கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம் யுவதி : கைதான முன்னாள் காதலன்!!

மொனராகலையில்..

மொனராகலையில் வீட்டில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் செவனகலை பிரதேசத்தில் நேற்று (09.06.2023) பகல்வேளையில் இடம்பெற்றுள்ளது.

எஸ்.லக்சிகா என்ற 22 வயது யுவதியை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியின் 22 வயதுடைய முன்னாள் காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து நேற்று மாலை பேருந்தில் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட யுவதியும், கைதான இளைஞரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது காதலிக்க ஆரம்பித்தார்கள் எனவும், கடந்த வருடம் இளைஞருடனான காதலை யுவதி நிறுத்திக்கொண்டார் எனவும் தெரியவருகிறது.

அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே யுவதியை இளைஞர் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் யுவதியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர், யுவதியின் தாயாரின் கண் முன்னால் இந்த கொலையை புரிந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் தந்தை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் குழு மோதல் ஒன்றில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : மீண்டும் இரண்டு இலட்சத்தை எட்டுமா?

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (10.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 146000 ரூபா என்ற நிலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிகரிப்பு பதிவாகி, இவ்வளவு நாட்களாக 150,000 ரூபாவிற்கு குறைந்தளவாகவே நிலவி வந்த தங்கத்தின் விலை இன்று 150,000 என்ற மட்டத்தை தொட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 162,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நேற்று இரவு முதல் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த மாணவர்களின் செயல்!!

இலங்கையில்..

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தென்னிலங்கையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் இருந்து வந்த ஐரோப்பிய பல்கலைக்கழக இளைஞர்கள் அக்குரள சுற்றுலா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு கடற்கரையில் உள்ள பெருமளவிலான கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர். இலங்கை மக்களால் அசுத்தமடைந்த கடற்கரைகளை சுத்தப்படுத்துவதற்காக இந்த வெளிநாட்டு பல்கலைக்கழக இளைஞர்கள் தன்னார்வத்துடன் அங்கு வந்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட வெளிநாட்டு இளைஞர்கள் கூறுகையில், இவ்வளவு அழகான கடற்கரையை கொண்ட இலங்கையின் கடற்கரைகளை கழிவுகளை கொட்டாமல் பாதுகாப்பது இலங்கை குடிமக்களின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: சந்தேக நபரின் அதிர்ச்சி தரும் வாக்குமூலம்!!

முல்லேரியாவில்..

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் 5 வயது சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த விசாரணையில், குழந்தை உண்மையில் வெட்டுக் காயங்களால் இறக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடரில் கைதுசெய்யப்பட்ட 51 வயதான புல் வெட்டும் தொழிலாளியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புல் வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தவறுதலாக சிறுவனைத் தாக்கியதால் குழந்தை இறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அச்சமயத்தில் பீதியடைந்த சந்தேக நபர் உடைந்த கண்ணாடி பாட்டிலின் துண்டுகளை சிறுவனின் உடலுக்கு அருகில் வைத்துள்ளார், இது குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களுக்கு வெளிப்படையான காரணமாக இருக்கும் என அதனை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் விசாரணையில் தெர்வித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை ( 08-06-2023) ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து ஐந்து வயதுடைய ஜொனாதன் மார்க் பொன்சேகா என்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, இன்று (ஜூன் 09) சந்தேகநபர் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்!!

யாழில்..

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (10) காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் பிக்கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன எதிர் எதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணம் செய்த அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் விவசாயின் அசாத்திய திறமை.. வியப்பில் பொதுமக்கள்!!

யாழில்..

வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களை குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை 18 வெற்றி கண்டுள்ளார்.

இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக வடமாகாண விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் நடிகை செய்யும் முறை காண்பிக்கப்பட்டது.

அத்துடன் குறிந்த இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது அதன் மூலம் எப்படி நடுகையினை மேற்கொள்வது போன்ற விடயங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இதன்போது குறைத்த நடுகை முறை வெற்றி அளிக்கும் முறையாக விவசாய அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டால் அதனை அனைவருக்கும் பரிந்துரைப்பதற்கு முன்வரவுள்ளனர்.

இந் நிகழ்வில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி முன்னாள் விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாய அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தங்கத்தின் விலையில் திடீரென இன்று பதிவான மாற்றம்!!

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (09.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் சிறியதொரு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 146000 ரூபா என்ற நிலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் சிறியதொரு அதிகரிப்பு பதிவாகியுள்ள போதும் தொடர்ந்தும் தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இலங்கையில் டொலரின் வீழ்ச்சியானது இன்னும் சில நாட்களுக்கே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் சில பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கப் போவதாக கடந்த கிழமை முதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என குறிப்பிடுகின்றனர்.

இப்படியான நிலைமை பார்க்கும் போது இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் தங்கப் பவுணொன்றின் விலையானது இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து : இருவர் காயம்!!

வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இன்று (09.06.2023) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலிருந்து ஏ9 வீதியூடாக வைத்தியசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நீதிமன்றிக்கு அருகே வீதியின் மறுபக்கம் சென்று வீதி தடுப்புச்சுவரில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகியதுடன் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கைது செய்யப்பட்ட விலைமாதுக்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிப்பு!!

வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்று (09.06) தெரிவித்துள்ளனர்.

இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 விலைமாதுக்களும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

அதோடு அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் அவர் ஆற்றி வரும் பிற பொறுப்புகளில் இருந்து விலகுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

களுத்துறையில்..

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறையில் ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறையில் மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர், நீதிமன்றில் இன்று (09) மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி குறித்த உத்தரவை களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் களுத்துறையைச் சேர்ந்த 30 வயதான திவங்க ஜயவிக்ரம எனும் கணித ஆசிரியராவார். மேலும் இந்த வழக்கு ஜூன் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் செயல் : குவியும் பாராட்டுக்கள்.!!

