மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்தலத்திலேயே இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

மன்னாரில்..

மன்னாரில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியிலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து நேற்று (21.08.2023) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மனோகரன் நிசாந்தன் பேசாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தனது கிராமமான தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றுடன் மோதி இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற் கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு அழகியை கரம்பிடித்த தமிழ் இளைஞன்.. பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் கடலூரை சேர்ந்த இளைஞனுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் எம்.பி.ஏ பட்டதாரி.

இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இத்திருமண வைபத்தில் பிலிப்பைன்ஸ், கடலூர், சிங்கப்பூரில் உள்ள அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூரில் இருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி சேலை அணிந்து திருமணத்தில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பத்மநாபன் எம்பிஏ முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுடன் நட்பு ஏற்பட்டது.

இது நாளைடைவில் காதலாக மாறியது, பின் இருவரும் ஒரு வருடமாக காதலித்தது வந்து நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பத்மநாபன் குவாங்கோவின் பெற்றோர்களிடம் தங்கள் காதலை சொல்லி முழு சம்மதம் வாங்கிய பின்பு திருமணத்தை தமிழ் கலாச்சார இந்து முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் நடத்தினர்.

இவர்களது திருமணத்தை மணப்பெண்ணின் பெற்றோர்கள் வயது முதிர்வு காரணமாக ஆன்லைன் வீடியோ மூலமாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்.. 11 நாட்கள் போராட்டம்!!

பிரேசில்லில்..

பிரேசில் நாட்டில் ரிச்சாவ் தாஸ் நேவ்சில் வசித்து வந்தவர் ரோசங்கலா அல்மேடா தாஸ் சாண்டோஸ் .இவருக்கு வயது 37. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டதாக நினைத்து அவரை குடும்ப வழக்கப்படி உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்தனர்.

ரோசங்கலா அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன பிறகு அந்த வழியாக சென்றவர் கல்லறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் உள்ளிருந்து சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்கிறது என உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

ரோசங்கலாவின் உறவினர்கள் கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தனர். அந்த சவப்பெட்டியைத் திறந்த போது, ரோசங்கலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது இருந்ததை காட்டிலும் வேறுமாதிரியாக இருந்தது. உடல் திருப்பி இருந்த நிலைய்ல் மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு கீழே கிடந்தது.

கைகளிலும் நெற்றியிலும் இரத்தம் வடிந்து இருந்தது. சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஆணி மேல் நோக்கித் தள்ளப்பட்டு இருந்தது. ரோசங்கலாவின் உடலில் சூடும் இருந்தது .

ஆச்சர்யம் அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரோசங்கலா சிறிது நேரத்திற்கு முன்பு தான் உயிரிழந்துள்ளார்.

சமீபத்தில் தான் அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரோசங்கலா உயிரிழந்ததாக தவறுதலாக முடிவு செய்து அவரை அடக்கம் செய்ததை நினைத்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவருக்கு சுயநினைவு வந்ததும், சவப்பெட்டியின் மூடியைக் கையாலும் நெற்றியாலும் முட்டித் திறக்க முயன்று இருக்கலாம். அதனால் தான் அவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 11 நாட்களாக ரோசங்கலா சவப்பெட்டிக்குள் இருந்து வெளியேற முயன்று கடைசியில் உயிரிழந்து விட்டார். இது தெரிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தனர்.

பணிப்பெண்ணாக சென்ற பெண் உயிரிழந்ததை தெரியப்படுத்தாத பயண முகவர்: வெளிவரும் பல அதிர்ச்சித் தகவல்கள்!!

ஹட்டனில்..

கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன்-டிக்கோயா,பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வறுமை காரணமாக கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக இவர் சென்றுள்ளார். இந்த வருடம் 2023.04.05 ஆம் திகதி வரை அவர் தங்களுடன் தொலைப்பேசி ஊடாக தொடர்புகளை பேணியதாகவும் அதன் பிறகு அவரின் தொலைபேசியுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது போயுள்ளதாகவும் அவரது அத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், பயண முகவருடன் தொடர்புகளை மேற்கொண்ட போது, மே மாதம் 8ஆம் திகதியே தினகேஸ்வரி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐந்தாம் மாதம் முதல் தாம் இவரின் இறப்பு தொடர்பாக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு அமைச்சு, பயண முகவர், சவுதி தூதரகம் என அனைத்து இடங்களுக்கு சென்று வந்த போதும், இதுவரை தமக்கு தினகேஸ்வரியின் மரணம் தொடர்பாக எவ்வித உண்மைகளையும் தெரிந்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

