சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி பூர்ணிமா.
இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து மூன்று மாதங்களான மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவரிடம் பூர்ணிமா தனக்கு என்று தனியாக ஒரு செல்போன் வேண்டும் வாங்கி கொடுங்கள் எனக் கூறி வந்துள்ளார்.
ஆனால் கணவர் வாங்கி கொடுக்காமல் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் தனக்கு செல்போனும் வாங்கி கொடுக்க மாட்டிறீங்க, குடும்ப செலவுக்குப் பணமும் தரமாட்டிறீங்க என வாக்குவாதம் செய்துள்ளார்.
இதில் கணவன் பூர்ணிமாவைக் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் படுக்கை அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பூர்ணிமாவின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வாங்கி தராததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட தொலைதொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
பலத்த காற்றின் காரணமாக கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரம் இன்று(04.07.2023) முற்பகல் சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது அருகில் இருந்த தபால் கட்டடத்தின் மேல் சரிந்து விழுந்ததால் கடமையில் ஈடுபட்டிருந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள், கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விபரம் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதியில் சில தொலைத்தொடர்பு சேவை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அமெரிக்க நாட்டில் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார்.
இந்த விருது கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவ ஆராய்ச்சி சங்கத்தின் 101வது மாநாட்டில் கஸ்ஸபவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, அல்லேபொலவின் ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச பல் ஆராய்ச்சி சங்கம் 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
கலாநிதி கஸ்ஸப அல்லேபொல கண்டி திரித்துவக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி ஆவார்.
இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், அமெரிக்காவின் லுசியானா மாநில பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
கஸ்ஸப அல்லேபொல மற்றும் அவரது ஆலோசகர் பேராசிரியர் ரஸ்ஸல் பெசவென்டோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நானோ கலவை உமிழ்நீர் சுரப்பு குறைபாடு காரணமாக வாய் வறண்ட நோயாளிகளுக்கு உமிழ்நீரின் உயிர்வேதியியல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய வரஸ்முல்ல பிரதேசத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பாடசாலை விளையாட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீநாத் தர்ஷன் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என வரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி முதல் ஆசிரியர் காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட நிலையில் அன்றைய தினம் விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆசிரியர் கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேவேளை பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்து பலன் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆசிரியர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலிட்டது குடும்பத்தினருக்கு தெரியாது என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காலி- கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.இந்தக் கோர விபத்து இன்று (04.07.2023) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விடுமுறை நாட்களில் மலையகத்துக்குச் சுற்றுலா சென்றுவிட்டு கரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீட்டுக்குக் காரில் வந்துகொண்டிருந்த குடும்பமே வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் விபத்தில் சிக்கியுள்ளது.
பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக வாகனம் காருடன் மோதியதில் அதில் இருந்த 38 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.காரைச் செலுத்தி வந்த 42 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றையதினம் தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 593,255 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167,450 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,930 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,190 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 146,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,320 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயாவில் விழுந்து காணாமல் போன யுவதி உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இன்று காலை யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நீரோடையில் விழுந்த யுவதியின் உடல் சுமார் 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. நேற்று பிற்பகல் அத்தனகலு ஓயாவில் நீர்மானி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் செல்பி புகைப்படம் எடுக்கச் சென்ற இந்த யுவதி, நீரில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பாத்திமா பஸ்லா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் இந்த உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் வன்சேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய விமானத்தினூடாக கொழும்பிலிருந்து 1 மணித்தியாலம் 10 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும். குறித்த விமான சேவை செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் முன்னெடுக்கப்படுகிறது.
கடலூர் இளைஞர் பாலமுருகனை நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.,கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடலூரில் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம் தமிழ் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது..இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மணமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
அப்போது பேசிய மணப்பெண் சிவனாந்தினி, நான் நார்வே நாட்டில் தான் பிறந்து வளர்ந்தேன், எனக்கு நீண்ட நாட்களாக தமிழ் கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், தற்போது நான் இன்று பாலமுருகனை திருமணம் செய்து கொண்டுள்ளேன்.
எனக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது, மற்றும் என்னுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறி இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
மணமகன் பாலமுருகன் பேசிய போது, முனைவர் பட்டம் பெற்று விட்டு மேற்படிப்பிற்காக நார்வே சென்று இருந்த போது சிவானாந்தினியை நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தேன்.
