தாலி கட்டி குங்குமம் வைக்கும்போது அழுதுட்டேன்… திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தமிழ் தம்பதி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்பால் ஈர்ப்பாளர் தம்பதியான இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கார்த்திக் – கிருஷ்ணா தம்பதி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் பேசுகையில், நாங்கள் ஏற்கனவே மோதிரம் மாற்றி கொண்டோம்.ஆனாலும் தாலி கட்டி கொண்டு திருமணம் செய்ய ஆசை இருந்தது. அதன்படி சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.

அங்கு 4 பெண் அடிகளாரும், ஒரு ஆண் அடிகளாரும் இருந்தார்கள். அவங்கள் தலைமையில் தான் எங்கள் திருமணம் நடந்ததுஎன கூறினர். கிருஷ்ணா தொடர்ந்து பேசுகையில், என் கையால் கார்த்திக்கிற்கு தாலி கட்டி, குங்குமம் வைத்துவிட்டேன்.

தாலியை கையில் வாங்கும் வரையில் மனதில் ஒரு பதட்டமும், பயமும் இருந்து கொண்டே இருந்தது. தாலி என்பது மிகப்பெரிய பாரம்பரியம் என தெரியும். எங்கள் திருமணத்தை யாராவது நிறுத்திவிடுவார்களோ என மனதுக்குள் எண்ணம் ஓடிகொண்டே இருந்தது.

ஆனால், என் கையால் மூன்றாவது முடிச்சை போடும் போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். இனி, உனக்காக நான்.. எனக்காக நீ’ என்பது தான் கார்த்திக்கிடம் அந்த நொடி நான் சொல்ல நினைத்தது என கூறியுள்ளார்.

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்த இந்தியாவின் வீரமங்கை : 94 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி!!

இந்தியாவில்..

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர், தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பகவானி தேவி 24.74 வினாடிகளில் கடந்த தங்கப் பதக்கம் வென்றார். மேலும் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பகவானி தேவி இதற்கு முன்னரே, சென்னையில் நடைபெற்ற மூத்தோர் தடகள தொடரில், 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அதேபோல அதற்கு முன் டெல்லியில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் ஒலிம்பிக்குக்கு இணையாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒலிம்பிக் போட்டிகளை விட அதிக வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்கிறார்கள். சர்வதேச பாரா தடகள வீரரும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவருமான விகாஸ் தாகர், பகவானி தேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்!!

தமிழகத்தில் தஞ்சம்..

அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 6 பேரை ஹேவர் கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் மரைன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா பறையாளங்குளம் பகுதியிலிருந்து நேற்று (10.07) இரவு புறப்பட்டு, இன்று (11.07) காலை சுமார் 5 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை தொடர்ந்து, மரைன் பொலிஸார் இவர்களை மீட்டு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் பின், இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் காத்திருக்க நேரிட்டுள்ளது.

இலங்கையின் நிலை காரணமாக பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பற்றிக்கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதையடுத்து, ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் மண்டப கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், பல மணி நேரம் கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு நின்றதாகவும் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“நாங்கள் அணிந்திருந்த உடைகளை காண்பித்து அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த கடற்தொழிலாளர்களிடம் உதவி கோரினோம். இதனையடுத்து, எங்களை இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் பொலிஸார் உரிய நேரத்தில் மீட்டனர்.

கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அகதியாக சென்ற இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அசாதாரண சூழ்நிலையுமே இவர்கள் அகதிகளாக தஞ்சம் புகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மா என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஒரு பக்கம் உயர, மறுபக்கம் அவற்றின் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மேலும், பல இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை சுமார் 109 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் இருவர் பலி : பேருந்தை எரித்த பிரதேச மக்கள்!!

விபத்தில் இருவர் பலி..

புரட்டொப் பகுதியில் இருந்து புஸ்ஸலாவை நோக்கி பயணித்த பேருந்து இன்று(11) காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே இருவர் மரணமடைந்துள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளனர்.

புஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து, வீடன் பகுதியில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மிதி பலகையில் பயணித்த இருவர், பேருந்து மண்திட்டில் சாய்ந்ததால், அதில் சிக்குண்டு பலியாகியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 வயது) மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பலர் மிதி பலகையிலும் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர்.

