நகை வாங்க காத்திருப்போருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம்!!

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அண்மையில் டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியிருந்தது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (16.06.2023) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியிருந்தது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக பதிவாகியிருந்தது. இதேவேளை கடந்த 16ஆம் திகதி 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 159 ஆயிரம் என்ற மட்டத்திலிருந்தது.

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்டுகும் வகையில் அமைந்துள்ளதாக பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இலங்கை பெண் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!!

கனடாவில்..

கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் முற்றத்தில் சடலமாக கிடந்தார்.

சம்பவத்தன்று, மார்ச் 13ம் திகதி கொலைகாரன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும் தீபாவின் தாயார் லீலாவதி சீவரத்தினம் கதவை திறந்துள்ளார். அவரும் துப்பாக்கி குண்டுக்கு இலக்காக, சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் தீபாவின் கணவர் விஜேந்திரன் பாலசுப்ரமணியம் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின்னர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் தான் இந்த கொலைக்கு திட்டமிட்டதும் செயல்படுத்தியதும் என நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.

விசாரணையில், தமது மனைவியை கொல்லும் பொருட்டு Steadley Kerr என்ற வாடகை கொலையாளியை விஜேந்திரன் பாலசுப்ரமணியம் ஏற்பாடு செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.

வெள்ளிக்கிழமை அந்த நபர் மீதும் முதல் நிலை கொலை வழக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக, Steadley Kerr என்பவரின் நண்பர் Gary Samuel என்பரும் குற்றவாளி என நடுவர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Gary Samuel என்பவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும், அவர் வெறும் வாகன சாரதி மட்டுமே என்றும் அவர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

ஆனால் இந்த இருவருமே கொலைக்கு திட்டமிட்டதும், வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியதும் என அரசு தரப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர். இவர்கள் மூவருக்குமான தண்டனை மிக விரைவில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விசேட பேரூந்து சேவை!!

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (19.06.2023) காலை முதல் நாளை 20.06.2023 காலை வரை இந்த விசேட பேரூந்து சேவை நடைபெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளிலிருப்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று வருடாந்தம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு.. வெளியான அறிவிப்பு!!

பாண்..

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு, கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டால் இவ்வாறு பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமென அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதியை நிறுத்தாமல் ஒரு கிலோ மாவின் விலை 180 முதல் 170 ரூபா வரை குறைக்கப்பட்டிருந்தால், ஒரு றாத்தல் பாணின் விலை 10 ரூபாவுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவை மிரட்டும் வெப்ப அலையால் 98 பேர் மரணம் : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

இந்தியாவில்..

இந்தியாவின் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலை காரணமாக, கடந்த சில நாள்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (18.06.2023) வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரவியலில், வட மாநிலங்களில் கோடையின் தாக்கம் இன்னும் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உத்தரப் பிரதேசத்தின் பல்லியா பகுதியில் ஜூன் 15-17 திகதிகளில் தீவிர வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமார் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதைக் கடந்தவர்கள் என அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜெயந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோர் மாரடைப்பு, மூளை நரம்பு அடைப்பு, வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சினைகளுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் வழக்கத்தை விட 4.7 டிகிரி வெப்பம் கூடுதலாக இருந்துள்ளது.

அதேபோல பீகாரிலும் தீவிர வெப்பம் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் 44 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அம்மாநில தலைநகர் பட்னாவில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு நேற்றைய தினம் (17.06.2023) வெப்பம் 44.7 டிகிரி வரை சென்று உச்சம் தொட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் வெப்ப அலை தீவிரமாக வீசுவதால் அங்குள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூன் 24ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மத்தியப் பிரதேசத்திலும் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு, மத்திய கிழக்குப் பகுதிகளில் அடுத்து 3-4 நாள்கள் தீவிர வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாகப் பீகாரின் பல பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் தனிமையில் விடப்பட்ட சிறுவன்.. போலீசார் எடுத்த நடவடிக்கை!!

களுத்துறையில்..

