பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் யுவதி : விசாரணை அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்!!

பேராதனையில்..

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற 21 வயதுடைய வைத்தியசாலையினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது.அதன்படி, குறித்த குழு நேற்றைய தினம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செஃப்ட்ரோஎக்சோன் எனப்படும் நோய்யெதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

மாத்தறையில்..

மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ – தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கிக்கொண்டதால் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (15) குறித்த குழந்தை தனது வீட்டில் இருந்தபோது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 1 வயது 15 நாட்கள் நிறைந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.அவரது சகோதரர் மூடியை அகற்ற முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

குழந்தை சிகிச்சைக்காக கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முச்சக்கரவண்டிகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையில்..

முச்சக்கர வண்டிகளை சில மாற்றங்களுடன் இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.இதன்படி, முச்சக்கர வண்டிகளை இனிவரும் காலங்களில் தேவையற்ற விதத்தில் அலங்கரிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும் இயக்க அனுமதி வழங்கப்படாது எனவும், கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜீவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 08 மில்லியன் மொத்த வாகனங்களில் சுமார் 02 மில்லியன் முச்சக்கர வண்டிகளாகும்.இதன்படி சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் காணாமல்போன இரு யுவதிகள் : உறவினர்கள் விடுத்த அவசர கோரிக்கை!!

கொழும்பில்..

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியும், மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த 17 வயதான பௌசூல் பாத்திமா இப்ஹா என்ற யுவதி கடந்த 12.07.2023 புதன்கிழமையில் இருந்து காணவில்லை என தெரிய வருகின்றது.

குறித்த யுவதி வீட்டிலிருந்து கடைசியாக பகல் 2.52 மணிக்கு வெளியேறும் போது கறுப்பு நிற ஹபாயாவும் சாம்பல் நிற சோலும் அணிந்திருந்துள்ளார்.யுவதி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0755192234 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

இதேவேளை, கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த 14-07-2023 வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போயுள்ள யுவதி கண்டுபிடிக்க உதவுமாறு தந்தை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.மேலும், காணாமல்போன யுவதி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் (077-3715446 -0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்.வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதான புஸ்பராசா எழில்நாத் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறப்படுகின்றது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிய தடகள போட்டிகளில் புதிய சாதனை : இலங்கைக்கு தங்கப் பதக்கம்.!!

தாய்லாந்தில்..

ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் புதிய இலங்கை மற்றும் ஆசிய சாதனைகளுடன் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சம்பியன்ஷிப் தொடரில் இன்று (16.07.2023) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே தருஷி தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

19 வயதான தருஷி கருணாரத்ன போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்துள்ளதுடன் 1998 ஆம் ஆண்டு சீனாவின் ஜாங் ஜியான் 2:01.16 வினாடிகளில் பதிவு செய்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்த போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் வித்தியாசமான வடிவில் முட்டை இட்ட கோழி!!

நானுஓயாவில்..

நானுஓயா மஹாஎலிய பிரதேசத்தில் கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளது. இந்த கோழியை சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் வளர்த்து வரும் நிலையில் தொடர்ந்து சிறந்த முறையில் முட்டைகளை கொடுத்து வந்துள்ளது.

இந்நிலையில் திடிரென நேற்றைய தினம் ‘யு’ வடிவிலான முட்டையை இட்டுள்ளதால் உரிமையாளர் வியப்படைந்துள்ளார். இந்த வினோத முட்டையை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோழிகளுக்கு ஏற்படும் மரபணு மாற்றமே இவ்வாறான முட்டைகள் இடுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான முட்டைகள் உண்பதற்கு உகந்ததல்ல எனவும் மீள கோழிக்குஞ்சுகள் அடைகாக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கும் உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான முட்டைகளில் மஞ்சட்கருவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் கைது!!

வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிசார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16.07) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் போக்குவரத்து பொலிசாருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் போக்குவரத்து பொலிசார் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த மோட்டர் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தனி அறையில் அடைத்து வைத்து கணவர் செய்த கொடூரம்!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் மனைவி கை விரல்களை உடைத்து தனி அறையில் அடைத்து உணவு வழங்காமல் சித்ரவதை செய்த ஊர்காவல் படையை சேர்ந்த வீரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றிவருபவர் எஸ்.எம்.சந்த் பாஷா. இவருக்கும் பலமனேர் நகரைச் சேர்ந்த சபீஹா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் இரண்டு மூன்று முறை பெரியவர்களால் போலீசில் புகார் அளித்து, பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதல் சந்த்பாஷா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் இணைந்து சந்த்பாஷாவிற்கு வேறு திருமணம் செய்து வைப்பதாக கூறி வீட்டின் மேல் மாடியில் சபீஹாவின் கை விரலை உடைத்து அறையில் அடைத்து வைத்து சாப்பிட உணவு கூட வழங்காமல் இருந்துள்ளனர்.

