நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

தாம்பரத்தில்..

தற்கொலை செய்வதற்காக இளைஞர் ஒருவர் நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதிக்க முயன்றபோது, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அமைந்துள்ளது மாந்தோப்பு. இங்கு தனது குடும்பத்துடன் டேனியல் என்ற 23 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.

இந்த சூழலில் நேற்றும் வழக்கம்போல் இவரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன ஆறுதலுக்காக பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனது நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கே மணிகண்டனும் இவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் நண்பர்களுடன் சேர்ந்து முதல் மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார் இளைஞர் டேனியல். இதையடுத்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக நண்பரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. எனவே முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய கீழே குதித்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பிகளுக்கு இடையே சிக்கிய டேனியல் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். டேனியல் கீழே குதித்ததை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பதறியடித்து இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மின்சார துறையினர் மூலம் உடனடியாக மின்சாரமும் நிறுத்தப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டேனியலை மீட்டு தீயனைப்பு வாகனத்தின் மீதே சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் டேனியல் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்வதற்காக தனது நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயர் அழுத்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது தாம்பரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மனைவி , மகளை கொன்று தானும் தற்கொலை முயற்சி.. கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில்..

சென்னையை அடுத்த தாழம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 32வயது அரவிந்த் . இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அரவிந்த்துக்கு 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அரவிந்த் முடிவு செய்தார். அவருடைய 7வயது மகள் ஐஸ்வர்யாவுக்கும் , மனைவிக்கும் மாத்திரை கொடுத்துவிட்டார்.

இதன் பிறகு மனைவியின் வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்தார். அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் அறுத்து கொண்டார்.

உறவினர்கள் அரவிந்த்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையிலும் இருந்தனர்.

போலீசார் உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்தால் மகனுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பி பேருந்து முன் பாய்ந்த தாய்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

சேலத்தில்..

சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவில் வசித்து வருபவர் 46 வயது பாப்பாத்தி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜூலை 28ம் தேதி காலை, 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிடி கேமராவை ஆய்வு செய்த போது, சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பேருந்தில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடி சென்று உள்ளார்.

திடீரென குறுக்கே வந்த டூவீலர் அவர் மீது மோதியதில் பாப்பாத்தி கீழே விழுந்ததும், அதன் பிறகு 2வதாக வந்த பேருந்தின் முன்பு ஓடிச்சென்று, விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனே, ஓடி பேருந்து முன்பு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் உருக்கமான தகவல் வெளியானது. மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45000 செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதற்காக அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டு உள்ளார்.

அப்போது யாரோ சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும், மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் வேலை மகனுக்கு கிடைக்கும் என கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாப்பாத்தி ஓடும் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தங்கை உயிரிழந்த சோகம்… விபரீத முடிவெடுத்த அண்ணன் மற்றும் அக்கா… உடலைக் கூட வாங்க வராத உறவினர்கள்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன் மற்றும் அக்காவும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் அண்ணன் தங்கைகளான பாபு, உஷா பார்வதி, ஸ்ரீ தேவி.

இவர்களது பெற்றோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் குடும்ப வருமை காரணமாக மூவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது மூவரும் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்தது கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து உடல்களை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாபுவின் தங்கை உஷா பார்வதி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாமல் பாபுவும், ஸ்ரீ தேவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை வாங்க உறவினர்கள் முன்வராததால் மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா டிரஸ்ட் உதவியுடன் மூவரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொலை செய்த மகன்!!

சென்னையில்..

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முக ராஜா பகுதியில் வசித்து வருபவர் 55 வயது பாலசுப்பிரமணியன் . இவரது மனைவி 48 வயது சுப்புலட்சுமி . இவர்களுக்கு 28 வயதில் சுமித்ரா என்ற மகளும் 23 வயதில் ஜபரீஷ் என்ற மகனும் உள்ளனர்.

இவர்களுக்குள் சொத்து பிரச்சனை காரணமாக குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் தாய், மகன், மகள் மூவரும் பாலசுப்பிரமணியை வீட்டில் அனுமதிக்காமல் இருந்து வந்தனர்.

அத்துடன் குடிபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி தினமும் குடித்து விட்டு தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் கடந்த ஒரு வருடகாலமாக பாலசுப்பிரமணி குடும்பத்தில் இருந்து பிரிந்து வீட்டின் கீழ் நடைபாதையில் வசித்து வந்தார்.