குறித்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் பேருந்தை எரித்துள்ளனர். இதேவேளை இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்தில் இரண்டு பேருந்துகளே சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புரட்டொப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அறிமுக டெஸ்டிலேயே 12 விக்கெட்டுகள் : அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை இமாலய வெற்றி!!

இலங்கை இமாலய வெற்றி..

காலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. சண்டிமலின் இரட்டை சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 554 ஓட்டங்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து 190 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் அச்சுறுத்திய அறிமுக வீரர் பிரபாத் ஜெயசூர்யா, இரண்டாவது இன்னிங்சிலும் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை அள்ளினார்.

அந்த அணியின் கவாஜா (29), லபுஸ்சாக்னே (32), ஸ்மித் (0) ஆகிய முன்னணி வீரர்களும், கிரீன் (23), ஸ்டார்க் (0) ஆகியோரும் பிரபாத் ஜெயசூர்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் எடுத்து தீக்ஷனா பந்துவீச்சில் வெளியேறினார்.

கடைசி விக்கெட்டான ஸ்வெப்சனையும் தனது பந்துவீச்சில் பிரபாத் ஆட்டமிழக்க செய்ய, அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இதன்மூலம், முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததற்கு இலங்கை அணி பழி தீர்த்துக் கொண்டது. பிரபாத் ஜெயசூர்யா தனது அறிமுக டெஸ்டில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்றுவிட்டு இளைப்பாறச் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!!

மாணிக்கம் செல்வகுமார்..

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்று விட்டு இளைபாறுவதற்காகச் சென்றவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இன்று (11.07) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் மோட்டார் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக காத்திருந்துள்ளார்.

இன்றும் (11.07) பெற்றோல் கிடைக்காமையால் நீண்ட நேரம் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காக நகரசபை முன்பாக உள்ள கடைப் பகுதிக்கு சென்ற போது குறித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை அருகில் நின்ற மோட்டார் சைக்கிளில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்தவர் வவுனியா நகரசபையில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் வவுனியா, கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் செல்வகுமார் (வயது 44) என்பவராவார். மரணமடைந்தவரின் மோட்டர் சைக்கிள் பெற்றோல் வரிசையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் இவ்வளவு பிரச்சினையா?

செல்போன்..

செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது..! நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்ந்து விட்டது.

ஸ்மார்ட்போனை நமது அருகிலேயே வைத்து கொண்டால் உடலுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இடங்களில் செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முடிந்தளவு ப்ளூடூத் ஹெட் செட்டை பயன்படுத்தவும். ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளியே இருங்கள். செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைக்க பழகுங்கள்.

இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குறைந்தது 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும்.

இரவு நேரத்தில் உறங்கும் முன் முழு இருளில் செல்போன் பார்ப்பதால் செல்போனில் இருந்து வரக்கூடிய வெளிச்சம் நம் கண்களில் இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளை தளர்வடைய செய்து பாதிப்படைய செய்கிறது.

செல்போனை உங்கள் அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது அது வெளிவிடும் கதிரியக்கம் உங்கள் உடலில் மெலடோனின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஹார்மோன்தான் உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.

இளம் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : அனாதையான குழந்தைகள்!!

விருதுநகரில்..

விருதுநகரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் காயமடைந்தனர்.

பழைய பெருங்களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோஜ் (37). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்தாஷா (32). இவர்களுக்கு பிரனாப் ஆதித்யா (8) என்ற மகனும், ஜெனிலா (7) என்ற மகளும் உள்ளனர். தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு நேற்று அதிகாலை மனோஜ் தனது குடும்பத்துடன் காரில் புறப்பட்டார்.

விருதுநகர், கோவில்பட்டி வழியாகச் செல்லத் திட்டமிட்டு, நேற்று பிற்பகல் விருதுநகர் நான்குவழிச் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். முன்புற இருக்கையில் மகள் ஜெனிலாயும், பின்புறத்தில் நித்தாஷாவும், மகன் பிரனாப் ஆதித்யாவும் தூங்கிக்கொண்டு வந்துள்ளனர். விருதுநகர் நான்குவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கோவில்பட்டியிலிருந்து வத்திராயிருப்பு செல்லும் தனியார் பேருந்து மீது மனோஜ் ஓட்டி வந்த கார் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த மனோஜ், அவரது மனைவி நித்தாஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விருதுநகர் பஜார் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த குழந்தைகள் இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனோஜ் மற்றும் நித்தாஷா சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் போலீஸார் வழக்குப் பதிந்து தனியார் பேருந்து ஓட்டுநரான வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளத்தைச் சேர்ந்த ஞானகுரு (37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெட்ட வெட்ட வளரும் பெண்ணின் புருவம் : தவிக்கும் பெண்!!

