வவுனியா நகரில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பூட்சிற்றிக்கு முன்பாக இன்று (20.04) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழல்கள் ஊடாக சம்பாதித்தவற்றை மக்கள் உடமையாக்கு, வங்கி வலையமைப்பை பாதுகாத்திடுக, அரச நிறுவனங்களின் விற்பனையை உடன் நிறுத்துக, வாழ்க்கைச் செலவை குறைத்திடு,

மக்கள் கருத்துக்கு செவிசாய்த்து இயலாமையுடைய அரசே வீட்டுக்கு போ, வெளிநாட்டு கறுப்பண சந்தையை நிறுத்து என எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா மாவட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் புதிய மாக்சிச லெனினிச கட்சி உறுப்பினர்கள் என 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா செட்டிகுளத்தில் கதவடைப்புப் போராட்டம்!!

கதவடைப்புப் போராட்டம்..

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இன்று (20.04.2022) செட்டிகுளத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு நாடு பூராகவும் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசாங்கத்தை வீட்டுக் செல்ல வலியுறுத்தியும் நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக கதவடைப்பு போராட்டத்திற்கு 300 தொழிற்சங்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன.

அந்தவகையில் அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கும் மாணவர் வரவு மிகக் குறைவாக காணப்பட்டமையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ9 வீதியின் குறுக்கே பேரூந்துகளை நிறுத்தி போராட்டம்!!

போராட்டம்..

வவுனியா, மூன்றுமுறிப்பு, வன்னி இராணுவ தலைமையகத்திற்கு அருகே இன்று (19.04) மாலை 4.30 மணியளவில் ஏ9 வீதியின் குறுக்கே சாரதிகள் பேரூந்தினை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலயம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு, பேருந்து கட்டணம் உயர்வில் திருப்தியில்லை, டீசலை பெற்றுக்கொள்ள எமக்கு எரிபொருள் நிலையமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஏ9 வீதியின் குறுக்கே சாரதிகள் பேருந்தினை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

சம்பவ இடத்திற்கு வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடியதுடன் தனியார் பேரூந்துகள் டீசலை பெற்றுக் கொள்வதற்கு தனியான ஓர் எரிபொருள் நிலையத்தினை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதியளித்தனர்.

இதனையடுத்து இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்துகளை செல்ல விட முடியாது என ஆர்ப்பாட்ட்காரார்கள் தடுத்து நிறுத்தியதுடன் ஏனைய வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். பேரூந்துகளை பொலிசார் மாற்று பாதை பயன்படுத்துமாறு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாகன சாரதிகள் சிலருக்கும் இடையில் வாய்தர்க்கம், முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தன. குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்றநிலை காரணப்படுவதுடன் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உணவுப் பொதிகளின் விலை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது!!

உணவுப் பொதிகளின் விலை..

உணவுப்பொதிகளின் விலைகள் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவுப்பொதிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கும், விநியோகிப்பதற்கும் பெரும்பாலும் முச்சக்கரவண்டிகள் மற்றும் மினி ட்ரக் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது நிச்சயமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வழியேற்படுத்தும்.

போக்குவரத்து கட்டண அதிகரிப்பானது நேரடியாக எம்மைப் பாதிக்கும். எனவே, உணவுப்பொதிகளின் விலை எவ்வளவு என்று எங்களால் கூற முடியாது.

ஆனால் ஒரு முன்முயற்சி நடவடிக்கையாக, உணவுப்பொதிகளின் விலையை 20 சதவீதத்தால் உயர்த்த முடிவு செய்துள்ளோம் என அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் பல பகுதியில் உணவுப்பொதிகளின் விலையானது பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது உணவுப்பொதிகளை கொள்வனவு செய்வோருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிப்பு!!

முச்சக்கரவண்டி கட்டணங்கள்..

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விலை அதிகரிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 70 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் மேலும் கூறுகையில், எரிபொருள் விலைகள் 350 ரூபாவைத் தாண்டும் வரை அறிவிக்கப்பட்ட விலைகள் நிலையானதாக இருக்கும்.

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரிப்பு அவசியமானது. அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான விலையேற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு வார காலத்திற்கு முடங்கலாம்!!

ஒரு வார காலத்திற்கு..

இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு : கடும் வீழ்ச்சியில் இலங்கை ரூபா!!

டொலரின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா50 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 51 சதம். விற்பனை பெறுமதி 443 ரூபா 67 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 369 ரூபா 33 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபா 10 சதம்.

விற்பனை பெறுமதி 361 ரூபா 68 சதமாகவும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 78 சதம் விற்பனை பெறுமதி 271 ரூபா 52 சதமாகவும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 11 சதம்.

விற்பனை பெறுமதி 252 ரூபா 10 சதமாகவும், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது : முழு விபரம் உள்ளே!!

பேருந்து கட்டணம்..

பேருந்து கட்டணங்கள் மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஆகக்குறைந்த பேருந்து கட்டணமாக 27 ரூபா அறவிடப்படவுள்ளது. எரிபொருள் விலை உயர்வே பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்” : கொழும்பிற்குள் நுழைந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்!!

போராட்டம்..

மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி படையெடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

கொழும்பின் மொரட்டுவை பகுதியை வந்தடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது காலிமுகத்திடலை நோக்கி நகரவுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது காணப்படும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம் என்ற அடிப்படிடையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

-தமிழ்வின்-

வவுனியா குடிவரவு – குடியகல்வு காரியாலயம் முன்னால் நீண்ட நேரமாக காத்திருக்கும் மக்கள்!!

