பெற்றோர் திருமண ஏற்பட்டுகளை முன்னெடுத்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்காததால் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருகோணமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் இருபத்தி மூன்று வயதுடைய யுவதியே தன்னுயிரை மாய்துள்ளதாக த பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. யுவதியை விட பதினைந்து வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தோனேசியாவின் அகதி முகாமில் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் அகதிப் பெண் அசோக்குமார் லலிதா சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் (19.06.2023) உயிரழந்துள்ள செய்தி வேதனையளிப்பதாக இந்தியாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டிலே தாய் நிலத்திலிருந்து வெளியேறிய இந்த சகோதரி லலிதா புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கணவன் அசோக்குமார் மற்றும் இரு பிள்ளைகளுடன் இந்தோனேசியாவில் மெடான் நகரில், பெலவான் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், லலிதா நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டடிருந்த சூழலில் போதிய மருத்துவ வசதி இல்லாமலேயே அவர் உயிர் இழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.
இறந்த இந்த சகோதரியின் 11 வயது மகன் தாயின் கடமைகளைச் செய்யும் போது, நான் 07 வயதிலே எனது தந்தையார் இறந்தபோது அவருக்கு நான் இறுதிக்கடமைகளை செய்த அனுபவத்தை என் கண்முன்னே வேதனையுடன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் இந்தோனேசியாவிலே நீண்ட காலமாக இந்துப் பாரம்பரியத்தோடு, இந்துக் கோயில்கள் வைத்து, இந்திய கலாச்சார பின்னணி கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களிடம் இறந்து போன இந்த அகதி சகோதரியின் உடலை, அவர்களின் தகனம் செய்யும் இடத்திலே அடக்கம் செய்வதற்கு அங்குள்ள நமது ஈழ உறவுகள் அணுகிய போது தங்களிடத்தில் ஒருபோதும் தகனம் செய்ய முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டார்களாம்.
இந்த நேரத்தில் தான் அங்கே பல தசாப்தங்களாக, அங்கே சகல உரிமைகளோடும் வசித்து வரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் மனித நேயத்தோடு இறந்த சகோதரியின் உடலை தங்களிடத்தில் தகனம் செய்வதற்கு அனுமதி கொடுத்து தங்கள் தோழமை உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழர்கள் தங்களுக்கிடையில் சாதி, மதம், பிரதேசவாதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பல்வேறு கூறுகளாக வன்ம உணர்வோடு பிரிந்து கிடப்பதால், தமிழ் மக்களுக்குள் இருக்கும் அறம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்று இந்தோனேசியாவில் இடம் பெற்ற இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
உலகப் பந்தில் ஒரு தேசத்தை உருவாக்குவதற்குரிய தகுதி என்பது, ஒரு இனம் உலகில் எங்கு பரந்து வாழ்ந்தாலும் தர்ம சிந்தனையோடு, மற்றவர்களையும் தூக்கி விட வேண்டும் என்ற அடிப்படைப் பண்போடு வாழ வேண்டும். அப்போது தான் இந்த பூமிப் பந்தில் ஏனைய சமூகங்கள் போல் தமிழர்களும் சகல உரிமைகளோடு எழுந்து நிற்க முடியும்.
இறந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்பதோடு, சகோதரியின் இறப்பைத் தாங்க முடியாமல் தவிக்கும் சகோதரியின் கணவருக்கும், அவரின் பிள்ளைகளுக்கும், எனது குடும்பத்தின் சார்பிலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் உறவுகள் சார்பிலும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த குழந்தைகளின் எதிர்காலத்தோடு இறைவனும், இயற்கையும் நல்ல மனிதர்களும் கூட இருக்க வேண்டும் என்றும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் மாரடைப்புகள் எந்தெந்த கிழமைகளில் வரும் என்பதைப் பற்றி பிரித்தானிய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெளியான தகவல் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அந்த தகவலின்படி திங்கட்கிழமைகளிலேயே அதிக அளவிலான மாரடைப்புகள் தான் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள மாரடைப்பானது ஏன் திங்கட்கிழமைகளில் ஏற்படுகின்றது. அதற்கான காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் காணப்படும். அதில் திங்கட்கிழமை என்றால் பெரும்பாலானோருக்குப் பிடிக்காத நாளாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.