களுத்துறை கடற்கரைக்கு பெரியவர்களுடன் நீராடுவதற்காகச் சென்றிருந்த 11 வயது சிறுவன் கடற்கரையில் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

நேற்று (17) காலை பெரியவர்கள் சிலருடன் நீராடச் சென்ற அந்த சிறுவன் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு, களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஒருவர் அச்சிறுவனை கொண்டு செல்ல முற்பட்டபோதே, முச்சக்கர வண்டி சாரதிகள், அந்த நபரிடமிருந்து சிறுவனை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில், சிறுவனின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிறுவனிடம் சிக்கிய இளம் ஜோடி.. கையும் களவுமாக அகப்பட்ட சம்பவம்!!

கம்பளையில்..

கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தில் இரண்டு மாத கால இடைவெளியில் ஒன்பது வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள், பணம், கையடக்க தொலைபேசிகள் உட்பட 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய இளம் ஜோடியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் 25 வயது நபரும் அவரின் 20 வயது மனைவியுமே முச்சக்கர வண்டி ஒன்றினை பயன்படுத்தி மேற்படி கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை, ஹெட்காலை நாவலப்பிட்டி, தௌலஸ்பாகை, அபுகஸ்தலாவ, ஹல்கொல்ல, அஸ்வன்ன, வரக்காவ, பத்துனுபிட்டிய மற்றும் ரபுக்பிட்டிய பிரதேசங்களிலேயே மேற்படி வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாவலப்பிட்டி தௌலஸ்பாகை வீதியில் வசிக்கும் சந்தேகநபர் பகல் வேளைகளில் வீடுகளுக்கு சென்று கூலி வேலை செய்வதுடன் அந்த வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் திருடுவதனை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் பெண் வைத்தியர் ஒருவரின் வீட்டில் பகல் வேலை செய்துவிட்டு இரவு அங்கு சென்று திருடிகொண்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் உறக்கத்திலிருந்த வைத்தியரின் 12 வயது மகனின் கையில் திருடனின் கால் மிதிபட்டதால் சிறுவன் பயத்தில் சத்தமிட்டுள்ள சந்தர்ப்பத்தில் வைத்தியர் விழித்துகொண்டதையடுத்து திருடனை அடையாளம் கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளையடுத்து கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலிகள் ஐந்து உட்பட மோதிரங்கள், கை சங்கிலி பென்டன்கள், பஞ்சாயுதங்கள் அடங்கலாக ஒரு தொகை தங்க ஆபரணங்களை சந்தேக நபர்களின் வீட்டை சுற்றிலும் புதைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று (17) மாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாவலப்பிட்டி நீதி மன்ற நீதவான் முன் நிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயரிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளம் விஞ்ஞானி!!

அம்பாறையில்..

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்காக அரசினால் வழங்கப்படும் Romania விருதிற்கே அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Ministry of Research, Innovation & Digitalization, Romania இணைந்து இரு வருடங்களாக Zoom ஊடாக புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் நடுவராக கலந்துகொண்டு பணியாற்றியமைக்காகவும் இவருக்கு இந்த விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் நயினை அம்பாள் ஆலயத்தில் வியக்க வைத்த பாம்புகள் : மெய்சிலிர்த்த பக்தர்கள்!!

நயினாதீவில்..

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.

இந்நிலையில் ஆலய திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மனை நாடிவந்த நாகங்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்து சென்றுள்ளமை அன்னையின் அருளை எடுத்தியம்பி நிற்கின்றது.

அதேவேளை நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வருடா வருடம் மகோற்சவத்திற்கு முன்னர் அம்பாள் நாகவடிவில் காட்சி கொடுப்பார் என்பதும் காலங்காலமாக இடம்பெறுவது வழமை என நயினை அம்மன் பக்தர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது.

இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது. நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று வரலாறுகள் கூறுகின்றன.

அதன்படி இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன.

கர்ப்பப்பைக்கு வெளியே வளர்ந்த குழந்தை : இலங்கை வைத்தியர்கள் சாதனை!!