தனது மருமகளின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 10 இலட்சம் ரூபாய் கேட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க தமக்கு எவ்வித உதவியும் இல்லை எனத் தெரிவித்துள்ள குறித்த பெண்ணின் அத்தை,

தனது மருமகளின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை சுற்றுலா விசா மூலமே இவர் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதும் இவரின் கடவுச்சீட்டில் இவரின் அப்பாவின் பெயரான ராஜேந்திரன் என்பதற்கு பதிலாக தாத்தாவின் பெயரான சாமிநாதன் சேர்க்கப்பட்டு தினகேஸ்வரி சாமிநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தினகேஸ்வரி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே தமக்கு தெரியவந்ததாகவும் அவரின் அத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழில் திருடர்களுக்கு பயந்து குப்பைக்குள் வீசப்பட்ட தங்க நகைகள் : சுகாதாரப் பகுதியினரின் நெகிழ்ச்சி செயல்!!

யாழில்..

யாழ். சாவகச்சேரியில் குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் 8 பவுண் தங்க நகைகள் நகரசபை குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (21.08.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட நகரசபை நிர்வாக அதிகாரி
இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகரசபை சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.

அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார். இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று பிரதம நிர்வாக அதிகாரி செ.அனுசியாவிடம் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகரசபை நிர்வாக அதிகாரி மற்றும் நகரசபை சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்களான பா.தயாகரன், மற்றும் பா.நிஷாந்தன் ஆகியோர் நகரசபை கழிவு சேகரிக்கும் இடத்திற்கு எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொழிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நகரசபை சுகாதார பகுதினரின் நேர்மையான விரைந்த செயல்பாடு நகரசபை குடியிருப்பாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி நிலையில் மன்னாரில் சாதனை படைத்த சிறுநீரக சிகிச்சைப் பிரிவு!!

மன்னாரில்..

நாடளாவிய ரீதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவினை முழுமையாக பயன்படுத்துமாறு வைத்தியசாலையின் சிறுநீரக நோயியல் வைத்தியர் சிசில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சிறுநீரக நோயுடன் தொடர்புடைய அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலை வைத்தியர் ஊடாக தங்களது சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவின் சிகிச்சையை பொது மக்கள் பெற முடியும்.

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள்,சிறுநீரக சிதைவு,சிறுநீரக செயலிழப்பு உள்ளடங்களாக சிறு நீரகங்களுடன் தொடர்புடைய அதிகளவான நோய் காரணிகள் அதிகரித்துள்ளதுடன் இதன் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளும் இவ்வாறான மரண அதிகரிப்புக்கு காரணங்களாக அமைகின்றன.

மனித உடலில் சிறுநீரகமானது சாதாரண நிலையில் 10 சென்றி மீற்றர் அளவு கொண்டிருக்கும் போது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சாதாரணமாக மேற்கொள்ளும்.

இருப்பினும் உணவு பழக்கவழக்கம் அன்றாட நடவடிக்கைகள் நீரிழிவு,உயர் குருதி அமுக்கம் போன்ற நோய் காரணங்களால் சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பினால் அவ் சிறுநீரகங்கள் சிறிதாவதுடன் அதன் செயற்பாடுகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது.

குறிப்பாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் போது பொதுவாக உடலினால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் செயற்பாடானது முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் வெளியேற வேண்டிய கழிவுகள் அனைத்தும் உடலில் சேகரிக்கப்பட்டு விடுகின்றது.

இவ்வாறு உடலினுள் சேகரிக்கப்படும் கழிவுகள் இரத்தத்திலும் உடலில் உள்ள பாகங்களிலும் நுரையீரல் உட்பட வயிற்று பகுதியில் தேங்கும் போது உடல் வீக்கம், சோர்வு ,மயக்கம்,மூச்சுத்திணறல் உள்ளடங்களாக பல்வேறு நோய் அறிகுறிகள் தோற்றம் பெறுவதுடன் சிலர் கழிவுகள் அதிகம் சேகரிக்கப்படிகின்றமையினால் மரணத்திற்கும் உள்ளாகின்றனர்.

இவ்வாறான நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை முழுமையான தீர்வாக காணப்படுகின்ற போதும் பொருத்தமான சிறுநீரகங்கள் கிடைப்பதென்பது அரிதிலும் அரிது.

