யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை காட்சிப்படுத்தி உள்ளார். அந் நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி சென்றதனால் அவர் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்தவர், ஒரு பொம்மை ஒன்றினையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டிவைத்தார். அதோடு , “சூனியம் வைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்” என பதாகையும் எழுதி அவர் காட்சிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் அவர் வைத்த பதாகையில் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு (30.06) 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிகுளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து இரு வாள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரிகுளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி – கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜிப் பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று (29.06) காலை இடம்பெற்றது.
முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ்ஜிப் பெருநாள் நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வவுனியாவிலும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் விசேட தொழுகைகளுடன் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜிப் பெருநாள் திடல் தொழுகை ஜமாத்தின் தலைவர் அஷ்ஷேய்க் ஸாதிகீன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டதுடன் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினை அடுத்து இரு அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரதேச செயலக உதவி முகாமையாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக எழுதுவினையர் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் பதின்ம வயது தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார்.
இந் நிலையில் நண்பனுடைய தங்கையின் மீது போதைப் பொருள் வாங்க சென்றவருக்கு காதல் மலர்ந்தது. நெடு நாட்களாக மலர்ந்த காதல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சுமார் 15 வயது மதிக்கத்தக்க தங்கை வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலத்சிங்கள பிரதேசத்தில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் குறித்த பெண் தனது முன்னாள் காதலனிடம் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி பெறுவதற்காக சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதி அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞருடன் சில காலமாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சிறிது காலத்தின் பின்னர் அந்த உறவை நிறுத்திய இளம்பெண் வேறு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் மீண்டும் காதல் உறவை ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர் இரு தரப்பு பெற்றோரின் ஆசிர்வாதத்தையும் பெற்று அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த பெண் தனது பழைய காதலனை சந்தித்து தனது திருமணத்திற்கு அனுமதி கோர சென்றுள்ளார். அங்கு அவர் அவருடன் மூன்று நாட்கள் கழித்தார்.
எவ்வாறாயினும், மேலதிக தகவல்களைக் கேட்டபோது, நீண்ட விசாரணையின் பின்னர், பழைய காதலன் மற்றும் புதிய காதலன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, புதிய காதலன் பெண்ணை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததால் சம்பவம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.
பின்லாந்து நாடானது உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், கடல் சோதனைகளுக்காக திறந்த நீரில் முதல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள Royal Caribbean International’s Icon of the Seas என்ற இந்த கப்பலானது 365 மீட்டர்கள் நீளம் கொண்டது.
குறித்த கப்பலானது 250,800 டன் பாரம் தாங்கக் கூடியது என்பதுடன், உலகின் மிகப்பெரிய நீர் பூங்காவையும் கொண்டுள்ளது. இதில் 5610 பயணிகள் மற்றும் 2350 பணிக்குழுவுக்கும் பயணிக்க வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது உலகில் இருக்கும் மிகப்பெரிய பயணிகள் கப்பல் Wonder of the sea ஆகும். 1188 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலான கடந்த வருடம் தனது பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள ஜனாதிபதியும் எதிர்பார்த்துள்ளார்.
அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்புடன் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 15 இலட்ச அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் கடுமையான நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனிஷா காந்தி (17), 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
படிப்பில் படு கெட்டிக்காரியான தனிஷா, நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தனிஷா, காலை பள்ளி இடைவேளையின் போது தோழிகளுடன் சென்று கொண்டிருந்தார்.
படியில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென அசௌகரியமாக உணர்ந்துள்ளார், உடனடியாக அவரது தோழிகள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தினரும் தனிஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் மாரடைப்பு காரணமாக தனிஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறவும், நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த போது தனிஷா அசௌகரியமாக உணர்ந்துள்ளார், படியில் ஏறவும் முடியவில்லை.
உடனடியாக அவரது தோழிகள் கூறியதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
தனிஷா அற்புதமான பிரகாசமான மாணவி, மருத்துவர் ஆக வேண்டும் என்பதே அவரது விருப்பம், இதற்காக நீட் தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருந்தார். தனிஷாவின் தாய் கோவிட் தொற்றால் உயிரிழந்துவிட்டார், தந்தை இயற்பியல் ஆசிரியர் என தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் பிரயன்ஷ் விஸ்வகர்மா (Priyansh Vishwakarma). பாஜகவில் இவர் முக்கிய பொறுப்பில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறும் நிலையில், கடந்த 19-ம் தேதி அங்கே பிரபல மாடலாக அறியப்படும் வேதிகா தாக்கூர் என்ற 25 வயது இளம்பெண் பிரயன்ஷை காண அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்குள்ளும் என்ன விவகாரம் என்று தெரியவில்லை, திடீரென பிரயன்ஷ் தன்னை காண வந்த வேதிகாவை தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கிய வேதிகாவை அவர் தனது காரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 26) பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் வேதிகா உயிரிழப்பதற்கு முந்தைய தினம் வேதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது இந்த நிலைமைக்கு காரணம் பிரயன்ஷ் விஸ்வகர்மா தான் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் உடனடியாக பாஜகவை சேர்ந்த பிரயன்ஷ் விஸ்வகர்மாவை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியது.
