வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

கடலுணவு..

வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகளே வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டும் நிலையில் தற்போது அதன் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றமே இதற்கு காரணம் என கடலுணவு வியாபாரிகளால் தெரிவிக்கப்படும் நிலையில், ஒரு கிலோ விளைமீன் 1000 ரூபாவாகவும், பாரை மீன் 1200 ரூபாவாகவும், முரல் மீன் 600 ரூபாவாகவும், சீலா மீன் 1000 ரூபாவாகவும், கணவாய் 1200 ரூபாவாகவும்,

சின்ன இறால் 1200 ரூபாவாகவும், பெரிய இறால் 1800 ரூபாவாகவும், நண்டு 1600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் அதேவேளை கீரி மீன் மீன் 700 ரூபாவாகவும், சால மீன் 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண மக்கள் கடல் உணவுகளை வாங்குவதற்கு பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்கு புகுந்து சங்கிலி அறுப்பு!!

சங்கிலி அறுப்பு..

வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து சங்கிலி ஒன்று அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, யாழ் வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலைவயத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் அங்கு நின்ற பெண்ணை அழைத்து வர்த்தக நிலையத்திற்குள் வைத்து ஒருவருடைய முகவரியை விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்த போது,

குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடி வீதியில் குறித்த இளைஞருடன் கூட வந்தவர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டர் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல் : அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி

அமரர் அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மன்னார் சிறிய குருமடவீதி சாவற்காட்டினை வசிப்பீடமாகவும் கொண்ட அமரர் திருமதி அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி அவர்கள் 21.04.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆழ்வார்பிள்ளை பொன்னுந்துறை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், யாழ்ப்பாணம் புலோலியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை எலிசபெத் இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் அமார் திருமதி.அன்ரன் சமரக்கோன் அவர்களின் அன்பு மனைவியாரும்,

கலாநிதி அன்று அனஸ்லி (Managing Director – New Bright Education Center & IDL Education Center, BCS International .PVT.LTD And Regional Director – IDM Nations Campus) , திரு.ஜெனேவல் ஜோன்ஸிலி , திருமதி.சயானா சியாமிலி , திரு.பிறின்ஸ் பிறேம்ஸிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (சிறிய குருமட வீதி,
சாவற்காடு,மன்னார்) நடைபெற்று நல்லடக்கத்திற்காக மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திரு. அன்று அனஸ்லி (மகன்) – 94 773111245
IDM Nations Campus – 94 760970955

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது!!

எரிவாயு..

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது,

5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனால் ஏற்பட்ட தலைவர் வெற்றிடத்திற்கே பொறியியலாளர் விஜித ​ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (22.04) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக மோட்டர் சைக்கிள் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது உக்குளாங்குளம் பகுதியில் இருந்து மாதா சொரூப வீதி ஊடாக மன்னார் வீதிக்கு முச்சக்கர வண்டி ஒன்று ஏற முற்பட்ட போது இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி வீதியை விட்டு விலகின.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 11 வயது மகள் உயிரிழந்த நிலையில், தந்தையும் மற்றுமொரு மகனும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

44 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் ஆகியோரே காயமடைந்துள்ளனர். படுகயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் புகையிரத கடவையில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இல்லை : லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

சமையல் எரிவாயு..

எதிர்வரும் 25ஆம் திகதி வரை வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் இன்மையால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தலா 3,600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் வீட்டுப் பாவனைக்கான எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். எனினும் தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், தகன சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 1000 ரூபாவாகும் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை!!

பருப்பு..

எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில நாட்களாக விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றமையால் மக்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தற்போது நாட்டில் ஒரு கிலோகிராம் பருப்பு 470 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

100 அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்!!

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்..

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் 100அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும்”, “தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும்”, “காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்”, “கேகாலை ரம்புக்கனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபருக்கு நீதி வேண்டும்” எனக் கோரியுமே இந்த நபர் இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி கீழ் பிரிவு தோட்டத்தில் 45வயதுடைய பழனியாண்டி முருகேஸ் என்ற நபரே இவ்வாறு நூறு அடி உயரம் கொண்ட மரத்தின் மீது எறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இலங்கை தேசியக் கொடியைப் பிடித்தவாறு, எதிர்ப்பு பதாதைகளை குறித்த மரத்தில் காட்சிப்படுத்தியவாறு இவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் மரத்துடன் மோதிய கார்!!

முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில்..

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல விபத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் நேற்று (21.04) இடம்பெற்றுள்ளது. முள்ளியவளையில் இருந்து நெடுங்கேணி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுகார், 7ஆம் கட்டைப்பகுதியில்,

வேக கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை வீதிப்போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை : வெளியானது அறிவிப்பு!!

முகக்கவசம்..

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறையாகும் வகையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் குறித்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்களை மூட சொல்லி மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த இளம்பெண் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண்ணொருவர் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞரை கண்களை மூட சொல்லி அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அல்லூரி சித்தராமராஜு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமு நாயுடு. இவருக்கும் அனகப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமுவை சாய்பாபா மலைக்கு புஷ்பா அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சர்ப்ரைஸ் தருவதாக கூறி கண்களை மூட சொல்லியுள்ளார்.

ராமுவும் ஆச்சரியத்தை எதிர்நோக்கி கண்களை மூடியபோது, புஷ்பா அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராமு வலியால் அலறித் துடித்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ராமுவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் புஷ்பாவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் தான் ராமுவின் கழுத்தை அறுத்ததாகவும் அதிர்ச்சியளித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இளம்பெண் புஷ்பாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!!

திண்டுக்கல்..

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 15 நாட்களில் புதுமாப்பிள்ளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் தென்றல் என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த நிலையில் நேற்று இரவு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஏர்போர்ட் நகர் பகுதிக்கு பிரபாகரன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம கும்பல், பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களை வழி மறித்தது.

பின்பு பிரபாகரனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த அவரது நண்பர்கள் இருவரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், மூன்று போரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

ஹத்யா..

இந்தியாவில் வீட்டின் மேற்கூரையில் இருந்த பாம்பு தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது விழுந்து கடித்ததில் அவர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தின் ஜகிட்டால் நகரில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

கந்தா ஹத்யா என்ற 3 வயது சிறுமி தனது பெற்றோர் அருகே படுத்து கொண்டு நேற்றிரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு மேற்கூரையில் ஊர்ந்து சென்ற பாம்பு சிறுமி மீது திடீரென விழுந்தது. இதையடுத்து அலறி அடித்து கொண்டு எழுந்த ஹத்யா பாம்பை தட்டி விட முயன்றார்.

அவர் பெற்றோரும் அதை செய்ய முயன்ற நிலையில் பாம்பு ஹத்யாவை கடித்தது. பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

அக்கம்பக்கத்தினர் கூறுகையில், ஹத்யாவை கடித்தது கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு எனவும் அந்த பாம்பு அடித்து கொல்லப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்தனர். ஹத்யா பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அவர் பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள் : யாழில் சம்பவம்!!

யாழில்..

யாழ். தெல்லிப்பழையில் ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்ற சம்பவமானது இடம்பெற்றுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் நாட்டில் உச்சம் தொட்டுள்ள நிலையில், விலையேற்றத்தைப் பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள் இன்று காலை இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இவ்வாறு மல்லாகம் சந்தியிலிருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ள மேலும் மூன்று இலங்கை தமிழர்கள்!!

அகதிகளாக..

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்றடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை தனுஷ்கோடியைச் சென்றடைந்த குறித்த இலங்கைத் தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் மட்டக்களப்பிலிருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்குச் சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.