இந்திய மாநிலம் தெலங்கானாவில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டதால் தங்கையை அவரது அண்ணன் உலக்கையால் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மிரா சிந்து (21). இவர் அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். தன்னுடைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஆனால் இது அவரது 22 வயது சகோதரர் (அண்ணன்) ஹரிலால் கண்டித்தார். சிலமுறை தங்கையிடம் இதுபோன்று வீடியோக்களை பதிவிட வேண்டாம் என அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
எனினும் அஜ்மிரா அவரது பேச்சை கேட்காமல் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிலால் உலக்கையால் தங்கையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்து அஜ்மிரா மயக்கமடைந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த அஜ்மிராவின் தாய், மகன் மீது அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் ஹரிலாலை கைது செய்துள்ளனர்.
இந்திய மாணவன் ஒருவர் 50 இலட்சம் இந்திய ரூபா (இலங்கை ரூபாவில் சுமார் 2 கோடி ரூபா) சம்பளத்திற்குக் கூகுளின் வேலை வாய்ப்பை பெற்று, வளர்ந்துவரும் மாணவர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம்-புனே பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர் (Harshal Juikar) என்னும் இளம் பட்டதாரி மாணவனுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
புனே பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர், அதே நகரத்தில் உள்ள எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் (MIT World Peace University) எம்.எஸ்.சி. பிளாக்செயின் டெக்னாலஜி (M.Sc in Blockchain Technology) படிப்பை முடித்துள்ளார்.படிக்கும்போதே, இவரது அதீத திறமையால், கூகுள் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா சயின்டிஸ்ட் (Junior Data Scientist) இன்டர்ன்ஷிப்புக்கு தெரிவாகியுள்ளார்.
இதையடுத்து, 1.5 ஆண்டுகள் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் இவரது திறமையும், தொழில்நுட்பம் மீதான அவரது ஆர்வமும் அவருக்குக் கூகுள் நிறுவனத்துடைய நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
அதன்பின் படிப்பை முடித்த அவருக்கு எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் கூகுள் நிறுவனம் நடத்திய பல்கலைக்கழக நேர்முகத் பரீட்சையில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹர்ஷல் ஜூய்கர், அந்த நிறுவனத்தின் டேட்டா சயின்டிஸ்ட் பணியிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் ஹர்ஷல் ஜூய்கர் கூறியுள்ளதாவது, அது, எனக்குக் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவு அளித்த எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்துக்கு, நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இவர்களின் உதவி இல்லாமல், இந்த குறிப்பிடத்தக்கச் சாதனை சாத்தியமாகியிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் படித்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவிக்குமார் சிட்னிஸ் கூறுகையில், “ஹர்ஷலின் சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
அவரது, இந்த வெற்றியானது, எங்களது கல்வி நிறுவத்தின் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். அதே நேரத்தில், படித்து வரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், புதுமையான கலாச்சாரத்தில் நுழைவதற்கும் இந்த வெற்றி உத்வேகமாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.ஹர்ஷல் ஜூய்கருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இலங்கையர்கள் தங்களின் கண்களை 117 நாடுகளில் உள்ள பார்வையற்றோருக்கா தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார்.
ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் உள்ளவர்களுக்கே கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நேற்று முன்தினம் வரை 57 நாடுகளைச் சேர்ந்த 1767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கையில் உள்ள கண் வைத்தியர்களின் பரிந்துரைகளின்படி, 541 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர்.
மேலும், இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு அதிகூடிய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், 22 இலட்சம் இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ச்சியாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ் உரும்பிராயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததுள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (31.07.2023) தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் (31.07.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை-மஹியங்கனை பகுதியில் கால்வாயிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மஹியங்கனை, பதியத்தலாவை 5 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாார்.
குறித்த இளைஞர் தனது காதலியை பார்வையிட, தல்தென பகுதிக்கு நேற்று வருகை தந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதலியின் வீட்டிலிருந்து,
சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயிலேயே அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக அழைத்து செல்லப்படவிருந்த 43 இலங்கை பிரஜைகளை ஜோர்தான் பாதுகாப்பு துறையினர் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு குறித்த இலங்கை பிரஜைகளை கடத்தும் முயற்சியை ஜோர்தான் பாதுகாப்பு துறையினர் முறியடித்துள்ளனர்.
