பேச மறுத்த கல்லூரி மாணவி அடித்துக் கொலை.. இளைஞனின் வெறிச்செயல்!!

சிவகங்கையில்..

சிவகங்கையில் மூன்று ஆண்டுகளாக காதலித்த கல்லூரி மாணவி தன்னை கண்டு கொள்ளாததால் கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா. காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் இலுப்புக்குடி புது குடியிருப்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சென்ட்ரிங் வேலை செய்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் கண்ணன் வீட்டார் சினேகாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சினேகா வீட்டார் சினேகாவின் அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ளதால் அவருக்கு திருமணம் முடிந்த பின்பு தான் சினேகாவின் திருமணம் குறித்து பேச முடியும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார்.

அதில் காயமடைந்ததால் சினேகாவின் தந்தை சாக்கோட்டை காவல் நிலையத்தில் கண்ணன் குடும்பத்தார் மீது அப்பொழுது புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர்.

அதன் பின்பு கல்லூரி மாணவி சினேகா கண்ணனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். பலமுறை சினேகாவிடம் பேச கண்ணன் முயன்றும் முடியாததால் இன்று இரு சக்கர வாகனத்தில் மாத்தூர் ரேஷன் கடை அருகே சினேகா வந்தபோது அவரை வழிமறித்த கண்ணன் அவருடன் பேச முயன்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சினேகா அங்கிருந்து கிளம்ப முயன்றபோது தான் மறைத்து வைத்திருந்த சென்ட்ரிங் கம்பியை கொண்டு சினேகாவின் தலையில் பலமாக தாக்கிவிட்டு கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அந்த வழியாக வந்தவர்கள் சினேகா வீட்டிற்கு தகவல் தெரிவித்து சினேகா குடும்பத்தார் அங்கு வரும்போது சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி டிஎஸ்பி வினோஜி மற்றும் சாக்கோட்டை காவல் துறையினர் சினேகாவின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துகல்லூரி மாணவி சினேகாவை கம்பியால் தாக்கிகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்

சூதாட்டத்தால் மனைவியை இழந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் பரிதாபம்!!

சென்னையில்..

ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்தும்படி பலமுறை கூறியும், கணவன் நிறுத்ததால் இரண்டு கைகுழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஞான செல்வன் (வயது 31). இவரது மனைவி வகிதா (வயது-28). இவர்களுக்கு திருமணம் ஆகிய நான்கு வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ஞான செல்வன் பம்மல் நாகல்கேணியில் உள்ள சூப்பர் லாபி பிரிண்டிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஞான செல்வம் தினம் தோறும் இரவு முழுவதும் ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருவருடத்திற்கு மேலாக ஆன்லைன் சூதாட்டத்தில் செல்வன் பணம் கட்டி விளையாடி வந்துள்ளார். மாதம் வரும் சம்பளத்தை விட அதிகமாக ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்து வந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது .இதனால் மிகுந்த மன உளைச்சலில் வகிதா இருந்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல் ஞான செல்வன் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி1000 ரூபாய் இழந்ததும் இதை அறிந்த வகிதா கணவரிடம் ஆன்லைன் சூதாட்டம் நிறுத்தம் படி கூறினார் .ஆனால் அதை கேட்காமல் இருந்துள்ளார். அதன்பின்னர் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாய் தகராறு முற்றிய நிலையில் தான் சொந்த ஊரான திருச்செந்தூருக்கு தன் தாய் வீட்டிற்கு சென்று விடுவதாக கூறிவிட்டு செல்வன் இருந்த அறையினை வெளிப்பக்கமாக தாப்பாள் போட்டு விட்டு பக்கத்து படுகை அறைக்கு சென்று தனது சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்ட செல்வன் கதவை திறக்க முடியாமல் வெளியில் பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக அருகில் இருந்தவர்களை கத்தி கூச்சலிட்டு கூப்பிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கும் பொழுது மெயின் கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் வகிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

உடனடியாக சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூர் ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து சங்கர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதுமட்டுமின்றி திருமணமாகி நான்கு வருடமே ஆனதால் தாம்பரம் ஆர்டிஓ விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட மன உளைச்சலால் இரண்டு குழந்தைக்கு தாயான வகிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

தங்கம்..