குடிவரவு – குடியகல்வு காரியாலயம்..

வவுனியா, குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் முன்னால் கடவுச் சீட்டு பெறுவதற்காக மக்கள் 5 மணித்தியாலத்திற்கு மேலாக வீதியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் பொறுப்பற்ற விதமாக செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ள்ளனர்.

வவுனியா, உள்வட்ட வீதியில் வடமாகாணத்திற்கான குடிவரவு – குடியகல்வு திணைகளத்தின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த அலுவலகத்தில் புதிதாக கடவுச் சீட்டை பெறுதல், கடவுச் சீட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக காலை 6 மணிக்கு முன்பிருந்தே மக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் காலை 8.30 இற்கு அலுவலகத்திற்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுமார் 50 பேர் வரையில் கடவுச் சீட்டு வளாகத்திற்குள் அனுமதித்து விட்டு ஏனையவர்களை வீதியில் நிற்க வைத்தனர்.

வீதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் காலையில் இருந்து காத்து நிற்கின்றபோதும், பொறுப்பு வாய்த்த உத்தியோகத்தர்களோ அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ தமக்கு சரியான பதிலை வழங்காது நீண்ட நேரம் காத்து நிற்க வைத்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் வட மாகாணத்தின் பல இடங்களில் இருந்தும் தாம் வருகை தந்துள்ள நிலையில், தாம் இன்று விண்ணப்பிக்க முடியுமா அல்லது முடியாதா என்பது கூட தெரியாது நீண்ட நேரம் வீதியில் காத்து நிற்பதாகவும், குடிவரவு குடியகல்வு அலுவலகத்தில் மக்களுக்கான இருக்கைகள் வெறுமையாக உள்ள போதும் எம்மை உள்ளே எடுக்காது வீதிகளில் நிற்க வைத்துள்ளனர்.

அத்துடன், ஒரு மணியுடன் அவர்கள் இனி உள்ளே எடுக்க முடியாது எனக் கூறி கடந்த சில நாட்களாக திருப்பி அனுப்பியதால் சிலர் மூன்று தினங்களாக வருகை தந்து காவல் நிற்கின்ற நிலை கூட உள்ளது என பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது, நாம் ஒன்றும் இங்கு வேலைசெய்யாமல் இருக்கவில்லை. வேலை நடைபெறுகிறது எனப் பதில் அளித்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து வீதியில் களமிறங்கிய மக்கள்!!

பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து..

நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் வீதிகளுக்கு இரங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வாகனங்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தியும் பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பண்டாரவளை, திகன, அனுராதபுரம், மாத்தறை போன்ற பல பகுதிகளில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

கோதுமை மா மற்றும் பாணின் விலை பாரியளவு அதிகரிப்பு!!

கோதுமை மா மற்றும் பாணின் விலை..

பிரிமா நிறுவனத்தின் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் விற்பனை முகவர்களுக்கு தேவையான கோதுமை மா தொகையை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ கிராமுக்கு மேலதிகமாக 40 ரூபாயை வைப்புச் செய்யுமாறு நிறுவனம் விற்பனை முகவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விலை அதிகரிப்புடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் சில்லறை விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கும் என விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலை மேலும் 20 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் ஏனைய கோதுமை மா சிற்றுண்டிகள் 10 ரூபாவால் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 450 கிராம் பாண் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் அதன் விலை 130 ரூபாக அதிகரிக்கும். கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், வெதுப்பக உணவு தயாரிப்புகளுக்கான ஏனைய மூலப் பொருட்களின் விலைகளும் 70 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை செரண்டிப் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தனது விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

இலங்கையில் திடீரென மீளவும் எரிபொருள் விலை உயர்வு!!

எரிபொருள் விலை உயர்வு..

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாவாகவும்,

ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாவாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, பெற்றோலிய கூட்டுதாபனமும் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது.

முகக்கவசம் அணிவது தொடர்பில் புதிய சுகாதார அமைச்சரின் அதிரடி முடிவு!!

முகக்கவசம்..

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், வளாகத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலையைச் சரிபார்ப்பதும் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதும் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளது.

அத்துடன், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், எதிர்வரும் காலங்களில் நான்காவது கோவிட் தடுப்பூசி மாத்திரையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!!

மதுராநகர் பகுதியில்..

வவுனியா, மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (18.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மதுராநகர் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் அருகில் காணப்பட்ட கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்ட போது தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

மகனை காணவில்லை என தந்தை தேடிச் சென்ற போது மகன் தூண்டிலுடன் கிணற்றில் விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அயலவர்கள் துணையுடன் மீட்கப்பட்ட போதும் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய கனசுந்தரம் சம்சன் என்ற சிறுவனே மரணமடைந்தவராவார்.

வவுனியா செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நேரியகுளம் பகுதியில்..

வவுனியா செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (18.04) மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்த நிலையில் கணவன் வீட்டில் இருந்து தேவை நிமிர்த்தம் காலையில் வெளியில் சென்றுள்ளார்.

வெளியில் சென்ற கணவன் காலை 11 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிசாருக்கு கணவனால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

ஜேசுதாசன் மெட்டிலம்மா என்ற 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.