பம்பாய்’ படத்தின் “ஹம்மா ஹம்மா” பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே’காதலர் தினம்’ படத்தில் ரோஜாவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்த இவர், அண்மையில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று, தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் அந்த பதிவில், “4 ஆண்டுகளுக்குப் பிறகு.. இதே நாற்காலி, இதே பார்வை, இதே இடம்.. முழுமையான பயத்திலிருந்து தொடர்ந்த நம்பிக்கை வரை, பல மாறிவிட்டது, சில இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றன..
தான் இதே இடத்திற்கு மீண்டும் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை” என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது
உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை நாளொன்றுக்கு முன்னர் நூற்று நாற்பத்தைந்து டொலர்களாக இருந்த நிலையில் இன்று அதன் விலை 104 டொலர்களாக குறைந்துள்ளதாகவும் இதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வரிகளையும் வசூலித்ததன் பின்னர், 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை தற்போதுள்ள விலையில் இருந்து 110 ரூபாவால் குறைக்க முடியும் எனவும், 95 லீற்றர் பெற்றோல் 120 ரூபா அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 120 ரூபாவினாலும் குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த குறைப்புக்கள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டத்தையும் ஏற்படுத்தாது என ஆனந்த பாலித மேலும் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில், பெறப்பட்ட டீசல் கையிருப்பின் தரம் தற்போது சரிபார்க்கப்படுகிறது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விநியோகஸ்தர்கள் இருவரும் இன்று தேசிய எரிபொருள் உரிமத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டீசல் இருப்பு இன்று அதிகாலை கொழும்பு வந்ததாகவும், தற்போது தர மாதிரிகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய தினமே இரண்டாவது தொகுதி டீசல் வரும் என்றும், அதுவும் இந்த நடைமுறைப்படி சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 18-19 திகதிகளில் முதல் தொகுதி பெட்ரோல் நாட்டிற்கு வர உள்ளது. அத்துடன், மூன்று கப்பல்களுக்கும் தேவையான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது தேசிய எரிபொருள் உரிமம் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று (16) மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தேசிய அடையாள அட்டை, வாகன உரிம எண், வாகன எண் (Vehicle Chassis number) மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட QR குறியீடும் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
QR குறியீடு மற்றும் வாகன இலக்க தகட்டின் இறுதி இரு இலக்கங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு கிழமையில் இரு நாட்கள் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என, கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை அதன் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கோவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அவை பலன் தரவில்லை. நாட்டுக்கான சேவையை ஆற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் ஒருவர் கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் நர்சிங் படித்து வருகிறார். இவரை சசிகுமார் என்பவர் காதல் திருமணம் செய்து மூன்று மாதத்திற்கு ரகசியமாக குடும்பம் நடத்திய பிறகு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என காரணம் காட்டி கணவர் சசிகுமார் கைவிட்டுவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு குளித்தலை டிஎஸ்பி-யிடம் எஸ்.பி அனுப்பி வைத்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் டிஎஸ்பி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவும், திருமணம் செய்த பிறகு சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய சசிகுமார் மீதும் வழக்கு பதியக்கோரி நர்சிங் மாணவி ரேவதி தனது உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் ரேவதி கூறியதாவது: கரூரில் நர்சிங் படித்தபோது தரகம்பட்டி சசிகுமாருக்கும், எனக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் கோவை சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம்.
எனது தந்தை கொடுத்த புகாரால் எங்களை மீட்டு வந்த போலீசார், என்னை என் தந்தையுடன் ஒப்படைத்தார். சசிகுமார் என்னை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு மீண்டும் வெளியேறினார். மீண்டும் எங்களை அழைத்து வந்த சசிகுமார் குடும்பத்தினர், என்னை திட்டியும், அடித்தும் துன்புறுத்தினர்.