இவ்வாறான நிலையில் சிறுநீரக நோயாளர்களை நோய் நிலையில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த முறை அவர்களின் குருதியில் காணப்படும் கழிவுகளை அகற்றும் குருதி சுத்திகரிப்பு முறையாகும்.

இவ்வாறான சிறந்த குருதி சுத்திகரிப்பு முறையை ஐந்து வருடங்களாக சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள மன்னார் குருதி சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு.

வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர் மல்ஷா கீழ் இயங்கும் மன்னார் குருதி சிகிச்சை பிரிவின் கீழ் தற்போது 60 சிறுநீரக நோயாளர்கள் சிறப்பான சிகிச்சையை பெற்று வருகின்றனர் என்பதுடன் சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக குறைந்துள்ளது.

குறிப்பாக மருந்து தட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் கடந்து உள்ளூர் மற்றும் வெளியூர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் விதமாக குறித்த சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 2018 க்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இன்மையால் பல சிறுநீரக நோயாளிகள் தங்கள் சாதாரண சிகிச்சைக்காக கூட மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம்
ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை காணப்பட்டது.

அதிலும் அவசர நோயாளர்கள் பலர் சிகிச்சை நிலையங்களுக்கு மன்னாரில் இருந்து அனுப்பப்படுவதற்கு முன் பல உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த கசப்பான அனுபவங்களும் உண்டு.

இதை விட கடந்த 2017 ஆண்டு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவர் இரத்த சுத்தீகரிப்புக்கு சிகிச்சைக்காக அனுராதபுரம் சென்று திரும்பிய நிலையில் பேருந்து தரிப்பிடத்தில் இறந்த சம்பவம் மன்னாரில் பதிவாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகிச்சை நிலையத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக் கூடிய விதத்தில் அக்காலப்பகுதியில் வைத்தியசாலையில் காணப்பட்ட வளங்களை கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு சாதாரண இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது அப் பிரிவின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அர்பணிப்பின் காரணமாக 60 நோயாளிகளை பராமரிக்க கூடிய அளவில் சிறந்த சிகிச்சையை மன்னார் சிறுநீரக குருதி மாற்று சிகிச்சை பிரிவு வழங்கி வருகிறது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய 140 கிராமங்களை சேர்ந்த மக்களும் பயனடையும் வகையில் இந்த சிகிச்சை பிரிவு தனது சிகிச்சையின் தரத்தை அதிகரித்துள்ளது. அதே நேரம் இவ் சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிறுநீரக நோய் காரணமாக மரணம் அடைவோர் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

வாரத்தில் ஏழு நாட்களும் இந்த பிரிவு சேவையாற்றுவதுடன் ஒரு சிறுநீரக நோயாளி கட்டாயம் கிழமைக்கு 2 அல்லது 3 முறை இவ் நிலையத்திற்கு வருகை தந்து இரத்த சுத்திகரிப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளது.

சாதாரணமாக ஒரு நோயாளிக்கு இரத்த சுத்தீகரிப்புக்கு நான்கு மணித்தியாலங்கள் தேவைப்படும் நிலையில் மாதத்திற்கு குறைந்தது 500 தடவைகள் சுத்திகரிப்பு செயற்பாடுகள் இவ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இவை தவிர்த்து பாம்பு கடி ,சலரோகம்,சிறுநீர் கிருமி தொற்று போன்ற நோய் காரணமாக வைத்தியசாலை சிகிச்சைக்காக வருகை தரும் அவசர நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு சேவையையும் இவ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.

சாதாரண அடிப்படை வசதிகள் இன்றி ஆரம்பிக்கப்பட்ட இந்த சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் கிழமை 140 நபர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 20 நபர்களுக்கு சிகிச்சை வழங்க கூடிய நிலையில் வளர்ச்சியடைந்துள்ளது.

வெறுமனே மன்னார் மாவட்ட சிறுநீரக நோயாளர்கள் மாத்திரமின்றி வெளிமாவட்ட சிறுநீரக நோயாளர்களும் பயன் பெறும் வகையில் அந்த பிரிவின் வைத்தியர்கள்,தாதியர்களின் ஒத்துழைப்பில் இச்சிகிச்சை நிலையம் வளர்சியடைந்துள்ளதுடன் ஒரே நேரத்தில் 8 நபர்கள் குருதி சிகிச்சையை பெறும் அளவுக்கான கொள்ளளவை கொண்டுள்ளது.

