யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இச் சம்பவம் கடந்த ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இதனை அந்த பாடசாலையின் நிர்வாகத்தினர் வெளியே தெரியாமல் மூடி மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.அதனடிப்படையில் சதாசிவம் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (04-08-2023) அந்த ஆசிரியரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து, நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த ஆசிரியருக்கு பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மனித பாவனைக்கு தகுதியற்ற இவ்வகை செமன் மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் நிதி முகாமையாளர் வசந்தகுமார ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன் மனித பாவனைக்கு தகுதியற்றது என தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.நீதிமன்ற உத்தரவை மீறி இந்த வகை செமன் வேறு லேபிள்களில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகை செமன் மீன்களை தனியாகவும், டின்களை தனியாகவும் புதைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை வேறு லேபிளில் எப்படி சந்தைக்கு வந்தது என தெரியவில்லை.
இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் 28.03.2021ஆம் திகதி அன்று உற்பத்தி செய்யப்பட்டது. காலாவதி திகதி 28.03.2024 என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் அதன் லேபிளும் மாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (07.08) தெரிவித்தனர்.
வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வீதிகளில் செல்வோரிடம் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்களால் கடந்த 6 மாதங்களாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வவுனியாவின் நெளுக்குளம், பம்பைமடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளில் செல்வோரை வழிமறித்து சங்கிலி அறுக்கப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும், தம்பனை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி அறுக்கப்டபட்டதாக பறயனாலங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்திருந்த நிலையில் பறையனாலங்குளம், தம்பனை பகுதியில் சங்கிலி அறுத்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் பீ.அம்பாவில வழிகாட்டுதலில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திருல்பெல தலைமையிலான பொலிசாரும்,
பறையனாலங்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கசூன இணைந்து முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சம்பவங்களை ஒரு குழு திட்டமிட்டு மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அக்குழுவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த குற்றச் செயல்களை செய்ய பயன்படுத்திய கார் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
தம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், குட்செட் வீதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒருவருமாக 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முறைப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, பொலிசாரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – மஹியங்கனை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லெட் ஒன்றில் காணப்பட்ட மனித விரல் தொடர்பில் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இன்று (07) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி வைத்தியசாலையின் பெண் ஊழியர் ஒருவர் சொக்லெட்டை கொள்வனவு செய்து, அதில் ஒரு பகுதியை சாப்பிட்டு மீதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
அதன் பின்னர் நேற்றுமுன்தினம் (05) மீண்டும் சாப்பிட்ட போது ஏதோ கடினமாக இருந்துள்ளதை அவதானித்துள்ளார். குறித்த சொக்லெட் “பழம் மற்றும் விதை” (Fruit & Nut) வகையைச் சேர்ந்தது என்பதால், அது உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நினைத்து கடிக்கும்போது அது கடிபடவவில்லை.
இதனையடுத்து அந்தப் பகுதியை எடுத்து நீர் குழாயில் பிடித்துக் கழுவிய போது, அது மனித விரல் என தெரிந்ததை அடுத்து அப்பெண் உரக்கக் கத்தி அருவருப்பினால் அவர் வாந்தி எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சக ஊழியர்கள் நடந்ததை கேட்டு, வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவித்ததை அடுத்து, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு (MOH) அவர்கள் அறிவித்துள்ளனர். விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லெட் பொதியையும் அதனுடன் இணைந்த அனைத்து தொகுதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து இன்றையதினம் (07) சம்பவத்துடன் தொடர்புடைய சொக்லெட் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக மஹியங்கனை நீதிமன்றில் அறிக்கையிட்டு அதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்க மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொதுச் சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை சொக்லெட்டில் மனித விரல் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த காதலர்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த விபத்தில் காதலி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காதலன் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலபேயில் வசிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பிரதிநிதியான கோஷனி அலோக்யா என்ற 25 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதலர்கள் இருவரும் பாதுக்க பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு கொடகமவில் இருந்து மாலம்பே நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இதன் போது பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீதி திருத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில், முன்னால் வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றவுடன் இருவரும் அணிந்திருந்த ஹெல்மட்கள் கீழே விழுந்துள்ளன. இதனால் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் வலது கால், வலது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய இந்த காதலர்கள் இருவரும் எதிர்வரும் ஒரிரு நாளில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்த இருவர் எனவும் தெரியவந்துள்ளது.நிச்சயதார்த்த தேவைக்காக திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் விபத்திற்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ஷ்டலாப சீட்டில் ஏழரை கோடி ரூபா பணப்பரிசு பெற்ற நபரை கடத்தி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த நபரை கடத்தி சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட நபரை அவர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளனர்.
பணப் பரிசை வெற்றி பெற்ற, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கடத்தப்பட்டு கம்பளையில் உள்ள வீடொன்றில் பத்து நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,”கடந்த மாதம் 27ஆம் திகதி தம்புள்ளையில் வைத்து என்னை காரில் கடத்தினார்கள். பின்னர் வீடொன்றில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள்.கழிவறைக்கு செல்லும் போதும் இரண்டு பக்கமும் இரண்டு பேர் வருவார்கள். இவ்வாறு சுமார் 10 பேர் சேர்ந்து என்னை சித்திரவதை செய்தார்கள்.அதிர்ஷ்டலாப சீட்டில் வெற்றி பெற்ற பணம் எங்கே இருக்கிறது என்பதை காண்பிக்க சொன்னார்கள்.
