அஹமதாபாத் விமான விபத்தில் முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அஹ்மதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியானது.

அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டு உள்ளது.

விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழ்ந்து நொறுங்கியுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞன் பரிதாபமாக பலி!!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் நேற்று (11.07) புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த கறுப்பையா ஐங்கரன் என்ற 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மது போதையில் இருந்ததன் காரணமாக அவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூமியின் சுழற்சியில் வேகம் : குறையும் நாட்கள்!!

பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பதாக தெரிவித்த விஞ்ஞானிகள் இதனால் நாட்கள் குறைவடைவதாகவும் கூறியுள்ளனர். இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை 09, 12 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய திகதிகளில் நேரம் சிறிது குறைவாகும் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இது 1.3 முதல் 1.5 மில்லி செக்கன் வரை குறையும் இவ்வாறு தொடர்ந்து நடைபெறுமானால் 2029ஆம் ஆண்டில் சில செக்கன்களை நேரத்திலிருந்து கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இவ்விதமான சுழற்சி வேக அதிகரிப்பு 2020ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதியில் தூக்கி வீசப்பட்டு வேலியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் படுகாயம்!!

மாத்தளை – அலுவிகாரை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11.07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளானது வீதியில் தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த வேலியில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஆண்டுக்கு 12 ஆயிரம் பேர் மரணம் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

நாட்டில் வருடம் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக, மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் வைத்தியர் சமித சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

விபத்துக்களை குறைக்கும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு வாரம் கடந்த 7 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு!!

பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவியாகும், இது சர்வதேச மாணவர்களுக்கு முதுகலை படிப்பிற்காக வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பிரித்தானியாவில் ஒரு வருட முதுகலை படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கு நிதியுதவி செய்கிறது.

ஒரு அறிக்கையை வெளியிட்டு, உதவித்தொகை திட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்குமாறு உயர்ஸ்தானிகராலயம் நினைவூட்டியுள்ளது.

பேஸ்புக்கில் ஒரு பதிவில், ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 07 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இணையத்தை பார்வையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரித்தானிய பல்கலைக்கழகத்திலும் எந்தவொரு முதுகலை படிப்பையும் மேற்கொள்ள செவனிங் உதவித்தொகை திட்டம் முழு நிதியுதவியுடன் கூடிய உதவித்தொகைகளை வழங்குகிறது.

O/L பரீட்சை பெறுபேறு வெளிவந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாததற்காக தங்கள் பிள்ளைகளைத் திட்டி, அவர்களின் மனநிலையை மோசமடைய செய்ய வேண்டாம் என அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. சில மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்றவர்கள் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறவில்லை.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றார்கள்.

சித்தியடையாத பிள்ளைகள் இதைப் பார்க்கும்போது, அவர்கள் மனச்சோர்வடைகிறார்கள். அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

எனவே, தேர்வில் சித்தியடையாத பிள்ளைகள் அல்லது எதிர்பார்த்த முடிவுகளை அடையாத பிள்ளைகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது.

அத்தகைய பிள்ளைகளின் பெற்றோர்கள் சிறிது காலம் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம். தங்கள் பிள்ளைகளின் பரீட்சை முடிவுகளை மற்ற பிள்ளைகளின் முடிவுகளுடன் ஒப்பிட வேண்டாம் என பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை பெற முடியாத போது ஏமாற்றமடைகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் நடத்தைகளும் மாறுகின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

அவ்வாறான மாறுபட்ட போக்கினை பிள்ளைகளில் உணர்ந்தால், உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிலங்கையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்!!

மாத்தறை பொலிஸ் பிரிவில் உள்ள பகுதி ஒன்றுக்கு செல்லும் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் சடலம் என்றும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என்றும், கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கூமாங்குளத்தில் வானத்தை நோக்கி மூன்று தடவை துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிசார் : ஒருவர் உயிரிழப்பு : இரு பொலிசார் வைத்தியசாலையில்!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு (11.07.2025) மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியிருந்தமையினால் அவ்விடத்தில் பதற்றநிலமை ஏற்பட்டதுடன் பொலிஸாரின் வாகனங்களும் சேதமாக்கப்பட்டிருந்தமையுடன் பொலிஸாரின் வான் நோக்கி மூன்று தரம் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகி இரு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் போக்குவரத்து பொலிசார் வந்துள்ளனர்.

