வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் : “சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா”?

கவனயீர்ப்பு போராட்டம்..

சர்வதேச சிறுவர் தினத்தில் காணாமல் போன தமது குழந்தைகளுக்கு நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (01.10.2022) காலை 11.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?, எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும் , இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள்,

சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா?, பாடசாலை சென்ற மாணவன் எங்கே போன்ற பல்வேறு கோசகங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தினம்!!

சிறுவர் தினம்..

வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று (01.10) காலை 9 மணிக்கு சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான போட்டிகள், சிறுவர்களின் கலை ஆக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தி இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது சிறுவர்களை பாராட்டி மகிழ்வித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சரத்சந்திர, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா ரூபசிங்க, முன்னாள் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, சிக்கன கூட்டுறவுச் சங்க தலைவர் மற்றும் பணியாளர்கள், சிறுவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த பள்ளி மாணவி : அதிர்ச்சி சம்பவம்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புகளுக்காக சிறுமியின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

படிப்பதை தவிர, சிறுமி இன்ஸ்டாகிராம், வாட்சப் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அப்பொழுது சிறுமிக்கும், அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது.

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளைஞர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார்.

தொடர்ந்து, இதனை பெற்றோரிடம் கூறாமல் மறைத்தும் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டின் கழிப்பறைக்கு சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.கழிவறையில் தங்களது மகள் குழந்தையுடன் மயங்கி கிடந்ததை அடுத்து, இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்.. தக்க பாடம் புகட்டிய மக்கள்!!

ஜார்க்கண்ட்டில்..

ஜார்க்கண்ட்டில் வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை அடித்துப் செருப்பு மாலை அணிவித்து பெற்றோர்கள் வீதி வீதியா அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், பதம்ஜம்டா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசியராக இருப்பவர் துகாராம். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியுள்ளார்.

மேலும் மாணவிகளைத் தகாத முறையில் தொட்டுள்ளார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஆசிரியரின் கழுத்தில் செறுப்பு மாலையை அணிவித்து வீதி வீதியா அழைத்துச் சென்றுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்க வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து ஆசிரியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதாக போலிஸார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

வவுனியாவில் 2050 ஆவது நாளைக் கடந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!!

2050 ஆவது நாளைக் கடந்த..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2050 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2050 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (01.10) ஈடுபட்டனர்.

இதன்போது ‘எல்லோரும் சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வாக இருக்கிறார்கள். நாங்கள் சிறுவர் தினத்தை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றோம். நாம் 2050 நாளாக இருப்பது யாருக்கும் தெரியாதா? இன்று நாம் தெருவில் இருந்து கண்ணீர் விடுகின்றோம்.

எமது பிள்ளைகள் வராமையால் எங்களுக்கு நிம்மதி இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வந்து தீர்வு பெற்று தர வேண்டும். எமது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது தான் காணாமல் ஆக்கப்பட்டடார்கள்.

எங்களது கண்ணீர் பொல்லாத கண்ணீர். எமது தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தர வேண்டும். அவ்வாறு தராவிடின் எமது கண்ணீர் அவர்களை நிம்மதியாக இருக்க விடாது. எமக்கு நீதி வேண்டும்’ என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்களவர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகள் என வெளிப்படுத்தும் பதாதையையும், அமெரிக்க கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்டகப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தாயை தேடும் 36 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் சென்ற யுவதி!!

தாயை தேடும்..

இலங்கையில் இருந்து சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து பிள்ளையாக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யுவதி ஒருவர் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

லோரேன் என்ற இந்த யுவதி தற்போது திருமணமான பெண். இதற்கு முன்னர் லோரேன் தனது பிரான்ஸ் கணவருடன் இலங்கைக்கு வந்து தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார்.

எனினும் அவரால் தனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க உதவுமாறு அவர் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

லோரேனிடம் தனது பிறப்பு தொடர்பில் குறைவான தகவல்களே உள்ளன. இதனடிப்படையில் அவர் கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்துள்ளார். தாயாரது பெயர் நேன்சி பத்திரகே தயாவதி என லோரேனிடம் இருக்கும் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேன்சி பத்திரகே தயாவதி என்ற பெண் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் எவராவது இருந்தால், அது பற்றி 0772114795 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காதல் மனைவியை விரட்டி விரட்டி வெட்டிய கணவன் : நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சோனியா (34) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஜெயராஜ் ஓட்டுநர் தொழிலும் சோனியா அழகு நிலைய தொழிலும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று சோனியா தனது இரண்டாவது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சுசீந்திரம் பகுதியில் வந்த போது, அவரை பின் தொடர்ந்து ஆட்டோவில் வந்த ஜெயராஜ் மனைவியை வழிமறித்து அரிவாளால் மகன் கண்முன்னே வெட்டியுள்ளார்.