பலருக்குப் பாடசாலை காலம் முதல் வாரத்தில் உள்ள 7 நாட்களில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை திங்கட்கிழமை வகுப்பு எனப் பழக்கப்பட்டதால் கூட இவ்வாறு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Monday Blues என்று சொல்வார்கள்.
இதை நாமும் சாதாரணமாகக் கடந்து சென்று இருப்போம். ஆனால், தற்போது இந்த விடயத்தில் தான் மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரித்தானியாவின் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் ஹெல்த் நிறுவனமும், ரோயல் கல்லூரி ஆப் சர்ஜன்ஸ் கல்லூரியும் இணைந்து உலகம் முழுவதிலும் உள்ள 10,000 இதய நோயாளிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினர். இதன் ஆய்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அதிக அளவிலான நபர்களுக்குத் திங்கட்கிழமைகளில் தான் மாரடைப்பு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையை முடித்துவிட்டு திங்கள்கிழமை பணிக்குச் செல்ல வேண்டுமே என்கிற அதீத மன அழுத்தம் தான் இதற்குக் காரணமாம்.
அதாவது, திங்கட்கிழமைகளில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதால் இரத்த அழுத்தமும், சர்க்கரையும் தானாக அதிகரிக்கிறது. இது இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அலுவலக பணிகளுக்கும், சொந்த வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரித்தல், பணி அழுத்தத்தைச் சொந்த வாழ்க்கைக்குக் கொண்டு வராமல் இருத்தல், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் இதுபோன்ற மாரடைப்புகளைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்திய மாநிலம் கேரளாவில் 8 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்த தம்பதி எபி – ஜோன்சி.
இவர்களது 8 மாத ஆண் குழந்தை ஜோஷ். எபி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது குழந்தை ஜோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜோஷ் அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைக்கு ஊசி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் குழந்தை திடீரென மூச்சுவிட முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட தாய் ஜோன்சி அலறியுள்ளார். உடனே பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள், நர்ஸுகள் வந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் குழந்தையை காப்பற்ற முடியவில்லை.
குழந்தைக்கு அளிக்கப்பட்ட Infliximab எனும் அந்த ஊசியை செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதனை தெரிந்தே தான் மருத்துவர்கள் குழந்தையின் உடலில் கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லாமல் ஊசி செலுத்தியுள்ளனர் என குழந்தையின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மருத்துவமனை மீது சுகாதார அமைச்சரிடம் புகாரும் அளித்துள்ளனர். ஆனால், குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்ததாகவும், மருத்துவமனையில் எந்த மருத்துவக் கோளாறும் இல்லை என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அக்காவை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட தம்பி எரித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத்.
இவர் அங்குள்ள ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவரில் அக்கா அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத்தின் அக்காவை அதே பகுதியை இருந்த வெங்கடேஷ் (வயது 23) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் மெசேஜ் மூலம் தொடர்ந்து ஆபாசமாக பேசிவந்துள்ளார். அக்காவின் மொபைலை பார்த்த அமர்நாத்துக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. அவர் தனது வீட்டாரிடம் இதுகுறித்து கூறிய நிலையில், அவர்கள் வெங்கடேஷை எச்சரித்துள்ளனர்.
இதனால் வெங்கடேஷ் அமர்நாத்தின் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த நிலையில்ம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமர்நாத் சைக்கிளில் வெளியே சென்றபோதுபோது வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் அமர்நாத்தை வழிமறைத்து அவரின் கைகளை கட்டி, வாயை பொத்தியுள்ளார்.