மருந்து பொருட்களின் விலையேற்றம் வாழ்க்கை செலவுகள் உட்பட அனைத்து அதிகரித்துள்ள நிலையில் மக்களின் செலவை குறித்து அவர்களுக்கு திருப்தியான சேவையை வழங்குவதற்கான மேலதிக வாய்ப்புக்களையும் வளங்களையும் இவ் சிகிச்சை பிரிவின் வைத்தியர்கள் தேடி வருகின்றனர்.

சர்வதேச தரம் மிக்க சிகிச்சையையும் ஒரே நேரத்தில் 20 மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வாய்ப்புகளை இப்பிரிவினர் உருவாக்க காத்திருக்கின்றனர்.

இவ்வாறான சிகிச்சை பிரிவு மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றது சிறப்பே.இவ் சிகிச்சை பிரிவின் வளர்சிக்காக நன் கொடைகளையோ அல்லது மருத்துவ உதவிகளையோ சிகிச்சை உபகரணங்களுக்கான உதவிகளை வழங்க கூடியவர்கள் வழங்க முன் வருவது காலத்தின் தேவையாகும் என தெவிவித்துள்ளார்.

கிளிநொச்சில் விபத்துக்குள்ளான ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சனி எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் மோட்டார் வண்டடியில் வட்டக்கச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நகர் ஏ9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போது எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளாகிய ஆசிரியர் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் பங்கையற்ச்செல்வனின் சகோதரி என்றும் வட்டகச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.

விபத்தின் போது படுகாயமடைந்த ஆசிரியர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய தொலைக்காட்சியில் பலரையும் கண்கலங்க வைத்த ஈழத்துச் சிறுமி!!

இலங்கையில்..

இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி ஒட்டுமொத்த உலக வாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழினை சேர்ந்த சிறுமி கில்மிசா இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி “கண்டா வரச்சொல்லுங்கள்” என்ற பாடலை பாடி அரங்கத்தினையே உருக வைத்துள்ளார்.ஈழப்போரில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி 30 வருடகால ஈழ யுத்த வலியை உலகளவில் சிறுமி கில்மிசா கொண்டு சேர்த்துள்ளார்.

இதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பலருக்காகவும் 2 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.குறித்த சிறுமிக்கு சினிமாவில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பினையும் இந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் வழங்கியுள்ளதுடன், பாடலாசிரியர் சினேகன் பல உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் 162 நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மீண்டும் ஒருமுறை மதிப்பளிக்கும் வகையில் சிறுமியின் பாடல் அமைந்துள்ளதாகவும் பாடகர் சினேகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈழத்தில் கில்மிசாவை போன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது தந்தையர்கள்,தாய்மார்கள்,மாமாக்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் உறவுகளாகவே உள்ளனர் என கவிஞர் தீபச்செல்வனும்யுத்த கால வரலாற்றினை இதன்போது பகிர்ந்துள்ளார்.

உயிர் தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

நுவரெலியாவில்..

நுவரெலியாவில் குளவி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.நுவரெலியா, பம்பரகலை பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி தாக்கியதில் இருந்து தப்பிக்க மேலும் மூவருடன் ஓடும் போது குறித்த மாணவன் பாறையில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் என தெரியவந்துள்ளது.

நுவரெலியா பொலிஸார் நுவரெலியா மாநகர தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் குளவி கொட்டுக்கு இலக்காகி சுருண்டு விழுந்த மாணவனை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் திருமணமாகி இரு வாரங்களில் நடந்த விபத்து : கணவன் ஸ்தலத்தில் பலி : மனைவி வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தில்..

கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விபத்துக்குள்ளான தம்பதி திருமணம் செய்து இரண்டு வாரங்கள் என தெரியவந்துள்ளது.கோர விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ9 வீதியில் செம்மணி வளைவிற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளும், தண்ணீர் பவுசரும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.திருமணம் செய்து 2 வாரங்களான நிலையில் உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் 31 வயதான மனோஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபானம் அருந்திவிட்டு பாடசாலைக்கு சமுகமளித்த மாணவி!!

கெக்கிறாவயில்..