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியமையுடன் மேலும் ஆத்திரத்தில் சம்பவத்திற்கு காரணமான இரு பொலிஸார் மீதும் பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

அடாவடியான இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தமையுடன் இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் இதனை கட்டுப்படுத்த வான் நோக்கி மூன்று தரம் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகிய இரு பொலிஸார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இச் சம்பவத்தில் தீவிர விசாரணை முன்னெடுக்க வேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளமையுடன் சந்தேகங்களும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸாரின் பெயர் சின்னம் எவ்வாறு வந்தது?, உயிரிழந்த நபருக்கும் பொலிஸாருக்கிடையே தள்ளுமுள்ளு எதேனும் ஏற்பட்டதா?, மோட்டார் சைக்கிளின் சக்கரத்தினுள் தடி எவ்வாறு வந்தது? யார் வீசியது, பொலிஸார் ஏன் அவரை விரட்டினர் போன்ற பல்வேறு வினாக்களுக்கு பதிலில்லை.

இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரை நாம் வினாவிய போது, பொலிஸாரின் கட்டளையினை மீறி அவர் சென்றமையினால் பொலிஸார் அவரை துரத்திச் சென்ற சமயத்தில் அவர் தடுமாறி கீழ வீழ்ந்து உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் பொதுமக்கள் பொலிஸார் துரத்தி வந்து அவரின் மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தியமையினால் அவர் உயிரிழந்தாக தெரிவித்து பொலிஸார் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன்,

மேலும் மற்றுமொரு கோணத்தில் சந்தியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் கூமாங்குளம் மதுபானசாலைக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்,

அவ்விடத்திற்கு பொலிஸார் சென்றதாகவும் அதனையடுத்து பொதுமக்கள் பொலிஸார் துரத்தி வந்து அவரது மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தி அவர் உயிரிழந்தாக தெரிவித்து பொலிஸார் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன்,

மற்றுமொரு கோணத்தில் பொலிஸார் துரத்தி சென்றும் பொலிஸாரின் கட்டளையினை மீறி அவர் பயணித்தமையினால் பொலிஸார் மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தினர் அதன் அவர் கீழே வீழ்ந்து உயிரிழந்தார் எனவும்,

இவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நீதியானதும் நியாமானதுமான விசாரணைகளுக்கு தாம் சகல பாதுகாப்பு பிரிவினருக்கும் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலுள்ள சிசிரிவி கமராவின் உதவியுடனும் பொதுமக்களின் வாக்குமூலத்துடனும் விசாரணைகளை வவுனியா தலைமை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையுடன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!

கொழும்பு செட்டியார்தெரு தங்க நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்று 248,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை

அதனடிப்படையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாக காணப்படுகிறது.

அதேநேரம் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகரித்த விலை

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விபத்தில் உயிரிழந்த மகனை வைத்தியசாலை கட்டிலில் இருந்து வழியனுப்பும் தந்தை : மனதை உருக்கும் புகைப்படம்‼️

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10.07.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை (10.07) மாலை,

நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மேலும் பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நேற்றைய தினம் (11.07) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில்,தனது மகனின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார்.

குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா நகருக்குள் நுளைந்த யானை : உடமைகள் சேதம் : பீதியடைந்த மக்கள்!!

வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று (12.07.2025) அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை டைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதன்போது தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் துவம்சம் செய்துள்ளது.

தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை தினச்சந்தைக்கு பின் பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது. இதன்போது சில கட்டடங்களின் மதில்சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது.

