வவுனியாவில் ஆர்ப்பாட்டம் : வீதிக்கு வந்த மாணவர்கள்!!

புளியங்குளம்..

பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்து வவுனியா கொல்லர் புளியங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

“பாடசாலைக்கு செல்வதற்காக காலை 6 மணிக்கே எமது பிள்ளைகள் வீட்டிலிருந்து சென்று பல மணிநேரம் காத்திருந்தும் பேருந்துகள் நிறுத்தப்படாமையினால் வீட்டிற்கே திரும்பி வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இதேவேளை பாடசாலை முடிவடைந்த பின்னரும் மாலை 4 மணிளவிலேயே பிள்ளைகள் வீட்டிற்கு வருகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்படுவதுடன், பல்வேறு அசௌகரியங்களையும் சந்திக்கின்றனர்.

எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பேருந்துகளை நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.”என்று தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொல்லர் புளியங்குளம், மன்னகுளம், குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, மாணவர்களை வீதியில் காத்திருக்க விடாதீர்கள், மாணவர்களின் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்,எமது உரிமையை காப்பாற்றுங்கள் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டகார்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாணவர்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு பொலிஸார் ஒத்துழைப்புகளை வழங்குவதுடன், பேருந்து சாரதி நடத்துனர்களிற்கு அறிவுறுத்தல்களையும் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்துள்ளது.

200 கோடி மோசடி வழக்கு : குற்றவாளியை மணக்க நினைத்த இலங்கை நடிகை.. நீதிமன்றத்தின் உத்தரவு!!

பெங்களூரில்..

இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகையான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது கணவருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதோடு சுகேஷை திருமணம் செய்யவும் ஜாக்குலின் திட்டமிட்டு இருந்தது அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

இவ்வழக்கில் ஜாக்குலின் ஜாமீன் கோரியிருந்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீன் வழங்கியது.

இலங்கையில் நாளுக்கு நாள் தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 590,627 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

விடைத்தாளில் எழுத்துப்பிழை : குச்சியால் அடித்தும், குத்தியும் மாணவரை கொன்ற ஆசிரியர்!!

உத்திரப்பிரதேசத்தில்..

விடைத்தாளில் இருந்த எழுத்துப் பிழைக்காக தலித் மாணவரை அடித்துக் கொன்றிருக்கிறார் ஆசிரியர். குச்சியால் அடித்தும், குத்தியும் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார் அறிவியல் ஆசிரியர். உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவுரியா மாவட்டத்தில் வைஷோலி கிராமம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நிகித்குமார், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

கடந்த 13ஆம் தேதி அன்று அறிவியல் ஆசிரியர் அஸ்வினி சிங் மாணவர்களுக்கு டெஸ்ட் வைத்துள்ளார். இந்த தேர்வில் நிகித்குமார் விடைத்தாளில் எழுத்து பிழை செய்துள்ளார்.

இதை பார்த்த அஸ்வினி சிங்கிற்கு ஆத்திரம் வந்திருக்கிறது. உடனே அந்த மாணவரின் தலை முடியை பிடித்துக் கொண்டு குச்சியால் அடித்து உச்சியால் குத்தியும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

இதில் அந்த மாணவர் மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாததால் பதறிப்போன ஆசிரியர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கெத்தாவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவ செலவு 40,000 ரூபாயை ஆசிரியர் அஸ்வினி குமார் ஏற்றிருக்கிறார். சிகிச்சையில் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிகித் குமார் நேற்று 26ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இழந்திருக்கிறார்.

மாணவன் உயிரிழந்ததும் அச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதை எடுத்து அவுரியா மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி குமார் மீது பல்வேறு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர் அஸ்வினிக்குமாரை விடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.

கிரிக்கெட் போட்டியை பார்த்தபடியே உறங்கிய 22 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம்!

ஹைதராபத்தில்..

ஹைதராபத்தை சேர்ந்தவர் சந்திரசேகர ரெட்டி. இவரின் மகன் அபிஜித் (22). இவருக்கு 70000 டொலர்கள் சம்பளத்தில் சவுதி அரேபியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் வேலை கிடைத்துள்ளது.

அடுத்த மாதம் அந்த பணியில் அபிஜித் சேரவிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை இரவில் பார்த்த அபிஜித் அப்படியே தூங்கியிருக்கிறார்.

பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென நெஞ்சு வலியால் துடித்த அவர் இது குறித்து பெற்றோரிடம் கூறினார். பின்னர் குடும்பத்தார் அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அபிஜித் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு பெரிதாக எந்தவொரு உடல்நலப்பிரச்சனைகளும் இல்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிற்கு நாமல் ராஜபக்ஸ திடீர் விஜயம் : இராஜாங்க அமைச்சர் மஸ்தான் தலைமையில் இரகசிய சந்திப்புக்கள்!!

நாமல் ராஜபக்ஸ..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ வவுனியாவிற்கு நேற்று (27.09) வருகை தந்து கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஏற்பாடு செய்த சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.

நேற்று (27.09) வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்புக்கள் இடம்பெற்றதுடன் குறித்த சந்திப்புக்களுக்கு ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் ஏற்பாட்டில் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல்களில் அடுத்துவரும் உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மீளவும் பொதுஜன பெரமுனவின் ஆட்சியை புதிய கூட்டணியாக மலரச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டப்பட்டதாகவும், மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

யாரும் இந்த தப்பை செய்யாதீங்க : ரூ. 5000 லோன் கொடுத்த அதிர்ச்சி : கதறி அழுத பிரபல நடிகை!!

லட்சுமி வாசுதேவன்..

பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன், லோன் ஆப் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக கதறி அழுது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும் தமிழில் வெளியான 555, தில்லாலங்கடி, திருட்டுக்கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த இவர், சீரியல் வாயிலாக ரசிகர் மனதில் இடம்பிடித்ததோடு, விருதுகளும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் லோன் ஆப் மூலம் ஏமாற்றப்பட்டதாகவும், எனது மொபைல் போனை ஹாக் செய்ட்டுள்ளதாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதை நான் கிளிக் செய்தவுடன் அந்த ஆப் டவுன்லோட் ஆகிவிட்டது.

சுமார் 3-4 நாட்களுக்கு பிறகு நான் ரூ.5000 லோன் வாங்கியதாக ஒரு SMS வந்தது. அதை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததால், பல மெசேஜ்கள், போன் கால்கள் என வந்தது.

மேலும் என்னை ஆபாசமாக பேசி வாய்ஸ் மெசேஜும் வந்தது. அதோடு நான் இந்த 5000 ரூபாய் கட்டவில்லை என்றால், எனது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியதால், நான் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன்.

இதனிடையே என்னுடன் தொடர்பில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவர்க்கும் என்னை குறித்த ஆபாச புகைப்படங்கள் வேறு ஒரு எண்ணில் இருந்து அனுப்பட்டது எனக்கு தெரியவந்தது. அதன்பிறகே எனது மொபைல் ஹாக் செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற தப்பான ஒரு லிங்கை கிளிக் பண்ணதால் எனக்கு இப்படி ஒரு நிலைமை. உங்க எண்ணிற்கு ஏதேனும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது என்று வந்தால், அந்த லிங்கை தயவு செய்து கிளிக் செய்யாதீங்க. உங்க மொபைலும் இது போன்று ஹேக் ஆகும். ” என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ எடுத்து மிரட்டியதால் பலரை மணந்தேன் : 7வது திருமணத்திற்கு பட்டு சேலையில் வந்த பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டில் 6 திருமணம் செய்து கொண்டு ஏழாவது திருமணத்துக்கு தயாரான போது சிக்கிய பெண் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில், 9ம் திகதி காலை, தனபால் எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை.

பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது. இதற்கிடையே சந்தியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் இடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இதை அறிந்த தனபால் அதிர்ச்சி அடைந்தார். சந்தியா திருமணத்திற்கு வந்தபோது அவரையும், அவரது தோழி தனலட்சுமி உள்ளிட்டோரை மடக்கி பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், சந்தியா கடந்த 1½ ஆண்டில் மட்டும் 6 பேரை திருமணம் செய்து, கைவரிசை காட்டி இருப்பதும், 7-வது திருமணத்திற்கு முயன்றபோது சிக்கி இருப்பதும் தெரியவந்தது.

கைதான சந்தியா நேற்று பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதில், திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், எனது நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால், நான் இந்த திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர்.

திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம், பாசமாக நான் நெருங்கி பழக வேண்டும். மொபைல்போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசையாக பேசி, அவர்களிடம் வாங்கி, இவர்களிடம் தந்து விடுவேன்.

திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்து பின்னர் பணம், நகைகள், பொருட்களை எடுத்து ஓடி விடுவோம். கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் பொலிசில் புகார் கொடுத்துள்ளேன்.

ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியிருக்கிறார். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக உள்ள நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஒரு பெண்ணுக்கு இரு முறையற்ற காதல்… போட்டா போட்டியில் நடந்த கொலை!!

விருகம்பாக்கத்தில்..

சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேசன் நகர், சாராதம்பாள் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சவுந்தர்யா (32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்துள்ள சவுந்தர்யா பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜி (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரே வீட்டில், இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் நேற்று இரவு, வீட்டில் இருந்த விஜி மர்மமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் கிடைத்து, விருகம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சவுந்தர்யாவின் பிள்ளைகளிடம் விசாரித்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், விஜியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.

பின்னர், எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்கள் கடைக்கு சென்று விட்டோம் என முன்னுக்கு பின் முரணாக பேசினர். போலீசார் சந்தகமடைந்து, சவுந்தர்யாவின் செல்போனை வாங்கி பார்த்ததில், பிரபு என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின. கோடம்பாக்கம், காமராஜ் காலனியை சேர்ந்த பிரபுவுக்கும், சவுந்தர்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அந்த விவகாரம் விஜிக்கு தெரிந்து, பிரபுவை மிரட்டி வந்துள்ளார். மேலும், சவுந்தர்யா, அவரின் பிள்ளைகள் இருவரை மிரட்டி, கொடுமை படுத்தி வந்துள்ளார். இதனால், சவுந்தர்யா, பிரபு ஆகியோர் ஒன்று சேர்ந்து, பிரபுவை கொன்றது தெரியவந்தது.

கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயின் கள்ளகாதலால் நடந்த கொலை சம்பவத்தில் தற்போது பிள்ளைகள் இருவரும் அனாதையாக நிற்கும் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உடல் கருகி பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. குறிப்பாக மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ம் 10 செ.மீ அளவுக்கு பெய்துள்ளது.

இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி அன்பரசன். இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் நேரடி நெல் விதைப்பு பணியினை மேற்கொண்டிருந்தார்.

இந்தச்சூழலில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக, வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சிய அன்பரசன், தனது மகன் அருள்முருகனை (27) அழைத்துக்கொண்டு வயலுக்கு சென்றார்.

அப்போது தண்ணீர் தேங்கியிருந்த அடுத்து, நீரைவெளியேற்றுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரம் திடீரென இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அறிந்த உறவினர்கள் அவர்களது உடலைப் பார்த்து கதறியழுதனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மின்னல் தாக்கி, தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் பரிதாபமாக பலி!!

கோணேஸ்வரன் ஹரிபிரணவன்..

யாழ்.ஊரெழு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி கடமையை முடித்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் , கடந்த மூன்று மாத கால பகுதியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (25) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை தட்டிச் சென்ற கூலித் தொழிலாளியின் மகள் : உருகும் பெற்றோர்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியாக மனோகர் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவரது மகள் ரக்சயா. கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர், தனது சிறு வயது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடும்பம் வறுமை சூழ்நிலையில் இருந்ததையும் தாண்டி, தனது முழு முயற்சியில் பகுதி நேர வேலை என ரக்சயா தனி ஆளாக கடின உழைப்பையும் போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்ட ரக்சயா, அதில் வெற்றி பெற்றதால் அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கவுரவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வான ரக்சயா, அதன் பின்னர் மாநில அளவிலான போட்டியிலும் தேர்வாகி இருந்தார்.

இந்தியாவில் இருந்து ஏராளாமானோர் இந்த அழகி போட்டியில் கலந்து கொண்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணான ரக்சயா, மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.