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. இதற்கமைய,சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1620 டொலர் மற்றும் 1580 டொலர்களாக பதிவாகியுள்ளளது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் பிரச்சினை, பணவீக்கம், சர்வதேச அளவில் நிலவி வரும் பல அரசியல் பதற்றங்கள் என்பன சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ரூபாவின் மதிப்பு மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் நிலவிவரும் மந்த நிலைக்கு மத்தியில், பணவீக்கம் தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் எனவும், எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 2 வருட சரிவில் காணப்படுகின்றது. தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றதாக ரிலிகேர் புரோக்கிங் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் எனவும், விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : கணவர் உயிரிழந்த சில மணிநேரத்தில் உயிரிழந்த மனைவி!!

மதுரையில்..

உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவர் மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவி ஆண்டிச்சி (வயது 75).

இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தனது மகன்கள் உடன் மருதன் மற்றும் அவரது மனைவி ஆண்டிச்சி ஆகியோர் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மருதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

கணவரின் இறப்பில் மனைவி ஆண்டிச்சி அதிர்ச்சியிலேயே இருந்து அழுதுகொண்டிருந்தவர் திடீரென மருதனின் உடலுக்கு அருகே மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரைப் பரிசோதித்து பார்த்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஆண்டிச்சியின் உடலும் அவரது கணவர் மருதனின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டது.

மேலும், கணவன் உயிரிழந்த துக்கம் தாங்கமுடியாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே மட்டும் இல்லாது அப்பகுதி மக்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஊர்தியில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

சகோதரனைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தம்பி : இருவருக்கும் நேர்ந்த பரிதாபம்!!

சங்கராபுரத்தில்..

சங்கராபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன.

குமாரின் மகன்கள் தமிழ்மாறன் (10) மோகன பிரியன் (7) ஆகிய இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கபூர் என்பவரது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தமிழ் மாறனுக்கு நீச்சல் பழக தெரியும் என்பதால் தமிழ்மாறன் மட்டும் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தான்.

திடீரென நீரில் மூழ்கி படி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என தமிழ்மாறன் சத்தமிட்டான். நீச்சல் தெரியாத மோகன பிரியன் அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவனும் கிணற்றில் குதித்தான்.

இருவருமே கிணற்றில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அண்ணனை காப்பாற்ற கிணற்றில் குதித்த தம்பியும் உயிரிழந்தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களையும் சடலமாக மீட்டனர். சம்பவம் குறித்து வடப்பொண்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் சந்தையில் உயர்ந்துள்ள கோதுமையின் விலை : மூடப்படும் பேக்கரிகள்!!

கோதுமையின் விலை..

உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூடை 21,000/- ஆக அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாம் கோரிய கோதுமை மா கிடைக்கப்பெற்றதன் பின்னர் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாயை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த பெண்!!

பொலநறுவை பிரதேசத்தில் நாய் ஒன்றின் மீது ரயில் மோதப்போவதை அவதானித்த பெண் ஒருவர் நாயை காப்பாற்றிய போது அவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டு நாயை காப்பாற்றிய போது ரயிலில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பொலநறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த இரேஷா பிரசாங்கனி என்ற 45 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கதுருவெலயில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகில் விபத்தில் சிக்கியுள்ளார்.

அயல் வீட்டவரின் வளர்ப்பு நாய் வீட்டின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடுவதைக் கண்ட பெண், அப்போது ரயில் சத்தம் கேட்டு ரயில் பாதைக்கு ஓடி நாயைக் காப்பாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்தகைய நோயாளியின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளை தானமாக அளித்து மேலும் மூன்று நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, உறவினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பெறப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை மற்றும் கண்டி பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றுமொரு நோயாளிக்கு மாற்றுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவனின் மரணத்தின் பின்னணியில் சிக்கிய கடிதம் : தாயார் வெளியிட்ட தகவல்!!

