பாலில் கலப்படம்.. அடுத்தடுத்து 2 குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்!!

உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கலப்பட பால் வியாபாரம் பெருகி வருகிறது. மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்ட 5,000 லிட்டர் கலப்பட பாலை உணவுத் துறை அதிகாரிகள் சோதனையில் பிடித்தனர்.

UP 80 GT 8088 என்ற பதிவு எண்ணுடன் கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி, ஆக்ரா-பா சாலையில் உள்ள அர்னாட்டா கிராமம் அருகே வழிமறிக்கப்பட்டது. பாலை பரிசோதனை செய்யும் வசதி இல்லாமல் கொண்டு வரப்பட்டது என்பதையும்,

அதன் தரத்தில் சந்தேகம் இருப்பதையும் உணர்ந்த அதிகாரிகள், அந்த 5,000 லிட்டர் கலப்பட பாலை நேரில் சாலையில் கொட்டினர். பால் மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளன.

ஆக்ரா அருகே உள்ள ககரௌல் பகுதியில் வசிக்கும் பூரா என்ற கால்நடை வியாபாரியின் 11 மாத குழந்தை அவான் மற்றும் 2 வயது மகள் மஹிரா. இருவரும் இரவு பாலை குடித்துவிட்டு தூங்கச் சென்றனர். அதிர்ச்சியாக இருவரும் மறுநாள் காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

அவர்கள் குடித்த பால், ஜாக்னர் பகுதியில் உள்ள பச்சுவின் பால் பண்ணையிலிருந்து கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அந்த பண்ணையிலும் உணவுத் துறை குழுவினர் சோதனை நடத்தி மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

பால் கொண்டு வந்த டேங்கர் ஓட்டுநர் ரவீந்திர ராவத், “நான் மொரேனாவைச் சேர்ந்தவன். இந்த பாலை தியாகி பால் பண்ணையிலிருந்து ஆக்ராவுக்கு விற்பனைக்காக கொண்டு வந்தேன்” என தெரிவித்துள்ளார். அந்த பண்ணையை சுகேந்தர் தியாகி என்பவர் நடத்துகிறார்.

பால் மாதிரிகள் தற்போது ஆய்வகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிக்கைக்கு பிறகு,

சம்பந்தப்பட்டவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டம், 2006 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான பல்கலைக்கழக மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு!!

டெல்லியில் கடந்த 6 நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போன பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத்தைப் பல இடங்களிலும் போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லி யமுனை ஆற்றில் சினேகா தேப்நாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.

டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7ம் தேதி மாயமானார். இதையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையின் போது, “சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து யமுனை ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது.

நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று இரவு மீட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.

மாநிலங்களவை உறுப்பினராகும் நடிகர் கமல்ஹாசன்!!

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தலைவர் கமல்ஹாசன் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொரட்டுவையில் பண இயந்திரத்துடன் சிக்கிய பெண்!!

மொரட்டுவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவ, ராவதவத்தையை சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம்,

சந்தேக நபரின் வீட்டிலிருந்து 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், 8 போலி 1,000 நாணயத்தாள்கள், 1 போலி 100 ரூபாய் நாணயத்தாள் மற்றும் 2 போலி 20 ரூபாய் நாணயத்தாள்களும் மீட்கப்பட்டன.

மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோர விபத்தில் இருவர் பலி : உயிர்களை காப்பாற்ற போராடிய மக்கள்!!

மஹியங்கனை – பதுளை வீதியின் மாபகடவெவ 17வது மைல்கல் அருகே பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்ன கால்வாயில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து கால்வாயில் கவிழ்ந்த காரை விரைவாகவும் மிகுந்த முயற்சியுடனும் மீட்டனர்.

எனினும் காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம்!!

இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் அங்குள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளுக்கான இணைய விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்காக சர்வதேச இடம்பெயர்வு அமைப்புக்கு (IOM) ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 தூதரகங்கள் மற்றும்அலுவலகங்களை உள்ளடக்கிய பயோமெட்ரிக் பிடிப்பு மையங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்கும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையுடன் இணைய இணைப்பை எளிதாக்குவதற்கும்,

ஒருங்கிணைப்புக்கான பொருத்தமான அமைப்புகள்மற்றும் மென்பொருளை உருவாக்குவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும் இந்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த திட்டத்துக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும், அதனை செயல்படுத்த தேவையான நிதியை வழங்கவும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்ட 20 இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் இணையத்தினூடாக கடவுசீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த வெளியுறவு,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தானால் ஏற்படும் அபாயம் குறித்து வெளியான தகவல்!!

தற்போதைய பருவ காலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இத்துடன், பலர் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வீடுகளின் வெவ்வேறு இடங்களிலும் வீசுவதால், அவை டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.

குறித்த பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வைத்தியர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய மங்குஸ்தான், ரம்புட்டான் ஆகியவற்றின் பழத்தோல்கள் போன்ற குறைந்த அளவிலான நீர்தேங்கும் இடம் போதுமானது என்பதால், அவை டெங்கு நுளம்புகள் பெருக உகந்த இடமாக அமையும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் வீடொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரம்!!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்று (15) அதிகாலை 5 மணி அளவில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளி ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீடு தீப்பற்றி எரிந்ததை அடுத்து , வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து தீயினை அணைத்துள்ளதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் : யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என கூறப்படுகின்றது.