அவர்களிடமிருந்து நான் தப்பி என் வீட்டிற்கு வந்தேன். காவல் நிலையத்தில் நாங்கள் இதுகுறித்து புகார் அளித்தும் வெள்ளியணை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எஸ்பியிடம் புகார் அளித்தோம். எஸ்பி- யின் உத்தரவின் படி குளித்தலை டிஎஸ்பி, வெள்ளியணை காவல் நிலையம் என்று பல காவல் நிலையங்கள் சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதனால் இப்பொழுது எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் அளித்த புகாரின் பேரில் சசிகுமார் குடும்பத்தார் மீது வழக்கு பதிய வேண்டும். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அப்பெண் கூறினார். அப்பெண் மற்றும் குடும்பத்தாருடன் எஸ்பி அலுவலகம் காவல்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
ரேவதி காதல் கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், தற்போது தன் கணவனை பிரிந்து இருக்கும் இந்த நிலையில் மிகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு சரியான தீர்வை காவல்துறையினர் அளிக்குமாறு அப்பெண்ணின் குடும்பத்தாரால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அப்பெண் தன் கணவன் குடும்பத்தார் துன்புறுத்தியதாகவும், கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் எஸ்பி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் சசிகுமார் மீது உறுதியாக வழக்குப்பதிய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் களைந்து சென்றனர்.
கிருஷ்ணகிரியில் பூட்டிய வீட்டில் தாய் மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன். இவர் கிராமிய நாடகத்தில் கலைஞராக இருந்து வருகிறார்.
இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்த நிலையில் செந்தாமரை கண்ணன் இரண்டாவது மனைவி கமலா மற்றும் மூன்றாவது மனைவி சத்யா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே கமலா மற்றும் சத்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை கமலா(50)மற்றும் அவரது மகன் குரு (17) ஆகிய இருவரும் காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு வெளியே பூட்டப்பட்ட நிலையில் இருவரும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
கமலா மற்றும் குரு ஆகிய இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை வெளியே பூட்டி விட்டு வீட்டின் உள்ளே ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செந்தாமரை கண்ணனின் இரண்டாவது மனைவி கமாலவுக்கும்,மூன்றறாவது மனைவி சத்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இதனால் மூன்றாவது மனைவி சத்யாவின் வீட்டிற்க்கு கடந்த சில நாட்களாக செந்தாமரை கண்ணன் செல்லாமல் கமலாவின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த நிலையில் இருந்த மூன்றாவது மனைவி சத்யா கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊத்தங்கரை அருகே பூட்டிய வீட்டில் தாய் மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகிரியா பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் முதலை தாக்கியதில் காணாமல் போயுள்ளார். குழந்தையைக் காப்பாற்ற அவரது தந்தை கடுமையாக முயற்சித்த நிலையிலும்,
அது தோல்வியடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 7 வயதுடைய பாடசாலைச் சிறுவனே குறித்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளார்.
இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்படத்தோடு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதலை தாக்கியதில் சிறுவன் இறந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (15.07) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த கலைமதி சொல்லத்துரை (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பட்டா வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் பட்டா சராதியை கைது செய்துள்ளனர்.
யாழில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி குறித்த பகுதியையுடைய 14 வயது சிறுமி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தச்சிறுமி வீட்டில் யாருமில்லாத தருணத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் குறித்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த தீபால் அமரசூரிய என்ற 30 வயதுடைய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் அவர் நிமோனியாவால் ஏற்பட்ட பக்டீரியா தொற்று காரணமாக உய்ரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்றையதினம் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் மேற்கொள்ளப்பட்டது.
பிரேதப் பரிசோதனையின் போது, அவர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்ததும், சில வாரங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
பல நாட்களாக பெற்றோல் வரிசையில் காத்திருந்த வைத்தியர் தனது காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை ரியூப் மூலம் எடுத்துச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சைக்காக கடந்த 11ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் சிகிறசை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இளம் மருத்துவரின் மரணம் இலங்கை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 17 இல் இரண்டு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. (ஒரு கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், மற்றைய கப்பலில் 41 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், எடுத்துவரப்படும்)
35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் கப்பல் ஜூலை 17 இல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. ஜூலை 22ம் திகதி 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது.
31 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் மசகு எண்ணெயை எடுத்துவரும் பிறிதொரு கப்பல் எதிர்வரும் 21ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
அடுத்த வாரம் மொத்தமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், 70 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான பெற்றோலும் கிடைக்கவுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 90 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெயை எடுத்துவரும் கப்பல் நாட்டுக்கு வர தயாராகியுள்ளது. அடுத்த வாரம் முதல் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமன்றி சகலருக்கும் டீசல் விநியோகிக்கப்படும்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்க அதிகரிப்பு பதிவாகி வரும் பின்னணியில் இவ்வாறு தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாகவே தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. இதேவேளை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தக்கத்தின் விலை 1711.2 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 181500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
உக்ரைனில் பிரபல சட்டத்தரணி ஒருவர் தமது வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிறப்புறுப்புகளை ப்ரீஸருக்குள் பாதுகாத்து வந்த நிலையில் பொலிசாரால் கைதாகியுள்ளார்.
