நீதிமன்றத்தை நாடும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!!

தனது பெயருக்கும் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் கருத்து தெரிவித்த நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அவரிடம் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளேன்.

எனது அரசியல் நடவடிக்கையை ஆதாள பாதாளத்திற்குள் கொண்டு செல்கின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகின்ற வகையில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் இதற்கு ஆதாரத்துடன் பதில் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்.

அவரது குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.அந்த வகையில் என் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

மேலும் இதுவரை இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் நிலையங்களில் எனக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் அல்லது விசாரணைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் மன உளைச்சலையும்,கௌரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டை அவர் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

தொடர் இருமல்.. இந்திய மாணவி அமெரிக்காவில் மர்ம மரணம்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ராஜலட்சுமி யார்லகட்டா (23) என்ற ராஜி, சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடி வந்தார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், இருமல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வசித்த குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அலாரம் அடித்தும் எழவில்லை என நண்பர்கள் கூறியுள்ளனர். தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் கூறினாலும், உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜலட்சுமியின் மரணம் குறித்து தெரிந்த அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக உறவினரான சைதன்யா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆந்திராவின் பபட்லா மாவட்டம், கார்மிசெடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த இளம் மகளின் இழப்பு, குடும்பத்தினரை உலுக்கி விட்டுள்ளது.

சுவர் இடிந்து விபத்து : இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே சுவர் இடிந்ததில் இரு சிறுவர்கள் பலியான துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கருவாரா பகுதியைச் சேர்ந்த அஜய்–தேவி தம்பதியரின் மகன்கள் ஆதிஅஜய் (7) மற்றும் அஜினேஷ் அஜய் (4) ஆகியோர் முறையே 2ம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி.யில் பயின்று வந்தனர்.

நேற்று முன்தினம், தங்கள் தங்கை மகனுடன் சேர்ந்து வீட்டின் மேல்தளத்தில் உள்ள சன் ஷைடில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்தது.

அதில் சிக்கிய இரு சிறுவர்களும் கடுமையாக காயமடைந்தனர். குடும்பத்தினர் அவசரமாக அவர்களை கோட்டத்தரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இரு சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சுவர் இடிந்து சகோதரர்கள் பலியான இந்த சம்பவம் அட்டப்பாடி முழுவதும் துயரநிலையை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் ஓயாத தொல்லை : வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூரு ஹொசகெரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிய 31 வயதான ககன் ராவ், தனது மனைவி மேகனாவின் துன்புறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்துக்கொண்டார்.

ககன் ராவ், சாமராஜநகரைச் சேர்ந்த இறுதி ஆண்டு BCA மாணவி மேகனாவை 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார்.

போலீஸ் தகவலின்படி, திருமணத்திற்கு பின் மேகனா அடிக்கடி கணவர் மீது முறைகேடான உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, இடையறாது சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனவேதனைக்குள்ளான ககன் ராவ் அறைக்குச் சென்று சேலையைக் கட்டி சீலிங் ஃபேனில் தூக்கிட்டுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து ககன் ராவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மனைவி மேகனாவுக்கு எதிராக தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பும் மேகனா பெண்கள் காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்திருந்ததாகவும், சமீபத்தில் சமாதானம் ஆன பிறகும் சண்டைகள் தொடர்ந்ததாகவும் போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் கோளாறு : விமானியால் தவிர்க்கப்பட்ட ஆபத்து!!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல தயாரான விமானத்தில் ஏற்பட்ட கோளாறு விமானியின் சாதுர்யத்தினால் தவிர்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல தயாரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் கோளாறினை விமானி கண்டுபிடித்துள்ள நிலையில், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 12 மணி நேர தாமதத்தின் பின்னர் மற்றுமொரு விமானம் மூலம் பயணிகள் கட்டுநாயக்க விமானம் நோக்கி சென்றுள்ளனர்.