பல்கலைக்கழக மாணவன்..

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில்,மாணவனின் சடலத்தை பெற்றோர் அடையாளம் காண்பித்திருந்தனர்.

24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாணவன் தங்கியிருந்த அறையில் கடிதம் ஒன்றும், அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் அவரது மூக்குக்கண்ணாடி என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதன்போது அறையிலிருந்து மீட்கப்பட்ட கடிதம் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. “என்னை மகாவலி ஆற்றுப்பகுதியில் சந்திக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மாணவனின் தாயார் தனது மகனின் மரணம் தொடர்பில் சில தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ‘‘எனது மகன் சிறந்த அமைதியான சமூக நலன் கொண்டவர்.

இருப்பினும் பிரச்சினைக்கு தீர்வு மரணம் இல்லை. எனது மகன் கடந்த இரண்டு வாரகாலமாக கடும் மன உளைச்சலில் இருந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் ஒப்படையொன்றினை செய்யாமையினால் விரிவுரையாளரொருவர் மகனை கடுமையாக திட்டியுள்ளார்.

பின்னர் வகுப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான மகன் இதனை தன்னால் தாங்க முடியவில்லையென சிலரிடம் கூறியுள்ளார். இதன் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவை எடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்’’ எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறப்பதற்கு முன்னர் 7 மணியளவில் அவரது தாயார் மகனுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அம்மா எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது என இறுதியாக தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவனுக்கு உளவியல்துறை தொடர்பான விரிவுரைகளை வழங்கும் விரிவுரையாளரொருவர் “அஞ்சன குலதுங்க எனது சிறந்த மாணவன்.

நிறைய பேரின் பிரச்சினைகளுக்கு தீர்வினையும், பல ஆலோசனைகளையும் கூறிய நீங்கள் உங்களது பிரச்சினையை பகிர்ந்து கொள்ள ஒருவரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

வேலம்பட்டியில்..

துறையூர் நெட்ட வேலம்பட்டியில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் லில்லியின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி டி.சியை கேட்ட பெற்றோர்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 4 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.

அதை தொடர்ந்து அவரது இரப்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஆசிரியையின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் நீதி விசாரணை வேண்டுமென்று பெற்றோர்கள் பள்ளிக்கு முன்பாக போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாற்று சான்றிதழ் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை லில்லியின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும்,

ஒரு நல்ல ஆசிரியர் மீது வேண்டுமென்றே பல புகார்கள் கொடுத்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்போது தற்கொலை செய்து கொள்ள வழிவகை செய்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும் இந்த பள்ளியில் தற்போது பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் ராஜசேகர் தொடர்ந்து பணியில் இருந்தால் தங்களது பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று திட்டவட்டமாக பெற்றோர்கள் கூறினார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெற்றோர்களிடம் முழுமையாக நடவடிக்கை எடுப்பதாக கூறி கூட்டத்தை கலைத்தனர்.

19 வயது இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில அமைச்சராக இருந்துள்ளார். வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா. அம்மாநிலத்தின் ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா என்ற பெயரில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் வரவேற்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, ரிசார்ட்டில் பணியாற்றி வந்த அங்கிதா கடந்த 18-ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, தந்தை காவல் நிலையத்தில் புல்கித் ஆர்யா மீது புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், அங்கிதா பண்டாரியின் காணாமல் போனதற்கு புல்கித் ஆர்யா தான் காரணம் என்று கூறி பெற்றோர் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால் புல்கித் ஆர்யாவுக்கு எதிராக அழுத்தம் காரணமாக விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக புல்கித் ஆர்யா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

சம்பவத்தன்று சீலா என்ற கால்வாய் அருகே அங்கிதாவுக்கும், புல்கித் ஆர்யாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிதா பண்டாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான ‘வனந்த்ரா’ ரிசார்ட்டை சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என கூறி இடிக்கப்பட்டது.

ஒரே வீட்டில் 3 மனைவிகள்.. சண்டையே போடாமல் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்!!

இணையத்தில்..