இதில் கன்னம், கை, கால் உட்பட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயராஜை பிடித்து சம்பவ இடம் வந்த சுசீந்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சாலையில் இருசக்கரவாகனத்தில் வந்த மனைவியை மகன் கண்முன்னே கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சோனியா படுகாயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயராஜ் மீது ஏற்கனவே திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.

யாழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி : உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது!!

யாழில்..

யாழ். வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) என்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த தம்பதியினர் மின் ஒழுக்கு காரணமாக படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளதுடன்,அந்த அலைபேசி வெப்பமாகி சேமித்து வைத்திருந்த பெட்ரோல் கொனள்கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை – நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) மற்றும் அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்பதி உறங்கிய அறையில் தீப்பரவல் ஏற்பட்டதை அவதானித்த வீட்டார் அறையை உடைத்து உள்நுழைந்த போது,

இருவரும் தீயில் எரிந்து சடலமாக காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

மும்பையில்..

மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை அந்தேரியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்தேரி ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், ‘ எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல. யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது : நள்ளிரவு முதல் நடைமுறை!!

எரிபொருளின் விலை..

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு ஏற்ப லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் தமது பெட்ரோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 410 ரூபாவாகவும், 95 ரக பெட்ரோலின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பெட்ரோல் 92 இன் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லீட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பெட்ரோல் 92 இன் புதிய விலை 410 ரூபாவாகவும், பெட்ரோல் 95 இன் புதிய விலை லீட்டருக்கு 510 ரூபாவாகவும் குறைவடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!!

பொதுநோக்கு மண்டபம்…

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொது நோக்கு மண்டபம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் யோகராசா மற்றும் அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவர் இராசையா விக்டர் ராஜ்,

மேலும் அப்பகுதி கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள நேரத்தில் அரச நிதியினை வீண்விரயம் செய்து புதிய கட்டிடம் அமைப்பதற்கு பதிலாக முன்னர் இருந்த கட்டிடத்தினையே வினைத்திறனான முறையில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அரச செலவினை கட்டுப்படுத்தி இக் கட்டிடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

நாளை எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

எரிபொருள் விலை..

எரிபொருளின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே நாளைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பான இறுதி முடிவு எரிசக்தி அமைச்சரிடம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் விலையைக் குறைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று குப்தா கூறியிருந்தார்.

வவுனியா மன்னார் பிரதான வீதி பூட்டு : மாற்று வீதியினை பயன்படுத்துமாறு கோரிக்கை!!

மன்னார் பிரதான வீதி பூட்டு ..

வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளமையினால் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிங்கள பிரதேச செயலகம் அமைந்துள்ள பகுதியினை அண்மித்த பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் காணப்படும் புகையிரத கடவை பாதையினை சீர்செய்யும் வேலைத்திட்டம் காரணமாக,

நாளை (01.10.2022) காலை 7.00 மணி தொடக்கம் நாளைமறுதினம் (02.10.2022) இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதிக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.

எனவே மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகதாக வகையில் மாற்று வீதிகளான புகையிரதநிலைய வீதி, நகரசபை நூலக வீதி, அரச விடுதி வீதி போன்ற வீதிகளை பயன்படுத்துமாறு இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 கோடி ரசிகர்களை கவர்ந்த இலங்கைப் பாடகி : அதிர்ச்சியில் இந்திய பாடகர்கள்!!

யொஹானி..

இயக்குநர் இந்திரா குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேங்க் கோட்’ என்ற ஹிந்தி திரைப்படம் அக்டோபர் 25ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் அதன் முதல் பாடல் 5 கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ‘மெனிக்கே’ கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான பத்து நாட்களில் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களைக் கடந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை யொஹானி டி சில்வா பாடியுள்ளார். இவரது சமீபத்தில் பாடபட்ட ‘மெனிக்கே மகே ஹித்தே ‘ பாடல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்களின் கவர்ந்துள்ளது.

இவர் இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகியாக பார்க்கபடுகிறார்.

இந்நிலையில் இப்பாடல் சிங்களம் மட்டுமின்றி மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கணவரை பிரிந்து வாழும் நடிகை ரேவதி… 39 ஆண்டுகால கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி : குவியும் வாழ்த்துக்கள்!!

ரேவதி..

ஆங்கில மொழியில் Mitr, My Friend என்ற படம் தான் ரேவதி முதல் முறையில் இயக்கிய படம் ஆகும். தற்போது சலாம் வெங்கி என்ற இந்தி திரைப்படத்தை ரேவதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை ரேவதி கேரள மாநில விருதை வாங்கியதன் மூலம், தனது 39 ஆண்டுகால கனவு நிறைவேறிவிட்டதாக நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 80களின் கால கட்டத்தில் கதாநாயகியாக கோலோச்சியவர் ரேவதி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகளையும், ஃப்லிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ள ரேவதி இயக்குனராகவும் சாதித்துக் காட்டியுள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திரா மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரேவதி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். எனினும் இருவரும் இன்றுவரை நல்ல நட்புடன் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறினார்.

