பாஸ்தாவால் பறிபோன உயிர் : காதல் கணவன் கண்முன்னே நடந்த சோகம்!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம்: அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் பிரதிபா தம்பதி. இருவரும் கடந்த மாதம்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலை இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஒயிட் பாஸ்தா வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே பிரதிபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது பிரதிபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உடற்கூறு ஆய்விற்கு பிறகுதான் பாஸ்தா சாப்பிட்டதால் அந்த பெண் உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். பிரியாணி, ஷவர்மா, நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தவர்களை அடுத்து தற்போது பாஸ்தா சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்துள்ளது உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

தாம்பரத்தில்..

தாம்பரம் முடிச்சூர் பகுதியில் டாரஸ் லாரி மோதியதில், 11ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தாம்பரம், முடிச்சூர், விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரின் மனைவி பொன்னி. இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு, கல்லூரி படிக்கும் கீர்த்தனா என்ற மகளும், 16 வயதில் மகனும் இருந்தார். மகன் தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, வழக்கம் போல், சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.

முடிச்சூர், மதுரவாயல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த டாரஸ் லாரி, சைக்கிளில் மோதியதில், மாணவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்து, சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணின் முறையற்ற காதலால் பரிதவிக்கும் இரு குடும்பங்கள்!!

செங்கல்பட்டடில்..

வேறெரு நபருடன் பழகியதால் கள்ளகாதலனால் சுத்தியால் தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாபா கோவில் தெருவில் ஜோதி என்கிற அஞ்சலை தனது 15 வயது மகன், 11 வயது மகளுடன் வசித்து வந்தார்.

அஞ்சலையின் கணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வாகன விபத்தில் இறந்துவிட்ட நிலையில் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் அஞ்சலைக்கு கொத்தனார் வேலை செய்து வந்த மேஸ்திரி முனுசாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறி முனுசாமி தனது மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு அஞ்சலையுடன் சேர்ந்து 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் அஞ்சலைக்கு மணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனுசாமிக்கும் ஜோதிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த 7ம் தேதி ஜோதிக்கும் முனுசாமிக்கும் ஏற்பட்ட தகராறில் முனுசாமி வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து ஜோதியின் தலையில் பலமாக அடித்து தாக்கியுள்ளார்.

இதனால் ஜோதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலை மற்றும் காதின் வழியாக ரத்தம் வந்ததுள்ளது. இதனையடுத்து முனுசாமி மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று ஜோதியை அடித்து விட்டதாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அதனையடுத்து முனுசாமியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேஸ்திரி முனுசாமியின் கள்ளக்காதலி ஜோதி என்கிற அஞ்சலை இன்று சிகிச்சை பலனின்றி பரிதாப உயிரிழந்துள்ளார். கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் முனுசாமி மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை : பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

பதற்ற நிலை..

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். அலுவலகத்திற்குள் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் நோயாளர்காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் தேசிய ரூபவாஹினி : சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

ரூபவாஹினி சேவை..

அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பெருந்திரளானோர் கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அப் பகுதியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் கலையகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து கலையகத்தினை முற்றுகையிட்டுள்ளதுடன், செய்தி ஒளிப்பரப்படும் கலையகத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், நேற்று (12) காலை முதல் தேசிய ரூபவாஹினியின் கலையகத்திற்கு பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஒரு மாதத்திற்கு பின் சீரான முறையில் 1000 பேருக்கு லிற்றோ எரிவாயு விநியோகம்!!

எரிவாயு விநியோகம்..

ஒரு மாதத்திற்கு பின்னர் வவுனியாவில் 1000 பேருக்கு சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு இன்று (13.07) வழங்கப்படுகின்றது. வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து குறித்த சமையல் எரிவாயு காலை 9 மணிமுதல் வழங்கப்பட்டு வருகின்றது.

லிற்றோ நிறுவனத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து அங்கு வருகை தந்திருந்த மக்கள் 1000 பேருக்கு சீரான முறையில் எந்தவித குழப்பங்களுமின்றி இலக்க சிட்டைகளை வழங்கி, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மின்சார பட்டியல்கள் பதிவு செய்யப்பட்டு சமையல் எரிவாயு 1000 பேருக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, வவுனியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் லிற்றோ சமையல் எரிவாயு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாயும் தந்தையும் வெளிநாட்டில் : தங்கையை பராமரிக்க முடியாது தற்கொலை செய்ய முயற்சித்த 13 வயதுச் சிறுமி!!

13 வயதுச் சிறுமி..

தாயும் தந்தையும் வெளிநாடு சென்றதால், தனது 9 வயது தங்கையை கவனித்து கொள்ள தன்னால் முடியவில்லை எனக் கூறி, 13 வயதான சிறுமி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சிறுமிகளில் வீட்டை தேடிச் சென்று இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் காலி மாவட்டத்தின் கோணாபினுவெல என்ற இடத்தில் நடந்துள்ளது.