இணையத்தில் அவ்வப்போது பல நிஜ நிகழ்வுகள் தொடர்பான வினோத செய்திகள் அதிகம் ரவுண்டு அடிக்கும். அதில் சிலவற்றை நாம் கேள்விப்படும் போது நிச்சயம் நமக்கு அதிக அளவில் வியப்பை கொடுக்கும் செய்திகளும் இடம்பெற்றிருக்கும்.

அப்படி ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பேசு பொருளாகவும் மாறி உள்ளது. காங்கோ குடியரசு என்னும் நாட்டை சேர்ந்தவர் Ombeni. இவர் மொத்தம் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்.

இதில், இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த மூன்று பெண்களும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது தான். கிறிஸ்டினா என்ற பெண்ணை முதலாவதாக Ombeni திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கிறிஸ்டினாவின் சகோதரியான ஈலின் என்பவரையும் திருமணம் செய்ய Ombeni விருப்பம் கொண்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரியையே கணவர் திருமணம் செய்ய விரும்பிய போதும், கோபப்படாத மனைவி கிறிஸ்டினா, இதற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மூன்றாவது சகோதரியான டூமா என்பவரையும் Ombeni திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் Ombeni வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையே இதுவரை எந்த விஷயத்திலும் சண்டை ஏற்பட்டதே இல்லை என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசும் முதல் மனைவி கிறிஸ்டினா, இதை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்களின் கணவர் சிறந்த முறையில் அனைவரையும் பார்த்துக் கொள்வதுடன் சமமாக அன்பை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், Ombeni மற்றும் மூன்று மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தமாக 14 பேரும், Ombeni குடிசை வீட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், குடும்பத்தினர் அனைவருக்காகவும் தனியாளாக Ombeni உழைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனக்கு மூன்று மனைவிகள் இருப்பது பற்றி பேசும் Ombeni, என்னை பற்றி மக்கள் பலரும் பல விதமாக கருத்து கூறுகிறார்கள் என்றும், ஆனால் நாங்கள் அது எதையும் பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம் என்பது தான் எங்களுக்கு முக்கியம் என்றும் Ombeni குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மனைவிகள் இருந்த போதிலும் எந்தவித பிரச்சனையும் இன்றி, அனைவருடனும் இணக்கமாக வாழ்ந்து வரும் கணவர் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவன்!!

சீதாபூரில்..

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை திட்டியதால் அந்த சிறுவன் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த ஆசிரியரை பழிவாங்க முடிவெடுத்துள்ளான்.

திருட்டுத்தனமாக நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தெருவில் நடந்து சென்ற ஆசிரியரை நோக்கி சுட வேகமாக ஓடினான். அப்போது இதை கண்டு தப்ப முயன்ற ஆசிரியரை விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளான்.

அதில் ஆசிரியர் காயமடைந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் மாணவனை பிடித்தனர்.இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனினும் சிறுவன் அவர்களிடமிருந்து தப்பிவிட்டான். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சையின் போது கற்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கோவையில்..

கோவை மின்தடை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஸ்வரன் – வான்மதி.

விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி வான்மதியை கடந்த 21 ஆம் தேதி அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் வான்மதிக்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது.

இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் வான்மதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வான்மதியின் உயிரிழப்புக்கு அன்னூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாடு காரணம் என குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் அரசு தரப்பில் எவரும் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் திடீரென சுமார் 100 க்கும் மேற்பட்டோர் திடீரென அன்னூர் கோவை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா உள்ளிட்டோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்திரா, வட்டாட்சியர் சிவக்குமார்,டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் பெண் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அரசுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் விழுந்த பல கோடிகள் : ஆனால் நிம்மதி, சந்தோஷம் பறிபோனதாக வேதனை!!

கேரளாவில்..