இங்கிலாந்தில்..

இங்கிலாந்து பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் புருவ முடி வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதற்கான காரணம் சற்று பரபரப்பையும் உண்டு பண்ணி உள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் 36 வயதான இசபெல் குட்க்ஸி (Isabelle Kutxi) என்ற பெண்ணின் புருவம், சற்று சிறிதாக இருந்துள்ளது. இதனால், அதனை சற்று பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காக, தினந்தோறும் சுமார் அரை மணி நேரம் செலவு செய்து புருவத்தை வரைந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல், ஒவ்வொரு நாளும் இப்படி கண் புருவத்திற்காக வரைந்து கொண்டே இருப்பது, இசபெல்லுக்கு ஒரு வித விரக்தியை உண்டு பண்ணி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு முறை, டிவியில் புருவ மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பார்த்துள்ள இசபெல், இதற்காக தயாரும் ஆகி உள்ளார். அதன்படி, போலந்து நாட்டிற்கு சென்று, இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் செலவு செய்துள்ளார் இசபெல். மேலும், அவரது தலையின் பின்புறத்தில் இருந்து, தலை முடியை எடுத்து சுமார் மூன்றரை மணி நேரம், இந்த Hair Transplant சிகிச்சை நடந்துள்ளது.

அப்போது, தனது பெரிதான புருவத்தைக் கண்டு, உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரும் வடித்துள்ளார் இசபெல். ஆனால், அதே வேளையில் இசபெல்லுக்கு சிறிய சிக்கல் ஒன்றும் உருவாகி உள்ளது. அதாவது, தலையில் இருந்து முடியை எடுத்து புருவத்தில் வைத்ததால், அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறதாம். புருவத்தை போல, பெரிய அளவில் வளராமல் இருப்பதற்கு பதிலாக, தலை முடி என்பதால் அடிக்கடி வளர்ந்து கொண்டே இருப்பதாக இசபெல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மாதம் ஒரு முறை, தனது நெருங்கிய தோழி ஒருவரின் பார்லர் சென்று தனது புருவ முடியை எடுப்பதாகவும் இசபெல் கூறி உள்ளார். முன்னதாக, தனது புருவம் சிறிதாக இருப்பதால் அதனை வெறுத்து வந்த இசபெல், முகத்தின் அருகே வைத்து செல்ஃபி ஃபோட்டோ கூட எடுக்க மாட்டாராம். ஆனால், தற்போது Hair Transplant செய்து புருவ முடி பெரிதாகி உள்ளதால், அது தனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் இசபெல் தெரிவித்துள்ளார்.

இப்படி தலை முடியை எடுத்து வைத்துள்ளதால், அது அடிக்கடி வளர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தினால் வேறு ஏதேனும் பிரச்சனை வருங்காலத்தில் உருவாகுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாஸ்போர்ட்க்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : மனைவிக்கு தெரியாம காதலியை பார்க்க வெளிநாடு போன இளைஞர் போலீசில் சிக்கிய பரிதாபம்!!

விமான நிலையத்தில்..

 

மனைவிக்கு தெரியாமல் காதலியை சந்திக்க வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சொல்லப்படும் நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக தாய்லாந்து செல்ல முடிவெடுத்திருக்கிறார் அவர். விமான நிலைய அதிகாரிகளிடம் தனது பாஸ்போர்ட்டை கொடுத்த அந்நபர், சற்று நேரம் காத்திருந்திருக்கிறார்.

பக்கத்தை காணவில்லை

விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, அதில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள் அதிகாரிகள். ஆனால், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இது குறித்து காவல்துறைக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுக்கவே விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்திருக்கின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில்,”2019 ஆம் ஆண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவரது பயண வரலாற்றை மறைக்க பாஸ்போர்ட்டில் 3 முதல் 6 மற்றும் 31 முதல் 34 வரை பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளனர். தனது மனைவிக்கு தெரியாமல் காதலியை சந்திக்க சென்றதாகவும், தடயத்தை மறைக்கவே பாஸ்போர்ட்டின் பக்கங்களை அவர் கிழித்ததாகவும் தெரிகிறது.