மேலும் அங்கிருந்த தார்பாயில் அவரை சுருட்டி, தான் கொண்டுவந்த பெட்ரோலை வைத்து அமர்நாத்தை உயிரோடு எரித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அமர்நாத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் 90 சதவீத காயங்களோடு அமர்நாத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் வெங்கடேஷ் மற்றும் அவரின் நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில், கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(28). பிரிண்டிங் பிரஸ்சில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவிதா(22). இருவருக்கும் கடந்தமே 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, சதீஷ் வீட்டில் தம்பதியர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேலையில் இருந்த சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சுவிதா, உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், சதீஷ் வேலையை விட்டுவிட்டு, நினைத்த நேரத்தில் வீட்டுக்கு வரமுடியாது எனக் கூறிவிட்டு, வேலையைத் தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, பிற்பகல் 3.45 மணியளவில் சதீஷை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட சுவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு, வீடியோ அழைப்பை துண்டிக்காமலேயே தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் பதறிப்போன சதீஷ் உடனடியாக வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த சுவிதாவை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுவிதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சோகமாக இருந்த சதீஷ் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் இருந்து சதீஷ் வெளியேறினார். பின்னர், வீட்டுக்குச் சென்று, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ( பொறுப்பு ) இலக்கியாவும் விசாரணை நடத்தி வருகிறார்.
கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருந்தொகை கட்டணத்திற்கு போலி விசாக்களை வழங்கும் முகவர்களினால் இந்தநிலை உருவாகிறது.
எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு விஎப்எஸ் குளோபல் (VFS GLOBAL) நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 240 நாடுகள் இந்திய மாணவர்களை உயர்கல்விக்காக சேர்த்துக்கொண்டுள்ளன.
பெருமளவிலான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க முன்வருவதால், விசாக்களின் தேவை இதுவரை அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் பலர் தங்கள் வெளிநாட்டுக் கனவுகளை நனவாக்க, போலி முகவர்களின் வலையில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை மாணவ வீசாக்களுக்கான தேவை பொதுவாக மே மாதத்தின் மத்தியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடித்துவரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் 2022ல் 7.5 லட்சத்தை எட்டியுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா உறுதியளிக்கப்பட்ட ஒரு முடிவை கொண்டு தங்களை விசா சேவை வழங்குநர்களாகக் காட்டிக்கொள்ளும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 30,000 முதல் 55,000 ரூபாய்க்கு ஈடாக டெல்லியைச் சேர்ந்த இரண்டு முகவர்கள் மூலம் போலி ஆவணங்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஎப்எஸ் குளோபல்(VFS Global) நிறுவனத்தின் முத்திரையை போலியாக தயாரித்து ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தமை விசாரணையில் தெரியவந்தது. எனவே இது போன்ற மோசடியான செயல்களிலிருந்து சற்று விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் பெண்ணொருவரின் தங்க நகையை சூட்சுமமாக திருடிய மூன்று இளம் யுவதிகள் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று யுவதிகளும் அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் ஏறி ரது பொக்குவா சந்திக்கு செல்வதற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு முன்னதாக, அங்கு பயணித்த பெண்ணொருவர் கழுத்தில் தங்க நகை இல்லாததைக் கண்டு பேருந்தில் இருந்த சக பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து எவரும் வெளியேற அனுமதிக்காது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் பேருந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மூன்று யுவதிகளை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, யுவதி ஒருவரின் நாடாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலியை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேருந்தில் பயணித்த 18-22 வயதுடைய மூன்று யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தங்க நகையினை பயணியின் கழுத்திலிருந்து கழற்றிய போது இரு யுவதிகள் குடைகளாலும் கைப்பைகளாலும் மூடியிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதிகள் புத்தளம், திருகோணமலை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸாரிடமிருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
ஹட்டன் தொடருந்து நிலையத்தில் தனிமையில் இருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை இன்று(19.06.2023) அதிகாலை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தந்தை மற்றும் தாயாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் குறித்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் தொடருந்தில் பயணித்த அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் அம்பர் என்ற பாடசாலை மாணவன் திங்கட்கிழமை அதிகாலை ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இறங்கி நின்றபோதே பொலிஸாரின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.
