தாலிக்கொடியை களவாடிய ஆசிரியை கைது!!

புத்தளத்தில்..

புத்தளம் – உடப்பு பகுதியில் சக ஆசிரியை ஒருவரின் தாலிக் கொடியை களவாடியதாக மற்றுமொரு ஆசிரியையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடியொன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

தாலிக்கொடியை அணிந்திருந்த ஆசிரியையின் கழுத்தில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தாலிக்கொடியை கழற்றி பணப்பையில் வைத்து விட்டு கற்பிக்கச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதிபர் அழைத்த காரணத்தினால் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ஆசிரியை, மீண்டும் வகுப்பறைக்கு சென்று பணப்பையில் வைத்த தாலிக்கொடியை தேடியுள்ளார்.

இதன்போது பணப்பையில் தாலிக்கொடி இல்லை என்பதனை அறிந்துகொண்ட ஆசிரியை இது குறித்து அதிபருக்கு அறிவித்துள்ளார்.அதிபர் வகுப்பறையில் மாணவர்களிடம் விசாரணை செய்த போது, சக ஆசிரியை ஒருவர் பணப்பையை திறந்து தாலிக்கொடியை எடுத்துச் சென்றார் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதிபர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.சந்கேதத்திற்கிடமான ஆசிரியையிடம் பொலிஸார் நீண்ட விசாரணை நடத்திய போது, தாலிக்கொடி மற்றும் ஒர் தங்க சங்கலி என்பனவற்றை தாம் களவாடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பாடசாலை வளாகத்தில் ஒர் இடத்தில் கைகளினாலேயே குழி பறித்து அதில் இந்த ஆபரணங்களை மறைத்து வைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.பின்னர் சந்தேகத்திற்குரிய ஆசிரியை கைது செய்த பொலிஸார், ஆசிரியையை புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் மகனின் துணையுடன் தந்தை அரங்கேற்றிய கொடூரம்!!

பதுளையில்..

பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன் மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பெண் கொலை செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது.தந்தை , மகன் மற்றும் தாய்க்கு இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரான கணவர் மனைவியை தாக்கிவிட்டு பின்னர் மூத்த மகனின் உதவியுடன் சடலத்தை தோட்டத்தில் புதைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பெண்ணின் 70 வயது கணவர் மற்றும் அவர்களது 26 வயதான மூத்த மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநங்கையை திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

பாட்னாவில்..

பீகார் மாநிலம் பாட்னாவில் டானாபூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிகா சவுத்ரி சிங் என்ற திருநங்கையை சந்தித்துள்ளார். அதிகா சவுத்ரி பீகாரின் தர்பங்கா நகரைச் சேர்ந்தவர்.

இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் காதலித்து வந்தது ரவிக்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது.

அவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகா சவுத்ரியை சந்திக்கக்கூடாது, காதலிக்கக் கூடாது என்று கூறி ரவிக்குமாரை மிரட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25ஆம் தேதி உள்ளூர் கோயில் ஒன்றில் வைத்து, ரவிக்குமார், அதிகா சவுத்ரி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. திருமணம் முடிந்தவுடன் இருவரும் ரவிக்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ரவிக்குமாரின் தந்தை சத்யேந்திர சிங், தாய் மற்றும் மூத்த சகோதரர் தஞ்சய் சிங் மூவரும் சேர்ந்து, இருவரையும் அடித்து வெளியே துரத்தியுள்ளனர். இதையடுத்து, இருவரும் வேறு பகுதிக்கு சென்று குடியிருந்துள்ளனர்.

இந்தச் சூழலில், கடந்த 13ஆம் தேதி ரவிக்குமார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. ரவிக்குமார் அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார்.

இந்த நிலையில், ரவிக்குமார் நேற்று(ஜூலை 25) தனது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது டானாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநங்கையை திருமணம் செய்ததற்காக தனது பெற்றோர் மற்றும் சகோதரர் தன்னை மிரட்டுவதாகவும், அண்மையில் தன்னை கொல்ல முயற்சி நடந்துள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புகாரில் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவிக்குமார் கூறும்போது, “நான் திருமணம் செய்வதற்கு முன்னரே எனது இணையரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு முறை அதிகாவை சந்தியுங்கள், எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று என் பெற்றோரிடம் கேட்டேன்.

ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். என் பெற்றோர் என்னை அடித்தார்கள், என் சகோதரர் என்னை மிரட்டுகிறார்” என்றார்.மேலும், ரவிக்குமாரின் குடும்பத்தினர் 60 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்பதாக அதிகா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தகராறில் இளைஞன் வெட்டிக் கொலை : போலீசார் தீவிர விசாரணை!!

தமிழ்நாடு..

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் ஏற்பட்ட கொலை என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க திசையன்விளை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலையில் மோப்ப நாயுடன் துப்பு துலக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டம் இட்ட மொழி ஊரைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சுதாவின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்பையும் மீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளன்று மதியம் 2:30 மணிக்கு அப்புவிளை சாமிதாஸ் நகரில் உள்ள முத்தையாவின் வீட்டிற்கு சென்று முத்தையாவை நேரில் சந்தித்துள்ளார் சுதா.