இந்த நிலையில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை பூதகாலம் படத்திற்காக வென்றுள்ளார். இதன்மூலம் நடிகை ரேவதி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். இதற்கு காரணம் தனது பூர்வீகமான கேரளாவின் விருதை முதல் முறையாக வென்றுள்ளது தான்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விருதை பலமுறை எனது நண்பர்கள் கைகளிலும், வீடுகளிலும் பார்த்திருக்கிறேன். பலமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்து நழுவி போயிருக்கிறது.

தற்போது நான் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்திருக்கிறது. அதற்காக பூத காலம் திரைப்படத்தின் இயக்குனருக்கும், கேரள விருது வழங்கும் குழுவிற்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு திரையுலக தோழிகள் முதல் நித்யா மேனன் வரை பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திருமணமான ஒரே மாதத்தில் கணவனுக்கு தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!

ஈரோடில்..

திருமணமான ஒரே மாதத்தில் மனைவி குறித்த உண்மையை அறிந்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் கணவர் ஒருவர். இது ஈரோடு பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). இவர் கைத்தறி நெசவு வேலை செய்துவருகிறார்.

இவருக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்ட இவரது பெற்றோர், பல இடங்களில் பெண்பார்த்து வந்திருக்கின்றனர். ஆனால், பெண் கிடைக்காததால் பல புரோக்கர்கள் மூலமாக பெண் தேடி வந்திருக்கின்றனர் செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி.

இறுதியில் பரிசபாளையத்தை சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா (27) என்ற பெண்ணின் விபரம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து பெண்பார்க்க சென்றபோது சரவணனுக்கு சரிதாவை பிடித்துப்போயிருக்கிறது.

அப்போது சரிதாவின் குடும்பம் குறித்து விசாரிக்கையில் அவரது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) ஆதரவாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், திருமண புரோக்கருக்கு 1.2 லட்ச ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் என விஜயலெட்சுமி தெரிவிக்க, மாப்பிள்ளை வீட்டாரும் வேறு இடத்தில் கடன்வாங்கி கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி சரவணன் ஊரில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சரிதா தனது பெரியம்மா விஜயலட்சுமிக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

எதேச்சையாக அதனை கேட்ட சரவணன் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்துபோய்விட்டார். அந்த வாய்ஸ் மெசேஜில், “என்னால் பல நாட்கள் இங்கே இருக்க முடியாது, இங்கே பணம் கிடைப்பது சிரமம். என்மீது இங்கே அனைவரும் பாசமாக இருக்கின்றனர்.

அதுவும் நான் பிரிந்து போனால் சரவணன் ஏதாவது செய்துகொள்வார் என தோன்றுகிறது. நீயாக வந்து கூட்டிச் செல்வது போல வா. அடுத்தமுறை வயதான ஆளை பிடி. அதுதான் சவுகரியம்” என கூறியிருந்திருக்கிறார் சரிதா.

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், தனது நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். இந்த மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க நினைத்திருக்கின்றனர் சரவணனும் அவரது நண்பர்களும்.

இதனையடுத்து, தனது நண்பர் ஒருவருக்கு பெண்பார்க்க வேண்டும் எனவும் விஜயலெட்சுமிக்கு தெரிந்த பெண் இருந்தால் சொல்லவும் என தனது மனைவியிடம் கூறியுள்ளார் சரவணன். இதனையடுத்து தனக்கு தெரிந்த கணவனை பிரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும், மாப்பிள்ளையின் புகைப்படத்தை அனுப்பிவைக்கும்படியும் கூறியுள்ளார் விஜயலெட்சுமி.

மேலும், மணப்பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறார் அவர். இதனையடுத்து, பெண்ணை தனது நண்பருக்கு பிடித்துப்போய்விட்டதாகவும், நேரில் அழைத்துவந்தால் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் சரவணன் கூற விஜயலெட்சுமி ஒரு பெண்ணுடன் சரணவனுடைய ஊருக்கு வந்திருக்கிறார்.

மேலும், தனக்கு கமிஷன் ஏதும் வேண்டாம் என்றும் மற்ற ப்ரோக்கர்களுக்கு 80 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூற, சரவணனும் ஓகே சொல்லியிருக்கிறார்.

நேரில் வந்ததும் நடந்ததை விவரித்து, இதுபற்றி கேட்டிருக்கிறார் சரவணன். தங்களுடைய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டதை அறிந்த விஜயலட்சுமி மற்றும் சரிதா ஆகியோர் தங்களது தவறை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

வயதான நபர்களை குறிவைத்து இதுபோன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலுக்கு எதிராக பங்களா புதூர் காவல்நிலையத்தில் சரவணனனின் வீட்டார் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி, சரிதா மற்றும் மற்றொரு பெண் ஆகிய மூவரையும் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.