அப்போது இருவருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப் போனதை தொடர்ந்து, எங்களுடைய இருவீட்டிற்கும் தெரிவித்தோம், அதன் பிறகு அவர்களுடைய முழு சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.
தருமபுரியில் மூளைச் சாவு அடைந்த கணவனின் உடல் உறுப்புகளைத் தானமாக மனைவி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதனன்று செந்தில் குமார் பள்ளி முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த செந்தில் குமார் மூளைச்சாவடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து மனைவி விஜயலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கணவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க மனைவி முன்வந்தார்.
பின்னர் இருதயம், நுரையீரல், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கண்களை மட்டும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாகம் பெற்றுக்கொண்டனர்.
வவுனியா நகர சபையின் வெற்றிடமாக காணப்பட்ட செயலாளர் பதவிக்கு புதிதாக செயலாளர் இன்று (04.07.2023) நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய இ.தயாபரன் வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து தற்காலிக செயலாளர் மூலம் இயங்கி வந்தது.
இந்நிலையில் புதிய செயலாளராக கடந்த நான்கு வருடங்களாக செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி வந்த பூ.செந்தில்நாதன் வவுனியா நகரசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் (04.07) உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒருவர் இன்றுகாலை சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது (37) என்ற மீனவரை தேடி வருகின்றனர்.
குறித்த இரு மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் படகில் நீர் நிரம்பி நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையிலே இன்று (03) காலை சக மீனவர்கள் காணாமல்போனோரை தேடிய போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மீனவரை தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்டவரின் சடலம் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தனகலு ஓயா நீர் மானிக்கு அருகில் நீரில் மூழ்கி யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என நிட்டம்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன யுவதி, கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 20 வயதுடைய பாத்திமா பஸ்னா எனவும், அவர் புறக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குணசிங்கபுரவில் வசிக்கும் குறித்த யுவதி தனது குடும்பத்தினருடன் நேற்று பிற்பகல் தமது உறவினர்கள் வசிக்கும் திஹாரியாவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளார்.
இந்த யுவதி உட்பட 7 பேர் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில் குறித்த யுவதி பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறி உதவி கோரி அலறிய போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று பிற்பகல் வரை பொலிஸார் அப்பகுதி மக்களுடன் இணைந்து சிறுமியைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியாமல் போயுள்ளது.கடற்படையினர் குழுவொன்றை வரவழைத்து யுவதியை தேடும் பணியை தொடர்வதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்களுடன் பயனித்துக் கொண்டிருந்த,
சிறிய கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் மனைவியின் தலையைத் துண்டாக்கிய கணவரின் சம்பவத்தைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் மனைவியின் கழுத்தை கணவன் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் இருக்கும் மூன்றாவது மாடியில் மணிகண்டன் (37) என்பவர் வசித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த இவர், தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாக இந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இவர் அருகில் உள்ள கோயிலில் பூ வியாபாரம் செய்து பூசாரியாகப் பணியாற்றி வருகிறார்..இதனிடையே, கணவன் – மனைவி இடையே அவ்வப்போது சண்டை வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 30) மாலை ஏற்பட்ட சண்டையின்போது மனைவி பவித்ராவின் தலையைத் துண்டித்து, பல இடங்களில் வெட்டி, மணிகண்டன் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் சண்டை தொடர்பாக கேட்டபோது, தான் தனது மனைவியைக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர், உயிரிழந்த பவித்ராவின் உடலையும், தலையையும் கைப்பற்றி, மணிகண்டனை கைது செய்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் பவித்ராவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தற்போது டிஎம்எஸ் நகரில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நடந்த சண்டையில் மணிகண்டன், பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்ரா, மணிகண்டனை அடித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில், மணிகண்டன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட புத்தகரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், கலைவாணன் (38). இவருக்கும் கொற்கை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகள் கீர்த்திகா (29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், குவைத்தில் பணியாற்றி வந்த கலைவாணன், கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த கலைவாணன், தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்குக் கணக்கு கேட்டு உள்ளார்.
அப்போது கீர்த்திகா, தனது கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும், கணவரின் உறவினர்களுக்கும் கொடுத்ததுடன் தேவை இல்லாமல் செலவு செய்ததாகத் தெரிய வந்துள்ளது.மேலும், மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை கீர்த்திகாவின் கழுத்தை கலைவாணன் அரிவாளால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கீர்த்திகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கலைவாணனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.