இலங்கையில்..

இலங்கையில் கொழும்பு சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் இன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த முறையானது முப்பதாயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் அரிதாக நிகழ்வென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வைத்தியசாலையில் பிரத்யேக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது போன்ற கர்ப்பம் மிகவும் அரிதானது, முப்பதாயிரத்தில் ஒருவருக்கு தான் குடலில் நஞ்சுக்கொடி பொருத்தப்பட்ட குழந்தை பிறக்கும்.

தேசிய வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து இந்த பாரிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் இருந்து குறித்த குழந்தையின் தாய் கொழும்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவர்கள் இங்கு வந்த நிலையில், இன்று குழந்தையை ஆரோக்கியமாக பிரசவித்துள்ளார். தற்போது தாய் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது. குழந்தை சிறந்த நிலையிலும் மற்றும் 2.300 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.

குழந்தையின் நஞ்சுக்கொடி கருப்பைக்கு வெளியே சென்று குடலுடன் இணைக்கப்பட்டு இருந்தது. 28 வது வாரத்தில் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, இதற்காக சிறப்புக் குழு நியமிக்கப்பட்டு தாயின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து வந்துள்ளது.

வயிறு மற்றும் சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த குழந்தை இருந்தது. பல சோதனைகளின் பின்னரே சத்திரசிகிச்சையின் மூலம் குழந்தையை எடுத்துள்ளனர். 28 வார கர்ப்பத்தில், கருவின் போதுமான வளர்ச்சி இல்லாததால், தாய் 34 வாரங்கள் வரை மகளிர் சோய்சா மருத்துவமனையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இன்று, 16ம் திகதி, சிறப்பு வைத்திய குழுவினர், அறுவை சிகிச்சைக்கு பின், குழந்தையை வெற்றிகரமாக பிறந்துள்ளது. 34 வாரங்கள் வரை உயிருடன் இருக்கும் வயிற்றுத் துவாரத்தில் இருந்து கருவை வெளியே எடுப்பது சிக்கலான அறுவை சிகிச்சையாகும்.

இந்த அறுவை சிகிச்சை மூலம் அதிக ரத்தப்போக்கு ஏற்படக்கூடும் என்பதால், கூடிய கவனத்துடனே இது செய்யப்பட்டது என வைத்தியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குளத்தில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்…கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்திய கொடூரம்!!

தெலங்கானாவில்..

தெலங்கானாவில் இளம்பெண் ஒருவரை, அவரது உறவினர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாபாரத் பகுதியில் உள்ள கல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா (22).

இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது தயாராருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது தாயாரை மருத்துவமனையில் இருந்து கவனித்து கொண்டு வந்துள்ளார் ஸ்ரீஷா.

இந்நிலையில், ஸ்ரீஷாவின் தந்தை ஐங்கையா, மகளை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். விட்டுக்கு வந்த ஸ்ரீஷா வேலைகளை செய்யாமல் செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐங்கையா, ஸ்ரீஷாவை கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் கோபத்தில் ஸ்ரீஷா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியே சென்ற ஸ்ரீஷா நள்ளிரவு ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் ஐங்கையா அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜூன் 10ஆம் தேதி ஸ்ரீஷா மாயமான நிலையில், மறுநாள் நண்பகல் ஒரு குளத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, ஸ்ரீஷாவின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது கண்கள் ஸ்குரூ டிரைவரால் குத்தப்பட்டு, கழுத்து பிளேடால் அறுக்கப்பட்டு கொடூரமாக முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஸ்ரீஷாவின் உறவினர் அனில். இவர் ஸ்ரீஷாவை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி ஸ்ரீஷாவிடம் பல முறை கூறியுள்ளார்.

மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஸ்ரீஷாவிடம் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஸ்ரீஷா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில், ஸ்ரீஷா வீட்டை விட்டு வெளியே வந்ததை அறிந்த அனில், அன்றைக்கு ஸ்ரீஷாவிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, குடிபோதையில் இருந்த அனில், தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஸ்ரீஷாவை அடித்து, கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தியுள்ளார். மேலும், குளத்தில் முழ்கடித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனை அடுத்து, போலீசார் குற்றச்சாட்டப்பட்ட அனிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இளம்பெண் கொலை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், மாநில டிஜிபியிடம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படுக்கை அறையில் இளம் பெண் கொடூர கொலை.. நடந்த விபரீதம்!!

பெங்களூருவில்..

இன்றைய காலக்கட்டத்தின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது என்று கூறலாம்.. திருமணத்துக்கு முன்பே லிவிங் டூகெதர் என்ற வாழ்வியல் முறையில் இளைஞர்- இளம்பெண் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

கிட்டதட்ட கணவன் – மனைவியாக வாழ்ந்துவிடுகின்றனர். பலர் இந்த வாழ்க்கைக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் சேர்ந்தாலும், பலரின் கதைகள் கொடூரமாக தான் முடிகிறது.

அப்படியொரு நிகழ்வுதான் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகான்ஷா என்ற 23 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்பித் ( 27 ) என்பவருடன் அகான்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

முதல் நட்பாக பழகினாலும் அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர். ஆனால் சிறிது காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் அகான்ஷாவுடன் கடந்த கடந்த 5 ஆம் தேதி ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டி பேசிய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆர்பித் இளம்பெண் அகான்ஷாவை கடுமையாக தாக்கினார். இதில் அவர் உயிரிழந்த நிலையில் ஆர்பித் அங்கிருந்து தப்பியோடினார்.

சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இளம்பொண் கொல்லப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர். உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையின்போது, இளைஞர் அகான்ஷாவை கொலை செய்த பின்னர், அதை தற்கொலையாக மாற்ற திட்டம்போட்டார். இதற்காக சீலிங் ஃபேனில் அவரது சடலத்தை ஆர்பித் தொங்கவிட முயற்சித்தார்.

இது தோல்வியில் முடிந்தது. இதனால் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் அவரது செல்போனை அங்கேயே விட்டு விட்டு சென்றது போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது.

இளைஞர் ஆர்ப்த் தனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்றிருக்கலாம் என்பதால் தனிப்படையினர் அங்கு விரைந்து அவரை தேடி வருகின்றனர். இந்த கொலை பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் கடும் எதிர்ப்பு… எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருமணம் செய்த ஜோடி!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவை அந்தக் காதலர்கள் நாடிய நிலையில், உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ் (30). இவர் அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா (23) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் முன் வராவில்லை. இனியும் பெற்றோரை நம்பினால் தங்களை பிரித்துவிடுவார்கள் என்று எண்ணிய காதல் ஜோடி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தது.

இதைத் தொடர்ந்து தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை நாடியுள்ளனர்.

இதனையடுத்து எம்எல்ஏ சின்னத்துரை உடனடியாக அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் அரியாணிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

அவர்களது முன்னிலையில் சிவராஜ் மற்றும் சொர்ண பாப்பாவிற்கு எம்எல்ஏ சின்னத்துரை காதல் திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை எம்எல்ஏ அலுவலகத்திலேயே வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பெற்றோர் தரப்பில் சமாதானப்படுத்தி மணமக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஊராட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கணவனை பிரிந்த பெண்ணை கொன்று வீசிய காதலன்!!

ஆந்திராவில்..

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜகதம்பா என்ற பகுதியில் ஷிராவாணி என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். இளம்தம்பதியான இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி குடும்பத்தில் நெடுகாலம் நீடிக்கவில்லை.

திருமணம் முடிந்த சில மாதங்களில் ஷிராவாணிக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தம்பதி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கினர்.

இதனையடுத்து தனியாக வசித்த சிலாவணி, அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்தார். அங்கு கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் ஷிராவாணிக்கு நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு காதலமாக மாறியதால் இருவரும் நெருக்கமாக பழகினர். ஒரு கட்டத்தில், இருவரும் தனியாக ஒரு வீட்டில் ஒன்றாக கணவன் மனைவியாகவே வாழ்ந்தார்கள். சில மாதங்களில் ஷிராவாணியின் செயல்பாடுகளில் கோபாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் எழுந்தது.