உக்ரைனில் பிரபல சட்டத்தரணியாகவும், தொடர்புடைய நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து வருபவருமான Petr Begun என்பவரே இந்த வழக்கில் சிக்கியுள்ளார். வருங்கால மனைவியான 39 வயது Olha Davydenko என்பவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை நகரின் பல பாகங்களில் வீசியுள்ளார் முன்னாள் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான Petr Begun.
இவர் உக்ரைனில் பிரபலமான திருமண ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு, 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராகவும் தெரிவாகியுள்ளார். கொலை செய்யப்பட்ட Olha Davydenko என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமானவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலைக்கு பின்னர், அவரது இதயம், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரகங்களை ப்ரீஸருக்குள் பத்திரப்படுத்தியுள்ளார். மட்டுமின்றி, பல நாட்களாக உடல் பாகங்களை அப்புறப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்டுள்ளார்.
மட்டுமின்றி, கொல்லப்பட்ட பெண்ணின் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டின் ஒரு பகுதி குளத்தில் வீசப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Olha Davydenko திடீரென்று மாயமான நிலையில், அவரது உடைகள் மற்றும் விரல் அடையாளங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா பெடையெடுக்கும் முன்னரே இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வசிக்கத் தொடங்கியுள்ளனர். மட்டுமின்றி, இருவரும் பழகிய ஒரு வாரத்திலேயே Olha Davydenko குறித்த நபரின் குடியிருப்புக்கு இடம்பெயர்ந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
Petr Begun மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம் என கூறுகின்றனர். இருவருக்கும் இடையேயான கருத்துவேறுபாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
திருச்சி அருகே இளம் பெண்ணை குத்தி கொலை செய்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் வினோத்குமார் எதிர்வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்குத் திருமணமாகி சீனிவாசன் என்ற கணவர் உள்ளார்.
இதையடுத்து வினோத்குமார், புவனேஸ்வரி பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வினோத்குமார் திடீரென புவனேஸ்வரி வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் வினோத்குமார் அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கூற்று உண்டு. ஆனால், அது உண்மையா பொய்யா என்பதை விட அந்த ஏழு பேரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்.
அதே வேளையில், ஒத்த உருவம் கொண்ட இரட்டையர்களை நாம் பொது இடங்களில் அல்லது, நமக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் குடும்பங்களில் ஒரு முறையாவது நிச்சயம் பார்த்திருப்போம்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், சுமார் 30 க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் ஒரே பகுதியில் இருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அமைந்துள்ளது அங்காடிமங்கலம் என்னும் கிராமம். மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்ட எல்லைகளில் இருக்கும் இந்த கிராமத்தை பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்
இதற்கு காரணம், அங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில், ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தான். இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில், சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவற்றுள் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரே ஊரில் இத்தனை இரட்டையர்கள் இருப்பதால், இது தொடர்பாக பலரும் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இரட்டையர்கள் ஒத்த உருவத்துடன் இருப்பதால், அவர்கள் மாறி மாறி, ஒரே பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்றால், அங்குள்ள யாராலும் இவர்களை அடையாளம் காண முடியாது. சினிமாவில், இரட்டையர்கள் கதாபாத்திரங்களுக்கு மத்தியில், என்னென்ன குழப்பங்கள் நடக்குமோ, அதே போன்று மிகவும் வேடிக்கையான குழப்பங்கள், இப்பகுதியில் உள்ள இரட்டையர்கள் மத்தியிலும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஊரோட அடையாளம்
இவை அனைத்தையும் விட, ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்னும் அந்த கிராமத்தில் இரட்டையர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளது தான். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் அல்லது புகழ் இருக்கும்.
அதே போல, அங்காடிமங்கலம் கிராமத்திற்கும் இரட்டையர்கள் அதிகமாக இருப்பது ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. பலரும், இந்த அதிசய கிராமத்தினை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
தெலங்கானாவில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அகமது. இவரது மனைவி பர்வீன். இந்த தம்பதிக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் பர்வீன் இவர்களது குடிசை வீட்டில் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து 2 குழந்தைகளும் பெற்றோர்களை கட்டிப்பிடித்தபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.