முச்சக்கரவண்டி ஓட்டி பேத்தியை வளர்க்கும் சிங்கப் பெண் பவானியின் கதை!!

ஈரோட்டில்..

ஈரோட்டில் ஆட்டோ ஓட்டும் பெண் டிரைவர் பவானியை நேர்காணலில் சந்தித்த போது அவர் கூறிய தன்னம்பிக்கை வார்த்தைகளையும், வேதனையும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஈரோட்டில் 13 வருஷமா ஆட்டோ ஓட்டுகிறேன். எங்கள் ஊரில் பெண்கள் யாரும் ஆட்டோ ஓட்டவில்லை. அதனால், எனக்கு ஆட்டோ ஓட்டும் ஆர்வம் வந்தது. அதுமட்டுமல்லாமல், சுயமாய் வேலை செய்ய வேண்டும் என நினைத்து இந்த தொழிலில் இறங்கினேன்.

எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன், சந்தித்திருக்கிறேன். எல்லோரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலுக்கு வந்தேன். இன்றும் எதிர்ப்புகள் நிறைய இருந்தாலும் அதை Face பண்ணிட்டு தான் இருக்கிறேன். உதவி செய்வதற்கு என யாரும் இல்லை.

எனக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். என் மகன் காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னை மதிக்காமல் தகாத வார்த்தைகளில் என் மகன் பேசுவான். ஒரு குழந்தை மட்டுமே மருமகளிடம் இருக்கிறது.

மற்றொரு குழந்தையான என் பேத்தியை அடித்து, கையை ஒடித்துவிட்டு என்னிடம் கொடுத்தார்கள். என் மருமகள் வந்துகூட பார்ப்பதில்லை. இதற்காக, கோர்ட்டில் கேஸ் கூட போய் கொண்டிருக்கிறது.

என்னிடம் பணம் கிடையாது. ஆட்டோ ஸ்டாண்டு எனக்கு கிடையாது. ஒரு நாளில் 200 ரூபாய் சம்பாதிப்பதே பெரிய விஷயமாய் இருக்கிறது. எனக்கு பஸ் ஸ்டான்டில் ஏதோ ஒரு இடத்தில் அனுமதி கொடுத்தால் போதும்.

இதனை, நான் தமிழக முதல்வரிடம் உதவியாக கேட்கிறேன். ஆண்கள் தான் பெரிய ஆட்டோக்காரர்கள் மாதிரி எங்களை விடுவதில்லை. அண்மையில், கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அங்கு, பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து எனக்கும் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

ஆட்டோ ஓட்டி தான் பேத்தியை பார்த்துக் கொள்கிறேன். தற்போது, பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் தான் ஆட்டோ ஓட்டுகிறேன். என் பேத்திக்கு என்று ஆட்டோவில் சிறிய இடம் ரெடி பண்ணியிருக்கிறேன்.

காலையில் 4 மணிக்கு எழுந்ததுமே என் பேத்திக்கு உணவு செய்து வைத்துவிடுவேன். என் பேத்தி சிறிய குழந்தையாய் இருக்கும் போதே மடியில் வைத்து தான் ஆட்டோ ஓட்டுவேன்.

குழந்தைக்கும் எனக்கும் ஆதரவு இல்லை. நாங்கள் அனாதையா தான் இருக்கிறோம். இதை தமிழக முதலமைச்சர் பார்த்து உதவி செய்ய வேண்டும். முடியலன்னு எதுமே கிடையாது.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என பவானி கூறியது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்டோ டிரைவர் பவானியில் முழு நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்.

மூளையை உண்ணும் அமீபா வைரஸ்.. பரிதாபமாக உயிரிழந்த 15 வயதுச் சிறுவன்!!

கேரளாவில்..

கேரளாவில் 15 வயது சிறுவன் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்ற அரிய பாக்டீரியா தொற்றால் உயிரிழந்துள்ளான். மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும், மத்திய நரம்பு மண்டலத்தின் அபாயகரமான தொற்று Naegleria fowleriயால் ஏற்படுகிறது.

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அனில் குமார் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 15 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவர் சில தினங்களுக்கு முன்பு நீரோடைக்கு குளிக்க சென்றுள்ளார்.

பின்பு, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஆலப்புழா மாவட்ட மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சில நாள்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் ஏற்பட்ட அரியவகை நோயால் மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து மருத்துவர்கள் தரப்பில், மூளையை உண்ணும் அமீபா ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட தேங்கி நிற்கும் நீரோடைகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாணவர் ஓடையில் குளிக்கும் போது அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது.ஓடையில் உள்ள Naegleria fowleri என்னும் அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து மூளையை சென்றடைகிறது எனக் கூறினர்.

அங்கு, மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது. இந்த அரியவகை நோயால் தான் மாணவர் உயிரிழந்துள்ளார். இது முதன் முதலில் 2017 ஆன் ஆண்டு கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. பின்பு, இரண்டாவது முறையாக இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுகிறது. அமீபா தாக்கி முதல் அல்லது இரண்டு வாரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்.