தனது பெற்றோர் அநுராதபுரத்தில் வசிப்பதாகவும், தனது குடும்பத்தில் மூத்த சகோதரனும் சகோதரியும் இருப்பதாகவும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து தான் பாடசாலை கல்வியை பெற்றதாகவும், 10 ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் போது பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் (18/06/2023) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்காலையில் சிறுமி ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தங்காலை நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெவிந்தி யஹாரா தேவ்மினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி நேற்று காலை (18) தனது தந்தையுடன் வீட்டில் உள்ள கொங்கிரீட் கம்பத்தில் ஊஞ்சல் ஆடச்சென்ற போதே இச் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அண்மையில் டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியிருந்தது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (16.06.2023) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியிருந்தது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக பதிவாகியிருந்தது. இதேவேளை கடந்த 16ஆம் திகதி 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 159 ஆயிரம் என்ற மட்டத்திலிருந்தது.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்டுகும் வகையில் அமைந்துள்ளதாக பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் முற்றத்தில் சடலமாக கிடந்தார்.
சம்பவத்தன்று, மார்ச் 13ம் திகதி கொலைகாரன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும் தீபாவின் தாயார் லீலாவதி சீவரத்தினம் கதவை திறந்துள்ளார். அவரும் துப்பாக்கி குண்டுக்கு இலக்காக, சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் தீபாவின் கணவர் விஜேந்திரன் பாலசுப்ரமணியம் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின்னர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் தான் இந்த கொலைக்கு திட்டமிட்டதும் செயல்படுத்தியதும் என நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.
விசாரணையில், தமது மனைவியை கொல்லும் பொருட்டு Steadley Kerr என்ற வாடகை கொலையாளியை விஜேந்திரன் பாலசுப்ரமணியம் ஏற்பாடு செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
வெள்ளிக்கிழமை அந்த நபர் மீதும் முதல் நிலை கொலை வழக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக, Steadley Kerr என்பவரின் நண்பர் Gary Samuel என்பரும் குற்றவாளி என நடுவர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளார்.
Gary Samuel என்பவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும், அவர் வெறும் வாகன சாரதி மட்டுமே என்றும் அவர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
ஆனால் இந்த இருவருமே கொலைக்கு திட்டமிட்டதும், வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியதும் என அரசு தரப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர். இவர்கள் மூவருக்குமான தண்டனை மிக விரைவில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (19.06.2023) காலை முதல் நாளை 20.06.2023 காலை வரை இந்த விசேட பேரூந்து சேவை நடைபெறவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளிலிருப்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று வருடாந்தம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு, கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டால் இவ்வாறு பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமென அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதியை நிறுத்தாமல் ஒரு கிலோ மாவின் விலை 180 முதல் 170 ரூபா வரை குறைக்கப்பட்டிருந்தால், ஒரு றாத்தல் பாணின் விலை 10 ரூபாவுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலை காரணமாக, கடந்த சில நாள்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (18.06.2023) வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரவியலில், வட மாநிலங்களில் கோடையின் தாக்கம் இன்னும் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உத்தரப் பிரதேசத்தின் பல்லியா பகுதியில் ஜூன் 15-17 திகதிகளில் தீவிர வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமார் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதைக் கடந்தவர்கள் என அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜெயந்த் குமார் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானோர் மாரடைப்பு, மூளை நரம்பு அடைப்பு, வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சினைகளுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் வழக்கத்தை விட 4.7 டிகிரி வெப்பம் கூடுதலாக இருந்துள்ளது.
அதேபோல பீகாரிலும் தீவிர வெப்பம் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் 44 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அம்மாநில தலைநகர் பட்னாவில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு நேற்றைய தினம் (17.06.2023) வெப்பம் 44.7 டிகிரி வரை சென்று உச்சம் தொட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் வெப்ப அலை தீவிரமாக வீசுவதால் அங்குள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூன் 24ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மத்தியப் பிரதேசத்திலும் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு, மத்திய கிழக்குப் பகுதிகளில் அடுத்து 3-4 நாள்கள் தீவிர வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாகப் பீகாரின் பல பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.