இதேவேளை ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.குறித்த இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் ஜோர்தான் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 24 மணிநேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசா உத்தரவிட்டார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டனர்.
இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம்குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இறந்த பெண்ணின் கணவனான ச.சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 26ம் திகதி உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வாளர்கள், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் வவுனியா பிரிவு பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன் இச் சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை வவுனியா பிரிவிற்கான குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று (31.07.2023) கைது செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும் , தாக்குதலுக்காக கொண்டு வரப்பட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒர் கோடாரி அப்பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாகவும்,
கைது செய்யப்பட்ட ஜந்து சந்தேகநபர்கள் வவுனியா, தவுசிக்குளம், நெளுக்குளம், சிவபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 27 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசாவின் இல்லத்தில் பொலிஸார் இன்று (01.08.2023) மாலை ஆஜர்படுத்தியமையுடன் சந்தேகநபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர். இதன் போது 24 மணிநேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டமையுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார். அவர் அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
கடமையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்தது. சம்பவ இடத்திலேயே கணவரான 34 வயதான ஆசிரி விஜேசுந்தர உயிரிழந்துள்ளதாகவும் கிரியெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கணவர் தேசிய தொலைக்காட்சியில் பணிபுரிகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொகுசு ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதுடன் மற்றுமொரு காரிலும் மோதுண்டமையினால் அதில் பயணித்த பெண் ஒருவரும் சிறு குழந்தையும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவிருந்த நிலையில், கணவரின் சடலம் கிரியெல்ல நெடுன் விஹாரை வீதியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது அதிவேகமாக செலுத்தி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு ஜீப்பை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய சாரதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சுமார் 18 பயணிகள் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் ஆபத்தான நிலையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மற்றையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். எதிர்திசையில் பயணித்த பேருந்திற்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸ் நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 100 பயணிகள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தின் சாரதி வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, தோணிக்கல் சுற்றுவட்டார வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (31.07) புகுந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் வாள்கள் மற்றும் தடிகளால் தாக்கி, வீட்டிற்கு தீவைத்து, தம்பதியர் கொல்லப்பட்டதுடன், எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் சுமார் பத்து பேர் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், தாக்குதலுக்காக கொண்டுவரப்பட்ட வாள்கள் மற்றும் பொல்லுகள் அப்பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா ஓமந்தையில் வசிக்கும் பாத்திமா சமீமா சாஹிடின் (வயது 21) மற்றும் அவரது கணவர் சந்திரகுலசிங்கம் சுகந்தன் (வயது 35) ஆகிய இருவருமே சந்தேகநபர்கள் தாக்கி வீட்டுக்கு தீ வைத்ததில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி அதிகாலை அந்த வீட்டினுடைய வர்த்தகர் ஒருவரின் மூத்த மகளின் பிறந்தநாள் விழாவின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் பின்னர் வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் பதுங்கியிருந்த நபர்களிடம் பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் எரியக்கூடிய பொருட்களை போத்தல்கள் மற்றும் போத்தல்களில் எடுத்துச் சென்று வீட்டினுள் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ள வவுனியா பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா, தவுசிக்குளம், நெளுக்குளம், சிவபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 27 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு லீட்டர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.
மலேசியாவைச் சேர்ந்த ப்ரெவினா ஆறுமுகம் (28) எனும் தமிழ் வம்சாவளி பெண், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து எரிசக்தி மற்றும் பூமி வளங்கள் (EER) பெல்லோஷிப் பெறும் ஒரே தென்கிழக்கு ஆசியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
குவாந்தன், பகாங்-ல் பிறந்த, கோலாலம்பூரைச் சேர்ந்த ப்ரெவினா ஆறுமுகம், இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் ஜாக்சன் ஸ்கூல் ஆஃப் ஜியோசயின்ஸால் வழங்கப்படும் 25 உலகளாவிய விருது பெற்றவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.
மற்றவர்கள் பிரேசில், கொலம்பியா, நைஜீரியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். பிரீவினா தனது 18-மாத முதுநிலை அறிவியல் (ஆற்றல் மற்றும் பூமி வளங்கள்) திட்டத்தை ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறார்.