நேற்று சுமித்ராவுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால் இதனால் தம்பி ஜபரீஷ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இருவரும் வீடு திரும்பியதும் குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி சகோதரி சுமித்ராவை பற்றி அவதூறாக பேசி ஆபாசமாக திட்டினார்.

ஆத்திரமடைந்த ஜபரீஷ் அவரது தந்தை பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் திடீரென கீழே கிடந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கலால் தந்தை பாலசுப்பிரமணியின் தலையில் சராமாரியாக தாக்கினார்.

இந்த கொடூரத் தாக்குதலில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக அவரே காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜபரீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலசுப்பிரமணி உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காதலித்துவிட்டு வேறொருவரை மணந்ததால் 12 முறை குத்திக்கொன்றேன்.. காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் மருத்துவமனையில் புகுந்து இளம்பெண்ணை கொன்ற நபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாலி பகுதியில் லிஜி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.

மகேஷ் என்ற நபர் மருத்துவமனைக்குள் புகுந்து லிஜியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் மகேஷை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், பள்ளிப்பருவம் முதல் லிஜி தன்னுடன் பழகி வந்துள்ளார் என்றும், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு தன்னுடன் பேசுவதை அவர் தவிர்த்துள்ளார் என்றும் மகேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மருத்துவமனைக்குள் புகுந்து லிஜியை கொலை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது தப்பியோடிய அவரை துரத்திப்பிடித்து 12 முறை கத்தியால் குத்தி மகேஷ் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பதை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மகேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கொலை வழக்கில் மகேஷின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மாதத்தில் தக்காளி விற்றே கோடீஸ்வரர் ஆன விவசாயி.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்!!

இந்தியாவில்..

பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை விட ஒரு கிலோ தக்காளி அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தக்காளி விலை குறைக்க ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் விவசாயி ஒருவர் தக்காளி விற்று 1 மாதத்திற்குள் கோடீஸ்வரர் ஆன நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் துக்காராம் பாகோஜி கயாகர். விவசாயியான இவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி போட்டு தனது மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த சூழலில் தற்போது தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கபட்டு வரும் நிலையில், இவர் அதனை வியாபாரம் செய்து சம்பாதித்துள்ளார். இவரது நிலத்தில் இருந்து சுமார் 13,000 பெட்டி தக்காளி அறுவடை செய்து விற்றுள்ளார்.

இப்படியே தொடர்ந்து 1 மாத காலமாக விற்று வந்த இவருக்கு இதில் இருந்து சுமார் ரூ.1.5 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளார்.

குடும்பமாக சேர்ந்து உழைத்ததற்கான பலன் என்று விவசாயி துக்காராம் பாகோஜி தெரிவித்துள்ளார். இது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முன்னதாக இதே போல் கர்நாடகாவில் விவசாயி 2 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்து 38 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

மேலும் ஆந்திராவில் தக்காளி விற்று ரூ.30 லட்சம் லாபம் பார்த்த விவசாயி மர்ம நபர்களால் கை, கால்கள் கட்டப்பட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் முடிந்த புகைப்பட மோகம் : குழந்தைகளின் முன்னே தாய்க்கு நடந்த பயங்கரம்!!

மும்பையில்..

குழந்தைகளின் கண்ணுக்கு முன்னே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தாயை ராட்சத அலை ஒன்று கடலுக்கு இழுத்து சென்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிலர் புகைப்பட மோகத்தில் நாம் எத்தகைய ஆபத்தின் நுனியில் நிற்கிறோம் என்று கூட தெரியாமல் தங்கள் வாழ்கையோடு அவர்களே விளையாடுகின்றனர்.

அந்தவகையில் மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட்-டில் உள்ள கடல் பகுதியில் தம்பதி ஒருவர் தங்களின் குழந்தைகளின் முன்னிலையில் ஆபத்தான முறையில் புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது அவர்கள் அமர்ந்து இருந்த கற்களை நோக்கி வந்த ராட்சத அலை ஒன்று குழந்தையின் தாயை கடலுக்கு இழுத்து சென்றது, இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில் பெரிய அலைகள் வருவதை பார்த்து தம்பதியின் குழந்தை கத்தும் சத்தங்களை கேட்க முடிகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணைய தளத்தில் வேகமாக பரவிய நிலையில், உயிருக்கு மிகவும் ஆபத்தான வகையில் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை குறித்து நெட்டிசன்கள் தீவிர விவாதத்தை மேற்கொண்டனர்.