மேலும், அனைத்து மாநிலங்களில் சார்பிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் வரை இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும், இதிலிருந்து ஒருவர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி பேசும் ரக்சயா, நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார். மேலும் இது பற்றி பேசும் ரக்சயாவின் பெற்றோர்கள், சிறு வயது முதலே மகள் ரக்சயாவுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது என்றும், நாங்களும் அவரை ஊக்கப்படுத்தியதால், படிப்படியாக வளர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாறினார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வறுமையில் நாங்கள் இருந்த போதும், மகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்ததால், தொடர்ந்து விடாமுயற்சியாக அவர் செயல்பட்டு, இன்று மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளதாகவும் ரக்சயாவின் பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.

கட்டிட தொழிலாளியின் மகளாக இருந்து இன்று மிஸ் தமிழ்நாடு பட்டம் பெறும் அளவுக்கு உழைப்பினை மேற்கொண்ட இளம்பெண் ரக்சயாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

விளையாட்டால் வந்த வினை : சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

சென்னையில்..

சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடிய போது அவரது அண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார்த்திக் தூக்கு கயிறில் சிக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பின்னர் இதனைக்கண்ட அவரது அண்ணன் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து போலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொழும்பில் வைத்தியரின் தவறினால் திருமணமான 17 நாட்களில் உயிரிழந்த இளம் பெண்!!

கொழும்பில்..

கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புத்திக்கா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் உயிருக்கு போராடி வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவு முறை சகோதரர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் “இவர் எனது உறவு முறை சகோதரி புத்திக்கா ஹர்ஷனி தர்மவிக்ரம.இன்று அவரது பிறந்த நாள் ஆனால் அவர் சவப்பெட்டியில் வீட்டிற்கு வந்துள்ளார். மருத்துவரின் தவறால் எங்கள் தேவதையை இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

பிறந்தநாளில் நண்பர்களுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

பிறந்தநாளில்..

பயாகல கலமுல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தனது 17வது பிறந்தநாளில் நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரண்முத்து டெரன் சில்வா என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். பயாகலை கலமுல்ல புனித அந்தோனி வீதி முனையிலுள்ள கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது அருகில் இருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் குதித்து மாணவர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார். மற்றைய இரு மாணவர்களும் மரத்தடியில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர்களில் ஒருவரைக் காப்பாற்றும் போது மற்றைய மாணவன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லொட்டரி சீட்டுகள் வாங்க 3.5 கோடி செலவு : விழுந்த பரிசோ வெறும் ரூ.5 ஆயிரம் : துரத்தும் துரதிஷ்டம்!!

கேரளாவில்..

52 ஆண்டுகளாக லொட்டரி சீட்டு வாங்க கோடிக்கணக்கில் செலவழித்த நபருக்கு இதுவரையில் மொத்தமாக மிக சொற்பமான பரிசு மட்டுமே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ராகவன். இவர் கடந்த 52 ஆண்டுகளாக லொட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றார். அதன்மூலம் தனது வாழ்க்கை என்றென்றும் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

இவர் இதுவரை லொட்டரி சீட்டுக்கு செலவு செய்த தொகை மொத்தம் ரூ.3.5 கோடியைத் தாண்டியுள்ளது.இவ்வளவு செலவு செய்தது கூட அவருக்குத் தெரியாது. அவர் வைத்து இருந்த பழைய சீட்டுகளை மொத்தமாக எண்ண ஆரம்பித்தபோது தான் இந்த விஷயம் தெரிய வந்தது.

ராகவன் தனது வருமானத்தில் ஒரு பகுதியை லொட்டரி சீட்டுக்காக ஒதுக்கி வருகிறார். அவர் இதுவரை வாங்கிய பழைய லொட்டரிகள் சாக்கு மூட்டைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. சமீபகாலமாக அனைத்தையும் கூட்டி கணக்கிட்டால் மொத்தம் ரூ.3.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி அவர் லாட்டரி வாங்கி இருந்தாலும் அவர் வென்ற அதிகபட்ச லாட்டரி பணம் எவ்வளவு தெரியுமா..? வெறும் ரூ. 5 ஆயிரம் மட்டுமே. இருந்தாலும் அவர் தான் லாட்டரி வாங்கும் முயற்சியை நிறுத்தவில்லை. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ராகவன், 18 வயதில் லாட்டரி சீட்டு வாங்கத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 10 லாட்டரி சீட்டுகள் வரை வாங்குகிறார்.