இந்த விவகாரம் சூடு பிடிக்கவே, காவல்துறை அவரை கைது செய்து, அவர்மீது 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், வேதிகாவை சுட்டதும் அவர் இறந்துவிட்டதாக எண்ணி, அவரது உடலை வைத்து அவரது காரிலே சுமார் 7 மணி நேரம் சுற்றியிருக்கிறார்.
மேலும் அவரது உடல் உள்ளிட்ட ஆதாரங்களை எப்படி அழிக்கலாம் என திட்டம் தீட்டியிருக்கிறார். ஆனால் வேதிகா உயிருடன் இருப்பதாய் அறிந்த பின்னர், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு தனது கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் சென்று அனுமதித்து விட்டு திரும்பியுள்ளார்.
அவரது காரில் பாஜக கொடி இருந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் அதிரவலையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இந்த விவகாரம் பெரியதாக மாறிய நிலையில், பிரயன்ஷ் விஸ்வகர்மா பாஜகவை சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் பாஜகவில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை என்றும் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் பிரயன்ஷ் விஸ்வகர்மாவின் காரில் பாஜக கொடி இருப்பது மட்டுமின்றி, அவர் உருவம் பொறித்த பாஜக பேனரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தவும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
என்னதான் கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும் பொதுமக்கள் அதனை கடைப்பிடித்தால் தான் நன்மை. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரபரப்பான சாலையில் ஒரே பைக்கில் குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சீர்திருத்த சட்டப்படி சிறிய விதி மீறல்களுக்கு கூட கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் இளைஞர்கள் பலர் பைக்கில் சாகசங்கள் செய்தபடி பயணிப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்த செயல் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற சாலைகளில் சாகசம் செய்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தாலும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இரு சக்கர வாகனத்தில் 3 குழந்தைகள் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 7 பேரை ஏற்றிக் கொண்டு மும்பையின் பரபரப்பான சாலையில் சென்றது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆபத்தான பயணத்தை முனவர் ஷா என்பவர் மேற்கொண்டு இருந்தார். 2 குழந்தைகள் முன்பக்கம் நின்ற படியும் 3 பேர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டும், மேலும் இரு சிறுவர்கள் பின்பக்கம் உள்ள கம்பியில் நின்ற படியும் பயணம் செய்தனர்.
இதை சக வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். காவல்துறையினர் வாகனத்தின் எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடி கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
அதன்படி பைக்கை ஓட்டிச் சென்றவர் முனவர் ஷா. இப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்ற 7 பேரில் 4 குழந்தைகள் அவரது பிள்ளைகள் என்றும் மீதம் உள்ள 3 பேர் பக்கத்து வீட்டு பிள்ளைகள் எனவும் தெரிவித்துள்ளார்.
காவலரின் மனைவியின் தலையை அவரது மாமனாரே துண்டாக வெட்டி காவல்நிலையத்தில் தாமாக வந்து சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங். 62 வயதான ரகுவீர் சிங்கிற்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி மாமனார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
ரகுவீரின் இளைய மகனான கவுரவ் சிங் பருக்காபாத் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக உள்ளார். கவுராவிற்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் இரு மருமகள்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சண்டை மாமனார் ரகுவீருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இளைய மருமகள் பிரியங்கா விதவையாக இருக்கும் தனது மூத்த மருமகளிடம் சண்டை போடுவதை ரகுவீர் தட்டி கேட்டு வந்துள்ளார்.
இவ்வாறு கடந்த திங்கள்கிழமை ஜூன் 26ஆம் தேதி இரவு இதே போல இரு மருமகள்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இடையே புகுந்த மாமனார் ரகுவீரை இளைய மருமகள் பிரியங்கா தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இரவு நடந்த சம்பவத்தால் அவமானம் தாங்காமல் ரகுவீர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மறு நாள் காலை பிரியங்கா சமைத்துக் கொண்டிருந்த போது ரகுவீர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து பிரியங்காவின் தலையில் வீசி துண்டாக்கியுள்ளார்.
பின்னர் அங்குள்ள காவல்நிலையத்தில் ரத்தக் கறையுடன் சென்று தாமாகவே சரணடைந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது பிரியங்காவின் கணவர் கவுரவ் தனது காவல்நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.
தொடர்ந்து பிரியங்காவின் உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. சம்பவம் தொடர்பாக மாமனார் ரகுவீரை சிறையில் அடைத்து விசாரித்து வரும் போலீசார், எப்ஐஆரில் கணவர் கவுரவ் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயது கீர்த்தி. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் 24 வயது கங்காதரை காதலித்தார் . இதில் கங்காதர் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தார்.
அத்துடன் தப்பாட்ட கலைஞர் எனவும் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் கீர்த்தி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. கங்காதரை காதலிக்க வேண்டாம் என கீர்த்தி வீட்டில் சொல்லியுள்ளனர்.
இது குறித்து கீர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கங்காதரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கீர்த்தி உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கீர்த்தியை நேற்று ஜூன் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார் . நேற்று காலை 6 மணிக்கு இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.
கீர்த்தி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த கங்காதர், கீர்த்தி வீட்டுக்கு சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடைய சகோதரர் ஆறுதல் கூறி கங்காதரை பைக்கில் அழைத்து சென்றார்.
திடீரென ஒரு இடத்தில் பைக்கை நிறுத்த சொன்ன கங்காதர், அந்தப் பகுதியில் வேகமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.