சிறுமிகள் கோணாபினுவெல லஸ்சனகம அம்பகஹா சந்திப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த சிறுமிகளின் தாய் நான்கு வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.

மீன்பிடி தொழில் செய்து வந்த தந்தை சிறுமிகளை தனியாக விட்டு, விட்டு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாக கோணாபீனுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில் லாழ்ந்து வந்துள்ள இந்த சிறுமிகளில் மூத்த சிறுமி தனக்கு தனது தங்கையை பராமரிக்க முடியவில்லை கூறி, தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக எழுதிய கடிதத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர்களை பெருத்தமான காப்பகத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வாழ்வாதார பிரச்சினைகள் காரணமாக பலர் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன் பணத்தை சம்பாதிப்பதற்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், அவர்களை நம்பி வாழ்ந்த பிள்ளைகள், முதியோர் உட்பட பலர் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா இ.போ.ச சாலைக்கு பீப்பாய்களில் 300 லீற்றர் பெற்றோல் விநியோகம்!!

பெற்றோல்..

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்க அதிபரின் உத்தரவின் பேரில் பீப்பாய்களில் 300 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டது.

வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் 161 ஊழியர்கள் கடமையாற்றுவதுடன் அவர்களது தனிப்பட்ட வாகனங்களில் கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் இன்மையினால் பேரூந்து சேவைகளை சீரான முறையில் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமையுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இ.போ.ச வவுனியா சாலையினால் அரசாங்க அதிபருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக 161 தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கென 400 லீற்றர் பெற்றோல் வழங்குமாறு அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலை முன்பாகவுள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் இன்று (12.07.2022) இ.போ.ச வவுனியா சாலைக்கு பீப்பாய்களில் 300 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டிருந்தது.

இ.போ.ச வவுனியா சாலை சாரதிகள், காப்பாளர்கள், பொறியலாளர்கள், உத்தியோகத்தர்கள் செட்டிகுளத்திலிருந்து அல்லது அதற்கு அண்மையிலுள்ள பிரதேசத்திலிருந்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் சாளம்பைக்குளம், பம்பைமடு, நாகர்இலுப்பைக்குளம், ஓமந்தை லைக்கா கிராமம், பூணாவ, இராசேந்திரகுளம், வீரபுரம், பூவரசன்குளம், சிதம்பரபுரம், முருகனூர் போன்ற இடங்களிலிருந்து வருகின்றார்கள். இதை விட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பருத்தித்துறை இடத்திலிருந்தும் அதை விட கிழக்கு மாகாணத்திலிருந்தும் வந்து கடமை செய்கின்றார்கள்.

அத்துடன் பாடசாலை சேவை, தபால் சேவை, பொது மக்களுக்கான சேவை மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் சேவை இ.போ.ச வவுனியா சாலையினர் முன்னெடுத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டே பீப்பாய்களில் எரிபொருள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் சிறுமியில் நெகிழ்ச்சியான வேண்டுகோள்!!

சிறுமியில் நெகிழ்ச்சியான வேண்டுகோள்..

இலங்கையின் சிறுமி நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் இந்த சிறுமி தோல்வியடைந்த எமது அரசியல்வாதிகள் அனைவருக்கும் வலுவான செய்திகளை வழங்கி இருப்பதாக கொள்கை கற்கைகளுக்கான தெற்காசிய கல்வி நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

டுவிட்டரில் சிறுமி ஒருவர் சுற்றுலாப் பயணிகளிடம் உரையாடி, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிடுகிறார்.
சிறுமி ஒருவர் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் ஆங்கிலத்தில் உரையாடி, இலங்கைக்கு அவர்களின் நண்பர்களை அழைத்து வருமாறும் அப்போது இலங்கைக்கு டொலர்கள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

அரசியல்வாதிகளால் எனது தாய் நாடான இலங்கையில் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. நீங்கள் உங்களது நண்பர்களை எமது நாட்டுக்கு வருமாறு அழையுங்கள்.

நாட்டில் எல்லா இடங்களும் அருமையான இடங்கள். பல அருமையான இடங்கள் இருக்கின்றன. எங்களிடம் டொலர் இல்லை. நீங்கள் வந்து எமக்கு டொலர்களை தந்து உதவுங்கள்.

நீங்கள் எங்கள் நாட்டிற்கு வந்தால், எமக்கு டொலர்கள் கிடைக்கும். இந்த துண்டுப் பிரசுரத்தை படியுங்கள். எமது அண்ணன்மார், அக்காமார் எமக்கு உதவுவார்கள். அரசியல்வாதிகள் வந்து உதவ மாட்டார்கள். நீங்கள் எங்களுக்கு உதவுங்கள் என அந்த சிறுமி தெரிவிக்கின்றார்.

இலங்கை அவசர கால தயார்நிலை குழு விடுத்த எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

போலியான கோரிக்கைகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான மோசடி முயற்சிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை அவசர கால தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் தனிப்பட்ட தகவல்கள் திருடுவது தொடர்பான சம்பவங்கள் பற்றி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு முயற்சிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட தகவல்கள் சட்டவிரோத செயல்களுக்கும் போலி சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்குவற்கும் பயன்படும் என இலங்கை கணினி அவசர கால தயார் நிலை குழு எச்சரித்துள்ளது.