பின்னர் நான்கு முப்பது மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சுதாவை இட்ட மொழியில் கொண்டு விட்டு விட்டு திசையன்விளை வந்துள்ளார். பின்னர் இரவு 8 மணி அளவில் செல்போனில் பேசிக் கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே வந்தவர் இரவு 9:30 மணி ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் முத்தையாவின் சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்புறங்களில் தேடி உள்ளனர்.

அப்போது காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் முத்தையாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை எஸ்.பி.யான சிலம்பரசன், வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை சுதாவின் உறவினர் வீடுகள் அமைந்துள்ள இட்டமொழி படப்பார்குளம் பகுதிகளில் தேடி வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய் உதவியுடன் கொலை சம்பவம் நடைபெற்ற காரம்பாடு பகுதியிலும் காவல்துறையினர் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் ஏற்பட்ட கொலை என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க திசையன்விளை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29.07) காலை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த இடத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞருக்கு அருகே கட்டுத் துப்பாக்கியும் அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிலும் காணப்பட்ட நிலையில்,

இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை தொடர்கின்றமையுடன் அதே கிராமத்தினை சேர்ந்த 21வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

12 வயது மாணவனை கொன்று வீசிய 18 வயது இளைஞன்.. பதறவைத்த சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 12 வயது மாணவனை 18 வயது கல்லூரி மாணவன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ்.

இவரது மகன் மணிகண்டன், 7ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த 20ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளான்.

அங்கு திருவிழா முடிந்து பல மணிநேரமாகியும் மணிகண்டன் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் தேடி அலைந்துள்ளனர். அப்போது தான் அருகில் உள்ள குளத்தில் மணிகண்டன் பிணமாக கிடந்தது தெரியவந்தது, உடனடியாக அவனை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முடிவில், கழுத்தை நெறித்து மணிகண்டனை யாரோ கொலை செய்தது கண்டறியப்பட்டது, யார் இதை செய்திருப்பார்? என்ன காரணம்? என பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவன் ராகுல் குற்றவாளி என கண்டறியப்பட்டது.

மணிகண்டன் அடிக்கடி பாட்டி வீட்டுக்கு வரும் போது ராகுல் அறிமுகமாகியுள்ளார், இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில், மணிகண்டன் தனது தோழனிடம் ராகுலின் சகோதரியை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ராகுல், மணிகண்டனை கொலை செய்த திட்டமிட்டார், இதன்படி சம்பவதினத்தன்று தனியாக இருந்த மணிகண்டனை தன்னுடன் வருமாறு அழைத்து சென்று கழுத்தை நெறித்து குளத்தில் மூழ்கடித்து கொன்றுள்ளார். இதனைதொடர்ந்து ராகுலை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பொலிஸ் அலுவலர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி,‘‘இலங்கையைச் சேர்ந்த லூயிஸ் டி சொய்ஸா என்பவர், பிரித்தானியா பொலிஸ் அலுவலரான சார்ஜன்ட் மாட் ரதனா என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.54 வயதான குறித்த பொலிஸ் அலுவலர், சொய்ஸாவை கைது செய்ய தயாரானபோதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

2020 செப்டம்பர் 25ஆம் திகதியன்று சொய்ஸாவை வீதியில் வைத்து தடுத்த, பொலிஸ் அதிகாரிகள் வெடிமருந்துகளையும் கஞ்சாவையும் அவரிடம் இருந்து கண்டெடுத்துள்ளனர்.எனினும் அவரின் கைக்குக் கீழே மறைத்து வைத்திருந்த ஆறு தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியை பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சொய்ஸாவின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்த போதும், தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த அவரது துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியை நோக்கி சுட்டார் என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று(28.07.2023) பிரித்தானியாவின் நோர்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில், சொய்ஸாவுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கொழும்பில்..

ஹைலெவல் வீதி மீகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்று கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு சென்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடிபோதையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ஆனந்த கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் ஹெட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த வினிது சத்சர என்பவரே உயிரிழந்துள்ளார். சிறுவனின் தந்தை மற்றும் காரை ஓட்டிச் சென்றவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : வாளை பறித்து திருடனை வெட்டிய வீட்டு உரிமையாளர்!!

வவுனியா – நொச்சுமோட்டையில் வீடொன்றில் புகுந்து திருட முற்பட்ட அடையாளம் தெரியாத குழுவொன்றை, வீட்டு உரிமையாளர் அவர்களின் வாளை பறித்து பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அடையாளம் தெரியாத குழுவொன்று குறித்த வீட்டில் புகுந்து நேற்று (27.07.2023) இரவு அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தம்பதியினர் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

100 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து வியப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்!!

ஜேர்மன் பிரஜை..

ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார்.ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது.

சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய ஜோர்ஜ் சீலன் 1971 ஆம் ஆண்டு 19 வயது இளைஞனாக முதன்முறையாக இலங்கைக்கு வந்தார்.அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் இந்நாட்டுக்கு வந்துள்ளார்.திருமணமாகாத ஜோர்ஜ் சீலன் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இலங்கையின் வீதி அமைப்பு தற்போது மிகவும் முன்னேறியுள்ளது. இலங்கை அன்றைய காலத்தை விட மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது. நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்சிலிருந்து இலங்கை வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாதனை தமிழன்!!

பிரான்சில்..

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் இன்றைய தினம் (28.07.2023) இலங்கை வருகின்றார்.

பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார்.

“La meilleure baguette de Paris”என்பது இந்த போட்டியின் பெயராகும். இது தமிழில் ‘பாரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.30 ஆவது முறையாக இடம்பெறும் இந்த போட்டியில், இந்தமுறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம் மிக்க baguette போட்டிக்கு பாணைத் தயாரித்து அனுப்பியிருந்தனர்.

இதில் தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து,முதலிடத்தைப் பிடித்திருந்ததுடன் வெற்றி பரிசாக 4000 யூரோவை பணப்பரிசாகவும் பெற்றிருந்தார்.அத்துடன் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியது.

2009ஆம் ஆண்டு முதல் அவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.இந்தநிலையில் இன்றைய தினம் (28) இலங்கை வரும் அவர் அரச மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணின் உற்பத்தி மற்றும் அதன் தனித்துவம் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அது சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குவதே தமது இலக்காகும் என தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை இலங்கையர்கள் அதிரடியாக நாடு கடத்தல்!!

குவைத்தில்..

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ் குவைத்தில் நாடு கடத்தப்பட்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் 59 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனவும் மீதமுள்ள மூன்று பேர் ஆண் பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக விடுதிகளில் தங்கி, பல்வேறு பணியிடங்களில் மாதந்தோறும் பணிபுரியும் இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

250 குவைத் தினார் சம்பளம் பெற்று விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர் என்று அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இலங்கையில் உள்ள குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், சுகவீனம், வயோதிபம் போன்ற காரணங்களால் இலங்கைக்கு வருவதற்காக இலங்கை தூதரகத்தில் இவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தற்போது 2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் பதிவு செய்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன்றங்களுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் பணியாற்றி வருகின்றது. அவர்களுக்கான தற்காலிக கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


நாட்டை விட்டு அனுப்பியது. இக்குழுவினர் இன்று காலை 5 மணியளவில் குவைத் நாட்டில் இருந்து அல் ஜசீரா விமானம் ஜே.-9555 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

மொனராகலையில்..

மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இன்றைய தினம் (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர ஆகிய பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உறவினர்களான இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு : பல்வேறு சேவைகளும் ஸ்தம்பிதம்!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (28.07.2023) முன்னெடுக்கப்பட்டுவரும் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்புக்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள மனிதபுதைக்குழி விவகாரத்திற்கு நீதிக்கோரியும் அதற்கு, சர்வதேசநிபுணர்களின் கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தால் குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்தவகையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன்,மொத்த வியாபாரசந்தையின் செயற்பாடுகள்ளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையினை முன்னெடுத்திருந்தது.

குறிப்பாக நகருக்கு வருகைதந்த பொதுமக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்பட்டது. இதேவேளை அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், சேவைகளை பெற்றுக்கொள்ள சென்ற பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.

பாடசாலைகள் வழமைபோல திறக்கப்பட்டிருந்த நிலையில்,மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டிருந்தது

யாழில் மூதாட்டியின் சடலத்தைக் காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம், தென்மராட்சி – மட்டுவில் வடக்கில் தனித்து வாழ்ந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வடக்கு வீதிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் சிறிய வீட்டில் வசித்து வந்த தம்பையா சறோசா (வயது 82) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (27.07.2023) மட்டுவில் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அருகில் உள்ள பால் சாலைக்குச் சென்று திரும்பும்போது மூதாட்டியின் நாய் பெண்ணின் ஆடையைப் பிடித்து மூதாட்டியின் வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

வீட்டினுள் மூதாட்டி சடலமாகக் காணப்பட்டதை அடுத்து அந்தப் பெண் மட்டுவில் வடக்கு கிராம அலுவலருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிராம அலுவலர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கோப்பாய் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.மூதாட்டி உயிரிழந்து 3 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று மூதாட்டியின் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட அடையாளமும், கையில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உடல் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து மூதாட்டியின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

புத்தளத்தில் மாயமான இரட்டைச் சிறுமிகள் தொடர்பில் வெளியான தகவல்..!

புத்தளத்தில்..

புத்தளம் – முந்தலம பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பிரதேசமொன்றில் 15 வயதுடைய இரண்டு இரட்டைச் சிறுமிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல்(25.07.2023) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக முந்தலம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுமியர் தொடர்பில் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முந்தலகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாயமான சிறுமிகளின் நண்பர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுடன் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்வதாகவும், அந்த பயணத்திற்கு செல்வதற்கு தாயாரிடம் அனுமதி கேட்டதாகவும் தாய் அனுமதி வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமிகள் தமது தாயாரிடம் 500 ரூபாவை கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை தாய் வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.