இதனால் சபீஹா அந்த அறையில் உள்ள குளியல் அறையில் தண்ணீர் பிடித்து குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சபீஹா பல நாட்களாக வெளியே வராமல் இருந்ததால் அக்கம்பக்கத்து வீட்டோர் சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சபீஹாவின் பெற்றோர் பலமனேர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சந்த் பாஷா வீட்டிற்கு சென்று சபீஹாவை மீட்டு அவரிடம் நடந்த விவரங்களை கேட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்காளியால் கணவனை விட்டு பிரிந்த மனைவி : இப்படியும் ஓர் சம்பவம்!!

மத்திய பிரதேசத்தில்..

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி ஒரு கிலோ ரூ150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர் மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலையேற்றம் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சில குடும்பங்கள் உணவில் சேர்க்கும் தக்காளியின் அளவை குறைத்துள்ளன.

உணவகங்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் தயாரிப்பது பல இடங்களில் கைவிடப்பட்டுள்ளது. அதோடு தங்கத்துக்கு நிகராக கருதப்படும் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள், விவசாயிகள் பாதுகாவலர்களை நியமிக்கும் சம்பவங்களும், அவற்றை பதுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர், காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சஞ்சீவ் பர்மனின் மனைவி 2 தக்காளியை தனியே எடுத்து வைத்து இருந்தார். இதனை பார்த்த சஞ்சீவ் பர்மன் அதனை எடுத்து ஓட்டலுக்கான உணவை சமைக்க பயன்படுத்தினார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார்.

விலையேற்றத்துக்கு நடுவே தன்னிடம் கேட்காமல் ஏன் 2 தக்காளியை சமையலில் பயன்படுத்துகிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார். இது வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதம் முற்றி எல்லை மீறி சண்டையாக மாறியது. இதனால் கோபமடைந்த சஞ்சீவ் பர்மனின் மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.

அப்போது அவர் தனது மகளையும் அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே மனைவி வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என சஞ்சீவ் பர்மன் நம்பியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை சஞ்சீவ் பர்மன் ஆங்காங்கே தேடிப்பார்த்தார். உறவினர்களிடம் விசாரித்தார்.

அப்போது மகளோடு, மனைவி எங்கு சென்றார் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இதனால் கவலைக்குள்ளான சஞ்சீவ் பர்மன் சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சஞ்சீவ் பர்மனின் மனைவி மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் நடந்த 10 நாளில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் அருகே திருமணம் நடந்து 10 நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியைச் சேர்ந்தவர் முத்து.

இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி படித்து முடித்த அனு என்ற பெண்ணுடன் கடந்த 29-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரவு கணவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கணவன் தினமும் குடித்துவிட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மேலும் புதுமணப் பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணமான 10 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி… கோவிலில் நடந்த திருமணம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் திருமணம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் அபிராமியம்மன் கோவிலில் திருமணத்தை திருநங்கைகள் நடத்தி வைத்தனர்.

திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த மணிகண்டன். வயது (21). இவர் பெண்ணாக மாறினார். பின்னர் தனக்கு மாயா என்று பெயர் மாற்றிக்கொண்டார். இதே போல் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி.

வயது (24). இவர் ஆணாக மாறினார். பின்னர் தனக்கு கணேஷ் என்று பெயர் மாற்றிக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருநங்கையர்கள் திருமணம் செய்ய நிச்சயித்தனர்.

அதன்படி வெள்ளியன்று காலை திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் திருநங்கையர்களால் இந்த முறைப்படி தாலிகட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் இவர்களது திருமணத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர் வியப்படைந்தனர். பின்பு இவர்களது திருமணத்திற்கு பொதுமக்கள் அனைவரும் கூடி அச்சதை தூவி வாழ்த்தினர்.

இந்த திருமணம் பொதுமக்கள் மற்றும் திருநங்கையர்கள் மத்தியில் விமர்சியாக நடைபெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இவர்களது திருமணத்தை அறநிலையத்துறையைச் சார்ந்தவர்களோ, அர்ச்சகர்களோ பங்கேற்கவில்லை. இந்த திருமணமானது பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள் : அதிர்ச்சியளிக்கும் சாரதிகளின் செயல்!!

இலங்கையில்..