மனைவி பிள்ளைகள் பிரான்சில் வசித்துவரும் நிலையில் மூன்று மாதத்திற்கு முன்னர் குறித்த நபர் தாயகம் வந்ததாஅக தெரியவருகின்றது.

இந்நிலையில் மயிலிட்டியில் தங்கியிருந்த போது படுக்கையில் உயிரிழந்த நிலையில் நேற்று (14.07.2025) சடலமாக காணப்பட்டார்.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து : இருவர் பலி!!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை பயணித்த கார் ஒன்று மஹியங்கனை 17வது மைல்கல்லுக்கு அருகில் வியன கால்வாயினுள் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை 06:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனை பொலிஸ் பயிற்சி பாடசாலையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கால்வாயில் கால்வாயில் கவிழ்ந்த காரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வாகனத்தின் உள்ளே இருவர் இருந்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உயிரிழந்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!!

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று திங்கட்கிழமை (14.07) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (15) பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாநகரசபைக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே முறுகல் நிலமை!!

வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக நடைபாதை வியாபாரம், வர்த்தக நிலையத்திற்கு மேலதிக கூரைகள், அனுமதியற்ற விளம்பர பலகைகள் போன்றன அகற்றப்பட்டு வந்தன.

அந்த வகையில் வவுனியா இலுப்பையடி சந்தி, வைத்தியசாலை வீதி ஆகியவற்றில் நடைபாதையில் கொட்டகை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை அவ்விடத்திலிந்து அகன்று போலிஸ் நிலையம் முன்பாக அல்லது மாநகரசபை முன்பாக அமைந்துள்ள மாநகர சபைக்கு உரித்தான வளாகத்தில் வியாபாரத்தில் ஈடுபடுமாறு மாநகரசபை அறிவித்தல் வழங்கியிருந்தமையுடன்,

கடந்த திங்கட்கிழமை அவர்களுடன் மாநகரசபையினர் கலந்துரையாடி இன்று 14.07.2025ம் திகதிக்கு முன்பாக நடைபாதை வியாபாரங்களை அகற்றுமாறும் கால அவகாசம் வழங்கியிருந்தமையுடன் இதற்கு முன்னரும் பல தடவைகள் நடைபாதை வியாபாரத்தினை அகற்றுமாறு தெரிவித்திருத்தமையும் மாநகரசபையினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் (14.07.2025) பொலிசார் சகிதம் மாநகரசபையினர் குறித்த இடத்திலுள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த நடைபாதை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையுடன் குறித்த வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் மாநகரசபையினர் குறித்த நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றமுற்பட்ட சமயத்தில் மாநகர சபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகல் நிலமைக்கு சென்றது. அதன் பின்னர் பொலிசார் தலையிட்டு முறுகல் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் பொலிசார் மாநகர முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக நடைபாதை வியாபார இடங்களை அகற்றுவதற்கு இன்று இரவு வரை காலஅவகாசம் வழங்கப்பட்டதுடன் குறித்த நடைபாதை வியாபாரிகளின் கொட்டகைளை அகற்றுவதற்கு மாநகரசபை ஊழியர்களின் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

அவ்விடத்திலிருந்த சில நடைபாதை வியாபார கொட்டகைகளை வியாபாரிகள் உடனே அகற்றியிருந்தமையுடன் ஏனைய நடைபாதை வியாபார கொட்டகைகள் வியாபாரிகளினால் அகற்றப்பட்டு மாநகர சபையினரினால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

61 வயதில் யாழ்ப்பாண நபர் படைத்த சாதனை : வியப்பில் மக்கள்!!

பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது – 61) என்பவர் நேற்று (13) மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார்.

உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

 

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறை!!

மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறு இன்றி நடாத்தி செல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தின் முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையத்தை இடையூறு இன்றி நடாத்திச் செல்ல வேண்டுமானால் இலஞ்சம் வழங்குமாறு பொலிஸ் அதிகாரி கோரியுள்ளார். இதன் அடிப்படையில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரான பெண், பொலிஸ் உத்தியோகத்தருக்கு 30000 இலஞ்சம் வழங்கியுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன் லஞ்சமாக பெற்றுக்கொண்ட 30000 ரூபாய் குறித்த பெண்ணுக்கு திருப்பி செலுத்த வேண்டும் எனவும் அபராதமாக 30000 ரூபா செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறின்றி நடத்திச் செல்வதற்காக நிலையத்தின் உரிமையாளரிடம் பொலிஸ் உயர் அதிகாரி, 40000 ரூபா லஞ்சமாக கோரியுள்ளார்.

எனினும் அந்த தொகையை குறைத்து குறித்த பெண், பொலிஸ் அதிகாரிக்கு 30000 லஞ்சமாக வழங்கியுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட வழக்கு விசாரணை பின்னர் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்ப பெண்ணை பலியெடுத்த விபத்து : விசாரணைகள் தீவிரம்!!

கம்பஹாவில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீரிகம – பஸ்யால வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெவலபொல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவரும் நிகஹெட்டிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வேன் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி : சம்பளத்தில் அறவிடப்படும் அபராதம்!!

சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இறுதி முடிவு இன்று

ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அபராதம் விதிப்பது தொடர்பில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் தாமதமாகும் நாட்களுக்கான அபராதம் அவர்களின் சம்பளத்தில் அறவிடப்படும்.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு, மேலும் 02 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் மதிப்பீட்டறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சலுகைக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது.