது.
பேராசிரியர் ஆதர் சி கிளார்க் முன்னர் கூறியது போல் உலகின் சிறந்த குறைந்த விலை சர்வதேச விண்வெளி துறைமுகத்தை அல்லது சர்வதேச விண்வெளி உயர்த்தியை உருவாக்க இந்த சூழ்நிலை பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆழமான அகழ்வாராய்ச்சியின் மூலம் நிலத்தடி பொக்கிஷங்களை வெளிக் கொண்டுவரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டியுள்ளார்.
விசேட அந்த பகுதிக்கு செல்லும் நபர்களுக்கு எடை குறைப்பு நிலை ஏற்படும் என்பதனால் சுகாதார சேவைகளுக்காக சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்கால வளமான முதலீட்டு வாய்ப்பை நாம் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டியுள்ள நிலையில், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முகாமைத்துவ பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மேலும் கூறுகையில்,
கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 60 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. இந்த இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செயற்படும்.
அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம், கூட்டுத்தாபனத்தில் நிலவிய வினைத்திறனின்மை மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து அகற்றியமையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறு லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்ச்சியாக விலை குறைக்கப்படும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இம்முறை விலை எவ்வளவு குறைக்கப்படும் என்ற விபரத்தை இப்போதே குறிப்பிட முடியாது என்றும் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை இம்மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியிருந்தது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயுவின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 598 ரூபாவாகவும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்தில் சிக்கி 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (26) காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புஸ்ஸல்ல ஆசிரியப் பயிற்சி நிலையத்துக்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து முன்னோக்கி நகர்ந்தமையினால் பாதை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் முன் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளும் மக்களால் முடக்கப்பட்டன.
இன்று (26.06) காலை முதல் மதியம் வரை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டிருந்தன.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப் பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள்,
விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே இக் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா பிரதேச செயலக வளாகத்தினுள் காலை 9.30 மணியளவில் கள்ளிக்குளம், தேக்கவத்தை, நெளுக்குளம், தோணிக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் போராட்ட இடத்திற்கு சென்று கேட்டறிந்ததுடன், முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொதுமக்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும், வவுனியா பிரதேச செயலாளரின் தீர்வு தமக்கு திருப்தியில்லை என தெரிவித்து காலை 10.30 மணியளவில் பிரதேச செயலகம் முன்பாக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்த மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து 11.00 மணி வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அத்துடன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் வாயிலின் முன்பாக சிங்கள கிராமத்தினை சேர்ந்த மக்களும், வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பாக கூமாங்குளம் கிராமத்தினை சேர்ந்த மக்களும் காலை 10 மணி தொடக்கம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தரப்பினரும் காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் பண்டாரவன்னியன் சதுக்கம் முன் ஒன்று கூடி வவுனியா – மன்னார் பிரதான வீதி மற்றும் ஏ9 வீதி ஆகிய இரு பிரதான வீதிகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல தடவைகள் கலந்துரையாடியும் தொடர்ந்தும் மக்கள் வீதியினை மறித்து போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து, கொக்குவெளி இராணுவ முகாம் கட்டளைத் தளபதியும் போராட்ட இடத்திற்கு வருகை தந்து வீதியை விட்டு மக்களை விலகுமாறும் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.
அதன் பின்னரும் தொடர்ந்தும் பொதுமக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் மதியம் 12.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையினுள் போராட்டகாரர்கள் உள்நுழைந்திருந்தனர்.
மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் காரியாலயம் முன்பாக ஒன்று கூடியவர்களுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர கலந்துரையாடியதுடன், அவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டார்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் ஆரம்ப பட்டியல் மாத்திரமே இது. இறுதிப்பட்டியல் இது வரை வெளியாகவில்லை. இது தொடர்பில் முறைப்பாடுகளை இணையம் மூலம் மேற்கொள்ள முடியும். அல்லது கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள்.
அவர்களிடம் வழங்குமாறும், கிராமத்திற்கு உத்தியோகத்தர்களின் விஜயம் தொடர்பான திகதியினை வெளியிடுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், அதன் பின்னரே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அரசாங்க அதிபர் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றிருந்தனர்.
குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதி மற்றும் வவுனியா- மன்னார் ஆகிய இரு பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் 2 மணித்தியாலயம் 30 நிமிடங்களாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையுடன் மாற்று வீதிகள் ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பத்தினியார் மகிளங்குளம் கிராமத்தில் நேற்று (25.06.2023) மாலை 5 மணியளவில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றினுள் இனந்தெரியாத நபரொருவர் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை திருட முயற்சித்த சமயத்தில் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டமையினையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். எனினும் குறித்த நபரை மடக்கிப்பிடித்த அயலவர்கள் நையப்புடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமையுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல தடவைகள் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் நாகலுத்துமேடு பகுதியை சேர்ந்தவர் உதயராஜ். இவருக்கு கடந்த ஆண்டு செம்டர்பர் மாதம் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகும் இளம்ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி கருவுற்றார். நிறைமாத கர்பிணியாக இருந்த அவருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்த அவருக்கு சுகபிரசவத்திற்காக செவிலியர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை 9 மணியளவில்,மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில், செவிலியர்களே ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. அதன் பின்னரே மருத்துவர் வந்து ராஜேஷ்வரியை பரிசோதித்த நிலையில், அவர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக கர்ப்பப்பையை அகற்றினால் மட்டுமே ராஜேஷ்வரியை காப்பாற்ற முடியுமென கூறினர். பின்னர் அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.