குறிப்பாக STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் முதல் மலேசிய பங்கேற்பாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நிதி உத்தரவாதத்தைப் பெற்று பெல்லோஷிப்பை வழங்குவது ஒரு மரியாதை என்று அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பத்தில் பிறந்த ப்ரெவினா, உயர்கல்வி பயில பல தடைகளை எதிர்கொண்டார். அவரது தந்தை ஆறுமுகம் சாமிநாதன், 68, பென்குருசன் ஏர் பஹாங் பெர்ஹாட் நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாக RM1,500க்கும் குறைவாகவே சம்பாதித்தார்.
இருப்பினும், அசைக்க முடியாத உறுதியுடன், அவர் தனது படிப்பிலும் கல்வித் தேடலிலும் சிறந்து விளங்குவதற்கான அனைத்து முரண்பாடுகளையும் மீறினார். 2012-ல், சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) தேர்வில் ப்ரெவினா 9A+s மற்றும் 1A மதிப்பெண்களைப் பெற்றார்.
அவர் நீண்ட தூர ஓட்டத்தில் முன்னாள் சுக்மா (மலேசியா விளையாட்டு) வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். யயாசன் பஹாங்கின் மென்டேரி பெசார் உதவித்தொகையுடன், அவர் பேராக்கின் ட்ரோனோவில் உள்ள யுனிவர்சிட்டி டெக்னாலஜி பெட்ரோனாஸில் பெட்ரோலியம் புவி அறிவியல் படிப்பைத் தொடர்ந்தார்.
“நான் எப்பொழுதும் ஒரு விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன், அதுவே புவி இயற்பியலில் எனது படிப்பைத் தொடர என்னைத் தூண்டியது. எனவே, நான் புவி அறிவியலைப் பற்றி கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நாசாவில் (NASA) புவி இயற்பியலாளராக பணிபுரிய வேண்டும் என்று நான் எப்போதும் கனவு காண்கிறேன்,” என்று ப்ரெவினா கூறினார்.
EER பெல்லோஷிப்பைப் பெற்ற ஒரே மலேசியா என்ற பெருமையையும் உற்சாகத்தையும் ப்ரெவினா பெற்றுள்ளார். தடைகளை உடைத்து புதிய துறைகளைக் கற்றுக்கொள்வதால் அதிகமான பெண்கள் STEM துறைகளைத் தொடர வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பித்த ப்ரெவினா, “எம்பிஏ போன்ற அனுபவத்தைத் தேடும் புவியியலாளர்கள் அல்லது என்னைப் போன்ற பொது மனப்பான்மை கொண்ட நபர்களுக்கு இந்தத் திட்டத்தை ஒரு சிறந்த வாய்ப்பாக நான் உணர்கிறேன்.
அமெரிக்காவில் தனது படிப்பைத் தொடர தனது முழுநேர வேலையை விட்டுவிட்டு, ப்ரீவினா வரவிருக்கும் சாகசத்தைப் பற்றி உற்சாகமாக இருக்கிறார்.
லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்றைய தினம் (30-07-2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, இன்று மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஏராளமான பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயதான சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறுநீர்த் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, சிறுவனின் இடது சிறுநீரகத்தில் இருந்த குறைபாடு காரணமாக அவனது இடது சிறுநீரகத்தை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
சத்திர சிகிச்சைக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் இடது பக்க சிறுநீரகம் 9 வீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 வீதமும் செயற்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செயலிழந்து இருக்கும் இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை கடந்த வருடம், (24.12.2022) அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சையை மருத்துவர் மலிக் சமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் மருத்துவர் நவீன் விஜயகோன் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவனுக்கு சிறுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஸ்கேன் பரிசோதனையில் இரு சிறுசீரகங்களும் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டிருந்த இடது பக்க சிறுநீரகத்துடன் வலது பக்க சிறுநீரகமும் தவறுதலாக அகற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவனுக்கு எப்படியாவது சிறுநீரகம் ஒன்றை பொருத்தி அவனை குணப்படுத்துவதாக அந்த மருத்துவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இயந்திரத்தின் உதவியுடன் கடுமையான வலிகளுடன் சிறுவன் கடந்த 7 மாதங்களை கடத்தியுள்ளார்.