குறித்த விமானம் 262 பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணிக்க தயாராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்களில் புகைப்படங்களை பகிரும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அழகான பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்யப்படுதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க உத்தரவிட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவாரா என்பதை விசாரித்து, நீதிமன்றத்தில் தகவல்களை தெரிவிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தேக நபர் பேஸ்புக்கில் பெண்களால் பகிரப்படும் அழகான புகைப்படங்களைப் பயன்படுத்தி வேறு பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் பெரும்பாலான சமூக ஊடக பயனர்கள் ஈர்க்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் பல்வேறு நபர்களுக்கு பேஸ்புக் பக்கங்களை விற்று பணம் பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

“என் நிலவு நீ” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியதாகவும், புகைப்படங்களுக்கு சொந்தக்காரர்களான பெண்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாமல் அவர் இந்த மோசடிச் செயலைச் செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

மோசடி தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பெண்களின் முகங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர் 10க்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களை மோசடியாக உருவாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நடுவானில் 20 பேருடன் பற்றி எரிந்த விமானம்!!

அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் 20 பேருடன் சென்ற துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம், அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 சரக்கு விமானம் விபத்துக்குள்ளான காரணம் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம், விமானக் குழுவினர் உட்பட 20 துருக்கி பணியாளர்கள் C-130 விமானத்தில் இருந்ததாகக் கூறியது, ஆனால் பிற நாட்டினரைச் சேர்ந்த பயணிகள் தொடர்பில் குறிப்பிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டபோது, ​​ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளில் விமானம் காணாமல் போனதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது விபத்துக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.

துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம், விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 துருக்கிய இராணுவ வீரர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தற்போது, ​​துருக்கிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் உதவியுடன், விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாததால், அதிகாரிகள் இன்னும் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : நாடு கடத்த நடவடிக்கை!!

பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் எண்ணிக்கையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி குறித்து பிரித்தானிய பிரபுக்கள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

இந்தக் குறைவுக்கு, நாடு கடத்தப்பட வேண்டிய தமது பிரஜைகளைத் திரும்பிப் பெறுவதில் இலங்கை ஒத்துழைக்கத் தவறியது முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசியம் மற்றும் எல்லைகள் சட்டம் மீதான விவாதத்தின்போது, உள்துறை அலுவலகத்திற்கான நிழல் அமைச்சர் லோர்ட் டேவிஸ் ஒப் கோவர் பிரித்தானியாவின் இடப்பெயர்வுக் கண்காணிப்பகத்தின் தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய அரசாங்கம், விசா காலம் முடிவடைந்த, தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பி அனுப்புகிறது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த வீதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது பிரித்தானியா இலங்கைக்குத் நாடு கடத்தும் மக்களின் எண்ணிக்கை 97 சதவீதம் குறைந்துவிட்டது .

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள், திருப்பி அனுப்பப்பட வேண்டிய தமது குடிமக்களின் அடையாளத்தை உறுதி செய்வதில் ஒத்துழைக்க மறுக்கின்றன அல்லது தாமதப்படுத்துவதாக பிரித்தானியா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

விசா அபராதங்களை விதிக்கும் நடைமுறை

அத்தகைய நாடுகளுக்கு விசா அபராதங்களை விதிக்கும் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என கோரும் சட்டத் திருத்தம் 71யை லோர்ட் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாடு அடையாளத்தை அல்லது நிலையைச் சரிபார்க்க மறுக்கும் போதோ அல்லது தாமதப்படுத்தும் போதோ, அவர்களை வெளியேற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட திருத்தம், அத்தகைய சந்தர்ப்பங்களில் உள்துறைச் செயலாளர் கட்டாயம் செயல்பட வேண்டியிருப்பதை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

உயர்தரப் பரீட்சை பதற்றம் காரணமாக கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள உள்ள ஒரு பாடசாலையின் மூன்றாம் மாடியிலிருந்து மாணவியொருவர் குதித்துள்ளார்.