வவுனியாவில் பேருந்தின் மீது கல் வீச்சு தாக்குதல் : பெண் ஒருவர் கைது!!

கல் வீச்சு..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரி நகரில் வசிக்கும் 28 வயது பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் வழிமறித்துள்ளார்.

பேருந்து நிறுத்தப்படவில்லை என்று ஆத்திரமடைந்து குறித்த யுவதி பேருந்தின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் கண்ணாடி நொருங்கியதையடுத்து பேருந்து சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பாணின் விலை அதிகரிப்பு : 200 ரூபாவை நெருங்கியது!!

பேக்கரி உற்பத்திப் பொருட்கள்..

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திகளின் விற்பனை குறைந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

14 ஆம் திகதி நாடு முடங்கும் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!!

14 ஆம் திகதி..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கணவனை படுக்கையிலேயே தீவைத்து எரித்த மனைவி : நெஞ்சை உலுக்கும் பயங்கரம்!!

மானாமதுரை..

மானாமதுரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனுக்கு தீ வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்த தம்பதி லிங்கநாதன் (40) அங்கயற்கண்ணி (35). இவர்களுக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகும் நிலையில் ஏழு வயதில் மகள் உள்ளனர். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லிங்கனாதன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது உடலில் தீ பற்றி எரிவதை உணர்ந்து பதறி எழுந்துள்ளார்.

தீயை அணைத்துகொண்டே பக்கத்து வீட்டுக்கு சென்ற லிங்கநாதன், எனது மனைவி என்னை கொலை செய்ய உடலில் தீ வைத்துவிட்டாள் என்று கூறியுள்ளார். உடனே அவரை மீட்டவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மானாமதுரை போலீசார் லிங்கநாதன் மனைவி அங்கயற்கண்ணியை விசாரித்தனர். இதில், லிங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து வந்ததால் கணவனை கொலை செய்ய உடலில் தீ வைத்தது தெரிய வந்தது. அங்கயற்கண்ணியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். லிங்கநாதன் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இளைஞனுக்கு காதல் வலை விரித்த பெண்… கடைசியில் நடந்த விபரீதம்!!

கர்நாடகாவில்..

மூன்றே நாளில் இவரிடம் பேசிய அந்த பெண் அம்பிகா தயானந்தை காதல் வலையில் விழவைத்துள்ளார். கர்நாடக மாநிலம், கலபுராகி எனும் இடத்தில் ஜூன் 24 ஆம் தேதி தயானந் எனும் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் பெயிண்டராக வேலை செய்த தயானந்தா(24) சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இவருடைய தொலைபேசிக்கு ஒரு பெண்ணின் அழைப்பு தவறுதலாக வந்துள்ளது.

இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து மூன்றே நாளில் இவரிடம் பேசிய அந்த பெண் அம்பிகா தயானந்தை காதல் வலையில் விழவைத்துள்ளார்.

பின்பு இவரை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் அழைத்துள்ளார். உடனே தயானந்தும் இவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அம்பிகாவின் கும்பல் ஒன்று அந்த இடத்திற்கு வந்து தயானந்தை அம்பிகாவுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது.

அம்பிகா இதை வீடியோவாக பதிவு செய்து தன்னுடைய காதலன் அனில் என்பவருக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல் துறை கொலையில் ஈடுபட்ட அம்பிகா மற்றும் அவருடைய கும்பல் ஆறு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை செய்துள்ளனர்.

அதில் ஏற்கனவே அம்பிகா திருமணமானவர் என்றும் அவருக்கு பெண் குழந்தை ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இவர் தயானந்தாவின் உறவினர் அனில் என்பவரை முகநூல் மூலம் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காதலன் அனிலின் மனைவியுடன் தயானந்த் தகாத உறவில் இருந்தது இவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அம்பிகா 3 லட்சம் ரூபாய் பணத்தை அனிலிடம் வாங்கிக் கொண்டு காதல் நாடகம் நடத்தி தயானந்தை கொன்று வீடியோ பதிவு செய்து காதலன் அனிலுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி : அடுத்து நிகழ்ந்த சோகம்!!

தர்மபுரியில்..

தமிழக மாவட்டம் தர்மபுரியில் ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா. இவரும் குளிக்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழரசும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சினேகாவுக்கு கடந்த வாரம் வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவானதால் காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தது.

அதன் பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 7ஆம் திகதி கோவில் ஒன்றில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்த தமிழரசு-சினேகா ஜோடி, தற்கொலை செய்துகொள்ள போகிறோம் என செல்போனில் குறுந்தகவலை பேசி அனுப்பியுள்ளனர்.

பின்னர் இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதற்கிடையில் குறுந்தகவலை பார்த்த இருவரின் உறவினர்களும், காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழரசும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து, இருவரது வீட்டாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்துகொண்ட காதலர்கள் தற்கொலை செய்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.