இணையம் மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

Online மூலம் மிரட்டி பண மோசடி செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை சென்னை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்தவர் அஸ்வினி. 20 வயது இளம்பெண்ணான இவர், தனது படிப்பை முடித்து விட்டு பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது இவர் பார்லருக்கு தேவையான அழகு சாதன பொருட்களை எல்லாம் ஆன்லைனில் பார்த்து வந்துள்ளார். அப்போது இவருக்கு லண்டனில் இருப்பதாக கூறி மர்ம நபர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

இருவரும் தொடர்ந்து சமூக வலைதள வாயிலாக பேசி வந்த நிலையில், அந்த லண்டன் இளைஞர் அஸ்வினியை காதலிப்பதாக கூறியதோடு, தான் சென்னை வந்து திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியுள்ளதாகவும், அதனை பெற வேண்டும் என்றால் வங்கி கணக்குக்கு 25 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும்.

அப்படி செலுத்தவில்லை என்றால், சுங்க அதிகாரிகள் கைது செய்து விடுவார் என்று மிரட்டியுள்ளார். அதேபோல் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டு முகவரிக்கு சுங்க அதிகாரி போல் வந்த ஒருவர் அந்த பெண்ணை கைது செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண் உடனடியாக அந்த வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் மேலும் 45 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதி வைத்து தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இந்த தற்கொலை விவகாரம் குறித்தும், மோசடி குறித்தும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் நபர்களை குறி வைத்து மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்த மோசடி கும்பலை பிடிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையடுத்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று நைஜீரியா நாட்டை சேர்ந்த மோசா என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கீழ்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த மோஸாவை டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று காலை சென்னை அழைத்து வந்துள்ளனர்.

சென்னை அனைத்துவரப்பட்ட மோஷாவிடம் மோசடி கும்பல்கள் தொடர்பாக கீழ்பாக்கம் துணையான தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்… இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் தமது 12 வயது மகளின் மேல் உதட்டு ரோமங்கள் மற்றும் புருவங்களை மழித்த இந்திய தாயாரின் செயலை பெரும்பாலான மக்கள் பாராட்டியுள்ளனர்.

சிறு வயதில் தாம் அனுபவித்த கொடூர நெருக்கடியை தமது மகள் தற்போது அனுபவிக்க வேண்டாம் என இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த இந்தியவம்சாவளி தாயார் குறிப்பிட்டுள்ளார்.

வட கரோலினா மாகாணத்தில் குடியிருக்கும் 38 வயதான இந்திய வம்சாவளி விதயா கோபாலன் இரண்டு பிள்ளைகளுக்கு தாயார். தமது சமூக ஊடக பக்கத்தில், தமது மற்றும் தனது 12 வயது மகள் தொடர்பிலும் காணொளி பதிவுகளை அடிக்கடி பகிர்ந்து வருபவர்.

மிக சமீபத்தில் தமது 12 வயது மகள் சஹானா தொடர்பில் காணொளி ஒன்றை பகிர்ந்து கொண்ட வித்யா கோபாலன், பெரும்பாலான மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளார்.

குறித்த காணொளியில் சிறுமி சஹானாவின் புருவம் மற்றும் மேல் உதட்டு ரோமங்களை வித்யா மழிப்பது பதிவாகியிருந்தது. சஹானாவின் வயதில் தமது தாயார் இப்படியான ஒரு முடிவுக்கு வரவில்லை என்பதால், தாம் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் வித்யா கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள அந்த காணொளியானது, வித்யாவே தமது மகளின் புருவம் மற்றும் மேல் உதட்டு ரோமங்களை மழிப்பது பதிவாகியுள்ளது.

உனது வயதில் இப்படியான ரோமங்கள் காரணமாக கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானேன் என வித்யா தமது மகளிடம் கூறுகிறார். அதற்கு பதிலளித்த சஹானா, அப்படியானால் ஏன் உங்கள் இளவயதில் இப்படியான ரோமங்களை மழிக்க முன்வரவில்லை என கேள்வி கேட்கிறார்.