மாணவர்கள்..

இந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மமா.வ.ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயம் பாடசாலை மாணவ, மாணவிகள் மேற்கொண்ட நற்செயலால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் வருங்கால சந்ததியினர்களுக்கு குறித்த மாணவ, மாணவிகள் மிக சிறந்த எடுத்துகாட்டாகவும் திகழ்ந்தமை வாழ்த்துக்குரியது. பரீட்சை விதிமுறைகளை நேர்த்தியாக பின்பற்றியமை, மேற்பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றமை,

பரீட்சை நிறைவு பெற்ற பின்னர் இன்றைய நாளில் அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டப சூழலை & பயன்படுத்திய கழிவறைகளை சுத்தப்படுத்தியமை, மற்றும் கடமையாற்றிய பரீட்சகர்களுக்கு நன்றிகளை மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த செயலுக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

09 வயதில் புலம்பெயர் தேசம் சென்று சாதித்த தமிழ்ப் பெண்.. பலரும் பாராட்டு!!

தமிழிசை..

09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்தவள். டாக்டர் ஆகப்போறாள் தமிழிசை ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.

தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள்.


அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி நிர்வாகம்

Gymnasium தொடரலாம் என்ற அனுமதியுடன் தொடர்ந்தாள். அங்கும் அவள் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து 06 மாத காலம் ஆசிரியர்துறையை தேர்ந்தெடுத்து கற்றுக்கொண்டிருந்தபோது.. அவளது மனதில் மருத்துவத்துறைதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது … விடவில்லை முயற்சியை தொடர்ந்தாள்.
அவளது மருத்துவத்துறை கனவை நனவாக்கினாள் .

தற்போது Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் கால் பதித்துள்ளாள். இவளது தாயார் திருமதி வனஜா தமிழீழ நிழல் அரசின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக அழுத குழந்தையால் கண்டுபிடிக்கப்பட்ட இளம் தாயின் சடலம்!!

கம்பளையில்..

கம்பளையில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய இளம் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வயதுக் குழந்தை தாயின் கால்களைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்ததால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புரஸ்ஸ டெல்டா தோட்டத்தின் வடக்கு பகுதியிலே தாய் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஸ்வர்ணா என்ற இந்த தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வானொலியை சத்தமாக ஒலிக்க செய்துவிட்டு துணியால் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

நீண்ட நேரமாக சிறு குழந்தை அழும் சத்தத்தை கேட்ட நபர், இது குறித்து விசாரித்த போது, ​​மேற்கூரையில் பெண் தூக்கில் தொங்குவதையும், குழந்தை கால்களை பிடித்துக்கொண்டு அழுவதையும் கண்டு அயலவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் உடனடியாக துணியை அறுத்து தாயை தரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அதற்கமைய, புரஸ்ஸ பொலிஸார் சோதனையிட்ட போது, ​​தாய் குழந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதமும் கிடைத்தது. “தங்கம் நீ கவனமாக இரு… நான் செல்கிறேன்… இப்படிக்கு மம்மா” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த பெண்ணின் கணவர் தோட்டத்தில் பணிபுரிபவர் எனவும் மரணத்திற்கான காரணம் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலத்தா சம்பவ இடத்திற்குச் சென்று நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

இலங்கையில் பலரையும் உருகவைத்த பாடசாலை மாணவர்களின் செயல்!!

இலங்கையில்..

11வருடங்கள் கல்வி கற்ற பாடசாலையை விழுந்து வணங்கி மாணவர்கள் விடைப்பெற்ற சம்பவம் பலரையும் ஆனந்த கண்ணீர் விடவைத்துள்ளது. தெஹிகொல்ல மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு தாம் கற்ற பாடசாலையினை விழுந்து வணங்கி விடைபெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமக்கு 11 வருடங்கள் கல்வியை நல்கிய பாடசலையினை விட்டுப்பிரிய மனமில்லாத மாணவர்கள் , தம் பாடசாலைக்கு நன்றியினை தெரிவிக்கும் விதமாக விழுந்து வணங்கியுள்ளனர்.

இது குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், மாணவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துவரும் சமூக ஆர்வலர்கள், பிள்ளைகளை இவ்வாறு சிறப்பான் பழக்கவழகங்களை கற்றுக்கொடுத்த ஆசியர்களுக்கும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

வளரும் பயிரை முளையில் தெரியும் என்ற பழமொழிபோல இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி சிறந்ததொரு நிலையினை அடைவார்கள் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர்.

அதேவேளை சிங்கள பாடசாலை ஒன்றில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் மாணவர்கள், வகுப்பறையில் இருந்த கதிரைகளை தூக்கி அடித்து உடைந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. அது குறித்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

தமக்கு பின்னர் வரும் தங்களுடைய சகோதர்கள் கல்வி கற்க அந்த உபகரணங்களே பயன்படும் என்பதை உணராது பாடசாலை சொத்தை வீணாக்கியுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒரே நாட்டில் வாழும் மாணவர்களின் இருவேறான செயல்கள், ஒரு சாராரிடம் பணிவும், மரியாதையும் காணப்படுகின்றது. இன்னொரு சாராரிடம், அட்டூழியமும் அடாங்காத்தனமும் வளர்துள்ளது வேதனைக்குரிய விடயம் ஆகும்.

வேகமாக உயரும் டொலரின் பெறுமதி.. சரிவடையும் இலங்கை ரூபா!!

டொலர்..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(09.06.2023) வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த நான்கு வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.

எனினும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 309.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 379.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 360.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.