இன்று பிற்பகல் 19 வயது உயர்தர மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவையைச் சேர்ந்த இந்த மாணவி, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.

சம்பவம் உயிரியல் வினாத்தாள் தொடங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவி விழுந்த இடம் கார்பட் செய்யப்பட்ட பகுதியாக இருந்ததால், உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி பரீட்சையை எதிர்கொள்வதில் கடுமையான மனஅழுத்தத்தை அனுபவித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

அவரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களிலும் இந்த தகவலை உறுதிப்படுத்தப்படுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் : தாய்மாமன் கைது!!

யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் நேற்றையதினம் (11.11.2025) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றுள்ளனர்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

யுவதியின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரின் உடல் முழுவதும் கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டு, கண்டல் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின்போது அதிர்ச்சி மிக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த யுவதி தாய் – தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனேயே வசித்து வந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி இவர் சகோதரிக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் யுவதியின் தாயின் தம்பி பச்சை பனை மட்டையால் யுவதியை கடுமையாக தாக்கிய விடயம் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் குறித்த யுவதிக்கு 09ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் யுவதியின் தாய் மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமை புரியும் நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பேரூந்துகள் மோதி விபத்து : 5 பேர் காயம்!!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை,பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பியை நம்பி ஏமாந்த தாதியின் விபரீத முடிவு : தாய் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கம்பஹா, வத்துபிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத தாதி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி குறித்த யுவதி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், வீட்டில் இருந்த அவரது தாயும் தம்பியும் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தனது மகள் ஒரு நண்பரின் வேண்டுகோளின் பேரில் ஒன்லைனில் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தனது நண்பிக்கு வழங்கியதாக உயிரிழந்த தாதியின் தாயார் சுனிதா தெரிவித்துள்ளார்.

தோழி கடனை செலுத்தாமையினால் அதற்கான வட்டி 28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடன் கொடுத்த நபர் தனது மகளை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் மற்றும் வட்டியை செலுத்துமாறும் இல்லை என்றால் பொலிஸாரை அழைத்து வருவதாக அச்சுறுத்து வந்துள்ளார்.

குறித்த நபரின் துன்புறுத்தல் தாங்க முடியவில்லையாமலேயே மகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என உயிரிழந்த பெண்ணின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக இவ்வாறான இணையம் ஊடாக முறையற்ற வகையில் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நிறுவனங்களால் கடும் அழுத்தங்களுக்கு உள்ளான பலர் ஏற்கனவே உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலர்களில் எகிறும் தங்கத்தின் விலை : இலங்கையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 4100 டொலர்களைத் தாண்டியிருந்தது. இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நிலைமை பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி நேற்று காலை, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4116 டொலராக காணப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 56% வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பு, செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 301,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 326,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய விலை நிலவரத்தை ஒப்பிடும் போது 24 கரட் தங்க பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட அதிபர் – நீதிமன்றத்தின் உத்தரவு!!

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று (12.11.2025) பிறப்பித்துள்ளது.

தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவரான குறித்த பாடசாலை அதிபர், கடந்த 5ஆம் திகதி (05.11.2025) போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், அவர்களது மகன், கடந்த மாதம் 29ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் உணவில் புழு : சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மூடல்!!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது.

வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டதாகவும், சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கியதாகவும் தெரிவித்து வவுனியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டது.

இன்றில் (11.11) இருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கமைய திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!!

தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த இலங்கைத் தொழிலாளர்கள் இருவரும் உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்த என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (09) இரவு, உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றின் நீர்த்தாங்கிக்குள் மூன்று பேர் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குப் பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்ணையில் இருந்த 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்ட பெரிய நீர்த்தாங்கி ஒன்றில் சிக்கி, 50 வயதுடைய கொரிய நாட்டவரும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த கொரிய நாட்டவர் அந்த மீன் வளர்ப்புப் பண்ணையின் முகாமையாளராகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.