கெக்கிறாவயில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இது தொடர்பில் எவரேனும் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருப்பின் அது தொடர்பான சந்தேகநபரை கைது செய்யுமாறும் கெக்கிறாவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமி தொடர்பில் விசேட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

கெக்கிறாவ கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு சமூகமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் அவர் பயிலும் பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் மதுபானம் அருந்தி விட்டு சிறுமி பாடசாலைக்கு சமுகமளித்துள்ளதை கண்டறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் அச் சிறுமியின் தாத்தாவினால் அவர் மதுபானம் அருந்துவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கம்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.08.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 612,158 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,600 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 151,200 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 குழந்தைகள் துடிதுடித்து பலியான சோகம்.. கதறித் துடித்த பெற்றோர்!!

சென்னையில்..

இனி வரப்போறது மழைக்காலம் தான். மழையோட கொசுவும் வந்து நம்மை வச்சு செய்யப்போகுது. ஆனால் மக்களே கொசுவை விரட்டி விடுறதல கவனமா இருங்க. கொசு விரட்டி பானத்தை நைட் முழுசும் போட்டுவிட்டு தூங்க போயிடுவோம். இதனால் சில விபரீதங்களும் ஏற்படலாம்.

சென்னை மணலி அடுத்துள்ள மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் வசித்து வருபவர் உடையார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு பிரியதரிதா, சங்கீதா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உடையார், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் கே.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செல்வி, தனது கணவருக்கு துணையாக மருத்துவமனையில் தங்கியுள்ள நிலையில், மகள்களை அவரது தாயார் சந்தானலட்சுமி கவனித்து வந்தார். இரவு உடையாரின் மகள்கள் மற்றும் அவரது தங்கை மகள் பவித்ரா பாட்டியுடன் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது வீட்டில் கொசு விரட்டுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கொசுவிரட்டி தீப்பற்றி உருகி, அருகில் இருந்த அட்டைப்பெட்டிகளில் பட்டு தீ பரவியது. தொடர்ந்து வீடு முழுவதும் புகை சூழ்ந்து நச்சுவாயு வெளியேறிய நிலையில், 3 சிறுமிகளும், மூதாட்டியும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை உடையாரின் சகோதரி அவர்களை எழுப்ப சென்றபோது வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மாதவரம் பால் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமிகள் 3 பேரும், மூதாட்டியும் உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில்..

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315.31 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை 330.31 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330.82 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 312.75 மற்றும் 328 ரூபாவாக மாறாமல் உள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 317 மற்றும் 328 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் வீதியில் கிடந்த பெருந்தொகை தங்கம், சொத்துப் பத்திரங்கள் : தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மாத்தறையில்..

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலில் கிடந்த பையை சோதனையிட்டதில் 50 லட்சம் ரூபாய்வுக்கும் அதிகமான பெறுமதியான நகைகள் உள்ளிட்ட பொருட்கள் ரயில் பாதுகாப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கட்டுகஸ்தோட்டை குஹாகொட பகுதியைச் சேர்ந்த லக்சிறி சம்பத் மற்றும் அவரது மனைவி ஹிருணி நிமாஷா ஆகியோர் ரயிலில் பையை மறந்து சென்றுள்ளனர்.தம்பதியினர் கண்டியிலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் கண்டிக்கு இந்த ரயிலில் வந்துள்ளனர்.

ரயிலில் அமர்ந்திருந்த போது அவர்களது பயணப் பைகள் சில இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டு கோட்டையிலிருந்து இறங்கும் போது பையை எடுக்க மறந்து விட்டனர்.இந்நிலையில் மாத்தறை ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அலுவலகத்தின் சோதனையின் போது, ​​பாதுகாப்பு அதிகாரிகள் பையை கண்டுபிடித்து மாளிகாவத்தை ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பையில், 3 பவுன் தங்க நெக்லஸ், பிரேஸ்லட், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன், 35 லட்சம் ரூபாய் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் உரிமம் உள்ளிட்ட தங்க பொருட்கள் இருந்தன.ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் காமினி திஸாநாயக்கவின் தலையீட்டில் இந்த பையின் உரிமையாளரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பையில் இருந்த வங்கிப் புத்தகத்தின் முகவரியைக் கண்டுபிடித்த உதவிப் பாதுகாப்பு அதிகாரியால் தங்கம் உள்ளிட்ட பொருட்களை உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தென்னிலங்கையில் நடந்த கோர விபத்து.. தாயும் மகளும் பரிதாபமாக பலி!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம் – விலாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.ஜெயந்தி சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண் ராஜாங்கனை 10ம் ராஹுல் வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.மதவாச்சியை சேர்ந்த 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.