தமது தாயார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார் வித்யா. இந்த காணொளிக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது இதயத்தை தொட்ட காணொளி இதுவெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பலர் இதுபோன்ற ஒரு சூழலை தாங்களும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகாப்பு தொடர்பானது என்பதை உணர்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சமையலில் கூடுதலாக 2 தக்காளி சேர்த்த கணவன்.. வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், அவரது மனைவி ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். தக்காளியின் அதிக விலைகள் நுகர்வோரை பாதிப்பது மட்டுமல்லாமல், உணவகங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த பல்துறை மூலப்பொருளை பெரிதும் நம்பியிருக்கும் பிற வணிகங்களுக்கும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

சமையலில் தக்காளியை பயன்படுத்தியதால் மனைவி ஓட்டம்
மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலில் சந்தீப் பர்மன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி ஆர்த்தி பர்மன். சந்தீப் பர்மன் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்து ஆர்த்தி பர்மன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உணவகம் வைத்திருக்கும் சந்தீப் பர்மன், தனது மனைவி ஆர்த்தி பர்மனைக் கண்டுபிடித்து தருமாறு காவல்துறையை அணுகினார். அப்போது அவர், “என் மனைவி ஆர்த்தி பர்மன் எனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பேருந்தில் ஏறினார்.

நான் அவர்களை மூன்று நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். மனைவியின் புகைப்படத்தையும் காவல்துறையிடம் கொடுத்தேன். ஆனால் அவர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், நான் என் மனைவியிடம் கேட்காமல் உணவில் தக்காளி சேர்த்ததால் மனைவி வருத்தமடைந்ததார். அது குறித்து வாக்குவாதம் செய்தேன். நான் தக்காளி சேர்ப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை” என்று கூறினார். பின்பு சந்தீப் பர்மன், தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஷாஹ்டோலின் அலுவலக அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் “ஆர்த்தி தனது கணவருடன் வாக்குவாதத்திற்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியேறி, உமாரியாவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். கணவன், மனைவி இருவரையும் பொலிசார் பேச வைத்துள்ளனர். அவர் விரைவில் திரும்புவார்” என்று கூறினார்.

வவுனியாவில் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

உலகத்தின் முதலாவது தமிழ் பேராசிரியரும், முத்தமிழ் வித்தகர் என புகழ்பெற்ற சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களின் 76 வது நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரின் சிலையடியில் வவுனிய மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் மாலை அணிவித்ததுடன் நகரசபையின் செயலாளர் உட்பட்ட பலரும் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

வவுனியா மண்ணின் சாதனை மாணவி கோசியா திருமேனனுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு!!

கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் போட்டிகளில் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்ட மாணவி கோசியா திருமேனனுக்கு அரசாங்க அதிபர் தனது பாராட்டினை தெரிவித்தமையுடன் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.

34 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய கனிஷ்ட பொதுநலவாய போட்டித் தொடரில் பளு தூக்கும் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வீராங்கனைகளினால் வெல்லப்பட்டுள்ளன.

வவுனியா மாவடத்தினை சேர்ந்த 14 வயதான கோசியா திருமேனன், 16 வயதுக்குட்பட்ட 40 கிலோ எடை பிரிவில் 92 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

குறித்த மாணவியை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வரவழைத்து தனது பாராட்டினை தெரிவித்தமையுடன் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தமையுடன் மாவட்ட செயலக ஏனைய அதிகாரிகளும் தமது வாழ்த்துக்களை மாணவிக்கு தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது!!

வவுனியா இரு வேவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் கரோயினுடன் இளைஞர் ஒருவரையும் வேப்பங்குளம் பகுதியில் 5கிராம் 100மில்லிகிராம் கரோயினுடன் இளைஞர் ஒருவரும் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன் கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

வவுனியாவுக்கு பெருமை சேர்ந்து பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு!!

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம் மாணவியின் முயற்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவரைப் பாராட்டும் விதமாக பளுதூக்கல் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடைப் பிரிவில் 16 வயதான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகியிருந்தார்.

போட்டிகள் யூலை மாதம் 12 தொடக்கம் 16 ஆம் திகதிவரை டெல்லியில் நடைபெற்றிருந்தது. கடந்த 12ம் திகதி இடம்பெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தினை பிடித்து வெண்கலபதக்கத்தினை குறித்த மாணவி பெற்றுள்ளார்.

பத்தினியார் மகிழங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பத்தினியார் மகிழங்குள கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரில் தீப்பற்றி எரிந்த உணவகம்!!

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்று இன்று (19.07.2023) இரவு 8.25 மணியளவில் திடீரென தீப்பற்றியமையினையடுத்து பலத்த போராட்டத்தின் மத்தியின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் அமைந்துள்ள பிரபல உணவகமானது இரவு திடீரேன தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இத் தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கின்ற போதிலும் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இத் தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.