இருப்பினும், குறித்த விவகாரத்தை வெளியே கசிய விட வேண்டாம், தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று மருத்துவர்கள் வழங்கிய வாக்குறுதியை ஹம்தியின் பெற்றோர் முழுமையாக நம்பி இருந்துள்ளனர்.
அதன் பிரகாரம் அவர்கள் மருத்துவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். நாட்கள் செல்ல செல்ல மருத்துவர்கள் வழங்கியது வெறும் பொய் வாக்குறுதிகள் என்பது தெரியவந்தது. குறித்த சிறுவன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை மாலை சிறுவன் ஹம்தி உயிரிழந்தார்.
ஒரு வார காலமாக “கோமா” நிலையிலிருந்த சிறுவன், விஷக் கிருமி உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மரணம் என வழமையாக விடுக்கும் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.
வைத்தியசாலையின் இந்த செயற்பாடு தகவல் கிடைத்தவுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விபரங்களை எடுத்துக் கூறினர்.
அதனையடுத்து இந்த விடயம் இலங்கை ஊடகங்களில் பேசுபொருளானது. ஊடகங்கள் சிறுவனுக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன் மருத்துவமனை பணிப்பாளர், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிறுவனின் சிறுநீரகங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இரு சிறுநீரகங்களும் வெவ்வேறாக இல்லாமல் அதன் கீழ் பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலை Horseshoe என்று அழைக்கப்படுகிறது.மருத்துவமனை பணிப்பாளர் கூறுவது போன்ற அமைப்பில் சிறுவனின் சிறுநீரகங்கள் இருக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ பரிசோதனை அறிக்கைள் சான்றுகளாக இருக்கின்றன்றன.
அவ்வாறு சிறுநீரகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்து அவை அகற்றப்பட்டிருந்தால், சத்திர சிகிச்சையின் பின்னர் மருத்துவ (Histopathology) பரிசோதனைக்கு இடது பக்க சிறுநீரகம் மட்டும் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கான விளக்கத்தை மருத்துவமனையின் பணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டுமென சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த 25ம் திகதி டிசம்பர் மாதம் 2022 அன்று எடுக்கப்பட்ட குறித்த பெத்தொலொஜி அறிக்கையில் சிறுவனின் அகற்றப்பட்ட இடது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் மட்டுமே இருக்கின்றன.வலது பக்க சிறுநீரகம் தொடர்பான எந்த தகவல்களும் அந்த மருத்துவ அறிக்கையில் இல்லை.
அப்படி இரண்டு சிறுநீரகங்கள் ஒன்றாக இணைந்திருந்து சத்திரசிகிச்சையின் போது தவறுதலாகவோ, தவிர்க்க முடியாமலோ அகற்றப்பட்டிருந்தால் அது பற்றி மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அப்படியான குறிப்புகள் ஏதும் அவற்றில் இல்லை.இந்த நிலையில் சிறுவனின் சடலத்தை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து சனிக்கிழமை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோருடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஊடகவியலாளர் அஷ்ரப் அலீ தொடர்புகளை ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவ்வாறான நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று மாலை சிறுவனின் ஜனாசா விடுவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, மருத்துவக் கவுன்சில், சுகாதார அமைச்சு ஆகியவற்றில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைக் காரணமாக படகில் புறப்பட்டு இந்திய எல்லைப்பகுதியான தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை அகதிகளாக இன்று திங்கட்கிழமை (31.07.2023) காலை சென்றடைந்துள்ளனர்.
தகவல் அறிந்தப் பொலிஸார் அவர்களை மீட்டு மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் எனவும் தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் எனவும் தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற 5 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலி கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டுகளை பயன்படுத்தி இன்று (31.07.2023) காலை ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவருடன் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் நான்கு இளைஞர்கள் ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவர்களிடம் காணப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்ப்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான செயற்பாடும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நோய்பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையினால் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விளக்கமறியலில் உள்ள கைதிகளின் நீதிமன்ற தவணைகளுக்கு புதிய திகதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில வழக்குகள் நிகழ்நிலை தொழில்நுட்ப உதவியுடன் இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை வவுனியா சிறைச்சாலையில் இடவசதி பற்றாக்குறை நீண்டகாலமாக உள்ளதுடன் அளவுக்கதிகமான கைதிகள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.