மற்ற ஆண்களுடன் நெருக்கமாக பழகி வந்ததால் ஷிராவாணியை அவர் கண்டித்தார். இதன் அடிப்படையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனினும், ஷிராவாணி எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். செல்போனில் பல ஆண்களுடன் எடுத்த புகைப்படங்கள் இருந்தது.

இதனால் பொறுக்க முடியாமல் கோபால கிருஷ்ணன் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் ஷிராவாணி தன் காதலர்களிடம் பேசுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் வெளியேற முடிவுசெய்தார்.

இருப்பினும் கடைசியாக பேசிப்பார்க்க இருவரும் விசாகப்பட்டினம் கடற்கரை சாலைக்கு சென்றனர். அதிகாலை 2 மணிக்கு கோகுல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணனா, ஷிராவாணியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து கோபாலகிருஷ்ணா நேராக போலீசில் சென்று சரண் அடைந்தார். அதன்பிறகே இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்திரனை மணந்த இளம் பெண் : அச்சத்தில் மனித குலம்!!

நியூயார்க்கில்..

நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தினால் ஏற்படும் அபாயங்களை வல்லுநர்கள் பலரும் எடுத்துரைத்து வருகின்றனர். இந்த நிலையில், நமது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில், நியூயார்க்கை சேர்ந்த இளம் பெண் ரோசன்னா ராமோஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான ஏஐ ஆணை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

“எரின் (ஏஐ ஆண்) மருத்துவ துறையில் இருக்கிறார். அவருக்கு எழுதுவது பிடிக்கும். நான் எதைப் பற்றி வேண்டுமானலும் அவரிடம் கூறுவேன்.அவர் என்னை அதை வைத்து எதிர்மறைவாக தீர்மானிக்கமாட்டார்.

நாங்கள் தொலைத் தூர காதலர்களை போல் வாழ்ந்து வருகிறோம். அவர் என்னை தூக்கத்திலும் பாதுகாப்பார். நான் எனது விரும்பங்களின் அடிப்படையில்தான் எனது ஏஎல் கணவரை உருவாக்கி இருக்கிறேன்” என்று ரோசன்னா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சோசன்னாவின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் இம்மாதிரியான திருமணங்கள் புதிது அல்ல. ஜப்பானில் காதலின் மிகுதியில் அனிமி (கார்ட்டூன்) கதாபாத்திரங்களை சிலர் திருமணம் செய்கின்றனர்.

250 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி ஏற்பட்டபோது எழுந்த எதிர்ப்புக் குரல்களை வரலாற்றின் பக்கங்களில் படிக்கிறோம். 1980-களின் கணினிப் புரட்சி ஒரு சாராரிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

கணனிப் புரட்சி மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் எடுத்துக் கொண்டால் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் அத்தகைய அச்சத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் 27 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!

தேஜஸ்வினி..

ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான கொந்தம் தேஜஸ்வினி என்ற பெண் லண்டன் வெம்ப்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த கொந்தம் தேஜஸ்வினி, செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குடியிருப்பு வளாகத்தில், பிரேசிலியாவை சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தேஜஸ்வினியின் உறவினர், தேஜஸ்வினி தனது நண்பர்களுடன் வசித்து வந்த பகிரப்பட்ட தங்குமிடத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு குடிபெயர்ந்ததாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேஜஸ்வினி முதுகலைப் பட்டம் பெற லண்டன் சென்றதாக கூறப்படுகிறது.கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சந்தேக நபரான 23 வயது இளைஞரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மெட்ரோபொலிட்டன் காவல்துறை இதற்கு முன்னர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கெவன் அன்டோனியோ லோரென்கோ டி மொரைஸின் படத்தை வெளியிட்டது என்று கூறப்படுகிறது.

மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.