வெளிநாட்டிற்கு சமையல் வேலைக்கு செல்லவிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் ரூ 25 கோடி பரிசு விழுந்த நிலையில் அதன் காரணமாக மன நிம்மதியை இழந்துள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த அனூப். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். மலேசியாவுக்கு சமையல்காரராக செல்ல இருந்த அனூப்புக்கு கடந்த வாரம் ஓணம் லொட்டரியில் ரூ. 25 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

ஆனால் இப்போது அவருக்கு வேறு ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. லொட்டரியில் பரிசு விழுந்தது முதல், பலரும் கடன்கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அதனால் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார் அனூப்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், லாட்டரியில் பரிசு கிடைத்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆனால் இப்பொது அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது. தினமும் உதவிகேட்டு பலபேர் வருகிறார்கள். நான் இப்போது எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறேன். எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனாலேயே இங்கு வந்திருக்கிறேன்.

ஆனால், இதையும் தெரிந்துகொண்டு இங்கேயும் ஆட்கள் வருகிறார்கள். இதை நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டு கதவை தட்டுகிறார்கள். என்னுடைய குழந்தையை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.

எதற்காக இவ்வளவு பரிசு கிடைத்தது என இப்போது யோசிக்கிறேன். மூன்றாம் பரிசு கிடைத்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பேன். இன்னும் எனக்கு பணம் வந்துசேரவில்லை, என் நிலைமையை தயவு செய்து உணருங்கள் என கூறியுள்ளார்.

மகனின் கருவை சுமக்கும் தாய்… இப்படி ஒரு‌ முடிவுக்கு என்ன காரணம்? நெகிழ்ச்சிப் பின்னணி!!

அமெரிக்காவில்…

அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக். இவருக்கு 56 வயதாகிறது. இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதி ஆறு வருடங்கள் ஐவிஎஃப் சிகிச்சை பெற்றுவந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு வேரா மற்றும் அய்வா என்ற இரட்டையர்கள் பிறந்தனர்.

தற்போது இருவருக்கும் 3 வயதாகிறது. இதனையடுத்து டிஸீல் மற்றும் லூகா என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் கேம்பிரியா. ஆனால், பிரசவத்தின்போது அவருடைய உடல்நிலை மோசமாகியுள்ளது. வேறுவழியின்றி கேம்பிரியாவின் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஆகவே அவரால் மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க முடியாமல் போனது.

இருப்பினும், ஜெஃப் ஹாக் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால், கேம்பிரியாவால் மீண்டும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரது கணவர் ஜெஃப் ஹாக் மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இந்த அதிர்ச்சியில் இருந்த அவருக்கு அவருடைய தாய் ஆறுதல் கூறியிருக்கிறார். இருப்பினும், இந்த தம்பதியின் கருக்கள் சேமிப்பில் இருப்பதை அறிந்த நான்சி புதிய ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.

அதன்படி, கேம்பிரியாவின் கருவை மருத்துவ உதவி மூலமாக தனது கர்ப்பப்பையில் சுமக்க முடிவெடுத்திருக்கிறார் நான்சி. ஆனால், அவருடைய வயது காரணமாக இது சாத்தியமற்றது என்றே குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர்.

இருப்பினும், மருத்துவ பரிசோதனை மூலம், நான்சி அதற்கு தகுதி பெற்றவர் என்பது உறுதியானவுடன், மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருக்கிறார் நான்சி. வரும் நவம்பர் மாதம் நான்சிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

இதுபற்றி பேசிய அவர்,”நான் எனது மகனை சுமந்தது போலவே தற்போது என் பேத்தியையும் சுமக்கிறேன். குழந்தையை மிகவும் எனது மகன் மற்றும் மருமகள் விரும்புகின்றனர். ஆகவே அவர்களுக்கு நான் உதவ நினைத்தேன்.

முன்னெப்போதையும் விட நான் வலிமையாக உணர்கிறேன். 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குழந்தையை சுமப்பது பல உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. என் மகனிடம் அவனுடைய குழந்தையை ஒப்படைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, 2022 ஜனவரி முதல் நான்சி சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். குழந்தையை சுமப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் என்றும் அதுவே, தனது மகனுக்காக இதை செய்ய முடிந்தது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவம் என்கிறார் நான்சி.

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை!!

யாழ்..

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி நாடகமும், அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்கு பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை (21.09-2022) இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து,

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.