குருநாகலைச் சேர்ந்த ஒரு கந்துவட்டிக்காரன் வந்து, இருபத்தி இரண்டு கோடி கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டான்.”என தெரிவித்துள்ளார்.மேலும் கடத்தல் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒலிபரப்பாகும் பிரபல பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் இலங்கை, மலையகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கலந்து கொண்டுள்ளமை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கண்டி – புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த அசானி என்ற சிறுமி தனது பாடும் திறமையால் குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னரும், தனது பாடசாலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகத் திறமையாக பாடல் பாடியுள்ளதுடன், அது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.
இந்தநிலையில், சிறுமியின் திறமையை அறிந்து கொண்ட பாடசாலை சமூகம், சிறுமி வசிக்கும் பிரதேசத்தில் உள்ளவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து, சிறுமியின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையிலும் உதவி புரிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஒலிபரப்பாகும் பிரபல போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் ஊர்மக்கள் உள்ளிட்டோர் இணைந்து பணம் திரட்டி சிறுமி அசானியை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இன்றையதினம் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் சிறுமி பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அந்த பாடலைத் தொடர்ந்து நடுவர்களாக இருந்த பாடகர்கள் குழாம் அடுத்து வரும் இரு வாரங்களிலும் தொடர்ந்து பாடும் வாய்ப்பை சிறுமி அசானிக்கு வழங்கியுள்ளனர்.
இதேவேளை, சரியான வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் கிடைக்காமை காரணமாக தனது திறமையை வெளிப்படுத்த களம் தேடிக் கொண்டிருந்த சிறுமியை ஊர் மக்கள் இணைந்து கடல் தாண்டிச் சென்று பாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
புத்தளம் – மதுரங்குளி நகருக்கு அருகில் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இருவர் படுகாயமடைந்த புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த சுரேந்திர அனுருத்திக 26 வயதுடைய என்ற இளைஞன் என தகவலறியப்பட்டுள்ளது.படுகாயமடைந்து வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் சாலியவெவ பிரதேசத்தைச் சார்ந்தவராவார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் திசை நோக்கி பயணித்த போது எதிர்திசையில் கவனக்குறைவாக பயணித்த லொறியொன்று முந்திச் செல்ல தயாரான போது மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த லொறி மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு திசை நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் உடனடியாக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். லொறியின் சாரதி மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இந்த தீர்மானமானது ஒவ்வொரு பாடசாலையிலும் முதலாம் தரம் முதல் உயர்தரம் (தரம் 13) வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒவ்வொரு பாசாலையிலும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடசாலையின் சுமையை குறைக்கும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை தவணைப் பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா, ஒருதொட்ட வீதியில் பயணித்த பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி, அதனை விழுங்கிய நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த நபர் விசாரணையின் போது அதனை விழுங்கியுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்களின் தங்க நகையை பறித்து செல்ல முயற்சித்துள்ளனர். இதன் போது அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகேவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அந்த நகையை வெளியில் எடுப்பதற்காக சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லட் பொதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன், நாளைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்படவுள்ளது.
மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாப்பாணம், அரியாலை பகுதியிலேயே இவ்வாறு இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்று (5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியாலை, நெடுங்குளத்தை சேர்ந்த திலீபன் ஈழப்பிரியா (27) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் ஒன்றரை வயது பிள்ளையின் தாய் என தெரிய வந்துள்ளது. கணவனுக்கு அதிக கடன் தொல்லையென்றும், அவர் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தங்கி நிற்பதாகவும், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பெண் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிசார் முன்னிலையில் கடவுச் சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. கடவுச் சீட்டு புதுப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடவுட்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த குறித்த நபர் தனக்கு பின்னர் அன்றைய தினம் விண்ணப்பித்தவர்களுக்கு கடவுச் சீட்டு முன்னர் வழங்கப்பட்டாமையால் தனது கடவுச் சீட்டு ஏன் இன்னும் வரவில்லை என உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த அலுவலகத்தில் நின்ற பொலிசாரை தள்ளி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொலிசார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நபரை தாக்கி கை கட்டப்பட்டு நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
பொலிசார் தகாத வார்த்தைகளை பேசி குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர். அத்துடன், பொலிசாருக்கு சார்பாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த கடவுச் சீட்டு அலுவலகம் முன்பாக இடம் பிடித்து கொடுத்தும், கடவுச் சீட்டை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் மாபியா கும்பலை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
இதேவேளை, அரச கடமைக்கு இனையூறு விளைவித்ததாக குறித்த நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் உள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.காதல் முறிவு காரணமாக விரக்தியில் சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உஸ்கல சியம்பலங்காமுவ கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சில வாரங்களுக்கு முன்னர் மாணவன் ஒருவருடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.சம்பவத்திற்கு தொடர்புடைய குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்து சிறுவர் சீர்த்திருந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தின் பின்னர் வீடு திரும்பிய சிறுமி விபரீத முடிவை எடுத்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வில் நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.இதனால் 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கு தலா 1500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றின் 6 பாடசாலை மாணவர்களுக்கு அபராதம் விதித்த நீதவான் இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
காதலன் என்று கூறப்படும் சந்தேகத்திற்குரிய மாணவன் அதே வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்த நிலையில் பிரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்நிலையில் மாணவியின் பிறந்த நாள் அன்று அவரின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பியுள்ளார்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306 ஆவது பிரிவின்படி அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், குறித்த மாணவர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.