பின்பு, தலைவலி அதிகமாதல், வாசனையில் மாற்றம் போன்றவை ஏற்படும். நீரின் மூலம் இந்த தொற்று ஏற்படுவதால் அசுத்தமான நீரில் குளிப்பது மற்றும் முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

முல்லைத்தீவு இளைஞன் டிலக்சனுக்கு நடந்தது என்ன? பொலிஸார் சந்தேகம்!!

முல்லைத்தீவு மல்லாவி, பாலி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.07.2023) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மல்லாவி, பாலி நகரைச் சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் என்ற 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், உறவினர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று பாலிநகர் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்திருந்த இருவரில் ஒருவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும், மற்றையவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலி நகர் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , மாவட்ட நீதவான் உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோர விபத்து : சாரதி தொடர்பில் வெளியான தகவல்!!

பொலன்னறுவையில்..

பொலன்னறுவை-மனம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.அதிவேகமாக பேருந்து பயணித்ததில் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னர் ஆபத்தான வாகனம் செலுத்தியமைக்காக, குறித்த பேருந்து சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறும் போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தங்கத்தின் விலையில் மீண்டும் சடுதியான மாற்றம்!!

தங்கம்..

செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (10.07.2023) 150,000 ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக 148,000 ரூபா தொடக்கம் 149,000 ரூபா என்ற நிலையில் இருந்தது.இந்த நிலையிலேயே திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,000 ரூபாவாக காணப்படுகிறது.

இதேவேளை உலகச் சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையேற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம்!!

பொலன்னறுவையில்..

பொலன்னறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக இளைஞர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

வவுனியா நகரசபை அதிரடி : 130 கடைகளிற்கு சிவப்பு அறிவித்தல்!!

வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை செலுத்தாத நிலையில் நகரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக 86 கடைகளும், இன்றையதினம் (10.07) 44 கடைகளுக்கும் சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன், வரும் நாட்களில் நில வாடகை செலுத்தாத ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் இந்நடவடிக்கை தொடரவுள்ளது.

மேலும் நகரசபையின் அனுமதியின்றி சிவப்பு அறிவித்தலினை அகற்றிய வர்த்தக நிலையங்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை இந்நடவடிக்கையின் மூலமாக 3,806,921 ரூபாய் பணம் வருவாயாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரசபையினால் வர்த்தக நிலையங்களிற்கு 500 தொடக்கம் 6000 ரூபாய் வரையே வாடகை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 2022இல் இருந்து செலுத்தாத காரணத்தினாலேயே வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருள் அனுப்புவதாக மோசடி : விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அஸ்வினி. இவர் BBA படிப்பை முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், பியூட்டிசனுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை சமூக வலைதளங்களில் தேடி வாங்கி வந்துள்ளார். அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி ஒரு நபர் அறிமுகமாகி நட்பாக பேசி வந்துள்ளார்.

சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான நபர் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு அஸ்வினியை மிகவும் பிடித்திருப்பதாக கூறியதுடன், தமிழ்நாடு திரும்பியவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக லண்டன் மாப்பிள்ளை ஒத்து வராது என நினைத்து அஸ்வினி அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து அஸ்வினிக்கு வாட்ஸ் அப் காலில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அஸ்வினியை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் உங்களுக்கு 15,000 அமெரிக்கா டாலர் பரிசாக அனுப்பி இருப்பதாகவும், சென்னையில் சுங்கத்துறை அலுவலகத்தில் அந்த பார்சல் இருப்பதாக கூறியுள்ளார்.

பணம் செலுத்தினால் அந்த பார்சல் உங்கள் வீட்டுக்கு வந்து விடும் என ஆசை வார்த்தை கூறிய அந்த நபர், வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். மேலும் பணம் செலுத்தவில்லை என்றால் பெறுநர் முகவரியில் உங்கள் பெயர், விவரம் உள்ளதால், வெளிநாட்டு போலீசார் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன், உங்களை கைது செய்து விடுவார்கள் என அஸ்வினியை அந்த நபர் மிரட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் மர்ம நபரே சுங்கத்துறை அதிகாரி போல வேறொரு எண்ணில் இருந்து அஸ்வினியிடம் பேசி கிப்ட் பார்சலுக்கு 45,000 ரூபாய் வரி செலுத்தவில்லை என்றால் உங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் தெரிய வருகிறது.

இதனால் பயந்த அஸ்வினி 2 தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 25,000 ரூபாயை அனுப்பிய வைத்துள்ளார். மேலும் 45,000 ரூபாய் கேட்டு அந்த நபர் அஸ்வினிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்து வேறு வழியின்றி நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தொடர்பாக அஸ்வினியின் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் உயிரிழந்த அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இளம் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், அஸ்வினி அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதியுள்ளார். மேலும், ”ஐ மிஸ் யூ” அம்மா என அஸ்வினி தற்கொலைக்கு முன்பு கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்ய நடத்திய முதல் கட்ட விசாரணையில், இந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செயல்படும் நைஜீரிய சைபர் கிரைம் கும்பலின் மோசடியில் ஒரு வகை என போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோசடி கும்பல், சமூக வலைதளங்களில் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி வேலை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரா, வசதியான குடும்பத்தைச சேர்ந்தவரா என்பதை கண்டறிந்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அப்படி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, வெளிநாட்டில் இருந்து பரிசு அனுப்புவது போல் அனுப்பி அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து விட்டார்கள் என போனில் கூறி, ஒரு வங்கி கணக்கு எண்ணிற்கு பணம் அனுப்ப சொல்லி மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் இளம் பெண்கள், இளைஞர்கள், விவாகரத்தான பெண்களை குறி வைத்து கைவரிசை காட்டுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். அஸ்வினியை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

வவுனியாவில் மதுபோதையில் நண்பனை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த நபர்!!