இதனையெடுத்து ராஜேஷ்வரி சுயநினைவை இழந்து ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால் ஆத்திரமுற்ற உறவினர்கள், சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையெடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார நகர்நல அலுவலர் அருள் நம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராஜேஸ்வரி பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கிருந்த ராஜேஸ்வரியின் பெற்றோர்கள், கணவர் உள்ளிட்ட யாரிடமும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னதாக எவ்வித கையெழுத்தும் பெறாமலேயே தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்தது தான் அவரது உடல்நிலை மோசமானதுக்கு காரணம் என ராஜேஸ்வரியின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
புகாரின் பேரில் போலீசார் மற்றும் மருத்துவத்தறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற அலட்சியமான போக்கு நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக பணி முடிந்து மாலையில் வழக்கம் போல் பேருந்தில் வீடு திரும்பினார்.
அப்போது இளம்பெண்ணின் பக்கத்து இருக்கையில் இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், இளம்பெண்ணிடம் சேட்டை செய்யத் தொடங்கினார். மேலும் திடீரென பெண்ணிடம் ஆபாச செய்கை காண்பித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
ஆனால் அந்த நபர் மீண்டும் வேறு கோணத்தில் நின்று கொண்டு மீண்டும் மீண்டும் ஆபாச செய்கை காட்டி தொல்லை கொடுத்ததால், ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளம்பெண் பேருந்து சென்றுக் கொண்டு இருக்கும் போதே சத்தம் போட்டுள்ளார்.
இதனால் பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், உஷாரான அந்த நபர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க முயன்றார். எனினும் பேருந்தில் பயணம் செய்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் இளம்பெண், தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் பொதுமக்களும் சேர்ந்து அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இளம்பெண் புகார் அளிக்க மறுத்ததால் அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
விசாரணையில், அவரது பெயர் லாரன்ஸ் (50) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் ராஜ்கர் கோட்டையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தர்ஷனா பவார் என்ற 26 வயதான பெண், சமீபத்தில் ரேஞ்ச் வன அதிகாரி பதவிக்கான மஹாராஷ்டிராவில் பொது சேவை ஆணையத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இந்தநிலையில் இவரது உடலானது ராஜ்கோட் அடிவாரத்தில் முற்றிலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பவாரின் உடலை மீட்டெடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்ததில், இது தற்கொலை அல்ல, கொலை என உறுதி செய்தனர். அவரது உடல் மற்றும் தலையில் ஏற்பட்ட அதிபயங்கர காயங்களால் அவர் இறந்தது தெரியவந்தது.
தர்ஷனா பவார் தேர்வில் முதலிடம் பிடித்ததால் அவரை பாராட்ட திலகர் தெருவில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளியில் உள்ள கணேஷ் ஹாலில் தனியார் அமைப்பினர் திட்டமிட்டு, கடந்த ஜூன் 10ம் தேதி பாராட்டு விழா நடத்தினர்.
கடந்த ஜூன் 9ம் தேதி நர்ஹே பகுதியில் உள்ள தோழி வீட்டில் தங்கியிருந்த பவார், ஜூன் 10ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரது தோழி வீட்டுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, பெற்றோர்கள் அவரை தொலைபேசியில் அழைக்கவே, அதை அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து, அந்த தனியார் நிறுவனத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி பெற்றோர் விசாரித்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு பவார் வெளியேறியதாக அந்த தனியார் அமைப்பு தெரிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தர்ஷனா பவாரின் பெற்றோர்கள் அன்றே சிங்ககாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஜூன் 12ம் தேதி தர்ஷனா பவார் தனது நண்பர் ராகுல் ஹந்தோருடன் ராஜ்கோட்டை பகுதியில் நடைபயிற்சி சென்றுள்ளார். இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு பைக்கில் அங்கு சென்றுள்ளனர்.
காலை 6.10 மணிக்கு ராகுல் ஹந்தோரும், தர்ஷனா பவாரும் ஒன்றாக ராஜ்கருக்குள் இருக்கும் மலைப்பகுதிக்குள் ஒன்றாக நுழைந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு காலை 10 மணிக்கு ராகுல் மட்டுமே தனியாக வந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதற்கு பிறகு ராகுல் எங்கு சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ராகுலை கண்டுபிடிக்க 5 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாசிக் மாவட்டத்தின் சின்னார் தாலுகாவை சேர்ந்த 25 வயதான ராகுல் ஹண்டோர், புனேவில் சிவில் சர்வீசஸுக்கு தயாராகி கொண்டிருந்த பட்டதாரி ஆவார்.