சாரதியின் கவனயீனமே பதுளை – தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று(15.07.2023) தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் வீதியை விட்டு விலகி வீடொன்றுக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது பேருந்தில் 25 பேர் பணித்ததுடன் அதில்,15 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.குறித்த பேருந்து விபத்தில் சிக்கிய பேருந்து நடத்துனர் கூறுகையில், “பேருந்தில் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தேன். அப்போது பேருந்து திடீரென பாதையில் இருந்து விலகி கீழே விழுந்தது.

எனக்கும் பேருந்து கவிழ்ந்த பிறகுதான் தெரிந்தது. சிறிது நேரத்தில் நானும் உள்ளிருந்து வெளியே வந்தேன்.”என நடத்துனர் கூறியுள்ளார்.விபத்தை எதிர்கொண்ட பயணி ஒருவர் கூறுகையில்,“பேருந்து சத்தமாக வந்தது. நான் கொழும்புக்கு போயிருந்தேன். தொலைபேசியில் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பேருந்து பிரேக் அடிக்கவில்லை. ஆனால் திடீரென கவிழ்ந்தது. எனக்கு முன்னால் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். நானும் பாட்டியும் வெளியே வந்தோம்.”என கூறியுள்ளார்.இதேவேளை பாதையில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்டது.

மேலும் அதிவேகமாக சென்ற பேருந்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேபோன்று சாரதியின் கவனயீனம் காரணமாக பொலனறுவைக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய 2023 ஆம் ஆண்டில் இதுவரை 137 பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இவ்வருடத்தின் ஜூலை 10ஆம் திகதி வரை 1,135 வாகன விபத்துக்களில் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தவிர, 2,088 விபத்துக்களில் கடுமையான காயங்களும், 4,450 சிறிய காயங்களுடன் விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

வாழைப்பழம் சாப்பிட்ட 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

தொம்பேவில்..

தொம்பே – கேரகல, புதுபாகல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து பாடசாலையின் ஆசிரியர்களால் தொம்பே ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கம்பஹா வைத்தியசாலையில் 5 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.நான்கு சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது குழந்தையான கே.பி. கித்மினி ஹெஷாரா படிப்பிலும், ஏனைய கல்வி செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியதாக அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழில் பயன்பாட்டிற்கு வரும் கூகுள் பார்ட்!!

தமிழில்..

செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சங்கள் இருந்தபோதும், அதன் வளர்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது.பல மணிநேரம் எடுக்கும் வேலைகளைக் கூட நிமிடப் பொழுதினில் முடித்துவிடும் துரித தன்மை, பலரையும் நுண்ணறிவு (ஏஐ) பக்கம் திரும்பச் செய்துள்ளது.

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பார்ட் (Bard) பயன்பாட்டிற்கு வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது.இருந்த போதும் தமிழ் மொழியில் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ் உட்பட சுமார் 40 புதிய மொழிகளில் பார்ட் (google bard) பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அரபு, சைனீஸ், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், பிரேசில் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் (EEA) உள்ள 27 நாடுகள் உட்பட 59 புதிய நாடுகளுக்கு பார்ட் பயன்பாட்டிற்கான அணுகலைக் கூகுள் விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பயனர்கள் ஒரு வார்த்தையின் சரியான உச்சரிப்பைக் கேட்க விரும்பினால் அல்லது கவிதை அல்லது ஸ்கிரிப்டைக் கேட்க விரும்பினால் இந்த புதிய அம்சங்கள் உதவியாக இருக்கும்.பயனர்கள் பார்டின் பதில்களின் தொனியையும், பாணியையும் ஐந்து வெவ்வேறு விருப்பங்களுக்கு மாற்றலாம்.

ப்ராம்ட்களில் (prompt) படங்களைச் சேர்க்கும் திறன், பார்டின் பதில்களை உரக்கக் கேட்பது மற்றும் பார்டின் பதிலை நீளமாகவோ அல்லது குறைவாகவோ மாற்றும் திறன் போன்ற புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அம்சம் ஆங்கில மொழியில் உள்ளது, விரைவில் புதிய மொழிகளிலும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய வூசு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழ் இளைஞன் சாதனை..!

இலங்கை..

ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில், பங்குகொண்டு இந்த சாதனையை படைத்துள்ளார்.

மத்திய மாகாணம் – கண்டி மாவட்டத்துக்குற்பட்ட கம்பளை பகுதியை சேர்ந்த கணேசன் சுதாகரன் என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

சுதாகரன் தனது ஆரம்பக் கல்வியை கம்பளை இந்து கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை கண்டி ரணபிம் ரோயல் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

இந்நிலையில், இலங்கைகக்கும் , மலையக மண்ணுக்கும் பெருமை சேர்த்த சுதாகரனுக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.