தற்போது வவுனியா குளத்தில் இறங்கிய யானை பலமணிநேரமாக வெளியேவரமுடியாமல் தத்தளித்த வண்ணம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறித்த யானை வழிதவறி நகரப்பகுதிக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி பலி : சடலத்தை அகற்றவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள்!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11.07.2025) இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்ப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிசார் வந்துள்ளனர்.

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். அடாவடியான இச்செயற்ப்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

இதனால் பொலிசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இளைஞர்களின் செயற்ப்பாட்டினால் தடுமாறிய பொலிசார் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என விடாப்பிடியாக நின்றனர். இதனால் குறித்த பகுதியில் கலவரம் ஒன்று ஏற்ப்படுவதற்கான நிலைமை ஏற்ப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதனையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிசாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டபொதுமக்கள் பொலிசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை வயது 58 என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலத்திற்கு அருகில் பொலிசார் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சனை ஒன்றும் காணப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பொலிசாரும் களம் இறக்கப்பட்டிருந்தனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி ஜக்சனா கணேசலிங்கம் 9A சித்தி பெற்று சாதனை!!

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

அந்த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி ஜக்சனா கணேசலிங்கம் ஒன்பது பாடங்களிலும் “A” சித்தியினை பெற்றுள்ளார்.

இம் மாணவிக்கு செல்வி. ரவிசங்கர் கஜனிகா (மச்சாள்) மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை சமூகத்தினர் என அனைவரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

கருத்தரிப்பதற்காக கழிவு நீரை குடிக்க வைத்த மந்திரவாதி : மூட நம்பிக்கையால் பறிபோன பெண்ணின் உயிர்!!

மந்திரவாதி ஒருவர் கருத்தரிப்பதற்காக கழிவு நீரை குடிக்க வைத்ததால் 35 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண் அணு ராதா. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை இல்லை.

இதனால், தனது அம்மாவை அழைத்துக் கொண்டு மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அங்கு அவர் அணு ராதாவுக்கு பேய் பிடித்ததாக கூறியுள்ளார்.

மேலும், பேயை விரட்டவும், கருத்தரிக்க வைப்பதற்காகவும் பூஜை செய்ய வேண்டும், அதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் எண்டு மந்திரவாதி கூறியுள்ளார். இதனை நம்பிய அணு ராதா அவருக்கு அட்வான்ஸ் பணம் ரூ.22 ஆயிரம் தந்துள்ளார்.

பின்னர் சடங்குகளை ஆரம்பித்த மந்திரவாதி, அனுராதாவின் தலைமுடியை இழுத்து கழிவுநீரை குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இதனை அவரது அம்மா தடுக்க முயன்றும் அனுராதாவுக்கு தொடர்ந்து கழிவு நீரை குடிக்க வைத்துள்ளார்.

பின்னர், பூஜை நடக்கும் போதே உடல்நிலை சரியில்லாமல் அணு ராதா கீழே விழுந்தார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர், இதுகுறித்து அனுராதாவின் அப்பா உள்ளிட்ட உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்ததன்பேரில் மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.

விளையாட்டில் தங்கப் பதக்கம் : பரீட்சையில் 9A சாதனை படைந்த கிசோதிகா!!

இன்றைய தினம் வெளியான கா.பொ.த சதாரண தர பரீட்சையில் திருகோணமை தமிழ் மாணவி கிசோதிகா 9 (A) பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

விளையாட்டில் வீர மங்கையாக திகழும் Lifters’ Club Trinco கிசோதிகா 9 (A) சிறப்புச் சித்திகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு கல்வியை நாசமாக்கும் எனத் தமிழ்ச் சமூகத்தில் பரவிவரும் மூட நம்பிக்கையை உடைத்து சாதனை மாணவியாக கிசோதிகா திகழ்கின்றார்.

மாணவி பாடசாலை மட்டப் பழு தூக்கும் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் தங்கப்பதக்கத்தையும் வென்ற மாணவி கிசோதிகா சாதாரணதரத்தில் 9 (A) சிறப்புச் சித்திகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாணவி கிசோதிகாவிற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களைய்ம் கூறி வருகின்றனர்.