குற்றம்

பாஸ்போர்ட் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆகவே அதை வேண்டுமென்றே சேதப்படுத்துவது குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 420, 465, 468, 471 மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ரூ.25,000 ஜாமீன் ஜாமீன் தொகையை செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருடைய வழக்கறிஞர் இதுபற்றி பேசுகையில்,” அவர் மிகவும் சாதுவான குணமுள்ளவர். அவர் பாஸ்போர்ட்டின் பக்கங்களை கிழிக்கவில்லை. பைண்டிங் தளர்வாக இருந்ததால் பக்கங்கள் விடுபட்டிருக்கின்றன” என்றார்.

காதல் திருமணம் நடந்த 40 நாட்களில் இளம்பெண் பரிதாப மரணம் : பெற்றோர் தெரிவித்த பரபரப்பு தகவல்கள்!!

தேனியில்..

திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில், இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தீவிர விசாரணை நடத்தக் கோரியும் இறந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியல்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டியைச் சேர்ந்த சின்னகுஞ்சு என்பவரது மகள் சத்யா (21). இவருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வினித் (24) என்ற வாலிபருக்கும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பழக்கம் ஏற்பட்டது.

கடந்த ஓராண்டாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 40 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின் சத்யா வினித்தின் வீடு உள்ள உத்தமபாளையத்தில் தங்கி குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

 

இந்தநிலையில் நேற்று சத்யா மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக திண்டுக்கல்லில் உள்ள சத்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதறியடித்து வந்த பெற்றோர், மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் தீவிர விசாரணை நடத்தக் கோரியும் உத்தம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இறந்த சத்யாவின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சத்யாவின் கணவரான வினித்தின் உறவினர்கள் சத்யாவின் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சத்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகிறது என்றும் அவரது இறப்பிற்கு உண்மை காரணம் வெளிவர வேண்டும் என்றும் கூறி சத்யாவின் உறவினர்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் வாகனத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். மேலும் தங்களது மகளின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து சத்யாவின் மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி தனக்கு அறிக்கையை அளிக்க வேண்டும் என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கௌசல்யாவுக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சத்யாவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மருத்துவர் கல்லூரி மருத்துவமனை முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் கைது!!

சவுதா மணி..

பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சவுதா மணி கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சவுதா மணி. இவர் கடந்த 2017ல் பா.ஜ.க கட்சியில் இணைந்த நிலையில் கட்சியின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

சவுதா மணி கடந்த ஜனவரி மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், மதவாத வெறுப்பைத் தூண்டும் வகையில், ஒருவர் பேசிய காணொலியைப் பகிர்ந்து, கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, 2 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் சவுதாமணியை நேற்று மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பொலிசார் கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் அறிக்கையில், சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்ட பதிவை சவுதா மணி மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதே சமயம் சவுதா மணி மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்த பிறகும் அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நாகமணி இருப்பது உண்மையா? அறிவியல் கூறும் உண்மை என்ன?

நாகமணி..

இந்த நாக மணி என்ற பெயரை உங்கள் நண்பர்கள் கூறியோ அல்லது படங்களிலோ கேள்விபட்டிருப்பீர்கள், உண்மையில் நாகமணி என்ற ஒன்று உள்ளதா அது எப்படி உருவாகிறது அதற்கு பின்னால் இருக்கும் கட்டுகதைகளும், அறிவியலும் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

நாகமணி என்றால் என்ன?
இந்த நாகமணி நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நாகமணியானது எப்படி உருவாகிறது என்றால் கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த நாகமானது தன்னுடைய விஷத்தை வெளியே செலுத்தாமல் அப்படியே வைத்திருக்கும் இப்படி இருக்கும் விஷமானது ஒரு கல்லாக மாறும்.

மாறிய அந்த கல்லை நாகமானது கக்கும் இப்படி வரக்கூடிய கல்லைதான் நாகமணி என குறிப்பிடுகிறார்கள். இந்த கல்லானது பார்ப்பதற்கு மிகவும் பிரகாசமாகவும் வைரம் போல் இருக்கும் எனவும் மக்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாகமணி வைத்திருப்பவர் பெரும் செல்வந்தர் ஆவார் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

நாகமணி இருப்பது உண்மையா?