வவுனியா, கல்மடு ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10.07.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவனவர், இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

வவுனியாவில் பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு பாதிப்பு என தெரிவித்து விழிப்புணர்வு ஊர்வலம்!!

பிளாஸ்டிக் பாவனையால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதனை கட்டுப்படுத்தக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நேற்று (09.07) காலை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்து பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழக வெளிவாரிகள் பிரிவுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து நகர்வழியாக ஆரம்ப இடத்தை சென்றடைந்தது.

இதன்போது வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களால் அகற்றப்பட்டிருந்தது. இதில் இந்து பெளத்த சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பொலன்னறுவையில் கோர விபத்து : 10 பேர் பலி : பலர் வைத்தியசாலையில் அனுமதி!!

பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மனம்பிடிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இராணுவ பாதுகாப்புடன் திறக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டிடம் : நிகழ்வை புறக்கணித்த ஆளுனர்!!

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்புவிழா பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (09.07) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் அரச காணியொன்றில் உரிய அனுமதிகளை பெற்று இரண்டு மாடிகளை கொண்டு பல இலட்சம் ரூபா பெறுமதியில் வர்த்தகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினரிடம் வர்த்தகர் சங்கம் விடுத்த கோரிக்கையினை பிரகாரம் கட்டுமான பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வட மாகாண ஆளுனர் மற்றும் இராணுவத்தினரின் வன்னி கட்டளை தளபதியின் பிரசன்னத்துடன் கட்டிடம் திறக்கப்படவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் வட மாகாண ஆளுனர் தன்னால் நிகழ்வில் பங்கேற்க முடியாதுள்ளமையை தெரிவித்திருந்தார். இந் நிலையில் இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியினூடாக குறித்த கட்டிடம் திறக்கப்பட்டிருந்தது.

இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியின் வருகைக்காக வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதி, கல்வித்திணைக்களம் அமைந்துள்ள பகுதி உட்பட சிந்தாமணி பிள்ளையார் கோவில் பகுதியெங்கும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் தனியாரின் வீடுகளுக்கு மேற்பகுதியிலும் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் தமிழர் சார்ந்த பிரச்சனைகளுக்கு வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் மெளனம் காக்கும் வவுனியா வர்த்தகர் சங்கம் இராணுவத்தினருக்கு அதி முக்கியத்துவம் கொடுத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ஆளுனருக்கு அடுத்து இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் வட மாகாண ஆளுனரின் பெயர் இரண்டாவதாகவும் இராணுவ தளபதியின் பெயர் முதலாவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆளுனர் நிகழ்வை நிராகரித்திருந்தாரா என்று சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

அத்துடன், வடக்கு ஆளுனர் மட்டுமன்றி வவுனியா அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், முன்னாள் நகரசபை தலைவர்
உள்ளிட்ட வவுனியாவைச் சேர்ந்த பலரும் அழைக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

மேலும், வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிகள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் வர்த்தக சங்க கட்டிடம் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிற்கு 100 KM அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு வந்த யாழ்தேவி புகையிரதம்!!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பயணத்திருந்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புணரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக அபிவிருத்தி செயற்திட்டத்தில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும் , வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதை புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதமாக 80 KMPH தொடக்கம் 100 KMPH வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை பயணித்திருந்தது. குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.

புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட கங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகளை இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோர விபத்தில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களேயான பாத்திமா மைஸ்ஹறா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.பாலமுனையில் இருந்து ஏறாவூரை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து அந்த முச்சக்கர வண்டி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கார் மோதியதால் 5 சிறுவர்களுக்கு நேர்ந்த நிலை!!

கலவானவில்..

கலவான – இரத்தினபுரி வீதியில் கஹரங்கல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற வாகன விபத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த சிறுவர்கள் கலவான ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.


கலவான, ஹகரங்கல பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த 5 சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இரத்தினபுரியிலிருந்து வந்த கார் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என கலவானை ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கலவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவில் கலவானை பொலிஸ் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

50 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து 24 பேர் காயம்!!

பூண்டுலோயாவில்..

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (09.07.2023) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த 21 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து அதிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், மூன்று பேர் பூண்டுலோயா மல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா வேவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்திற்கு பணிபுரிய சென்றவர்களே இவ்வாறு பணியை முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்தில் வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.