இந்த நாகமணி என்பதை இதுவரை எவரும் கண்டதில்லை அதற்கான புகைப்படங்களும் கிடையாது. அதுபோல் ஒரு நாக பாம்பின் சராசரி ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் மட்டுமே 100 ஆண்டுகள் பாம்புகள் வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை.

அறிவியல் ரீதியாக நாககல் என்பது ஹாலடை அயனியின் ஆதிக்கம்பெற்ற ஃபுளோரைடு (அ) ஃபுளோரபார் என்ற ஒரு கனிமம் எனலாம் இந்த ஃபுளோரைடு ஆனது அதனை சுற்றி இருக்கூடிய வெப்பத்தை உறிஞ்சி அதற்கேற்றார்போல் ஒளி வீசும் தன்மை கொண்டது.

இதற்கும் நாகமணிக்கும் என்ன சம்மந்தம் என ஒரு கேள்வி எழலாம் பெரும்பாலும் பாம்பு இனங்களில் நாக பாம்புகள் மட்டும்தான் பூச்சி இனங்களை உண்ணக்கூடியது. அப்படி இரவில் ஒளி வீசும் இந்த புளோரபார் ஆனது பூச்சிகளை ஈர்க்கும் அந்த பூச்சிகளை உண்ணுவதற்காக அங்கு நாகங்கள் வரும் இதனை கண்ட மனிதர்கள் நாகங்கள் நாகமணியை உருவாக்குகின்றன என்ற ஒரு கட்டுகதையை உருவாக்கிவிட்டனர்.

நம் இந்து முறைப்படி நாகங்களை நாம் கடவுளாக வழிபடுகிறோம் அதன் வரிசையில் இந்த நாகமணியும் கடவுளின் ஒரு சக்தியாக மனிதர்களால் மாற்றப்பட்டுள்ளது . இந்த நாகமணி என்ற ஒரு கதையை வைத்து பல பேர் மக்களை ஏமாற்றி காசு சம்பாதிக்கின்றனர்.

எனவே எதை செய்தாலும் ஆய்வுகளை மேற்கொள்வது தற்போதைய காலகட்டத்தில் மிக அவசியமாகிறது ஏனெனில் தற்போது இருக்கும் கொள்ளை கும்பல்கள் மக்களின் நம்பிக்கையை வைத்தே கொள்ளையடிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கோர விபத்தில் ஒருவர் மரணம் : மற்றுமொருவர் படுகாயம்!!

திருகோணமலை..

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து நேற்று (10.07) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் திருகோணமலை – அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாகவும், 33 வயது உடையவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கன்னியா பகுதியில் இருந்து திருக்கோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்து கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து போக்குடன் (மதகுடன்) மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருவண்ணாமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

போராட்டத்தின்போது இடம்பெற்ற கோர சம்பவம் : இளைஞன் பரிதாபமாக பலி!!

மாத்தறையில்..

மாத்தறையில் வெள்ளைக் கோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நேற்று முன்தினம் (09.07.2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து தொடர்பில் தெரியவருவது, எதிர் பாதையில் இருந்து வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் மாத்தறை நகரில் நேற்று முன்தினம் (09.07.2022) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மாத்தறை, திஹாகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

பாண்கள் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இல்லாமல் போகும் : வெளியாகியுள்ள அறிவிப்பு!!

பேக்கரி உற்பத்தி..

தற்போதைய நெருக்கடி மற்றும் பொருளாதார சூழ்நிலையில் பாண்கள் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பேக்கரி உற்பத்திகளை நிறுத்த வேண்டி வரும் என வரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பேக்கரி உணவு உற்பத்திக்கான பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக தற்போது பேக்கரிகளில் 50% உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மிகுதியும் மிக விரைவில் நின்றுவிடும். பேக்கரித் தொழில் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகவும், நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் எனவும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் தெரிவித்தோம். ஆனால் அமைச்சரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

பேக்கரி உற்பத்தியும் அத்தியாவசிய சேவை பிரிவின் கீழ் வருகிறது. ஆனால் பேக்கரி தொழிலை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எயாரும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்